Showing posts with label tamil nesan. Show all posts
Showing posts with label tamil nesan. Show all posts

Sunday, January 23, 2011

கு அழகிரிசாமியும் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களும்


கு அழகிரிசாமி (23 செப்டம்பர் 1923 – 5 ஜுலை 1970) சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை எனப் பல வடிவங்களிலும் தேர்ச்சி பெற்ற ஓர் எழுத்தாளர். இசையில் அபார ஈடுபாடும் முறையான பயிற்சியும் கொண்டவர். இடைக்காலப் பிரபந்த இலக்கியங்களில் மிகுந்த ரசனை வாய்ந்தவர். அவர் ஒரு கட்டத்தில் மலாயாவில் தமிழ் நேசன் பத்திரிகையில் பணியாற்றியவர் என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும்.

1952ல் நேசன் உரிமையாளர் மலையாண்டி செட்டியார் தமிழ்நாட்டிலிருந்து ரா வேங்கடராஜுலு நாயுடுவையும் கு அழகிரிசாமியையும் கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தார். பழுத்த பத்திரிகை அனுபவம் வாய்ந்த நாயுடு நேசனின் பிரதம ஆசிரியர். இலக்கியப் படைப்பாளி கு.அ முக்கியமாகக் கதைகளைத் தாங்கி வந்த நேசன் ஞாயிறு மலரின் பொறுப்பாளர். நாயுடு 1953ல் எலிசபெத் அரசியாரின் முடிசூட்டு விழாவைக் காண மலாயாப் பத்திரிகையாளர்களுடன் லண்டன் சென்று வந்தார். உடல் நலம் காரணமாக நாயுடு நேசனைவிட்டுப் போக நேர்ந்தபோது எழுத்தாளர் கு. அழகிரிசாமி ஆசிரியர் பொறுப்பையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டார்.

மலாயா, சிங்கப்பூர்த் தமிழ்த் தினசரியில் இந்த அளவுக்குப் பிரபலமான, திறமையான தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவர் பணியாற்ற வந்து சேர்ந்தது இதுவே முதன் முறை. இதுவே கடைசி முறையும் கூட.

முப்பது வயதில் கோலாலம்பூர் வந்த கு.அ அன்றைய மலாயாத் தமிழ் எழுத்துலகில் இனிய தென்றலாக வீசி எழுத்தாளர்கள் பலரை அன்பாலும் அரிய பண்பாலும் கவர்ந்தவர். ஏன், வசியப்படுத்தியவர் என்றுகூடச் சொல்லலாம். அவருடைய மந்திரச் சொல்லிலும் ஆளுமையிலும் கட்டுண்டு கிடந்தனர் இங்குள்ள எழுத்தாளர்கள். சி. கமலநாதன், எஸ். வி. சுப்பிரமணியன், சி. வடிவேல் போன்றவர்கள் அழகிரிசாமியையும் அவர் நடத்திய அபூர்வமான இலக்கிய வட்டம் எழுத்துப் பயிற்சியையும் ஆதங்கத்தோடு நினைவுகூர்ந்து பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதிலும் சி. கமலநாதன் அழகிரிசாமியை கிட்டத்தட்ட ஒரு கலைத் தெய்வமாகவே வணங்கினார் எனலாம்.

வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே இருக்கும் அழகிரிசாமிக்கு டொரியான் பழம் என்றால் உயிர். வந்த சில ஆண்டுகள் கழித்து இங்கேயே ஒரு பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு போன்ற பிரபந்தங்களைத் திருச்செந்தூர் சகோதரிகள் கோலாலம்பூரில் மேடையேற்றியபோதும் வானொலியில் படைத்தபோதும் அவற்றுக்கு இசைவகுத்துக் கொடுத்து உதவியவர் கு.அ. அப்பொழுது ஏற்பட்ட காதல் கலப்புத் திருமணத்தில் முடிந்தது.

தமிழ் நேசன் வேலையும் அழகிரிசாமிக்கு அலுத்துவிட்டது. மலாயாவின் இலக்கியச் சூழ்நிலையும் அவருக்கு உகந்ததாக இல்லை. இப்படி சொல்லிவிட்டுத்தான் ஐந்தாண்டு வாசத்திற்குப் பிறகு 1957ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்தோடு சென்னைக்குத் திரும்பினார் கு.அ. அவருடைய இலக்கிய தாகத்திற்குத் தமிழ் நேசன் வேலை தகுந்த தீனி போடுவதாக இல்லை எனலாம்.

இங்கிருந்தபோது மலாயா எழுத்தாளர்களைப் பற்றி அவர் அவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை. யாரும் புண்படாத வண்ணம் இதை வெளியில் சொல்லவும் அவர் தயங்கியதில்லை.

‘நீங்களெல்லாம் ஏன் ஐயா சிறுகதை இலக்கணம் தெரியாமலேயே கதை எழுத வந்துவிட்டீர்கள்’ என்பார் ஓர் ஆரம்ப எழுத்தாளரிடம். மனச்சோர்வுடன் திரும்பிச் செல்வார் புதிய எழுத்தாளர். ஆனால் மறு வாரமே அவருடைய கதை திருத்தங்களுடன் ஞாயிறு மலரில் வரும்’ என்று எழுத்தாளர் எஸ். வி. சுப்பிரமணியன் ஒரு கட்டுரையில் நினைவுகூர்கிறார்.

மாறாக, சென்னைக்குப்போய் மூன்றாண்டுகள் கழித்து சரஸ்வதி இதழில் எழுதிய மலாயாத் தமிழ் எழுத்தாளர்கள் கட்டுரையில் அவர்களைத் தாராளமாகவே புகழ்ந்து தள்ளினார். இது அவருடைய விசித்திரமான போக்கு என்பதை அக்காலத்திய முக்கிய எழுத்தாளர்கள் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். 1960 நவம்பர் மாதம், மலர் 7 இதழ் 5ல் வெளியான நான்கு பக்கக் கட்டுரையை இங்கே தருகிறேன். நம் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் படித்துச் சுவைக்கவேண்டிய வரலாற்றுத் துளி. இந்தக் கட்டுரை இல்லாமல் சிறுகதை வரலாறு இல்லை.

ஐம்பதுகளில் எழுத்தாளர் என்றால் பெரும்பாலும் சிறுகதை எழுத்தாளர்கள்தாம். அவர்களையே கு.அ. முதன்மைப்படுத்தி எழுதுவதையும் கவனிக்க வேண்டும்.

மலாயாவில் தமிழ் எழுத்தாளர்கள்

கு. அழகிரிசாமி

மலாயாவில் நாற்பது அல்லது ஐம்பது பேர் எழுதிய ஒரு கதையோ அல்லது சில கதைகளோ அந்நாட்டின் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும். அவ்வாறு எழுதியிருப்பவர்களில் சுமார் இருபது பேர் குறிப்பிடத்தக்கவர்கள்; தமிழ் எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள். இந்த இருபது பேரும் மொத்தம் முந்நூறு கதைகளாவது எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இருபது எழுத்தாளர்கள் என்பது பெரிய எண்ணிக்கையா, சிறு தொகையா என்பதை அந்நாட்டின் நிலைமைகளைக் கொண்டுதான் சொல்லவேண்டும். நான் அதைப் பெரிய எண்ணிக்கையாகவே கருதுகிறேன். மலாயாவில் இருபது எழுத்தாளர்கள் இருப்பது, தமிழ்நாட்டில் இரண்டாயிரம் எழுத்தாளர்கள் இருப்பதற்குக் சமம் என்றே சொல்லிவிடலாம்.

மலாயாவில் சுமார் ஆறு லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். சுமார் ஆயிரம் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ரப்பர்த் தோட்டங்களில் தொழிலாளர்களின் குடியிருப்புக்கு நடுவே நான்கு வகுப்புக்களோடும், ஐம்பது மாணவர்களோடும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களோடும் நடைபெற்று வருபவையாகும்.

