Showing posts with label tamil murasu. Show all posts
Showing posts with label tamil murasu. Show all posts

Wednesday, December 15, 2010

முருகு சுப்பிரமணியனும் தமிழ் முரசும் மலாயாச் சிறுகதை மன்னர்களும்



தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி மலாயாவில் தரமான சிறுகதை எழுத ஆளில்லை என்று நினைத்ததுடன் தரமான பத்திரிகை ஆசிரியர்கள் இல்லை என்றும் கருதியவர். 1940களிலும் 50களிலும் எல்லாப் பத்திரிகைகளும் தமிழ்நாட்டிலிருந்து ஓரளவு படித்துவிட்டுக் கப்பலேறிய இளைஞர்களையே ஆசிரிய, துணையாசிரியப் பொறுப்பில் அமர்த்தின. இங்கே வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்களைப் பத்திரிகைகள் இழுத்துக் கொண்டாலும் பத்திரிகைக்காகவே துணையாசிரியர்களை முதன்முறையாய் விசேஷமாகக் கொண்டுவந்தவர் தமிழ் நேசன் பத்திராதிபர் கே நரசிம்ம ஐயங்கார். 1936ல் சென்னையின் The Hindu நாளிதழில் தமிழ்நேசனுக்கு உதவியாசிரியர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து பை கி ஸ்ரீநிவாச ஐயங்காரையும் சா சுப்ரமணிய ஐயரையும் கொண்டு வந்தார்.

( நரசிம்ம ஐயங்கார் 4 பிப்ரவரி 1938ல் காலமான பிறகு நேசன் திசை தடுமாறியது. 1940ல் ஒரு வேலை நிறுத்தம். கே பி சுப்பையா, சா சுப்பிரமணிய ஐயர் போன்ற உதவியாசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால் இருவரும் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் தனியாகப் போய் 2 டிசம்பர் 1940ல் ஜனநாயகம் பத்திரிகையை ஆரம்பித்தனர். நேசனுக்கு ஒரு சரியான போட்டி அது. ஐயர்தான் ஆசிரியர். சண்டைக்குப் பிறகு ஜனநாயகம் மறுபடியும் வந்தது. அதனால் ஐயர் ஜெயமணி சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார். சோஷலிஸ்டுப் பாதையில் ஆர்வங் காட்டிய சுப்பிரமணியம் ஜப்பானியர் ஆட்சியின்போது 1942ல் ஹிட்லரின் சுயசரிதையான வீரன் ஹிட்லர் மேன் காம்ப் நூலைத் தமிழாக்கம் செய்தார். காகிதப் பஞ்ச காலத்தில் 272 பக்கங்களில் வெளியான நூல் அது. விழி பிதுங்கும் மொழிபெயர்ப்பு அது என்று ஜெர்மனி தமிழரசன் இனி இணைய இதழில் (டிசம்பர் 2005) ஈவிரக்கமின்றி சாடினார். ஆங்கிலேயரின் அலங்கோல ஆட்சி எனும் 84 பக்க நூலையும் ஜெயமணி சுப்பிரமணியம் 1942ல் கொண்டுவந்தார். அந்த நேரத்தில் ஜப்பானியர் மெச்சும் வகையில் ஆங்கிலேயரை வசைபாடிய சில நூல்களுள் அதுவும் ஒன்று. சண்டை முடிந்தபின் சா சுப்பிரமணியம் தமிழ்நாட்டுக்குத் திரும்பி கல்கியில் சேர்ந்துகொண்டார். கே பி சுப்பையா 1946ல் யுத்தத்தால் வந்த யுத்தம் எனும் நூலை வெளியிட்டார். முதலாம் உலகப் போரே இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்பது நூலின் சாரம். சண்டைக்கு முன் நடைபெற்ற ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும் அவர்களின் கோரிக்கைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறையும் தொழிலாளர் மரணங்களும் சற்று விரிவாகத் தமிழில் இடம்பெறும் நூல் இது.)

ஸ்ரீநிவாச ஐயங்கார் சுதேசமித்திரன் ஏட்டில் பணியாற்றிவிட்டு சென்னையில் நடந்து கொண்டிருந்த டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்தார். கருமமே கண்ணாயினார் என்பதற்கு அவரைவிடச் சிறந்த உதாரண புருஷரைக் காட்ட முடியாது. (பைரோஜி நாராயணன், நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரின் தந்தையே அவர்.) பாரதி பிறந்த தினமான செப்டம்பர் 11ல் 1934ஆம் வருஷம், தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதற்காகப் பத்திரிகை ஜாம்பவான் எஸ் சதானந்த் தொடங்கியது தினமணி நாளிதழ். தேசத் தியாகி தி சு சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியக் குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் சுப்பிரமணிய ஐயர். தமிழ் நேசன் 1937 பிப்ரவரி 20ல் நாளிதழாக வரவிருந்ததால் அனுபவம் மிக்க புதிய இளைஞர்களை இறக்குமதி செய்தார் நரசிம்ம ஐயங்கார்.

1951ல் கோ. சா முரசுக்காகக் கொண்டு வந்த வை திருநாவுக்கரசு திராவிடர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பூந்தோட்டம் என்ற மாத இதழை 1947ல் சொந்தமாக நடத்திவிட்டுப் பெரியாரின் விடுதலை பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தபோதுதான் வி திருநாவுக்கரசு முரசுக்குக் கப்பலேறினார். அரசுக்குப் பிறகு ஒரு பெரிய அணி முரசுக்குப் படையெடுத்து முரசையும் வளர்த்து சிங்கப்பூர், மலாயா/மலேசியத் தமிழர் சமூக வாழ்க்கையில் அழுத்தமான முத்திரையும் பதித்தது. அப்படி முரசுக்கு வந்தவர்களுள் தி செல்வகணபதி, அ முருகையன், முருகு சுப்பிரமணியன் ஆகியோர் முக்கியமானவர்கள். கொஞ்ச காலம் சென்றபின் வி டி அரசு அரசாங்கத் தகவல் துறைக்கு மாறிவிட்டார். அ முருகையன் ரேடியோ சிங்கப்பூரின் தமிழ்ப் பகுதித் தலைவர் பணியை ஏற்றார். (சிங்கப்பூரில் 1949ல் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகத்தில், எட்டு ஆண்டு கழித்து 1957ல் இந்திய இயல் துறை அமைந்தபோது அதற்கு முதல் தலைவராக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட திராவிடப் பற்றாளர் இராசாக்கண்ணனாரின் மைத்துனர்தாம் முருகையன். வழக்கமாகத் துறைத் தலைவர் பதவிக்கு இன்றியமையாத Ph D பட்டம் இல்லாமல் M.A மட்டுமே வைத்திருந்தவர் இரசாக்கண்ணனார். அ. முருகையன் 1952 அல்லது 1953ல் முரசுக்கு வந்திருக்க வேண்டும்.)

1955ல் முரசுக்கு வந்தவர் முருகு சுப்பிரமணியன். அவரும் திராவிட இயக்கத்தில் ஊறிய இலக்கியவாதியே. 1924ல் செட்டி நாட்டுக் கோனாப்பட்டில் பிறந்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1940களில் செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றி சுயமரியாதைக் கொள்கையையும் திராவிட உணர்வையும் பரப்பினார். அப்பகுதி இளைஞர்கள் மாதக் கணக்கில் அவரைத் தங்க வைத்தனர். பாரதிதாசன் நூல்களை அச்சிடவும் அவருடைய நாடகங்களை நடத்தவும் முத்தமிழ் நிலையம் எனும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இதற்கு உந்துதலாகத் திகழ்ந்தவர் செட்டிக்குல இளங்குருதி முருகு சுப்பிரமணியன். இளந்தமிழன் கையெழுத்து இதழை நடத்தியதோடு தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார்.

பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பான பாரதிதாசன் கவிதைகள் முதற் தொகுதி புதுக்கோட்டை, இராமச்சந்திரபுரம், செந்தமிழ் நிலையத்தால் 1938ல் அச்சிடப்பட்டது. பாரதிதாசனின் வேறு சில நூல்களையும் செட்டிநாட்டு அன்பர்கள் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

(கானாடுகாத்தான் வை சு சண்முகம் செட்டியார் மகாகவி பாரதியாரை செட்டிநாட்டுக்கு அழைத்துவந்த செய்தி பலரும் அறிந்ததே. 1919 அக்டோபர் 28 முதல் ஒன்பது நாளும், 1920 ஜனவரி 6 முதல் 10 வரை நான்கு நாளும் பாரதியார் செட்டியார் மாளிகையில் தங்கியிருந்தார். கையில் தடியுடன் பாரதியாரைக் காட்டும் ஒரு படம் அப்போது எடுத்ததுதான். செட்டிநாட்டிலேயே தங்கிவிடும்படி சண்முகம் செட்டியார் மன்றாடியபோதும் பாரதியாரின் சூழ்நிலை அவரைத் தங்கவொட்டாமற் செய்துவிட்டது.)

(1952ல் தமிழ் நேசன் மலையாண்டி செட்டியார் வசம் இருந்தபோது புகழ்பெற்ற இரு பத்திரிகையாளர்களை அவர் கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தார். தமிழ்நாடு, தினமணி ஆகியவற்றில் பணிபுரிந்த ரா வேங்கடராஜுலு நாயுடு, படைப்பிலக்கிய எழுத்தாளர் கு அழகிரிசாமி ஆகியோரே அவர்கள். 1953 ஜுன் 2ல் நிகழ்ந்த எலிசபெத் அரசியாரின் முடிசூட்டு வைபவத்தில் கலந்துகொள்ள மலாயாப் பத்திரிகையாளர் அணியில் ஒருவராக லண்டனுக்குச் சென்று வந்தவர் நாயுடு. அழகிரிசாமி தம் ஐந்தாண்டு மலாயாப் பயணத்தில், சீதாலட்சுமி எனும் பிராமண மங்கையைக் குடும்ப எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் அயராத உதவியால் 1955ல் மணம் செய்துகொண்டவர்.)

தமிழ்ப் பத்திரிகை உலகில் முருகு சுப்பிரமணியனுக்கும் அவருடைய நெருங்கிய உறவினர் அரு பெரியண்ணனுக்கும் நிலையான இடம் உண்டு. பொன்னி ஆரம்பித்தபோது முருகுவுக்கு வயது 24. இருவரும் சேர்ந்து 1947 முதல் 1953 வரை நடத்திய பொன்னி மாத இதழ் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. புதுக்கோட்டையில் தொடங்கிய இதழ் சென்னைக்கு இடம் மாறிப் பிரகாசமாக நடைபெற்று ஓய்வு எடுத்துக்கொண்டது. அதன்பிறகே முருகு சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார். பெரியண்ணன் திராவிடப் பற்றில் கைக்காசை எல்லாம் இழந்து மு கருணாநிதி நடத்திய முரசொலியின் நிர்வாகத்தில் பங்கேற்றார்.

பொன்னி அன்று இளைஞரிடம் கொடிகட்டிப் பறந்த திராவிடவேட்கைக்கு வடிகால் அமைத்துக் கொடுத்த சஞ்சிகை. திராவிட இயக்கத்துக்கென ஒரு தரமான இதழ் இல்லாதிருந்த குறையைப் பொன்னி நீக்கியது. திராவிடத் தலைவர்களும் தொண்டர்களும் கதை, கட்டுரை, கவிதை என்று அதில் நிறைய எழுதினர். இயக்கத்தைச் சாராதவர்களும்கூட பொன்னிக்கு ஆதரவு தெரிவித்தனர். வண்ணமயமான அட்டைப்படத்துடன் வந்து அனைவரையும் கவர்ந்தது பொன்னி. முதல் இதழில் எங்கெங்கோ ஊறிச் செழிக்கும் கருத்துகளை அவை தமிழர்க்கும் ஆக்கம் தருபவையானால் தேடிக்கொணர்ந்து தமிழர்க்குப் படைப்பாள் பொன்னி. தமிழ் நெஞ்சம் வளமாகும் வகையில் அவள் எண்ண ஓடை பாயும் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வெளிவந்தது பொன்னி.

பொன்னியின் மிகச் சிறந்த இலக்கியப் பணியாக அமைந்தது பாரதிதாசன் பரம்பரை என்ற கவிஞர் அறிமுக வரிசை. 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோபர் வரை நீடித்தது அந்தத் தொடர். மு. அண்ணாமலை தொடங்கி நாரா நாச்சியப்பன், சுரதா, முடியரசன், வாணிதாசன், கோவை இளஞ்சேரன், புத்தனேரி சுப்பிரமணியன், குலோத்துங்கன் (வா. செ. குழந்தைசாமி), நாஞ்சில் மனோகரன், பெரி சிவனடியான், சுப்பு ஆறுமுகம் போன்ற 48 கவிஞர்களை அப்புதுமைத் தொடர் அடையாளம் காட்டியது.

பொன்னி : பாரதிதாசன் பரம்பரை எனும் தலைப்பில் 48 கவிஞர்களின் பாடல்களையும் அவர்களின் திறனையும் வாழ்க்கைக் குறிப்புகளையும் சேர்த்து ஆய்வு நூலாக்கியுள்ளார் மு இளங்கோவன். 2003ல் வந்ததது அந்நூல். மணிக்கொடி எழுத்தாளர்கள் போல பொன்னிக் கவிஞர்கள் என்ற அடைமொழி பிறந்தது.

2004ல் பொன்னி ஆசிரிய உரைகள் நூலையும் வெளியிட்டார் மு இளங்கோவன். இந்தி எதிர்ப்பு, வடநாட்டு ஆதிக்கம், பெரியார் மணியம்மை திருமணம், திமுக தொடக்கம் போன்ற 98 தலையங்கங்ளைக் கொண்டு திராவிட இயக்கத்தின் ஆவணமாகப் பரிணமித்தது இந்நூல். முருகு, பெரியண்ணன் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெ. தூரன் தலைமையில் பேசிய அண்ணாதுரையின் பேச்சைப் புதுக்கோட்டை தாய்நாடு ஜனவரி, பிப்ரவரி 1947 இதழ்களில் பாராட்டி எழுதினார் அப்பத்திரிகையில் பணியாற்றிய கண்ணதாசன்.

அண்ணாதுரையின் பேச்சை வெளியிட்ட பிறகு ‘அவனுக்கு (கண்ணதாசனுக்கு) புதுக்கோட்டையில் சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அப்போது ‘பொன்னி’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த தோழர் முருகு சுப்பிரமணியன் அவர்களும் தோழர் பெரியண்ணன் அவர்களும் அவனுக்கு வாய்த்த இனிய நண்பர்களாவார்கள். பெரியாரை அவர்கள் கடவுளாகக் கொண்டாடியவர்கள். அண்ணாதுரையை உயிருக்குயிராய் நேசித்தவர்கள். திராவிடர் கழகத்தை ஆதரிக்கும் ஏடுகள் மிகக் குறைவாக இருந்த காலம். அவையும் அழகில்லாமல் அச்சுப்பிழை மிகுந்து வெளிவந்தன. அந்த நேரத்தில் வண்ண முகப்பு அட்டை போட்டு அழகாக நடந்த இதழ் ‘பொன்னி’ ஒன்றுதான். பத்திரிகைத் துறையில் மற்றவர்கள் செய்து காட்டாத புதுமை எல்லாம் அவர்கள் செய்து காட்டினார்கள். இன்றும் தமிழகத்தில் சிலரை அச்சுக்கலை நிபுணர்கள் என்று தேர்ந்தெடுத்தால் அவர்களில் பெரியண்ணன் மிக முக்கியமாக இருப்பார். ‘பொன்னி’யின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் குழந்தை உள்ளமும் குளிர்ந்த சுபாவமும் கொண்டவர். ‘தாய்நாடு’ இதழ் கட்டுரையைப் பற்றி அவனிடம் வெகுவாகப் பாராட்டினார். …. அப்போது ‘பொன்னி’ இதழில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற பெயரில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தினார். அந்தப் பகுதிக்கு அவனும் ஒரு கவிதை எழுதினான். நான்காவது நாள் அந்தக் கவிதை அவனுக்கே திரும்பி வந்தது. கூடவே கீழ்க்கண்டவாறு ஓர் இணைப்புக் கடிதமும் இருந்தது. “அன்புள்ள நண்பருக்கு, கதையனுப்பும்படி கேட்டிருந்தேன். கவிதை அனுப்பியுள்ளீர்கள். தயவு செய்து கதையே அனுப்பினால் நலம். அன்பன் முருகு சுப்பிரமணியன் தன் கவிதைக்குக் கிடைத்த மரியாதை அவனை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அதிர்ச்சிதான் கவிதை எழுதுவதில் அதிக ஆசையை அவனுக்கு உண்டாக்கிற்று. அதற்குப் பிறகு அவன் எவ்வளவோ கவிதைகள் எழுதினான். ஆனால் ‘பொன்னி’ மட்டும் ஒரு கவிதையைக் கூட வெளியிடவில்லை.’

(கண்ணதாசன். வனவாசம். 1965 பக் 72)

பொன்னிக்கு முன் குமரன் இதழில் முருகு ஆசிரியராய் இருந்தபோது கண்ணதாசனின் இரண்டு கதைகளை வெளியிட்டார். தாய்நாடு இதழில் அண்ணாவின் பேச்சை எழுதியபோது கண்ணதாசனுக்கு வயது 19. முருகுவைவிட மூன்று வயது இளையவர் கண்ணதாசன். மலாயாவுக்கு வந்து சேர்ந்த கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் சென்னை எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒருவர். எருமைக்கடா வாகனக் கதையை அண்ணா சொன்னது இந்த மாநாட்டில்தான். அந்தப் பகுதியைக் கண்ணதாசன் எனும் நிருபர் இப்படித்தான் report பண்ணியிருந்தார்.

“அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே (அன்னிய நாட்டிலே). கம்பராமாயணமும் கந்தபுராணமும் இங்கே. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை. (கைத்தட்டல்). ஆக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்திருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா வேண்டாமா என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுப்புறத்தான் ஒருவனை கூப்பிட்டுக் கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? தெரியாது. நமது பிரதம மந்திரி யார்? தெரியாது. இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது? தெரியாது. முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்? தெரியாது. எமனுக்கு வாகனம் என்ன? எருமைக்கடா! (பலத்த கைத்தட்டல்) இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம். கர்னாடிக் மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள். அயோத்தியில் தசரதன் மாளிகையைப் பற்றி அல்ல, ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள். அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கைத்தட்டல்).

31 வயதில் சிங்கப்பூருக்குக் கப்பலேறிய முருகு சுப்பிரமணியன் இங்கு செல்வாக்குடன் இருந்தார். 1950களில் கதைப்போட்டிகளின் மூலம் இளையரிடத்திலும், தமிழர் திருநாள் மூலம் பொதுமக்களிடமும், தமிழர் சீர்திருத்த சங்க நடவடிக்கைகள் மூலம் பகுத்தறிவாதிகளிடமும் முரசு புகழோடும் பெருமையோடும் இருந்த காலம் அது. சீர்திருத்த சங்கத்தின் செயலாளராகவும் முருகு இருந்திருக்கிறார். வானொலியில் இலக்கிய உரைகள் ஆற்றினார். அவை பிறகு நூலுருவம் பெற்றன.

முருகு முரசுக்கு வந்த கையோடு 1955ல் நான்கு சிறுகதைகள் எழுதினார். அக்டோபர் 23ல் அன்னையின் சோகம்.

‘கணவனை இழந்த தங்கம்மாள் தன் மகனை மிகவும் செல்லமாக வளர்க்கிறாள். ஒரு நாள் அவனுக்கு வயிற்றில் வலி ஏற்படவே தங்கம்மாள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லாமல் அவன் இறந்து விடுகிறான். தன்னுடைய மகனைப் பறிகொடுத்த அந்த அன்னையின் சோகம் அங்கிருக்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.’

நவம்பர் 20ல் சின்னப்பயல்.

‘பேரன் சின்னப்பயல் பாண்டியனைக் காணவில்லை என்று குருசாமியிடம் மீனாட்சி கூறுகிறாள். உடனே, அவனைத் தேடிச் செல்லும் குருசாமி, கையில் மிட்டாயுடன் ஓடிவந்து தன் அண்ணன் செல்வத்துடன் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கிறான். முன்பு ஒருமுறை அவனுடைய அன்பு, தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இருந்த மனக்கசப்பைப் போக்கியதை நினைத்துக் கொள்கிறான். சின்னப்பயல் பாண்டியனின் பெரிய மனத்தை நினைத்துக் குருசாமிக்கு அவன் மீது அளவற்ற கருணை பிறக்கிறது.’

நவம்பர் 27ல் காதல் கதை.

‘கல்யாணமான புதிதில் சரோஜா தன் கணவனிடம் அவன் முன்னாள் காதலைப் பற்றிக் கேட்கிறாள். அப்படி எதுவும் நடக்காததால் அவன் கதையொன்றைக் கூறுகிறான். தன்னுடன் படித்த சக மாணவி அறிவில் சிறந்தவள் என்றும் இருவரும் அவ்வப்போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறும் அவன், ஒரு முறை அவள் மீது அவன் கரம் பட்டதும் பளிங்கு மாளிகையாக அவள் முகம் மாறிவிட்டது என்றும் கூறுகிறான். அதைக் கேட்டதும் அவன் கூறிய கதையை நம்பாத அவன் மனைவிக்கு அவனைப்பற்றிய சந்தேகமும் நீங்குகிறது.’

டிசம்பர் 11ல் புயல்.

‘வேதாரண்யப் புயலால் விளைந்த அழிவைப் பற்றியும் அதில் சிக்கி இறந்த எண்ணற்ற மக்களைப் பற்றியும் அண்ணன், தன் தம்பிக்குக் கடிதம் வாயிலாக விவரிப்பதை இக்கதை சித்திரிக்கிறது.’