எந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலும் ஆறாம் வகுப்புக்கு மேல் கிடையாது. ஏழாம் வகுப்பை வீட்டிலிருந்து படித்துத் தேறுவது உண்டு. அதற்குமேல் தமிழுக்கு வாய்ப்பில்லை. (சமீபத்தில் தமிழ்க் கல்விக்கு சர்வகலாசாலை வரையில் ஸ்தானம் கொடுக்கப்பட்டிருக்கிறது.) ஏழாம் வகுப்பில் தேறினால் வாத்தியார் வேலைக்கு மட்டுமே போக முடியும். அந்தப் படிப்புக்கு வேறு எந்த உத்தியோகமும் கிடைக்காது. அதனால் இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. அந்தக் குழந்தைகள் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடசாலைகளில் படித்து – சிலர் தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளாமலேயே – சீனியர் வகுப்புக்குத் தேறியதும், உத்தியோகத்துக்கு வந்து விடுகிறார்கள். வசதியுள்ளவர்களில் தாய்மொழிப் பற்றுள்ளவர்களும் உண்டு. அவர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை முற்பகலில் ஆங்கிலப் பாடசாலைக்கும் பிற்பகலில் தமிழ்ப் பாடசாலைக்கும் அனுப்பி வைப்பார்கள். பெரிய உத்தியோகங்களை அடைவதற்குத் தமிழ்ப் படிப்பு உதவி செய்யாது என்ற நிலையில், அதற்கு அந்தஸ்து இல்லாமல் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் இல்லாத ரப்பர்த் தோட்டங்களில், தொழிலாளிகளின் குழந்தைகள் வேறு வழியில்லாமல் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்குப் போவார்கள். நகரங்களில் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளே தமிழ்ப் பள்ளிக்குப் போவார்கள். அந்தஸ்து பெறாத தமிழ்க் கல்வியின் தரமும் அதைக் கற்பிக்கும் பள்ளிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமமல்ல.

அநேக தோட்டப் பள்ளிக்கூடங்கள் மாட்டுத் தொழுக்களைப் போலவே காட்சியளிக்கும். அவ்வளவு சிறிய கட்டடங்கள். இப்படிப்பட்ட பள்ளிகளில் படித்து ஏழாம் வகுப்புத் தேறியவர்களே மலாயாவின் தமிழ் எழுத்தாளர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள். ஏழாம் வகுப்போடு முடியும் அரைகுறைத் தமிழ்க் கல்வியைப் பயின்று, அருமையான சிறுகதைகளைப் படைக்கும் திறனைச் சுயமுயற்சியினால் தேடிக்கொண்ட எழுத்தாளர்கள் பத்துப் பேருக்கு மேலேயே அந்நாட்டில் இருக்கிறார்கள். மலாயாத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமைப்படவேண்டிய விஷயம் இது. நாட்டின் கல்வி நிலையைப் பார்க்கும்போது, இருபது எழுத்தாளர்கள் என்பது மிகப் பெரிய தொகை என்பதை இப்போது கண்டுகொள்ளலாம்.

மலாயாவில் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றியது சுமார் பத்து வருஷங்களுக்கு முன்புதான். அதற்கு முன்னதாக இரண்டொருவர் கதை கட்டுரைகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் பொதுப்படையாகச் சொல்வது என்றால், கடந்த பத்து வருஷ காலமாகவே அந்நாட்டில் தமிழ் இளைஞர்கள் கதைகள் எழுதி வருகிறார்கள் என்று சொல்ல வேண்டும். கதைகளை வெளியிடுவதற்கு இரண்டு பெரிய தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. ஒன்று, மலாயாவின் தலைநகராகிய கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் நேசன்; மற்றொன்று சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு. இந்த இரண்டு பத்திரிகைகளும் தொடங்கப்பெற்று முறையே சுமார் 35 வருஷங்களும் 25 வருஷங்களும் ஆகின்றன. இவை போக, வாரப் பத்திரிகைகளும் மாதப் பத்திரிகைகளும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன.

பத்து வருஷங்களுக்குமுன் மலேயாவில் சிறுகதை எழுத்தாளர்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் தமிழ் நேசன் பத்திரிகையில் திரு சுப. நாராயணன், திரு பைரோஜி நாராயணன் என்ற இருவரும் கதை வகுப்பு என்ற ஒரு பகுதியை நடத்தி வந்தார்கள். (இந்த வகுப்பு இதே பெயரிலோ வேறொரு பெயரிலோ தமிழ் முரசிலும் பிறகு நடைபெற்றதாகக் கேள்விப்பட்டேன்.­) பலரையும் எழுதச் சொல்லி, அவர்களுடைய எழுத்துக்களைப் பிரசுரித்து அவற்றிலுள்ள குறை நிறைகளைப் பத்திரிகையிலேயே சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து வந்தார்கள். கதை வகுப்பு சுமார் ஒரு வருஷம் நடந்து வந்தது. அந்த வகுப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாமல் அதைப் படித்து வந்தவர்களும் பலர். எல்லோருக்குமே கதை வகுப்பு ஒரு தூண்டுகோலாக, பால பாடமாக இருந்து உதவியது. அநேகர் கதைகளை எழுதிக் குவிக்கலாயினர். அவர்களிள் கடும் உழைப்பாலும், புத்திக் கூர்மையாலும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்தவர்கள் இருபது பேராவது இருப்பார்கள். இந்த இருபது பேரிலும் நாலைந்து பேருடைய எழுத்துக்கள் ஏதாவது ஒரு அம்சத்தில் பாராட்டத்தக்கவாறு இருந்தன. மற்றவர்கள் அந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இது கதை வகுப்பு முடிந்து இரண்டு வருஷங்களுக்குப் பிறகு இருந்த நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் -1952ல்- நான் மலாயாவுக்குப் போய்ச் சேர்ந்தேன். தமிழ் நேசன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பைத் தயாரிக்கும் முழுப் பொறுப்பும் என்னுடையதாயிற்று. ‘இந்நாட்டு எழுத்தாளர்கள் எழுதியனுப்பிய சிறுகதைகள்’ என்று நூறு நூற்றைம்பது கதைகளைக் கொண்ட ஒரு கட்டு என்னிடம் கொடுக்கப்பட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. இந்நாட்டில் கதை எழுதக்கூடியவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

நான் மலாயாவில் போய் இறங்கியபோது, அங்கே கதை எழுதுகிறவர் என்று ஒருவர் இருப்பார் என்றே நான் நினைக்கவில்லை. எதிர்பாராத ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கதைக் கட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். நூற்றைம்பது கதைகளில் ஐந்தாறைப் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்தேன். பிறவற்றைத் தள்ளிவிட்டேன். அதிலிருந்து வாராவாரம் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வந்தேன். என்னால் முடிந்த வழியிலெல்லாம் அவர்களுக்குப் பத்திரிகை வாயிலாகவும், நேரிலும் உற்சாகமூட்டி வந்தேன். நான்கு வருஷ காலத்துக்குப் பிறகு சுமார் இருபது பேர் சிறந்த எழுத்தாளர்கள் ஆவதற்குரிய திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்களுக்குத் திரும்பவும் ஒரு கதை வகுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்தேன்.

எல்லா எழுத்தாளர்களையும் ஓரிடத்தில் மாதத்திற்கு ஒரு முறை கூடும்படி செய்து கதை வகுப்பு நடத்தினால் அநேக குறைகளைக் களைந்துவிடலாம் என்று கருதினேன். இந்த அபிப்பிராயத்தை ஒருநாள் ஸ்ரீ கி. மூர்த்தி என்ற அன்பரிடம் தெரிவித்தேன். அவர் ரெயில்வேயில் பெரிய உத்தியோகம் வகிப்பவர். இலக்கியத்தில் அபாரமான ஈடுபாடு உடையவர். மலாயாவில் அவரைப்போல் புத்தகங்களை வாங்கிக் குவித்து, மேல்நாட்டு இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் நாள் தவறாமல் படித்துக் கொண்டிருப்பவர்களை நான் பார்க்கவில்லை. கி. மூர்த்தி இரண்டொரு கதைகளும் எழுதியிருக்கிறார்கள். என் அபிப்பிராயத்தைக் கேட்டதும் அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்து, ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமையன்று பிற்பகலில் தம் இல்லத்திலேயே மலாயாவின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் எழுத்தாளர்களை வரவழைத்து இலக்கிய வட்டம் என்ற பெயருடன் சிறுகதை வகுப்பு நடத்துவதற்கு ஆதரவளிக்க முன்வந்தார். மறுநாளே எல்லா எழுத்தாளர்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.

முதல் கூட்டம் 1957 ஜனவரி கடைசிச் சனிக்கிழமையன்று அவர் வீட்டில் நடந்ததாக ஞாபகம். சுமார் 30 எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். சிலர் நூறு மைலுக்கு அப்பாலுள்ள ஊர்களிலிருந்தும் ரப்பர்த் தோட்டங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.

சிறுகதையின் லட்சணங்களைப் பற்றிய ஒரு சொற்பொழிவு அன்று நடைபெற்றது. அடுத்த மாதம் கடைசி சனிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் ஓ ஹென்றியின் கதையொன்று வாசிக்கப்பட்டு எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. மற்றொரு மாதம் சிதம்பரம் சுப்ரமணியம் எழுதிய ஒரு சிறந்த கதையைப் பற்றிய விமர்சனம் நடந்தது. நல்ல சிறுகதைக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள், இருக்கக்கூடாத விஷயங்கள் எவை எவை என்பதை ஒவ்வொருவரும் தாமாக உணரத் தொடங்கினார்கள். பிறகு, மலாயா எழுத்தாளர்களின் கதைகளையே விமர்சிப்பது என்று தீர்மானித்தோம். மறுபடியும் கூட்டத்துக்கு வருவதற்குமுன் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு சிறுகதையை எழுதியனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவ்வண்ணமே பல கதைகள் வந்தன. அவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தில் வாசித்தோம். வந்திருந்த முப்பது எழுத்தாளர்களும் விமர்சனத்திலும் விவாதத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வாக்கியமுமே அலசி ஆராயப்பட்டது. வேண்டாத வளர்த்தல்கள், மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய கட்டங்கள், பாத்திர சிருஷ்டியின் குறை நிறைகள், அர்த்தமற்ற அடுக்குச் சொற்கள், விஷயத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் பாஷை நடை, எழுத்துப் பிழைகள் முதலிய எத்தனையோ விஷயங்களை ஒவ்வொருவரும் தெள்ளத் தெளிவாகக் கண்டுகொள்ளத் தொடங்கினார்கள்.

கடைசிக் கூட்டம் 1957 அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்றது. 19ஆம் தேதி நான் இந்தியாவுக்குக் கப்பல் ஏறினேன்.

மொத்தம் பத்து மாதங்களில் பத்து கூட்டங்கள் நடந்து முடிந்தன. இந்தப் பத்துக் கூட்டங்களுக்குப் பிறகு எழுத்தாளர்கள் எழுதிய கதைகளைப் பார்த்தபோது அவர்கள் அடைந்த அபார வளர்ச்சி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கதை வகுப்பில் ஆசிரியர் என்று யாரும் கிடையாது. நான் உள்பட எல்லோருமே ஆசிரியர்களாகவும், அதே சமயத்தில் மாணவர்களாகவும் இருந்தோம். மலாயாவின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றி இன்று பேசினாலும், தமிழ் நேசனில் நடந்த கதை வகுப்பையும், கி.மூர்த்தி வீட்டில் நடைபெற்ற பத்து விமர்சனக் கூட்டங்களையும் குறிப்பிடாமல் தீராது. கதை வகுப்பு இளைஞர்களை எழுதத் தூண்டியது. விமர்சனக் கூட்டமோ அவர்களை எழுத்தாளர்களாக்கி விட்டது.

வகுப்பு நடைபெற்று வந்தபோது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு மற்றொரு வாய்ப்பும் கிட்டியது. அந்நாட்டிலுள்ள தமிழ்ப் பண்ணை ஸ்தாபனத்தார் அந்த வருஷத்தில் வருஷாந்தர விழா நடத்த ஏற்பாடு செய்து, கட்டுரைப் போட்டி நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வந்தனர். நான், ‘கட்டுரைப் போட்டி வேண்டாம். சிறுகதைப் போட்டி நடத்துவோம். பரிசுகளாகப் புத்தகங்களைக் கொடுக்காமல் தங்கப் பதக்கங்களைக் கொடுப்போம்’ என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அப்படியே போட்டி நடத்தப்பெற்று ஆண்டு விழாவன்று முதல் பரிசு பெற்ற இருவருக்குத் தலா ஒன்றரைப் பவுன் தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசு பெற்ற ஒருவருக்கு ஒரு பவுன் பதக்கமும் வழங்கப்பட்டன. போட்டிக்கு வந்த கதைகள் சுமார் 30.

சில மாதங்களுக்குப் பிறகு ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் தேவன் காலமான செய்தி கிடைத்ததும், அவர் ஞாபகார்த்தமாக மற்றொரு சிறுகதைப் போட்டியைத் தம் சொந்தச் செலவில் நடத்த ஸ்ரீ கி. மூர்த்தி முன்வந்தார். தேவன் மலாயாவுக்கு வந்திருந்தபோது ஸ்ரீ மூர்த்தி அவருடைய நண்பர் ஆனார். இந்தப் போட்டிக்கு முதல் பரிசு 150 ரூபாய், இரண்டாவது 75 ரூபாய். போட்டி நடைபெற்றது. இரண்டு எழுத்தாளர்களுக்கு அந்த இரண்டு பரிசுகளையும் வழங்கினார் ஸ்ரீ மூர்த்தி.

மேற்கண்ட ஒவ்வொரு போட்டியிலும் மூர்த்தி, குணசேகர், நான் ஆகிய மூவரும் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். தமிழ்ப் பண்ணைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள்: சி. வேலுசுவாமி (கோலாலம்பூர்), ராமசாமி (பாரிட் புந்தார்), எஸ். வி. சுப்பிரமணியன் (கோலாலம்பூர்).

தேவன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள்: நாகுமணாளன் (பத்து தீகா எஸ்டேட்), எஸ். வடிவேல் (லாபு எஸ்டேட்). இந்த இருவரும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்.

மலாயா எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களுடைய எழுத்துக்களைப் பற்றிய மேலும் சில விபரங்களையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

மலாயாவின் இருபது எழுத்தாளர்களும் – குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்கள் – சிறுகதைகள் மட்டுமே எழுதுகிறவர்கள். ஒருவர் மட்டுமே விதிவிலக்காக ஒரு தொடர் நாவலும் சில ஒலிபரப்பு நாடகங்களும் எழுதியிருக்கிறார். மேற்படி இருபது பேரில் சேராத மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் ஒலிபரப்பு நாடகங்களே எழுதுபவர்; இருவர் கட்டுரைகள் மட்டுமே – அதிலும் திருக்குறளைப் பற்றிய கட்டுரைகைள் மட்டுமே – எழுதிக் கொண்டிருந்தார்கள்.

மேற்படி இருபது பேரில் ஒரு எழுத்தாளர் பெண்மணி; அவரைத் தவிர மற்றப் பெண் எழுத்தாளர்களும் சுமார் ஐவர் உண்டு.