(கதைச் சுருக்கம் இடம்பெற்ற நூல் தேசிய நூலகம் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936 – 1960, தொகுதி 1)

கதைச்சுருக்கத்தை மட்டும் வைத்துக் கதைகளின் சிறப்பை உய்த்துணர இயலாது. கதைச்சுருக்கமோ கதைப்பின்னலோ ஏறத்தாழ ஓர் எலும்புக்கூட்டுக்குச் சமம். அந்தக் கூடு எப்படி சதையும் ரத்தமும் ஆகி உயிருள்ள உடம்பாக மாறுகிறது என்பதே வித்தை. கதைச்சுருக்கத்தின் மூலம் புலப்படக்கூடிய முருகு சுப்பிரமணியத்தின் கதைகள் எப்படி அமைந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

முருகு எனும் பெயரில் கதை எழுதிய அ. முருகையன் 1953 மார்ச் 29 முதல் 1955 அக்டோபர் 30 வரை இருபது சிறுகதைகளைப் படைத்துள்ளார். (இக்கட்டுரையில் நான் முருகு என்று குறிப்பிடுவதெல்லாம் முருகு சுப்பிரமணியனையே சுட்டும்.)

முரசில் சிறுகதைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஒரு கட்டத்தில் முருகு சுப்பிரமணியனைச் சார்ந்திருந்தது. கதைகளை எல்லாம் கருத்தூன்றிப் படித்துப் பார்த்த அவர் 1958 மார்ச் 9 முரசு ஞாயிறு மலரில் மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் எனும் தலைப்பில் ஒரு பக்கத்தில் அடங்குமாறு கட்டுரை ஒன்றை வரைந்தார்.

மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் கட்டுரை: முருகு சுப்பிரமணியன் ( 9 மார்ச் 1958 )

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் சிறுகதைகளைப் பற்றி ஒரு விமரிசனக் கட்டுரை எழுத வேண்டுமென நீண்ட நாளாக எண்ணியதுண்டு. அந்த எண்ணம் இப்பொழுதுதான் நிறைவேறுகிறது.

இளம் எழுத்தாளர்களிடம் எனக்குத் தனி அன்பு உண்டு. நான் அவர்களை அநுதாபக் கண்ணோடு நோக்குகிறேன். பெருமைக்காக இவ்வாறு சொல்லிக் கொள்ளவில்லை. பல ‘பெரிய’ எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் ‘குப்பை’ என்பது அந்தப் பெரியவர்களின் கருத்து. இன்னும் சிலருக்கு மறுமலர்ச்சி இலக்கியம் என்றாலே வேப்பங்காய். ‘வள்ளுவனும் கம்பனும் வளர்த்த தமிழை மேலும் வளர்க்க இந்தப் பொடியர்கள் யார்? இவர்களுக்கு என்ன தெரியும்? குறளில் ஒரு வரிக்கு உறைபோடக் காணுமா இவர்களின் எழுத்து?’ என்று பேசும் மெத்தப் படித்தவர்களும் உண்டு. அவர்களுக்குச் சொந்தச் சாகுபடி செய்யத் தெரியாது. யாராவது சங்க இலக்கியமோ தொல்காப்பியமோ இயற்றி வைத்திருந்தால் அதனைப் படித்து உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ‘மனநிறைவு’ கொண்டவர்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சி கம்பனோடும் சேக்கிழாரோடும் நிலைகுத்தி விட்டதென்பது அவர்களின் அசைக்க முடியாத முடிவு.

இவர்களைப் போல வள்ளுவனும் கம்பனும் எண்ணியிருந்தால் நமக்கு உலகம் போற்றும் திருக்குறளோ, தமிழ்க்கடலான இராமகாதையோ கிடைத்திருக்குமா? புதிதாக ஆக்கவேண்டும் என்னும் துடிப்பு, மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அந்தத் துடிப்பை மட்டந்தட்டி வீணாக்குவது இலக்கியம் பேண விரும்புகிறவர்களின் பொறுப்புள்ள செயலாகாது.

திருத்த வேண்டும் இளம் எழுத்தாளர்களிடமும் மறுமலச்சி எழுத்தாளர்களிடமும் எவ்வளவோ குறைகள் உண்டு. அக்குறைகளை எடுத்துக் காட்டித் திருத்த வேண்டுமேயொழிய அவர்களைத் தலைதூக்கவிடாமல் அழுத்திவிடக் கூடாது. அவர்களில் பலர் தமிழ்க்கொலை செய்கிறார்கள் என்பது உண்மையே. அந்தக் கொலைகளை எடுத்துக் காட்டி வன்மையாகக் கண்டிப்பது தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத பணி என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயத்தில் அந்த எழுத்தாளர்களிடம் உள்ள படைப்பாற்றலையும் கலையுணர்வையும் எழுத்துத் திறனையும் போற்றி ஊக்குவதும் அவசியமாகும்.

இளம் எழுத்தாளர்களிடம் நான் ‘அனுதாபம்’ காட்டுவதற்கு முதன்மையான காரணம் இதுதான்.

இளம் எழுத்தாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுதுவது ‘குப்பை’ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நூற்றில் ஒருவர் மணியான எழுத்தாளராக எதிர்காலத்தில் வரக்கூடும். குப்பையில் குன்றிமணியாக விளங்கும் அந்த ஒருவரைக் கண்டுபிடித்துக் கைதூக்கிவிடுவது, இளம் எழுத்தாளர்களை ஊக்கினால்தான் நிறைவேறும். இன்று புகழ் படைத்த எழுத்தாளர்களாகத் திகழும் எல்லா எழுத்தாளர்களுமே ஒரு காலத்தில் பத்திரிகை ஆசிரியர்களின் ‘தயவை’ எதிர்பார்த்து ஏங்கிய இளம் எழுத்தாளர்களே. இந்த உண்மையை நினைவிற்கொண்டால் புதிய எழுத்தாளர்களைப் புறக்கணிப்பதில் உள்ள ‘இழப்பை’ப் புரிந்து கொள்ள முடியும்.

மலாயாவில் புதிய எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரிடமே உண்மையான எழுத்தாற்றல் இருக்கிறது. அவர்களிடமும் சுட்டிக்காட்டக்கூடிய குறைகள் இருப்பினும், நான் முன்பு கூறிய படைப்பாற்றலை அவர்களிடம் காண முடிகிறது. பெயர்களைக் குறிப்பிட்டால் பொறாமையும் எரிச்சலும் ஏற்படலாமாதலால், பொதுப்படையாகவே குறை நிறைகளைக் கூற விரும்புகிறேன்.

பெருக வேண்டும் மலாயாவில் தமிழில் எழுதுகின்றவர்களின் தொகை பெருகவேண்டுமென்னும் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் நான் இங்கே சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்பது திண்ணம்.

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதும் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. காதல் கதைகள் எழுதுவது பாவமான காரியமென்று நான் சொல்லமாட்டேன். எனினும் காதல் இல்லாமல் கதை எழுத முடியாதென்று நினைப்பது தவறு. காதலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது என்பது உண்மையே. ஆனால் இங்கு எழுதுகிற புதியவர்கள் காதலையே கசக்க வைத்து விட்டார்கள். ஆகவே ஒரு சில ஆண்டுகளுக்காவது காதல் கதைகள் எழுதுவதில்லை என்று நம் எழுத்தாளர்கள் விரதம் பூண்டால் நன்மையாக இருக்கும்.

கைம்பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைப்பது சிறந்த சீர்திருத்தப் பணி. ஆனால் கதைகளில் திரும்பத் திரும்ப விதவைகளின் குமுறலையும் வேதனையையும் அளந்து கொண்டிருப்பது அவசியமா? கைம்பெண் மணத்தை வற்புறுத்தி கதை எழுதுவது பழைய பாணி.

அந்தப் பழைய பாணியிலும் மெருகேற்றிப் புதுமை மிளிரச் செய்வதற்குப் பெருந் திறமை வேண்டும். இளம் எழுத்தாளர்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே விதவைகளின் வேதனையைத் தீட்டுவதைச் சிறிது காலம்வரை இளம் எழுத்தாளர்கள் நிறுத்தி வைத்தால் நல்லது.

‘வழுக்கி விழுந்தவள்’ ‘வாழத் தெரியாதவள்’ ‘ஏமாந்தவள்’ – இப்படிச் சில கதைகள். பெண்களிடையே ‘ஒழுக்கக் குறைவு’ எங்கோ எப்பொழுதோ ஏற்படுகிறது. தமிழ்ப் பெண்கள் கற்பைக் காப்பதில் மிக விழிப்பாயுள்ளவர்கள். எளிதில் அவர்கள் வழுக்கி விழுந்து விடுவதில்லை. ஆனால் நம் இளம் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும் யார்க்கும் ‘தமிழ்ப் பெண்கள் எல்லாருமே ஒழுக்கங் கெட்டவர்களோ’ என்று எண்ணவே தோன்றும். பெண்கள் வழுக்கி விழும் சூழ்நிலை அசாதாரணமானது. அதனைக் கையாண்டு சிறுகதை தீட்டுவது கூரிய வாளின் மீது நடப்பது போன்றது. ஆகவே இளம் எழுத்தாளர்கள் ‘விபசாரக்’ கதைகளை எழுதாமல் இருப்பதே மேல்.

விசித்திரக் காதல் மற்றும் சிலர் தமிழ்க் குலத்திற்கே அருவருப்பான சில ‘விசித்திர காதல் முடிச்சு’க்களைத் தங்கள் கதைகளில் நடமாடவிடுகிறார்கள். தாய்க்கும் மகனுக்கும் சரசம் – மாமனாருக்கும் மருமகளுக்கும் நட்பு – அப்பாவுக்கும் மகளுக்கும் உறவு – இப்படிக் கதைகளைக் கற்பனை பண்ணுவது மன்னிக்கமுடியாத குற்றம். இந்தக் கதைகளால் தமிழும் வளராது. எழுத்தாளர்களும் வளர முடியாது. அருவருப்பூட்டும் இத்தகைய ‘அபார’ கற்பனைகளை அள்ளி விடுபவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருந் தீமை விளைவிக்கிறார்கள். இத்தகைய ‘விசித்திரக் காதல்’ கதைகளை இளம் எழுத்தாளர்கள் எழுதவே கூடாது.

சிறுகதை சமுதாயத்தைப் படம் பிடிப்பதாக இருக்க வேண்டும். மனித உணர்ச்சிகளுக்கு அது உருவம் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த லட்சியங்களைப் படிப்பவர் உள்ளத்தில் எழுப்ப வேண்டும். மக்களின் சிந்தனையைத் தெளிவடையச் செய்வதையே எழுத்தாளர்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டும். சிந்தனையைக் குழப்பும் அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகளைப் புதிய எழுத்தாளர்கள் மறந்தும் எழுதக்கூடாது.

பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரே மாதிரி நடையினையே கையாளுகிறார்கள். ‘அவள் கண்கள் குளமாகின’ என்று சொல்வது ஒரு சமயம் புதுமையாக இருந்தது. இப்போது அது படித்துப் படித்துப் புளித்துப் போய்விட்டது. எழுதும் நடையில், கையாளும் சொற்களில் புதுமை மிளிர வேண்டும். கதை சொல்லும் போக்கிலும் புதுமை காண வேண்டும். புதுமை எழுத்துத் துறைக்கு உயிர் நாடி.

ஒரு முக்கிய எச்சரிக்கை நம் எழுத்தாளர்களுக்கு மற்றொரு யோசனையையும் கூற விரும்புகிறேன். ஏதோ சில பத்திரிகைகளை மட்டும் படித்துவிட்டு எழுத்தாளராகி விடமுடியாது. தேர்ந்தெடுத்த நல்ல நூல்களை நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் நூல்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். வேற்று மொழி தெரிந்தவர்கள் அம்மொழிகளில் உள்ள சிறுகதை இலக்கியங்களைப் படிக்க வேண்டும். நூறு நல்ல சிறுகதைகள் படித்தீர்களானால் நீங்கள் ஒரு நல்ல கதையை எழுத முடியும். தமிழ் இலக்கியங்களை முறையாகப் பயில வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தமிழ் நடை வளம் பெறும். சொல்லுக்குப் பஞ்சம் ஏற்படாது.