இருபது பேரில் என் கருத்துப்படி முதல்தரமான சிறுகதை ஆசிரியர்கள், ஸ்ரீ செ. ஆலிவர் குணசேகர், பொ. சா. பரிதிதாசன், சி. வேலுஸ்வாமி, நாகுமணாளன், சி. வடிவேல், இராச இளவழகன், மு. தனபாக்கியம் ஆகியோர். தமிழ்நாட்டின் எந்தப் பத்திரிகையிலும் இடம்பெறக்கூடிய சிறுகதைகளை எழுதக்கூடியவர்கள் இவர்கள். தமிழகத்தின் பிரபலமான பத்திரிகைகளில் எழுதும் பிரபலமான எழுத்தாளர்களின் கதைகளைவிட எந்த விதத்திலும் தரத்தில் குறையாத கதைகளை இவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

செ. ஆலிவர் குணசேகரின் சிறுகதைத் தொகுதி ஒன்று நினைவின் நிழல் என்ற பெயருடன் சென்னை ஸ்டார் பிரசுராலயத்தினரால் வெளியிடப்பெற்றிருக்கிறது. இனிய, லாவகமான, பரவசம் ஊட்டுகின்ற தமிழ் நடையில் பல சிறந்த காதல் கதைகள் எழுதியிருக்கிறார். இவர் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதக்கூடியவர். ஆங்கிலப் பள்ளி ஆசிரியராகவும், பின்பு ஆங்கிலத் தினசரிப் பத்திரிகை ஒன்றின் நிருபராகவும் இருந்தவர். இப்பொழுது ஓர் ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியர்.

பொ. சா. பரிதிதாசன் – இவர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர். உருக்கமான கட்டங்களை உருக்கமான நடையில் சித்திரிப்பதில் அரிய திறமை படைத்தவர். இவர் எழுதிய பறந்து சென்ற பைங்கிளிக்கு என்ற கதை அற்புதமான கதை.

சி. வேலுஸ்வாமி தமிழ்ப் பண்ணைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மீனாட்சி என்ற சிறந்த கதையை எழுதியவர். இவரும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்.

நாகு மணாளன், சி. வடிவேல் -- இருவரும் தேவன் ஞாபகார்த்தப் போட்டியில் பரிசு பெற்ற கதாசிரியர்கள். தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்.

இராச. இளவழகன் ஓரியண்டல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றுபவர். இவருடைய கதைத் தொகுதி ஒன்று வெளிவந்தால் தமிழுலகம் நிச்சயம் வரவேற்றுப் பாராட்டும்.

மு. தனபாக்கியம் மலாயாவில் ஆங்கிலப் பள்ளி ஆசிரியையாக இருந்த யாழ்ப்பாணப் பெண்மணி. இப்போது திருமணமாகி கணவருடன் கொழும்பில் இருக்கிறார்.

சி. கோன் இவர் ஒருவர்தான் சிறுகதைகள் எழுதுவதோடு தொடர் நாவலும், நாடகங்களும் எழுதியிருக்கிறார். வலுவான தமிழ் நடையில், பரபரப்பூட்டும் சம்பவங்களை நன்கு சித்திரிப்பவர். அரசாங்கத் தகவல் இலாகாவில் ஓவியராகப் பணியாற்றுகிறார். மேடை நாடகங்களிலும் நடிக்கக்கூடியவர். இவர் ஜமைக்காவில் பிறந்து மலாயாவில் குடியேறிய தமிழர்.

சி. அன்பரசன் – தமிழ்ப் பள்ளி ஆசிரியர். அருமையான தமிழ் நடையில் எழுதக்கூடியவர்.

எஸ். வி. சுப்பிரமணியன் குடும்ப வாழ்க்கையின் சலனங்களை நன்றாகச் சித்திரிப்பவர்.

கி. மூர்த்தி இவர் எழுதிய கதைகள் மிகக் கொஞ்சம். சுந்தரராமனின் தற்கொலை என்ற கதை முதல்தரமான கதை.

சி. சோமசேகரன் புத்தக வியாபாரி. நல்ல எழுத்தாளர்.

தூதன் அச்சுக்கோக்கும் தொழிலாளி. ஹாஸ்யமாக எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய லட்சியவாதி என்ற நாடகம் மேடையில் வெற்றிகரமாக நடிக்கப்பெற்றது. தமிழ்நாட்டு மேடையில் நடிக்கப்பெறும் 90 சதவிகித நாடகங்களுக்கு இணையாகச் சொல்ல வேண்டிய நாடகம் அது.

சி. கமலநாதன் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். ஹாஸ்யமாக எழுதுபவர். மலாயாவின் சூழ்நிலையைத் தத்ரூபமாகச் சித்திரிப்பவர்.

இத்தனை எழுத்தாளர்களுக்கும், பத்து வருஷ கால எழுத்து முயற்சிக்குப் பிறகு ஓரளவு சலிப்புத் தட்டியதுபோல் தோன்றியது. இதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய கதைகளுக்குப் பத்திரிகைகள் அன்பளிப்பு கொடுக்க முன்வராததுதான். மலாயா ரேடியோவில் அவ்வப்போது ஒலிபரப்பும் நாடகங்களுக்கு மிகவும் குறைந்த தொகையே – நாடகத்துக்கு 15 ரூபாய் வீதம் – சன்மானமாகக் கொடுக்கப்படுகிறது. அந்நாட்டின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது, இது மிகவும் குறைந்த தொகை. தமிழ்நாட்டில் ஐந்து ரூபாய் வாங்குவதைப் போன்றது.

வாசகர்களும் மலாயா எழுத்தாளர்களின் கதைகளைப் பாராட்டுவதில் போதிய அக்கறை காட்டவில்லை. தமிழ் நாட்டிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளே உயர்ந்த கதைகளாக இருக்க முடியும் என்ற தப்பபிப்பிராயமும் பலருக்கு இருந்து வருகிறது. அவர்கள் தங்கள் மூட பக்தியினால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவரும் மட்டமான சில கதைகளைக்கூட, மலாயா எழுத்தாளர்களின் நல்ல கதைகளைவிடச் சிறந்தனவாகக் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட சாதகமற்ற நிலைகள் மாறவேண்டும். எழுத்தாளர்களுக்கு ஊதியமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், அருமையான நவீன இலக்கியங்கள் பல அந்நாட்டில் தோன்றுவது நிச்சயம்.

இன்றைய நிலையிலும், 20 தமிழ் எழுத்தாளர்களின் 20 சிறந்த கதைகளைத் திரட்டி ஒரு தொகுப்பு வெளியிடத் தீர்மானித்தால், 2 கதைகளையாவது மலாயாவிலிருந்து தருவிக்காமல் முடியாது. மீதி 18 கதைகளில் 8 கதைகளைத் தமிழ்நாட்டிலிருந்து பொறுக்கி எடுத்தாலும் ஒன்றுதான் மலாயாவிலிருந்து பொறுக்கி எடுத்தாலும் ஒன்றுதான் என்னும்படி இருக்கும்.

இப்படி நல்ல கதைகளை சிருஷ்டிக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுடைய எழுத்துக்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிடத் தொடங்கினால், தமிழுக்குப் புதியதொரு செல்வத்தை ஈட்டும் சிரிய பணியாக இருக்கும் என்பது என் திடமான கருத்து.

ஒரு வகையில் பார்த்தால், காலம் கடந்த பிறகு, கு. அழகிரிசாமி ‘ஐஸ்’ வைத்து எழுதுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில், கு.அ சொல்வதுபோல இந்த எழுத்தாளர்கள் அந்தச் சிகரத்தை எட்டவில்லை என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. உலகப் போருக்குப் பிறகு மீண்டும் தலைதூக்கிய பத்திரிகைகள் சொந்தக் காலில் நின்று நிலைபெற தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தன. வாசகர் கூட்டம் குறைவு. எழுத்தாளர்களுக்கும் ஒரு தெளிவான பாதை இல்லை. எழுத்தில் மெருகேற நேசனையும் முரசையும் விட்டால் வேறு கதி இல்லை. எழுத்துப் பயிற்சி கொடுப்பது பத்திரிகையின் வேலை அன்று. காலத்தின் கோலத்தால் நேசனும் முரசும் அதில் ஈடுபடவேண்டியதாயிற்று.