கடைசியாக ஒரு எச்சரிக்கை. மலாயாவில் பலர் காப்பியடிப்பதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளின் பழம் பிரதிகளிலிருந்து அப்படியே எழுத்துக்கு எழுத்து பெயர்த்து எழுதித் தங்கள் பெயரைச் சூட்டிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். கதைகள் சில சமயம் பத்திரிகைகளிலும் வெளிவந்து விடுகின்றன. ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பது பழமொழி. ஒரு முறை அகப்பட்டுக் கொண்டால் போதும், இந்தக் களவாணிகள் மறுபடி தலைதூக்கவே முடியாது. இளம் எழுத்தாளரிடையே உள்ள ‘நச்சு மரங்கள்’ இவர்கள். இந்தத் திருடர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொடுப்பது வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் தலையாய கடமையாகும்.

1950களில்தான் பலரும் பத்திரிகை படிக்கக்கூடிய பழக்கம் ஓரளவு நிலைபெற்றது. இந்தப் பத்திரிகைகளே இளையர் கூட்டத்தின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. பத்திரிகையின் பக்கங்களைக் காசு கொடுக்காமல் நிரப்ப முடியும் என்பதைப் பத்திரிகாசிரியர்கள் நன்கு கண்டுகொண்டனர். காசு கொடுத்தால்தானே தரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்து கதையை வாங்கிப் போட முடியும். எழுதுவோரும் இதை நம்பி பிழைப்பு நடத்தப் போவதில்லை. சற்றுப் பேரும் புகழும் வந்தால் போதும் என்றுதான் எல்லாருமே எழுதினர். ஏனோ தானோ என்று எழுதப்படும் எழுத்து அது. ஒரு seriousness கிடையாது. எந்தக் கலையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது பதராகத்தான் மிதக்கும். கலை பயிற்சியினால் உருவாவது. கடும் பயிற்சிக்குத் தடையாக இருப்பது எழுத்தாளர்களின் சோம்பேறித்தனம். பல நூல்களை வாங்க இயலாத வறுமைத்தனத்தையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். எனவே 1950களிலிருந்து இன்றைய காலம் வரை எழுத்தாளர்கள் பயிற்சி பெறும் மேடைதான் பத்திரிகைகள். அவ்வப்போது சில பரிசுகள் கொடுத்து எழுத்தாளரின் மனக்குறையைச் சிலர் தீர்த்துக் கொண்டனர். இன்று பத்திரிகைகள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனவே. இப்போதாவது எழுத்துக்குக் காசு கொடுக்கக் கூடாதா? காசு இல்லாமல் எழுத மாட்டோம் என்று அடித்துச் சொல்லும் திராணியும், நன்றாகவே சம்பாதிக்கும் எழுத்தாளருக்கு இன்று கூடக் கிடையாது. ஏனெனில் அந்த எழுத்தாளரின் படைப்பு சுமார் என்பது அவருக்கே தெரியும். மட்டச் சரக்கை எப்படி விற்க முடியும்?

கதைகளின் தரம் தாழ்ந்து கிடப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ‘நீளம்’. மூன்று பத்திக்குமேல் கதை அனுப்பாதே என்று சாரங்கபாணி கட்டளை இட்ட வண்ணம் இருப்பார். மூன்று பத்தியில் சுமார் ஐந்நூறு வார்த்தைகளில் எப்படி உன்னதமான ஒரு சிறுகதையை எழுத முடியும்? பத்திரிகைக் கதைகள் படுமோசமாக இருப்பதற்கு இந்த இரண்டு காரணங்களையும் களைய வேண்டும். ஆனால் விசித்திரமாக அதே இரண்டு காரணங்கள் இன்றைக்கும் மலேசிய சிங்கப்பூர்ப் பத்திரிகைகளை ஆட்டி அலைக்கழிக்கின்றன.

மூன்றாவது காரணமாக, ஓழுங்கான விமர்சனப் போக்கு இல்லாத குறையைக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும். ரசனை இல்லாதபோது எப்படி விமர்சனம் பிறக்கும்? விமர்சனத்தின் விளைவு ரசனையா? ரசனையின் விளைவு விமர்சனமா? இன்றைய சூழலில் சிறுகதைக்கே தேவை இல்லாமல் போய்விட்டது. ஆகவே இணையத்தில்தான் கைவரிசையைக் காட்டவேண்டும்.

முருகு சுப்பிரமணியன் தமிழ் நேசனுக்குப் போனதும் பத்திரிகையில் இடம்பெறும் எல்லாப் படைப்புகளுக்கும் காசு கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். சிறுகதைக்கு ஐந்து வெள்ளி வழங்கியது நேசன். அதை எழுத்தாளருக்கு அனுப்பிவைக்க அதைவிட அதிகமாகக்கூடச் செலவு பிடிக்கும் சில நேரங்களில். ஆகவே அந்தத் திட்டம் தானாகவே கைநழுவிப் போனது. பெரிய தொகை என்றால் பிரச்னை இல்லை. அந்த நாளும் எந்த நாளோ?

1960ல் தமிழ் முரசில் கதை எழுதிப் பரிசு வாங்கியபோது முருகு சுப்பிரமணியன் அழைத்து அவர் தங்கியிருந்த 63 Buffalo Road முகவரிக்குப் போனபோது அவர், பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்ற சொன்னதை இராம கண்ணபிரான் நினைவுகூர்ந்தார். அதன் விவரம் கீழே:

http://balabaskaran24.blogspot.com/search?updated-min=2009-01-01T00:00:00%2B08:00&updated-max=2010-01-01T00:00:00%2B08:00&max-results=5

1961ல் தமிழ் நேசனுக்கு ஒரு சோதனை நேரம். அதற்குக் காரணமாக இருந்தவர் துணையாசிரியர் கனகசுந்தரமும் சுயேச்சை நிருபர் கா. அண்ணாமலையும். கு. அழகிரிசாமிக்குப் பிறகு கே. சி. அருண் என்பவர் நேசனுக்கு 1957ல் ஆசிரியராக வந்தார். அருண் சிங்கப்பூர் ஸ்டாண்டர்டில் உதவியாசிரியராவும் ராய்ட்டர் நிருபராகவும் இருந்த பிறகு அப்பத்திரிகை மூடப்பட்டபின் நேசனுக்கு மாறினார். தமிழ்ப் பத்திரிகையில் மாதம் ஆயிரம் வெள்ளி வாங்கிய முதல் ஆசிரியர் அருண். 1961ல் நேசனைப் பினாங்கு ரெங்கசாமி பிள்ளையிடம் ஒரு லட்சம் வெள்ளிக்கு விற்க உரிமையாளர் மலையாண்டி செட்டியார் ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார். ரெங்கசாமி பிள்ளையோ கோ சாரங்கபாணியின் மிக நெருங்கிய நண்பர். கோ. சா நிர்ப்பந்தம் கொடுக்கவே ரெங்கசாமி நேசனை வாங்காமல் விட்டுவிட்டார். நேசனின் எதிர்காலத்தில் ஐயம் கொண்ட அருண் மலாயாக் கூட்டரசு தகவல் துறையின் உயர் அதிகாரி வேலை கிடைத்தபோது அதற்குத் தாவினார். புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை கனகசுந்தரம் தலையங்கம் எழுதும் பொறுப்பை ஏற்றார். கா. அண்ணாமலை அடிக்கடி நேசனுக்கு வந்து போவார். கனகசுந்தரமும் அவரும் நெருங்கிய தோழர்கள். ஒரு நாள் தன்னிடம் exclusive செய்தி இருப்பதாகக் கனகசுந்தரத்திடம் கூறினார் அண்ணாமலை. இருவரும் மேல்மாடிக்குப் போய் செய்தியை எழுதிக் கொண்டு வந்து பத்திரிகையில் (12 அக்டோபர் 1961) போட்டுவிட்டனர். ‘ சோஷலிச முன்னணி தடை செய்யப்படும் – அரசாங்கம் முடிவு ’ என்னும் தலைப்புடன் செய்தி வந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சோஷலிச முன்னணி. அன்றைய தினமே பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் செய்தியை மறுத்தார். ஆதாரமற்ற செய்தி வந்ததைக் கண்டித்தார். அதோடு அதைக் கடுமையாகவும் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் மலையாண்டி செட்டியாரின் மகன் நாகப்பன் சிங்கப்பூருக்குச் சென்று முருகு சுப்பிரமணியத்க் கண்டு பேசி அவரை நேசனுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

(வே. விவேகானந்தன். நினைவுச் சுவடியில் சில ஏடுகள். தமிழ் நேசன் 70ஆம் ஆண்டு நிறைவு மலர். 1994)

(பிரதமர் துங்கு அன்றைய தினமே செய்தியை மறுத்ததாக விவேகானந்தன் எழுதியிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் மலாயாத் தகவல் சேவை இயக்குநர் மொகமட் சோப்பி-யின் பெயரில்தான் அன்றிரவு அறிக்கை வெளியானது. நேசன் வெளியிட்ட செய்தி ஆதாரமற்ற பொய்த்தகவல் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது. அரசாங்கத்தின் மீது வெறுப்பும், ஏளனமும், அவநம்பிக்கையும் உண்டாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட குறும்புத்தனமான செய்தி அது என்று அரசாங்க அறிக்கை வருணித்தது. நேசன் பிரசுரித்த பொய்யான தகவல் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் விசாரணைக்குப் பின் நேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.)

முருகு சுப்பிரமணியன் நேசனின் ஆசிரியப் பொறுப்பை 1961 கடைசியிலோ 1962 ஆரம்பத்திலோ ஏற்றுக்கொண்டிருக்கலாம். முருகு சேர்ந்ததுடன் கனகசுந்தரம் வானொலிக்குச் செல்லவே அவருடைய இடத்தில் விவேகானந்தன் துணையாசிரியராக அமர்ந்தார். விவேகனின் நியமனத்துக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய பள்ளித் தோழரும் நேசனின் துணையாசிரியருமான எம் துரைராஜ். கொஞ்ச நாளில் கனகசுந்தரம் மலாயா வானொலியிலிருந்து சிங்கப்பூர் வானொலிக்கு வந்து சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டுகள் வானொலி தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகளைக் கண்காணித்து ஓய்வு பெற்றபின் 1983 அல்லது 1984ல் தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காலமானார் கனகு என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த கனகசுந்தரம். திருவாரூரில் படித்த கனகசுந்தரம் மு கருணாநிதியின் பள்ளித் தோழர்.