1957ல் மலாயா சுதந்தரம் பெற்றது. அந்த ஓராண்டில் நிகழ்ந்த சில முக்கிய இலக்கியச் செய்திகளை அவற்றில் சம்பந்தப்பட்ட கு.அ மூலம் கேட்பது சுவையாகவே உள்ளது. தமிழ் நேசன் 1957 மெர்தேகா ஆண்டு மலர் கு. அழகிரிசாமியின் கைவண்ணத்தில் உருவானது. சுதந்தர மலாயாவின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் வண்ணப் படத்தை முகப்பில் போட்டு அழகு பார்த்தார் கு.அ. அந்த பாக்கியம் அழகிரிசாமிக்குக் கிடைத்தது எதிர்பாராத ஒரு நற்பேறு.

தமிழகம் திரும்பிய கு.அழகிரிசாமிக்கு வாழ்க்கை வளமாக அமையவில்லை. நோய்வாய்ப்பட்டார். இந்நிலையிலும் இலக்கியமே கதி என்று கிடந்தார். எழுதும் கை மட்டும் ஓயவில்லை. 47ஆவது வயதில் 1970ல் இறந்து போனார். காலமான சில மாதம் கழித்து அவ்வாண்டின் சாகித்திய அகாடமி பரிசு அழகிரிசாமிக்கு வழங்கப்பட்டது. அவருடைய சாதனைகள் பலதரப்பட்டவையாக இருந்தபோதிலும் அன்பளிப்பு என்ற சிறுகதைத் தொகுதியை முன்னிறுத்தியே பரிசு அளிக்கப்பட்டது. கல்கி, பாரதிதாசன் ஆகியோரைத் தொடர்ந்து காலமான பிறகு விருது பெற்ற மூன்றாவது படைப்பாளி கு. அழகிரிசாமி. தென் தமிழகத்தில் கோவில்பட்டிக்கு அருகில் இடைச்செவல் கிராமத்தில் பிறந்து அரிய சாதனை படைத்த அழியாச்சுடர் அவர்.

அதே கிராமத்தில், அழகிரிசாமிக்கு ஒரு வாரம் முன்னதாகப் பிறந்தவர் மற்றோர் இலக்கியப் படைப்பாளி கி. ராஜநாராயணன். இருவரும் இனிய தோழர்கள். ஆனால் இலக்கியப் பாதையில் அவர்களின் பயணம் வேறு திசைகளில் சென்றது. ராஜநாராயணனுக்கும் 1991ல் சாகித்திய அகாடமி பரிசு கிடைத்தது கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக. ஒரே கிராமத்தில் பிறந்த இரண்டு பேருக்கு சாகித்திய அகாடமி பரிசு கிடைத்தது இந்திய இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கும் அபூர்வ சம்பவம். இரண்டு பேருமே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதும் சற்று அபூர்வந்தான். *


Wednesday, December 15, 2010

முருகு சுப்பிரமணியனும் தமிழ் முரசும் மலாயாச் சிறுகதை மன்னர்களும்



தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி மலாயாவில் தரமான சிறுகதை எழுத ஆளில்லை என்று நினைத்ததுடன் தரமான பத்திரிகை ஆசிரியர்கள் இல்லை என்றும் கருதியவர். 1940களிலும் 50களிலும் எல்லாப் பத்திரிகைகளும் தமிழ்நாட்டிலிருந்து ஓரளவு படித்துவிட்டுக் கப்பலேறிய இளைஞர்களையே ஆசிரிய, துணையாசிரியப் பொறுப்பில் அமர்த்தின. இங்கே வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்களைப் பத்திரிகைகள் இழுத்துக் கொண்டாலும் பத்திரிகைக்காகவே துணையாசிரியர்களை முதன்முறையாய் விசேஷமாகக் கொண்டுவந்தவர் தமிழ் நேசன் பத்திராதிபர் கே நரசிம்ம ஐயங்கார். 1936ல் சென்னையின் The Hindu நாளிதழில் தமிழ்நேசனுக்கு உதவியாசிரியர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து பை கி ஸ்ரீநிவாச ஐயங்காரையும் சா சுப்ரமணிய ஐயரையும் கொண்டு வந்தார்.

( நரசிம்ம ஐயங்கார் 4 பிப்ரவரி 1938ல் காலமான பிறகு நேசன் திசை தடுமாறியது. 1940ல் ஒரு வேலை நிறுத்தம். கே பி சுப்பையா, சா சுப்பிரமணிய ஐயர் போன்ற உதவியாசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால் இருவரும் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் தனியாகப் போய் 2 டிசம்பர் 1940ல் ஜனநாயகம் பத்திரிகையை ஆரம்பித்தனர். நேசனுக்கு ஒரு சரியான போட்டி அது. ஐயர்தான் ஆசிரியர். சண்டைக்குப் பிறகு ஜனநாயகம் மறுபடியும் வந்தது. அதனால் ஐயர் ஜெயமணி சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார். சோஷலிஸ்டுப் பாதையில் ஆர்வங் காட்டிய சுப்பிரமணியம் ஜப்பானியர் ஆட்சியின்போது 1942ல் ஹிட்லரின் சுயசரிதையான வீரன் ஹிட்லர் மேன் காம்ப் நூலைத் தமிழாக்கம் செய்தார். காகிதப் பஞ்ச காலத்தில் 272 பக்கங்களில் வெளியான நூல் அது. விழி பிதுங்கும் மொழிபெயர்ப்பு அது என்று ஜெர்மனி தமிழரசன் இனி இணைய இதழில் (டிசம்பர் 2005) ஈவிரக்கமின்றி சாடினார். ஆங்கிலேயரின் அலங்கோல ஆட்சி எனும் 84 பக்க நூலையும் ஜெயமணி சுப்பிரமணியம் 1942ல் கொண்டுவந்தார். அந்த நேரத்தில் ஜப்பானியர் மெச்சும் வகையில் ஆங்கிலேயரை வசைபாடிய சில நூல்களுள் அதுவும் ஒன்று. சண்டை முடிந்தபின் சா சுப்பிரமணியம் தமிழ்நாட்டுக்குத் திரும்பி கல்கியில் சேர்ந்துகொண்டார். கே பி சுப்பையா 1946ல் யுத்தத்தால் வந்த யுத்தம் எனும் நூலை வெளியிட்டார். முதலாம் உலகப் போரே இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்பது நூலின் சாரம். சண்டைக்கு முன் நடைபெற்ற ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும் அவர்களின் கோரிக்கைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறையும் தொழிலாளர் மரணங்களும் சற்று விரிவாகத் தமிழில் இடம்பெறும் நூல் இது.)

ஸ்ரீநிவாச ஐயங்கார் சுதேசமித்திரன் ஏட்டில் பணியாற்றிவிட்டு சென்னையில் நடந்து கொண்டிருந்த டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்தார். கருமமே கண்ணாயினார் என்பதற்கு அவரைவிடச் சிறந்த உதாரண புருஷரைக் காட்ட முடியாது. (பைரோஜி நாராயணன், நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரின் தந்தையே அவர்.) பாரதி பிறந்த தினமான செப்டம்பர் 11ல் 1934ஆம் வருஷம், தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதற்காகப் பத்திரிகை ஜாம்பவான் எஸ் சதானந்த் தொடங்கியது தினமணி நாளிதழ். தேசத் தியாகி தி சு சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியக் குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் சுப்பிரமணிய ஐயர். தமிழ் நேசன் 1937 பிப்ரவரி 20ல் நாளிதழாக வரவிருந்ததால் அனுபவம் மிக்க புதிய இளைஞர்களை இறக்குமதி செய்தார் நரசிம்ம ஐயங்கார்.