1963 செப்டம்பரில் மலேசியா உதயம். அப்போது தமிழ் முரசு இல்லை. ஊதிய உயர்வு கேட்டுப் பத்திரிகையை அச்சடித்த ஸ்டார் பிரஸ் ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் முரசு 13 ஜுலை 1963 முதல் 10 ஜுலை 1964 வரை வெளியாகவில்லை. மலேசிய உதயத்தின்போது அரசாங்கத்தின் எண்ணத்தைத் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகை இல்லையே என்ற கவலை மக்கள் செயல் கட்சிக்கு. முரசு சமரசம் காண்பதற்குப் பிடிவாதமாய் மறுத்துவிட்டது. அதோடு, ‘தொழிற்சங்கத்தின் விடாப்பிடித் தனத்தையும் அதன் பொறுப்பற்ற போக்கையும்’ சகிக்க முடியாமல் அச்சகத்தைத் தன்னிச்சையாக மூடிவிடுவதாக நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஊழியர் தரப்பும் முதலாளி தரப்பும் சேர்ந்து பஞ்சாயத்து மன்றத்துக்குப் போகலாம் என்று, ம செ க சட்டமன்ற உறுப்பினர் ஜி கந்தசாமி, தேசியத் தொழிற் சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சி வி தேவன் நாயர் ஆகியோர் தெரிவித்த யோசனைக்கும் முரசு நிர்வாகம் இணங்கவில்லை. கடைசியாகத் தொழிலாளர் அமைச்சர் Jek Yuen Thong பஞ்சாயத்து மன்றத்துக்குப் போக இருதரப்புக்கும் ஆணையிட வேண்டிய கட்டாயம் உண்டானது. வழக்கு நிர்வாகத்துக்கு சாதகமாக முடிந்தது. முரசிலிருந்து வெளியேறிய தி செல்வகணபதி வெளியார் ஆதரவுடன் தமிழ் மலர் நாளிதழை 1 மார்ச் 1964ல் தொடங்கினார்.

தமிழ் முரசு ஓராண்டு கழித்து மீண்டும் தலைதூக்கியபோதிலும் முன்னிருந்த பொலிவை இழந்து பரிதாபமாகத் தென்பட்டது. கோ சாரங்கபாணியும் (1903 – 1974) காலமாகவே, முரசு நாற்பதாண்டுகளாகக் கட்டிக் காத்துப் பேணி வந்த நோக்கத்தையும் கொள்கையையும் பறிகொடுத்துவிட்டு சமுதாயத்துடன் ஒட்டி வாழ முடியாமல் தத்தளிக்கத் தொடங்கியது.

முரசு இல்லாத காரணத்தால் தமிழ் நேசன் கிடுகிடுவென்று வளர்ந்தது. முருகுவும் வாழ்க்கையில், சமூகத்தில் உயர்ந்தார். இருந்தபோதும் கசப்பான சூழ்நிலையில் அவர் நேசனை விட்டு 1976ல் விலகிக் கொள்ள நேர்ந்தது துர்அதிர்ஷ்டமே. உடல் நலம் குன்றி 1982 ஏப்ரல் 10ஆம் நாள் முருகு காலமானார். 1924 அக்டோபர் 7ஆம் தேதி பிறந்தவர் முருகு சுப்பிரமணியன். ஒரு கால் நூற்றாண்டுக் காலம் சிங்கப்பூர் மலேசியாவில் முதல்தரப் பத்திரிகையாளராகப் பெயர் பதித்ததே அவருடைய திறமைக்குச் சான்று. #


Wednesday, September 16, 2009

சந்திப்பு 5 : இராம கண்ணபிரான் (Rama Kannapiran)


எழுத்தாளர் இராம கண்ணபிரானை நான் சந்தித்த தினம் 1982 மே 4. அவர் குடியிருந்த தோ பாயோ வீட்டில் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை மணி வரை நாங்கள் பேசினோம்.
மேலும் சில விளக்கம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை அவரை மறுபடியும் சந்தித்தேன். மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஏழே கால் மணி வரை உரையாடல் நீடித்தது.
(புதிய தகவல்களை அடைப்புக்குறிக்குள் சேர்த்திருக்கிறேன்.)



.. எது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்?

இந்நாட்டுப் பிரச்னைகளைத் தொட்டு எழுதக்கூடியது. இந்த இடம் இந்திய, தமிழ், சீன, மலாய் மக்கள் வாழும் இடம். இவற்றை யார் வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணத்திற்கு அகிலன். மலேசிய சிங்கப்பூர் வட்டாரம் பற்றிக் கதை, நாவல் எழுதியிருக்கிறார். நெஞ்சினலைகள், பால்மரக்காட்டினிலே நாவல்களைச் சொல்லலாம்.

இங்கே உள்ளவர்தான் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இங்குள்ள பிரச்னைகளை நேரில் உணர்ந்து எழுதினால் நல்லது. மற்றவர்கள் எழுதினாலும் பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து விஷயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு எழுதவேண்டும்.

(மலேசியாவுக்கு வராமலேயே அகிலன் நெஞ்சினலைகள் எழுதினார். குறிப்புகள் சேகரித்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் அது. மலேசியா சிங்கப்பூருக்கு வந்துவிட்டுப் போனபின் பால்மரக் காட்டினிலே நாவலை கலைமகள் இதழில் தொடராக எழுதினார். அதில் சில factual errors இடம்பெற்றது உண்மைதான்.

கறுப்புத்துரை என்ற சிறுகதை அவர் இங்கேயே எழுதி உதயம் இதழுக்கு அனுப்பியது.

அந்தக் கதைக்கு அகிலன் முதலில் வைத்த பெயர் வேறு. கந்தசாமியின் மகன் என்று ஏதோ ஒரு பெயர் என நினைக்கிறேன். அதைவிட கறுப்புத்துரை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னவர் நா. கோவிந்தசாமி. வெள்ளைத்துரையைப் போலவே நம் கறுப்புத்துரைகள் மலேசியத் தோட்டங்களில் எப்படி அட்டகாசம் செய்தார்கள் என்பதை கோவிந்தசாமி எடுத்துச் சொன்னார். அகிலன் உடனே பழைய தலைப்பை அடித்துவிட்டுக் கறுப்புத்துரை என்று எழுதியதை நானே கோவிந்தசாமி வீட்டில் என் கண்ணால் பார்த்தேன்.

அகிலன் இங்கு வருவதற்குமுன் இங்கு வெளிவந்திருக்கும் இலக்கியத்தைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று விடாப்பிடியாகச் சொல்லிவிட்டார். பல நூல்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றுள் மலபார் குமாரின் குறுநாவல் செம்மண்ணும் நீலமலர்களும் அகிலனை அதிகமாகக் கவர்ந்தது.
(இந்த நாவலுக்கு உண்மைச் சூழலை அறிய குமாரும் நானும் (பாலபாஸ்கரன்) தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு ரப்பர்த் தோட்டத்திற்குச் சென்று இரண்டு நாள் தங்கியது ஞாபகத்திற்கு வருகிறது.)


மலேசிய சிங்கப்பூர்க் கதைகளைப் படித்துவிட்டு அகிலன் தமிழ்நாட்டிலேயே ஒரு இதழில் ரசனையோடு விமர்சனம் எழுதியிருந்தார். அதிகக் குறை சொல்லாமல் positive ஆகவே கருத்தைக் கூறியிருந்தார். நம் எழுத்தாளர்கள் அதை மிகவும் பாராட்டி வரவேற்றார்கள்.

என்னுடைய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளிவருவதற்கு அகிலனே காரணம்.

அகிலனுடைய கதைகளைக் குறை சொல்பவரும் உண்டு. தி. ஜானகிராமன் இங்கு வந்திருந்தபோது அகிலன் மாதிரி தம்மால் அவசரமாக எழுத முடியாது என்று சொன்னார். தவம் பண்ணினால்தான் கதை வரும் என்பது ஜானகிராமனின் தத்துவம்.

அகிலன் ஊர் திரும்பும்போது வி. டி. அரசு ஆங்கிலத்தில் வெளிவந்த சிங்கப்பூர் மலேசியா தொடர்பான மிகச் சிறந்த ஐந்தாறு சமூக, வரலாற்று நூல்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.)


.. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்?

அளவில் அதிகமாக எழுதுவோர்
மா. இளங்கண்ணன், சே. வெ. சண்முகம்.

தரத்தைக் கருத்தில் கொண்டு எழுதுவோர்
மு. தங்கராசன் (இன்றைய நிலையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமாக மொத்தம் 20 நூல்கள் போட்டிருக்கிறார்),

க. இளங்கோவன் (சிறுகதை, புதுக்கவிதை, உருவகக்கதை),

உதுமான் கனி (இளையவன்),

நா. கோவிந்தசாமி (மதிப்பீடுகள், ஒட்டுண்ணிகள் கதைகள் நன்று),

பொன் சுந்தரராசன் (என்னதான் செய்வது பவுன் பரிசுக் கதை),

மு. சு. குருசாமி,

ந. பழநிவேலு.


.. சிங்கப்பூர்த் தமிழர்கள்?

1. ஆங்கிலத் தமிழர்கள்.. ஆங்கிலம் படித்துவிட்டு அரசாங்க வேலையில் இருப்பவர்கள். தமிழ் தெரியாது. ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். நிறைய பேருக்கு அப்படி ஒன்றும் பெரிய படிப்பு இருக்காது. அதிக பட்சமாக O Level, A Level படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.

2. தமிழ்த் தமிழர்கள்.. தமிழ் மட்டுமே பேசுபவர்கள். தமிழ் மட்டுமே படித்தவர்கள். குறைந்த வருமானம் கொண்டவர்கள். சிங்கப்பூர்த் தமிழரில் பெரும்பான்மையோர் இவர்களே.

3. பயணத் தமிழர்கள்..
கோ. சாரங்கபாணி ஒரு தமிழ் முரசு தலையங்கத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். இவர்களுக்குக் குடும்பம் ஊரில் இருக்கும். (கடுதாசி மூலம்தான் குடும்பமே நடக்கும். கடுதாசி வாழ்க்கை எனலாம். குழந்தை பிறப்பு, நல்லது கெட்டது எல்லாம் பல நாள் கழித்துக் கடிதத்தில்தான் வரும். ஊருக்குப் போகிறவரிடம் சாமான்கள் கொடுத்து வீட்டில் தரச்சொல்வது. ஊரிலிருந்து ஆள் வந்தால் அவரைப் பார்த்து மணிக்கணக்காக ஊர் விஷயங்களை விசாரிப்பது. இவர்களைக் காலி ஆட்கள் என்றுகூடச் சொல்வார்கள். உள்ளூர்க்காரர்கள் இவர்களை ஊர்க்குடுமிகள் என்று கேலி செய்வதுமுண்டு. பதிலுக்கு நாட்டான் என்று உள்ளூர்க்காரர்களைக் கேலிசெய்வர் பயணத்தமிழர். முருகு சுப்பிரமணியம், வி. டி. அரசு போன்றவர்கள் ஆரம்பத்தில் பயணத் தமிழர்களே. முருகு Buffalo Road-ல் குடியிருந்தார்.)

தமிழ்த் தமிழர்களுக்குத்தான் நாம் எழுதவேண்டும். அவர்கள்தாம் அதிகம்.

(ஆங்கிலம் படித்தவர்களுக்கும் தமிழ் படித்தவர்களுக்கும் இடையில் நிலவுகின்ற பிளவைக் காட்டும் கதைதான் நாடோடிகள்.)

(இப்பொழுது தமிழர்களில் புது வகையினரைப் பார்க்கிறோம். New Arrivals என்கிற புது வரவுகள். இவர்கள் bilingual. மற்றொரு வகையினர் contract workers என்கிற ஒப்பந்த ஊழியர்கள்.)