1951ல் கோ. சா முரசுக்காகக் கொண்டு வந்த வை திருநாவுக்கரசு திராவிடர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பூந்தோட்டம் என்ற மாத இதழை 1947ல் சொந்தமாக நடத்திவிட்டுப் பெரியாரின் விடுதலை பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தபோதுதான் வி திருநாவுக்கரசு முரசுக்குக் கப்பலேறினார். அரசுக்குப் பிறகு ஒரு பெரிய அணி முரசுக்குப் படையெடுத்து முரசையும் வளர்த்து சிங்கப்பூர், மலாயா/மலேசியத் தமிழர் சமூக வாழ்க்கையில் அழுத்தமான முத்திரையும் பதித்தது. அப்படி முரசுக்கு வந்தவர்களுள் தி செல்வகணபதி, அ முருகையன், முருகு சுப்பிரமணியன் ஆகியோர் முக்கியமானவர்கள். கொஞ்ச காலம் சென்றபின் வி டி அரசு அரசாங்கத் தகவல் துறைக்கு மாறிவிட்டார். அ முருகையன் ரேடியோ சிங்கப்பூரின் தமிழ்ப் பகுதித் தலைவர் பணியை ஏற்றார். (சிங்கப்பூரில் 1949ல் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகத்தில், எட்டு ஆண்டு கழித்து 1957ல் இந்திய இயல் துறை அமைந்தபோது அதற்கு முதல் தலைவராக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட திராவிடப் பற்றாளர் இராசாக்கண்ணனாரின் மைத்துனர்தாம் முருகையன். வழக்கமாகத் துறைத் தலைவர் பதவிக்கு இன்றியமையாத Ph D பட்டம் இல்லாமல் M.A மட்டுமே வைத்திருந்தவர் இரசாக்கண்ணனார். அ. முருகையன் 1952 அல்லது 1953ல் முரசுக்கு வந்திருக்க வேண்டும்.)

1955ல் முரசுக்கு வந்தவர் முருகு சுப்பிரமணியன். அவரும் திராவிட இயக்கத்தில் ஊறிய இலக்கியவாதியே. 1924ல் செட்டி நாட்டுக் கோனாப்பட்டில் பிறந்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1940களில் செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றி சுயமரியாதைக் கொள்கையையும் திராவிட உணர்வையும் பரப்பினார். அப்பகுதி இளைஞர்கள் மாதக் கணக்கில் அவரைத் தங்க வைத்தனர். பாரதிதாசன் நூல்களை அச்சிடவும் அவருடைய நாடகங்களை நடத்தவும் முத்தமிழ் நிலையம் எனும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இதற்கு உந்துதலாகத் திகழ்ந்தவர் செட்டிக்குல இளங்குருதி முருகு சுப்பிரமணியன். இளந்தமிழன் கையெழுத்து இதழை நடத்தியதோடு தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார்.

பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பான பாரதிதாசன் கவிதைகள் முதற் தொகுதி புதுக்கோட்டை, இராமச்சந்திரபுரம், செந்தமிழ் நிலையத்தால் 1938ல் அச்சிடப்பட்டது. பாரதிதாசனின் வேறு சில நூல்களையும் செட்டிநாட்டு அன்பர்கள் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

(கானாடுகாத்தான் வை சு சண்முகம் செட்டியார் மகாகவி பாரதியாரை செட்டிநாட்டுக்கு அழைத்துவந்த செய்தி பலரும் அறிந்ததே. 1919 அக்டோபர் 28 முதல் ஒன்பது நாளும், 1920 ஜனவரி 6 முதல் 10 வரை நான்கு நாளும் பாரதியார் செட்டியார் மாளிகையில் தங்கியிருந்தார். கையில் தடியுடன் பாரதியாரைக் காட்டும் ஒரு படம் அப்போது எடுத்ததுதான். செட்டிநாட்டிலேயே தங்கிவிடும்படி சண்முகம் செட்டியார் மன்றாடியபோதும் பாரதியாரின் சூழ்நிலை அவரைத் தங்கவொட்டாமற் செய்துவிட்டது.)

(1952ல் தமிழ் நேசன் மலையாண்டி செட்டியார் வசம் இருந்தபோது புகழ்பெற்ற இரு பத்திரிகையாளர்களை அவர் கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தார். தமிழ்நாடு, தினமணி ஆகியவற்றில் பணிபுரிந்த ரா வேங்கடராஜுலு நாயுடு, படைப்பிலக்கிய எழுத்தாளர் கு அழகிரிசாமி ஆகியோரே அவர்கள். 1953 ஜுன் 2ல் நிகழ்ந்த எலிசபெத் அரசியாரின் முடிசூட்டு வைபவத்தில் கலந்துகொள்ள மலாயாப் பத்திரிகையாளர் அணியில் ஒருவராக லண்டனுக்குச் சென்று வந்தவர் நாயுடு. அழகிரிசாமி தம் ஐந்தாண்டு மலாயாப் பயணத்தில், சீதாலட்சுமி எனும் பிராமண மங்கையைக் குடும்ப எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் அயராத உதவியால் 1955ல் மணம் செய்துகொண்டவர்.)

தமிழ்ப் பத்திரிகை உலகில் முருகு சுப்பிரமணியனுக்கும் அவருடைய நெருங்கிய உறவினர் அரு பெரியண்ணனுக்கும் நிலையான இடம் உண்டு. பொன்னி ஆரம்பித்தபோது முருகுவுக்கு வயது 24. இருவரும் சேர்ந்து 1947 முதல் 1953 வரை நடத்திய பொன்னி மாத இதழ் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. புதுக்கோட்டையில் தொடங்கிய இதழ் சென்னைக்கு இடம் மாறிப் பிரகாசமாக நடைபெற்று ஓய்வு எடுத்துக்கொண்டது. அதன்பிறகே முருகு சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார். பெரியண்ணன் திராவிடப் பற்றில் கைக்காசை எல்லாம் இழந்து மு கருணாநிதி நடத்திய முரசொலியின் நிர்வாகத்தில் பங்கேற்றார்.

பொன்னி அன்று இளைஞரிடம் கொடிகட்டிப் பறந்த திராவிடவேட்கைக்கு வடிகால் அமைத்துக் கொடுத்த சஞ்சிகை. திராவிட இயக்கத்துக்கென ஒரு தரமான இதழ் இல்லாதிருந்த குறையைப் பொன்னி நீக்கியது. திராவிடத் தலைவர்களும் தொண்டர்களும் கதை, கட்டுரை, கவிதை என்று அதில் நிறைய எழுதினர். இயக்கத்தைச் சாராதவர்களும்கூட பொன்னிக்கு ஆதரவு தெரிவித்தனர். வண்ணமயமான அட்டைப்படத்துடன் வந்து அனைவரையும் கவர்ந்தது பொன்னி. முதல் இதழில் எங்கெங்கோ ஊறிச் செழிக்கும் கருத்துகளை அவை தமிழர்க்கும் ஆக்கம் தருபவையானால் தேடிக்கொணர்ந்து தமிழர்க்குப் படைப்பாள் பொன்னி. தமிழ் நெஞ்சம் வளமாகும் வகையில் அவள் எண்ண ஓடை பாயும் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வெளிவந்தது பொன்னி.

பொன்னியின் மிகச் சிறந்த இலக்கியப் பணியாக அமைந்தது பாரதிதாசன் பரம்பரை என்ற கவிஞர் அறிமுக வரிசை. 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோபர் வரை நீடித்தது அந்தத் தொடர். மு. அண்ணாமலை தொடங்கி நாரா நாச்சியப்பன், சுரதா, முடியரசன், வாணிதாசன், கோவை இளஞ்சேரன், புத்தனேரி சுப்பிரமணியன், குலோத்துங்கன் (வா. செ. குழந்தைசாமி), நாஞ்சில் மனோகரன், பெரி சிவனடியான், சுப்பு ஆறுமுகம் போன்ற 48 கவிஞர்களை அப்புதுமைத் தொடர் அடையாளம் காட்டியது.

பொன்னி : பாரதிதாசன் பரம்பரை எனும் தலைப்பில் 48 கவிஞர்களின் பாடல்களையும் அவர்களின் திறனையும் வாழ்க்கைக் குறிப்புகளையும் சேர்த்து ஆய்வு நூலாக்கியுள்ளார் மு இளங்கோவன். 2003ல் வந்ததது அந்நூல். மணிக்கொடி எழுத்தாளர்கள் போல பொன்னிக் கவிஞர்கள் என்ற அடைமொழி பிறந்தது.