.. அண்மையில் கல்விக் கழகத்தில் (I.E) எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சி நடப்பதாக நா. கோ சொன்னார். அவர் பாடத்தில் ஒரு பகுதியாகவே கதைக் கலையைக் கற்றுத் தருகிறார். ஆசிரியப் பயிற்சி பெறும் 20, 22 வயது கொண்ட இளையர் 30 கதைகளை எழுதினர். அவற்றில் நமக்குச் சம்பந்தமில்லாத இடங்கள் வருகின்றன. குமுதம் ஆனந்தவிகடன் போலவே கதைகள் தென்படுகின்றன. பிரச்னை இல்லை. ஓரிரு கதை மட்டும் பரவாயில்லை.


.. புது எழுத்தாளர்கள்?

. இரா. துரைமாணிக்கம். தமிழ் ஆசிரியர். சிறுகதை எழுதுகிறார். (இப்பொழுது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் போட்டிருக்கிறார்.)

. மசூது. தமிழ் ஆசிரியர். (இப்பொழுது கவிதை பக்கம் போய்விட்டார்.)

. பி. சிவசாமி. ஆசிரியர். (பின்னர் ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்தது.)

. ஸ்ரீதேவி.

. சங்கையா. (பின்னர் அகரம் வெளியீட்டாக விடுதலை சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தார். இவ்வாண்டு காலமானார்.)

. வீரப்பன் லட்சுமி. தமிழ் ஆசிரியை. Potential Writer. Mesage, Form இரண்டும் இணைந்து வருது. சமீபத்தில் நாடகம் நிறைய எழுதுகிறார்.

. RTS-ல் செ. ப. பன்னீர்ச்செல்வம், வி. கலைச்செல்வன், மூர்த்தி முதலானோர்.


.. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என்று நாடுகள் தனித்தனியாக இருந்தாலும் பொதுவாக இந்த நாடுகளின் இலக்கியத்தை Overseas Tamil Literature அயலகத் தமிழ் இலக்கியம் என்ற கோணத்தில் பார்க்கவேண்டும்.

தமிழ்க் கதைகள் ஆங்கிலத்தில் வரும்போதுதான் நல்ல திறனாய்வு கிடைக்கும். Favourable, sharp criticism வரும்.
(இழப்புக்கள் கதை ஓர் அனைத்துலக theme. அதனால் மற்ற நாட்டு வாசகர் சிலர் அதனைத் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர்.)


.. சுமார் 55 கவிஞர்கள் இருக்கிறார்கள்.
கவிக்குலம் போற்றும் தமிழவேள் எனும் கவிதை நூல் வரப்போகிறது. (இப்போது வந்துவிட்டது.)
தமிழவேள் நாடக மன்றத்தின் வெளியீடு அது.

.. புனைகதை எழுத்தாளர்கள் 100 பேர் இருப்பார்கள். இவர்களைப் பிரதிநிதிக்க ஒரு சங்கம் உண்டா? சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பத்தில் கவிஞர்களே நிறைய இருந்தார்கள். புனைகதைப் படைப்பாளர்கள் அதிகம் கிடையாது.

.. எழுத்தாளர் கழகம் கவிதை/கதை தொகுப்புகள் போடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுகதைப் பொறுப்பு என்னிடம். தமிழ் முரசு, தமிழ் மலரில் விளம்பரம் கொடுத்தோம். பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. சுமார் இருபது கதைகளே வந்தன. 10, 12 கதைகளைத் தொகுத்து நூலாகப் போடலாம் என்று எண்ணம். என் வேலை முடிந்தது.

ஆங்கில இலக்கியம் படிக்கும் ஒருவர் TV படங்களைப் போல எழுதணும் என்றார். நான்கு கதைகளை அனுப்பினார். ஒன்றுகூடத் தேறவில்லை.

(கதை நூல் வரவேயில்லை. என்னுடன் சே. வெ. சண்முகம், நா. கோவிந்தசாமி ஆகியோர் நீதிபதிகள். நீதிபதிகளின் கதைகளும் உத்தேசத் தொகுப்பில் இருந்தன. நீதிபதிகளின் கதைகளை எப்படி போடுவது என்று சிலர் பிரச்னையை எழுப்பித் தகராறு செய்தனர். ஆகவே நூல் திட்டம் கைவிடப்பட்டது. கவிதைத் தொகுப்புக்கு முல்லைவாணன் பொறுப்பேற்றிருந்தார். அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.)


... எழுதுவோருக்கு எங்கே இடம்?

. RTS. எம். கே. நாராயணன் வந்த பிறகு சிங்கப்பூர்க் கதைகளை ஊக்குவித்தார். ஒரு கதைக்கு 55 வெள்ளி கொடுத்தது வானொலி.

. நாடகம், தொடர் நாடகம், இலக்கிய நாடகம் என்று நிறைய வந்தன. எஸ். எஸ். சர்மா, சே. வெ. சண்முகம் போன்றோர் காசுக்காகவே எழுதினர்.

. நா. கோவிந்தசாமி 40, 45 தனிநாடகங்களும் 3, 4 தொடர் நாடகங்களும் எழுதினார்.

. தமிழ் முரசில் எழுதினால் instant writer திடீர் எழுத்தாளர் ஆகலாம். ஒப்பந்த, பயணத் தமிழர்கள் மட்டுமே முரசில் அதிகமாக எழுதினார்கள். அரசாங்க, சமூக மக்களின் குரலாக முரசு ஒலிக்கவில்லை. சென்னைக் கடிதம், ஜோசியம் படிக்கும் வாசகர்கள் அதிகம். வி இக்குவனம் பொறுப்பாசிரியராக இருந்தபோது சிங்கை சாந்தி, பழனிவேலன் போன்றோர் அதிகம் எழுதினார்கள். வனம் போய்விட்டால் வேறு ஒருவர் வரும்போது அவருடைய போக்கே செயல்படும். முரசுக்கென்று தனித்தன்மை கிடையாது.

. ஏ வீரமணி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் உருவாகி செழிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். He was obsessed with Singapore Tamil Literature.

. Singa இதழும் இந்தியன் மூவி நியூசும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகின. மூவி நியூசின் தமிழ்ப் பகுதிக்கு சர்மா பொறுப்பாக இருந்தார். வேல் எனும் பெயரில் ஓர் இதழ் நடத்தினார் அவர். பால் உணர்வுக் கதைகள் எழுதி தம் இலக்கிய அரிப்பைத் தீர்த்துக் கொண்டார் சர்மா.


. மலேசியத் தமிழ் இலக்கியம்?

ஒரு காலத்தில் தமிழ் நேசனில் கதை வந்தால்தான் பெருமை என்ற நிலை இருந்தது. காரைக்கிழார் கவர்ச்சியாகக் கதைகளைப் பிரசுரித்தார். முருகு, பரிதாமணாளன் இருந்த வரை அதிக கவர்ச்சி இருக்காது.

ஒரு சிலர் மலேசியர்கள் நம்மைப் புறக்கணிப்பதாகச் சொல்வார்கள். நம்மை அவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பர்.

பவுன் பரிசு கிடைக்கவில்லை என்று மா. இளங்கண்ணன் திட்டிக்கொண்டிருக்கிறார்.

நம் கதைகளில் தமிழ்நாட்டு சாயலும் செல்வாக்கும் அதிகம்.

நம் எழுத்தாளர்களின் intellectual background மிகவும் குறைவு. அதிக பட்ச கல்வித் தகுதி O Level அல்லது A Level தான்.

இதெல்லாம் சேர்ந்து creativity-யை (படைப்பாற்றலை) பாதிக்குது. புதுச்சரக்கு இல்லை. எழுதுபவருக்கு சொந்த philosophy (வாழ்க்கை நோக்கு) இல்லை.

Not all writers are thinkers. Ma Ilankannan is not a thinker.


(எனக்குப் பவுன் பரிசு கிடைத்த பிறகு சிலர் எதிர்ப்புக் காட்டினர். அர்த்தமில்லாத எதிர்ப்பு அது.)

இலக்கியக் களத்தில் சிங்கப்பூர்க் கதைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பது இளங்கண்ணனின் வாதம். மலேசியாவைச் சேர்த்தால்தான் களம் இன்னும் விரிவாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

உலகம் முழுக்க உள்ள தமிழர் பிரச்னையே முக்கியம். அதற்காகத்தான் நாடடோடிகள் எழுதினேன்.


என் வளர்ச்சி

பத்து வயதில் சிங்கப்பூருக்கு வந்தேன். தகப்பனார் ராமசாமி முதலியார் கடை வைத்திருந்தார். தந்தை 1922ல் சிராங்கூன் ரோடில் Sri Ratha Rukmani Vilas புத்தகக் கடை ஆரம்பித்தவர். அந்தக் கடைக்கு எதிரிலே 64 சிராங்கூன் ரோடிலும் மற்றொரு கடை இருந்தது. இதுதான் வாசு வளையல் மண்டி. அப்பா நன்றாகப் பாடுவார். தெருக்கூத்தில் நடித்தவர். மலேசியாவுக்குக் கோயில் விழாக்களின்போது சென்று புத்தகக் கடை போட்டுப் பாட்டுப்பாடி விற்பார். அவருடைய சகோதரர்தான் கோலாலம்பூரில் மனோன்மணி விலாச புத்தகசாலை வைத்திருந்தவர்.

போகப் போகப் புத்தகக் கடையோடு மற்ற சில்லறை சாமான்களும் விற்கப்பட்டன. 1940களின் பிற்பகுதியில் கடை ஜவுளிக் கடையாக மாறியது. ஒரு கட்டத்தில் 1950களில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து கடை நடைபெற்றது. அப்போதுதான் நான் வந்தேன்.

அந்த நேரத்தில் கடைக்கு மேலே எஸ். நாராயணன் B.Sc (செட்டியார்) தங்கியிருந்தார். பார்லிமெண்ட் நாராயணன் என்று பெயர் பெற்ற அவர் நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். அவர் நிறைய கதைகள் படிப்பவர். ஆனந்தவிகடன், குமுதம் வாங்கிப் படித்தார்.

தகப்பனார் அவ்வப்போது ஊருக்குப் போய்வரக் கூடியவர். தாயார் இங்கு இல்லை. என் தனிமைத் துயரத்தைப் போக்க நாராயணனின் நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகங்கள் எல்லாம் எனக்குப் புரியுமா என்று நாராயணன் கேட்பார். கல்கியின் அலை ஓசை நாவல் அவரிடம் இருந்தது.

சிவகாமியின் சபதம் நாவலை 1956ல் படித்தேன். வயது 13 தான். Norris Road-ல் ராமகிருஷ்ணா மடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் நூலகம் உண்டு. அங்குதான் அந்த நாவலை இரவல் வாங்கினேன். தமிழ் நேசன், தமிழ் முரசு ஏடுகளும் அங்கிருந்தன.

அதே போல Race Course Lane-ல் இருந்த Gandhi Memorial Hall-ல் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகள் இருக்கும். அவற்றைப் படிப்பேன்.

என் எழுத்து முதலில் அச்சில் வந்தது 1955ல். அப்போது எனக்கு வயது 12. கண்ணன் சிறுவர் இதழில் ஒரு விமரசனக் கட்டுரை எழுதினேன். முந்தைய இரண்டு இதழ்களைப் படித்துவிட்டு விமர்சன ரீதியில் எழுதவேண்டும். இதழ் ஆசிரியர் திருத்திப் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். உள்ளக் கண்ணாடி என்ற தலைப்பில் வெளிவந்தது அது.