2004ல் பொன்னி ஆசிரிய உரைகள் நூலையும் வெளியிட்டார் மு இளங்கோவன். இந்தி எதிர்ப்பு, வடநாட்டு ஆதிக்கம், பெரியார் மணியம்மை திருமணம், திமுக தொடக்கம் போன்ற 98 தலையங்கங்ளைக் கொண்டு திராவிட இயக்கத்தின் ஆவணமாகப் பரிணமித்தது இந்நூல். முருகு, பெரியண்ணன் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெ. தூரன் தலைமையில் பேசிய அண்ணாதுரையின் பேச்சைப் புதுக்கோட்டை தாய்நாடு ஜனவரி, பிப்ரவரி 1947 இதழ்களில் பாராட்டி எழுதினார் அப்பத்திரிகையில் பணியாற்றிய கண்ணதாசன்.

அண்ணாதுரையின் பேச்சை வெளியிட்ட பிறகு ‘அவனுக்கு (கண்ணதாசனுக்கு) புதுக்கோட்டையில் சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அப்போது ‘பொன்னி’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த தோழர் முருகு சுப்பிரமணியன் அவர்களும் தோழர் பெரியண்ணன் அவர்களும் அவனுக்கு வாய்த்த இனிய நண்பர்களாவார்கள். பெரியாரை அவர்கள் கடவுளாகக் கொண்டாடியவர்கள். அண்ணாதுரையை உயிருக்குயிராய் நேசித்தவர்கள். திராவிடர் கழகத்தை ஆதரிக்கும் ஏடுகள் மிகக் குறைவாக இருந்த காலம். அவையும் அழகில்லாமல் அச்சுப்பிழை மிகுந்து வெளிவந்தன. அந்த நேரத்தில் வண்ண முகப்பு அட்டை போட்டு அழகாக நடந்த இதழ் ‘பொன்னி’ ஒன்றுதான். பத்திரிகைத் துறையில் மற்றவர்கள் செய்து காட்டாத புதுமை எல்லாம் அவர்கள் செய்து காட்டினார்கள். இன்றும் தமிழகத்தில் சிலரை அச்சுக்கலை நிபுணர்கள் என்று தேர்ந்தெடுத்தால் அவர்களில் பெரியண்ணன் மிக முக்கியமாக இருப்பார். ‘பொன்னி’யின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் குழந்தை உள்ளமும் குளிர்ந்த சுபாவமும் கொண்டவர். ‘தாய்நாடு’ இதழ் கட்டுரையைப் பற்றி அவனிடம் வெகுவாகப் பாராட்டினார். …. அப்போது ‘பொன்னி’ இதழில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற பெயரில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தினார். அந்தப் பகுதிக்கு அவனும் ஒரு கவிதை எழுதினான். நான்காவது நாள் அந்தக் கவிதை அவனுக்கே திரும்பி வந்தது. கூடவே கீழ்க்கண்டவாறு ஓர் இணைப்புக் கடிதமும் இருந்தது. “அன்புள்ள நண்பருக்கு, கதையனுப்பும்படி கேட்டிருந்தேன். கவிதை அனுப்பியுள்ளீர்கள். தயவு செய்து கதையே அனுப்பினால் நலம். அன்பன் முருகு சுப்பிரமணியன் தன் கவிதைக்குக் கிடைத்த மரியாதை அவனை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அதிர்ச்சிதான் கவிதை எழுதுவதில் அதிக ஆசையை அவனுக்கு உண்டாக்கிற்று. அதற்குப் பிறகு அவன் எவ்வளவோ கவிதைகள் எழுதினான். ஆனால் ‘பொன்னி’ மட்டும் ஒரு கவிதையைக் கூட வெளியிடவில்லை.’

(கண்ணதாசன். வனவாசம். 1965 பக் 72)

பொன்னிக்கு முன் குமரன் இதழில் முருகு ஆசிரியராய் இருந்தபோது கண்ணதாசனின் இரண்டு கதைகளை வெளியிட்டார். தாய்நாடு இதழில் அண்ணாவின் பேச்சை எழுதியபோது கண்ணதாசனுக்கு வயது 19. முருகுவைவிட மூன்று வயது இளையவர் கண்ணதாசன். மலாயாவுக்கு வந்து சேர்ந்த கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் சென்னை எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒருவர். எருமைக்கடா வாகனக் கதையை அண்ணா சொன்னது இந்த மாநாட்டில்தான். அந்தப் பகுதியைக் கண்ணதாசன் எனும் நிருபர் இப்படித்தான் report பண்ணியிருந்தார்.

“அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே (அன்னிய நாட்டிலே). கம்பராமாயணமும் கந்தபுராணமும் இங்கே. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை. (கைத்தட்டல்). ஆக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்திருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா வேண்டாமா என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுப்புறத்தான் ஒருவனை கூப்பிட்டுக் கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? தெரியாது. நமது பிரதம மந்திரி யார்? தெரியாது. இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது? தெரியாது. முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்? தெரியாது. எமனுக்கு வாகனம் என்ன? எருமைக்கடா! (பலத்த கைத்தட்டல்) இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம். கர்னாடிக் மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள். அயோத்தியில் தசரதன் மாளிகையைப் பற்றி அல்ல, ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள். அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கைத்தட்டல்).

31 வயதில் சிங்கப்பூருக்குக் கப்பலேறிய முருகு சுப்பிரமணியன் இங்கு செல்வாக்குடன் இருந்தார். 1950களில் கதைப்போட்டிகளின் மூலம் இளையரிடத்திலும், தமிழர் திருநாள் மூலம் பொதுமக்களிடமும், தமிழர் சீர்திருத்த சங்க நடவடிக்கைகள் மூலம் பகுத்தறிவாதிகளிடமும் முரசு புகழோடும் பெருமையோடும் இருந்த காலம் அது. சீர்திருத்த சங்கத்தின் செயலாளராகவும் முருகு இருந்திருக்கிறார். வானொலியில் இலக்கிய உரைகள் ஆற்றினார். அவை பிறகு நூலுருவம் பெற்றன.

முருகு முரசுக்கு வந்த கையோடு 1955ல் நான்கு சிறுகதைகள் எழுதினார். அக்டோபர் 23ல் அன்னையின் சோகம்.

‘கணவனை இழந்த தங்கம்மாள் தன் மகனை மிகவும் செல்லமாக வளர்க்கிறாள். ஒரு நாள் அவனுக்கு வயிற்றில் வலி ஏற்படவே தங்கம்மாள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லாமல் அவன் இறந்து விடுகிறான். தன்னுடைய மகனைப் பறிகொடுத்த அந்த அன்னையின் சோகம் அங்கிருக்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.’

நவம்பர் 20ல் சின்னப்பயல்.

‘பேரன் சின்னப்பயல் பாண்டியனைக் காணவில்லை என்று குருசாமியிடம் மீனாட்சி கூறுகிறாள். உடனே, அவனைத் தேடிச் செல்லும் குருசாமி, கையில் மிட்டாயுடன் ஓடிவந்து தன் அண்ணன் செல்வத்துடன் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கிறான். முன்பு ஒருமுறை அவனுடைய அன்பு, தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இருந்த மனக்கசப்பைப் போக்கியதை நினைத்துக் கொள்கிறான். சின்னப்பயல் பாண்டியனின் பெரிய மனத்தை நினைத்துக் குருசாமிக்கு அவன் மீது அளவற்ற கருணை பிறக்கிறது.’

நவம்பர் 27ல் காதல் கதை.