ஆர்வி பச்சை மையில் எழுதி கடிதம் அனுப்பினார். பரிசுப் பணம் 5 ரூபாயை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பது சிரமமான காரியம் என்றும் அதற்கு ஈடாக ஓர் ஆண்டுக்கு கண்ணன் இதழ் sea mail-ல் இலவசமாக அனுப்பப்படும் என்றும் அவருடைய கடிதம் தெரிவித்தது. இது எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.

1958 ஏப்ரலில் தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மூத்த பிள்ளை கதையை அனுப்பினேன். காதல் இல்லாத கதை எழுதவேண்டும் என்பது விதி. எனக்கு வயது 15தான். காதல் எனக்குப் புதிது. தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அதனால் ஒரு பாதிப்பு எனலாம். போட்டிக்கு வந்த 96 கதைகளில் என் கதைக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுத் தொகையை அனுப்பி கோ. சாரங்கபாணி கடிதமும் எழுதியிருந்தார்.

பிறகு இருண்ட வீடு கதைப் போட்டியில் மீண்டும் எனக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுப் பணத்தை அனுப்பி முருகு சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

1960ல் அமைதி பிறந்தது கதை எழுதியபோது முருகு என்னைக் கூப்பிட்டு சின்ன வயதில் எப்படி கதை எழுதினாய் என்று கேட்டார். அரைக்கால் சட்டை அணிந்த நிலையில் முருகுவைச் சந்தித்தேன். Buffalo Road-டில் முருகு தங்கியிருந்த நேரம் அது. முரசின் அச்சுக்கோப்பாளர் பொன்னழகை என்னிடம் அனுப்பி ஒரு photo-வும் வாங்கி வரச் சொன்னார். அந்தக் கதையைப் பிரசுரித்து என் படத்தையும் போட்டு எழுத்தாளர் அறிமுகம் செய்தார் முருகு.

63, Buffalo ரோட்டில் முருகுவைப் பார்க்கப் போனபோது அகிலன் கதையைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்த கதை அது. Trunk பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்றார்.

அகிலன் எழுதிய வாழ்வில் இன்பம் நாடக நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். TKS சகோதரர்கள் போட்ட நாடகம் அது. காதல் விரசம் இல்லாத ஒரு கதை.

நான் சொந்தமாக சிறுகதைத் தொகுப்பு போட்டபோது முருகுவிடந்தான் முன்னுரை வாங்கவேண்டும் என்ற ஆசை. அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

1961ல் Senior Cambridge தேர்வு வந்தது. கதையின் பக்கம் போகவில்லை.

1965ல் 22 வயதுக்குள் நான் எழுதிய கதைகள் 7.

1966-1969 வரை ஆசிரியப் பயிற்சி. வேலை செய்து கொண்டே பகுதி நேரமாகப் பயிலும் திட்டம் அது. நான் ஆங்கில ஆசிரியர் பயிற்சி பெற்றபோது நா. கோவிந்தசாமி அங்குத் தமிழாசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அவரை நான் tuck shop-ல் சந்தித்ததுண்டு. 1974க்குப் பிறகு அவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

1968ல் மகள் பிறந்தாள். மனைவியும் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த ஆண்டில்தான் தமிழ் நேசனுக்கு அவர் பங்கு கதையை அனுப்பினேன். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்குப் பிறகு இரண்டாம் பிரவேசம் எழுத்துத் துறையில்.

தீபம் பொங்கல் மலரில் பிரதிபலிப்பு கதை இடம்பெற்றது. தீபத்தில் 1978ல் இழப்புக்கள் கதை வந்தது. இழப்புக்கள் கதையை ஒரு குறுநாவலாக விரித்து எழுதித் தருமாறு திருமலை கேட்டுக்கொண்டார். அதைச் செய்யவில்லை.


சிறுகதை structure எப்படி வந்தது?

கலைமகள் கதைகள் என்னைக் கவர்ந்தன. நா. கோ கூட சொல்வார் என் கதைகள் கலைமகள் கதையைப் போலவே இருக்கிறது என்று.

அகிலன் கதைகளைப் படித்தேன்.

நா. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் முதலியவர்கள் கதைகளையும் வாசித்தேன்.

டாக்டர் மு. வ-வின் நெஞ்சில் ஒரு முள் நாவல்
என்னை ரொம்பவே பாதித்தது.

மொத்தம் 100 ஆங்கிலப் புத்தகங்கள், 200 தமிழ் நூல்கள் படித்திருப்பேன்.

சிறுகதையில் திடீர்த் திருப்பம், suspense வரணும் என்று முதலில் நினைத்திருந்தேன். அவை எல்லாம் அவசியமில்லை என்று இப்போது புரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் moral themes முனைப்பாகத் தெரிகிறது. 4, 5 சம்பவங்களை வைத்து கதையை build up பண்ணுவது வழக்கம். தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று அடிநாதமாக இருக்கும் தொடர்பு climax-ல் புலப்படும்.

கதையின் தலைப்பு theme-ஐ ஒட்டியே வரும்.

object of reading changes over time.

ஆங்கில ஆசிரியர். ஆங்கிலம் பிழைப்பு மொழி. தமிழ்தான் இயல்பு.

ஜெயகாந்தனை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தார். 1969ல் ஆனந்தவிகடனில் வந்த சட்டை கதை.

ந. பழனிவேலு தீபத்தை அறிமுகம் செய்தார். தீபம் இதழ்களை bind பண்ணி வைத்திருந்தார். எல்லா இதழ்களையும் படித்தேன். அந்த binding-கை வேறு யாருக்கோ கொடுத்து அது திரும்பி வராமல் போனதாகவும் பழனிவேலு கூறியிருக்கிறார்.

க. இளங்கோவன் நா. கோ வீட்டுக்கு வருவார். அவர் மூலமாகத்தான் இளங்கோவன் எனக்கு அறிமுகம்.

கற்பனைக்கு அப்பால், கலை வடிவைவிட வாழ்க்கையில் உணர்ந்ததை சாதாரணமாகச் சொல்லணும் என்று ஆசை. திடீர்த் திருப்பம் இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். இது நிச்சயம் ஜெயகாந்தனின் பாதிப்பு என்பதில் சந்தேகமில்லை.

தாமரை, செம்மலர் இதழ்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கக்கூடாது என்று அகிலன்தான் சொன்னார். உத்தியோகம் முக்கியமா தாமரை முக்கியமா என்று அவர் கேட்டார். அதிலிருந்து அவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டேன். அவை இரண்டும் பொதுவுடைமைப் போக்கு கொண்டவை என்பதே அதற்குக் காரணம்.

Serious books, light books என differentiate பண்ணினேன். சிவசங்கரி, சுஜாதாவிலிருந்து தகழிக்குத் தீவிரமாக மாறினேன்.

டாக்டர் தண்டாயுதம், டாக்டர் மா. ராமலிங்கம் என் இலக்கிய விமர்சன குருமார். நா. கோ கூட சொல்வார் நான் ராமலிங்கம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்கவேண்டும் என்று.

சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. புதுமைப்பித்தன் கதைகளில் உத்தி முறைகள் நிறைய உள்ளன என்பது தெரிகிறது.

Stream of Consciousness (நனவோடை உத்தி) பாணி என்று நினைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். நினைவோட்டம் என்பது நான் கொடுத்த தலைப்பு. நேசனில் கதைகளுக்குப் பொறுப்பாக இருந்த பரிதாமணாளன் தலைப்பை மாற்றி 25 ஆண்டுகள் என்று போட்டார். பவுன் பரிசு வாங்கிய கதை அது.

அவர் அப்படி செய்ததும் நல்லதாகப் போய்விட்டது. நான் எழுதியது நனவோடை உத்தி அல்ல என்பதை James Joyce-சைப் பிறகு படித்து உணர்ந்து கொண்டேன்.

சிறுகதை பற்றிய concept முக்கியமாக moral values கொஞ்சம்கூட மாறவில்லை.

கதையே இல்லாத ஒருகதையாக அமைந்ததுதான் தானாமேரா டையரி. கதையம்சம் இல்லை என்று தண்டாயுதம்கூட சொன்னார். #

Saturday, September 12, 2009

சந்திப்பு 2: வி. டி. அரசு (V. T. Arasu)



V T Arasu passed away on 5 Nov 2008 at the age of 82. He was born on 11 January 1926. He came to Singapore to work for Tamil Murasu in 1951. He stayed on. In 1958 he joined the Ministry of Culture as Press Liaison Officer. After retirement he returned to Tamil Murasu in 1989 when the only Tamil paper here was in a state of misery without a direction. Arasu managed to bring Murasu into the stable of Singapore Press Holdings, the last paper to do so.
I met him on 3 May 1982 at his office and the meeting lasted between 9 and 11 am. He expressed himself mostly in English.


தமிழ் முரசோடு நினைத்துப் பார்க்கப்படும் வி டி அரசு 82 வயதில் சென்ற ஆண்டு காலமானார். அவரை நான் 1982ல் சந்தித்தபோது அரசாங்கத்தில் பத்திரிகைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார்.


. Tamil papers haven't moved with time. English papers were willing to do so. No people to contribute to the weekly bilingual (of Murasu). It did not go as we intended. Tried for 3 months asking all possible writers. No response. One man is running who is not well equipped with all aspects of Indian culture and literature.

. Tamil stream schools would be extinct by 1983/84. With it the successful teaching of Tamil type schools for the past 150 years would come to an end. Before the War there were about 35 Tamil schools. They survived thanks to the compulsion of trade unions.

. Second language is compulsory now. 16 000 students are learning Tamil in primary and secondary schools, with 3000 in secondary alone. 50-60% of the Tamils offer Tamil as a second language. Chinese is not popular. The current trend is more for Tamil although Malay is a keen competitor. Parental attitude towards Tamil is very important. In this sense they are quite ignorant.

. More Malayalees are taking Tamil and excel in the language.

. Image of Tamil teacher... lazy, never improves, never interested.

. Tamil was also taught in a monolingual system. Those who went to Umar Pulavar Tamil School had to be given employment. When they passed out most of them taken as teachers.

. When all are Tamils there is no competition and the standard is not good. For example during the competitions held in conjunction with Tamil festivities Umar Pulavar students do not do well.

. There is no place for Tamil monolingual stream in Singapore.

. Middle 1950s was Secretary of Tamil Education Society. All Tamil stream education government aided. Before (Malayan) Emergency Tamil schools were run by trade unions. When the unions went underground the government stepped in.

. (Tamil Murasu editor) G Sarangapany helped. He persuaded for the schools to be amalgamated. Tamil Education Society (தமிழ்க் கல்விக் கழகம்) was initiated by him. Efforts were taken for the grouping of schools. Tried to introduce English as a language in Tamil schools.

. And the capitation grant not to be changed from one school to another.

. 110 primary schools are offering Tamil as a second language. There are 300 teachers for Tamil.

. As for the societies many of the old ones are now defunct. There are 2 organisations that are active. One is the Tamils Representative Council (TRC). TRC has taken a different character now. G. Kandasamy, Gen Secretary of AUPE, is the President. TRC is basically a confederation of many societies. It has direct membership too.

. The second is the Tamil Language and Cultural Society (TLCS). Formed only 2 years ago (1980). It was fathered by Devan Nair.(First Chairman was Arasu). It is a high powered society. The Board of Trustees is headed by Prof Jayakumar. Among the trustees are Dhanabalan, Justice Choor Singh and Bishop Duraisamy. The management council is headed by Bishop Duraisamy.

. The function of TLCS is to preserve Tamil as a living language i.e. it should be used by all. It works closely with the Ministry of Eduction to upgrade teaching of Tamil in schools. It also functions to promote Indian culture not Tamil culture. But Tamil should be the basis of Indian culture as the Tamils are 65% of the Indian community.

. But so far we haven't achieved much. organised a cultural show.

. Working on a project Tirukkural (திருக்குறள்) having in mind the need of upper secondary students. First part is to bring the message of Tirukkural through stories. It will be done in English. Second part is to select relevant Tirukkural couplets and pulish them in both Tamil and English.

As for the literary activities:
. We have Tamil Murasu, Indian Movie News and one more cinema monthly. Also the Association of Singapore Tamil Writers.

. For cultural needs there is the Singapore Indian Fine Arts Society. It is in existence for well over 20 years. The president is a North Indian merchant. The Society teaches music, dance etc. Instructors are from Kalakshetra of Madras.

. We have the Singapore Indian Artistes' Association and Tamizhavel Drama Society (தமிழவேள் நாடக மன்றம்).

. As for the National Library the Tamil members and their reading habits are not advanced. Tamil books need to be rebound in Tamilnadu. Half the money for the allocation of Tamil books has to be set aside for this rebinding work.

. On Tamil Murasu:
I was with the paper between 1951 and September 1958. 4 page paper. 6 pages on Sundays. சங்கங்களும் அவற்றின் செய்திகளும் முக்கியமாக இடம்பிடித்தன. அது ஒரு செய்திப் பத்திரிகையைப் போல நடக்கவில்லை. முரசை ஒரு முழுமையான பததிரிகை என்று சொல்ல முடியாது. Not a full fledged paper. பத்திரிகையின் போக்கை மாற்ற முயன்றேன். கோ. சா இதில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கட்டுரை பேர் போடாமல் எழுதுவேன். கோ சா மெஷினை நிறுத்தி பேர் போடுவார். தமிழ் நேசன் அதிகமாக விற்ற காலம் அது. பிறகுதான் 1952/53/54ல் முரசின் விற்பனை கூடியது.

என்னுடன் தேவராஜன், சி. வீ. குப்புசாமி, ரெ. சீனிவாசன் முதலானோர் இருந்தனர். மலாயா நண்பனில் வேலை செய்த மெ. சிதம்பரத்தை நான் முரசுக்குக் கொண்டு வந்தேன். பின்னர் அ. முருகையன், முருகு சுப்பிரமணியன் வந்து சேர்ந்தனர்.

Indian Daily Mail பத்திரிகையும் நடந்து கொண்டிருந்தது.

எல்லாம் team work. பத்திரிகையை நன்றாக நடத்த பெருமுயற்சி எடுத்துக்கொண்டோம். மலாயா இந்தியர் காங்கிரசின் (மஇகா) செய்தியை கோ. சா போடமாட்டார். நாங்கள் அந்தச் செய்தியைப் போட்டோம். மஇகாவின் தலைவர் தேவாசரைசத் திட்டி கோ. சா தலையங்கம் எழுதினார்.

ரசனை வகுப்பு எழுத்தாளர் பேரவையாக முகிழ்த்தது. வரும் கதைகளை எல்லாம் திறனாய்வு முறையில் விமர்சனம் செய்தோம்.

தலையங்கம் எழுதியிருக்கிறேன் நான். எதிரொலி பகுதி என்னால் ஆரம்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையில் பூந்தோட்டம் என்ற பகுதியை ஆரம்பித்து தும்பி எனும் புனைபெயரில் எழுதினேன்.

அ. முருகையன் சிறுகதைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். முருகு என்ற பெயரில் வாரந்தோறும் கதை எழுதியவர் முருகையன்தான். (பலர் முருகு சுப்பிரமணியன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.)

பத்திரிகையில் தலைப்புகள் கவர்ச்சியாக இருக்கவேண்டும்.

1955ல் தேர்தல் வருவதை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்னதாகவே இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமை பெறவேண்டும் என்று கோ. சா விரும்பினார். முரசு பெரும்பாடுபட்டது. தனியாக ஓர் அலுவலகம் திறந்தது. விளம்பரம் செய்தோம். கூட்டம் நடத்தினோம். முரசு தலையங்கம் எழுதியது. மக்கள் வந்து அடையாளக் கார்டைக் காட்டினால் போதும். மற்ற வேலைகளை அலுவலகம் பார்த்துக்கொண்டது. கூட்டம் கூட்டமாக வந்து குடியரிமைக்கு மனு செய்தார்கள் இந்தியர்கள்.

அத்தகைய ஒரு குடிமையுணர்வு இன்றைய தமிழ் முரசிடம் இல்லை. அன்று ஒவ்வொருவரும சமுதாய உணர்வோடு செயல்பட்டனர். திருவிழாக்களுக்கும் கலியாணம் முதலான நிகழ்ச்சிகளுக்கும் முரசு ஆசிரியர்கள் சென்று வருவார்கள். அவற்றில் பேசுவார்கள். மக்களோடு கலந்து உறவாடுவார்கள்.

குடிநுழைவு 1953 வரை தொடர்ந்தது.

1954ல் தமிழ் முரசில் இந்தியா செய்திகள் மிகமிகக் குறைவு. இலக்கிய பண்பாட்டுச் செய்திகள்தான் அதிகம். அரசியல் விவகாரங்களில் சிக்கிக் கொள்வது கிடையாது. இதனால் வாசகர்களின் நம்பிக்கை முரசுக்கு முழுமையாகக் கிடைத்தது. அதிலும் அண்மைக் குடிநுழைவாளர்கள் எல்லாம் இளையர். நன்கு படித்தவர்கள். தமிழ் உணரச்சி அதிகம் கொண்டவர்கள். உள்நாட்டு இளையரும் முரசைத் தீவிரமாக ஆதரித்தர்கள்.

தமிழ் எங்கள் உயிர் நிதி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய நூலக அமைப்பு, தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் இளையர் கூட்டத்தை முரசின் பக்கம் ஈர்த்தன.

If we look back Tamil Murasu was charismatic.

கோ. சாவுக்கு தலைமைத்துவம் வாய்த்தது. நம் தமிழ் கூலிக்காரன் தமிழா இருக்கக்கூடாது என்பார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வேலை செய்யவேண்டும் என்பார். குடியும் குடித்தனமுமாக செழுமையா வாழவேண்டும் என்பார். முழுக்க முழுக்க ஒரு சிங்கப்பூர் தேசியவாதி போல கோ சா செயல்பட்டார்.

தமிழ் நேசன் எப்போதுமே தமிழ் முரசுக்குப் போட்டியாக இருந்தது கிடையாது. நேசனின் போக்கிற்கு முரசு என்றுமே ஆட்பட்டது இல்லை.

இந்து திருமணச் சட்டத்தை முரசு ஆதரித்தது. சீர்திருத்த மணத்தையும் அது வரவேற்றது. பிரிட்டிஷ் ஆட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சி. ஆர். தசரதராஜ் மசோதா கொண்டு வந்தார். வேண்டாத அம்சங்களை முரசு எதிர்த்துப் போராடியது.

1947ல் பூந்தோட்டம் என்ற இதழை சேலத்தில் நடத்திக் கொண்டிருந்தேன் நான். பத்து இதழ்கள் வரை இழுத்தேன். மாத இதழ். சமூக இலக்கிய அரசியல் விஷயங்கள் எல்லாம் உண்டு. தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆயிரம் படிகள் முதலில் போனது. கடைசியில் ஐயாயிரம் படிகள் வரை சென்றது. அச்சடிப்பு அனுமதியில் கட்டுப்பாடு வந்ததால் நிறுத்த வேண்டியதாயிற்று.

தமிழக மாநில திராவிட மாணவர் கழகத்திற்குத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தலைவர் ஈ வே கி சம்பத்.

சேலத்தில் சி பா ஆதித்தன் நடத்தி வந்த தினத்தாள் நாளிதழில் சேர்ந்தேன். உதவி ஆசிரியர் வேலை. பிறகு செய்தி ஆசிரியராக உயர்ந்தேன். மூன்றே மாதத்தில் பொறுப்பு ஆசிரியர் ஆனேன். அங்கு 13 உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். என்னைத் தவிர எல்லாரும் பிராமணர்கள். ஒரு நாள் செய்தி ஆசிரியர் வேலையைப் பார்த்தபோது ஆதித்தன் என்னை செய்தி ஆசிரியராகவே பணியாற்றும்படி கூறிவிட்டார்.

1948ல் மகாத்மா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒரு வட்டார நாளிதழில் காந்தியைப் பற்றி உடனே தலையங்கம் எழுதியது நான்தான். காந்தியை யார் சுட்டது என்று உடனே தெளிவாகவில்லை. அதனால் சமூகக் கலவரம் தலைதூக்கியது. சேலத்திலும் கலகம். முஸ்லிம்கள் மீது இந்துக்களின் கோபம் பாய்ந்தது. ஆனால் உண்மை நிலவரம் தெரிந்ததும் காந்தியைக் கொன்றவன் கொழுத்த பார்ப்பான் என்று தலைப்புச் செய்தி போட்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்தேன். இனக் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்பதே என் முதல் நோக்கம்.

இரண்டு வருஷம் ஓடியது. 10 முதல் 12 ஆயிரம் பிரதிகள் விற்றது தினத்தாள். அங்கே உதவி ஆசிரியருக்கு மாத சம்பளம் 60 ரூபாய். செய்தி ஆசிரியருக்கு 80 ரூபாய் சம்பளம். ஒரு நல்ல பள்ளி ஆசிரியர் 45 ரூபாய்தான் சம்பளம் வாங்கிய காலம் அது.

என்னை திருச்சிக்குப் பத்திரிகை நிர்வாகியாக அனுப்பி வைத்தார்கள். 150 ரூபாய் சம்பளம் கேட்டேன். ஆதித்தன் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஒரு நாள் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களைப் பார்க்கப் போனேன். (அவர் திராவிட இயக்கம் சார்ந்த கல்வியாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி வரை உயர்ந்தவர்.) ஐயா (பெரியார் ஈ வே ரா) என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னார் அவர்.

என்னைப் பார்த்துப் பேச குத்தூசி குருசாமியை பெரியார் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
நான் விடுதலை -க்குப் போனேன். உதவி ஆசிரியராக வேலை செய்தேன். 4 பக்க பத்திரிகை விடுதலை.

ஒரு நாள் குருசாமி என்னிடம் சிங்கப்பூருக்குப் போகிறாயா என்று கேட்டார். கோ சா நடத்தும் தமிழ் முரசுக்கு ஆள் தேவை என்றார். நானும் துணிந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டு விட்டேன்.
(கோ சா முரசுக்கு வருமாறு குருசாமியைத்தான் கேட்டார் என்றும் குருசாமிக்கு வர விருப்பம் இல்லாததால் அவர் அரசுவை அனுப்பி வைத்தார் என்றும் ஒரு தகவல்.)