‘கல்யாணமான புதிதில் சரோஜா தன் கணவனிடம் அவன் முன்னாள் காதலைப் பற்றிக் கேட்கிறாள். அப்படி எதுவும் நடக்காததால் அவன் கதையொன்றைக் கூறுகிறான். தன்னுடன் படித்த சக மாணவி அறிவில் சிறந்தவள் என்றும் இருவரும் அவ்வப்போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறும் அவன், ஒரு முறை அவள் மீது அவன் கரம் பட்டதும் பளிங்கு மாளிகையாக அவள் முகம் மாறிவிட்டது என்றும் கூறுகிறான். அதைக் கேட்டதும் அவன் கூறிய கதையை நம்பாத அவன் மனைவிக்கு அவனைப்பற்றிய சந்தேகமும் நீங்குகிறது.’

டிசம்பர் 11ல் புயல்.

‘வேதாரண்யப் புயலால் விளைந்த அழிவைப் பற்றியும் அதில் சிக்கி இறந்த எண்ணற்ற மக்களைப் பற்றியும் அண்ணன், தன் தம்பிக்குக் கடிதம் வாயிலாக விவரிப்பதை இக்கதை சித்திரிக்கிறது.’

(கதைச் சுருக்கம் இடம்பெற்ற நூல் தேசிய நூலகம் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936 – 1960, தொகுதி 1)

கதைச்சுருக்கத்தை மட்டும் வைத்துக் கதைகளின் சிறப்பை உய்த்துணர இயலாது. கதைச்சுருக்கமோ கதைப்பின்னலோ ஏறத்தாழ ஓர் எலும்புக்கூட்டுக்குச் சமம். அந்தக் கூடு எப்படி சதையும் ரத்தமும் ஆகி உயிருள்ள உடம்பாக மாறுகிறது என்பதே வித்தை. கதைச்சுருக்கத்தின் மூலம் புலப்படக்கூடிய முருகு சுப்பிரமணியத்தின் கதைகள் எப்படி அமைந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

முருகு எனும் பெயரில் கதை எழுதிய அ. முருகையன் 1953 மார்ச் 29 முதல் 1955 அக்டோபர் 30 வரை இருபது சிறுகதைகளைப் படைத்துள்ளார். (இக்கட்டுரையில் நான் முருகு என்று குறிப்பிடுவதெல்லாம் முருகு சுப்பிரமணியனையே சுட்டும்.)

முரசில் சிறுகதைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஒரு கட்டத்தில் முருகு சுப்பிரமணியனைச் சார்ந்திருந்தது. கதைகளை எல்லாம் கருத்தூன்றிப் படித்துப் பார்த்த அவர் 1958 மார்ச் 9 முரசு ஞாயிறு மலரில் மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் எனும் தலைப்பில் ஒரு பக்கத்தில் அடங்குமாறு கட்டுரை ஒன்றை வரைந்தார்.

மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் கட்டுரை: முருகு சுப்பிரமணியன் ( 9 மார்ச் 1958 )

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் சிறுகதைகளைப் பற்றி ஒரு விமரிசனக் கட்டுரை எழுத வேண்டுமென நீண்ட நாளாக எண்ணியதுண்டு. அந்த எண்ணம் இப்பொழுதுதான் நிறைவேறுகிறது.

இளம் எழுத்தாளர்களிடம் எனக்குத் தனி அன்பு உண்டு. நான் அவர்களை அநுதாபக் கண்ணோடு நோக்குகிறேன். பெருமைக்காக இவ்வாறு சொல்லிக் கொள்ளவில்லை. பல ‘பெரிய’ எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் ‘குப்பை’ என்பது அந்தப் பெரியவர்களின் கருத்து. இன்னும் சிலருக்கு மறுமலர்ச்சி இலக்கியம் என்றாலே வேப்பங்காய். ‘வள்ளுவனும் கம்பனும் வளர்த்த தமிழை மேலும் வளர்க்க இந்தப் பொடியர்கள் யார்? இவர்களுக்கு என்ன தெரியும்? குறளில் ஒரு வரிக்கு உறைபோடக் காணுமா இவர்களின் எழுத்து?’ என்று பேசும் மெத்தப் படித்தவர்களும் உண்டு. அவர்களுக்குச் சொந்தச் சாகுபடி செய்யத் தெரியாது. யாராவது சங்க இலக்கியமோ தொல்காப்பியமோ இயற்றி வைத்திருந்தால் அதனைப் படித்து உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ‘மனநிறைவு’ கொண்டவர்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சி கம்பனோடும் சேக்கிழாரோடும் நிலைகுத்தி விட்டதென்பது அவர்களின் அசைக்க முடியாத முடிவு.

இவர்களைப் போல வள்ளுவனும் கம்பனும் எண்ணியிருந்தால் நமக்கு உலகம் போற்றும் திருக்குறளோ, தமிழ்க்கடலான இராமகாதையோ கிடைத்திருக்குமா? புதிதாக ஆக்கவேண்டும் என்னும் துடிப்பு, மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அந்தத் துடிப்பை மட்டந்தட்டி வீணாக்குவது இலக்கியம் பேண விரும்புகிறவர்களின் பொறுப்புள்ள செயலாகாது.

திருத்த வேண்டும் இளம் எழுத்தாளர்களிடமும் மறுமலச்சி எழுத்தாளர்களிடமும் எவ்வளவோ குறைகள் உண்டு. அக்குறைகளை எடுத்துக் காட்டித் திருத்த வேண்டுமேயொழிய அவர்களைத் தலைதூக்கவிடாமல் அழுத்திவிடக் கூடாது. அவர்களில் பலர் தமிழ்க்கொலை செய்கிறார்கள் என்பது உண்மையே. அந்தக் கொலைகளை எடுத்துக் காட்டி வன்மையாகக் கண்டிப்பது தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத பணி என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயத்தில் அந்த எழுத்தாளர்களிடம் உள்ள படைப்பாற்றலையும் கலையுணர்வையும் எழுத்துத் திறனையும் போற்றி ஊக்குவதும் அவசியமாகும்.

இளம் எழுத்தாளர்களிடம் நான் ‘அனுதாபம்’ காட்டுவதற்கு முதன்மையான காரணம் இதுதான்.

இளம் எழுத்தாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுதுவது ‘குப்பை’ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நூற்றில் ஒருவர் மணியான எழுத்தாளராக எதிர்காலத்தில் வரக்கூடும். குப்பையில் குன்றிமணியாக விளங்கும் அந்த ஒருவரைக் கண்டுபிடித்துக் கைதூக்கிவிடுவது, இளம் எழுத்தாளர்களை ஊக்கினால்தான் நிறைவேறும். இன்று புகழ் படைத்த எழுத்தாளர்களாகத் திகழும் எல்லா எழுத்தாளர்களுமே ஒரு காலத்தில் பத்திரிகை ஆசிரியர்களின் ‘தயவை’ எதிர்பார்த்து ஏங்கிய இளம் எழுத்தாளர்களே. இந்த உண்மையை நினைவிற்கொண்டால் புதிய எழுத்தாளர்களைப் புறக்கணிப்பதில் உள்ள ‘இழப்பை’ப் புரிந்து கொள்ள முடியும்.

மலாயாவில் புதிய எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரிடமே உண்மையான எழுத்தாற்றல் இருக்கிறது. அவர்களிடமும் சுட்டிக்காட்டக்கூடிய குறைகள் இருப்பினும், நான் முன்பு கூறிய படைப்பாற்றலை அவர்களிடம் காண முடிகிறது. பெயர்களைக் குறிப்பிட்டால் பொறாமையும் எரிச்சலும் ஏற்படலாமாதலால், பொதுப்படையாகவே குறை நிறைகளைக் கூற விரும்புகிறேன்.

பெருக வேண்டும் மலாயாவில் தமிழில் எழுதுகின்றவர்களின் தொகை பெருகவேண்டுமென்னும் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் நான் இங்கே சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்பது திண்ணம்.

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதும் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. காதல் கதைகள் எழுதுவது பாவமான காரியமென்று நான் சொல்லமாட்டேன். எனினும் காதல் இல்லாமல் கதை எழுத முடியாதென்று நினைப்பது தவறு. காதலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது என்பது உண்மையே. ஆனால் இங்கு எழுதுகிற புதியவர்கள் காதலையே கசக்க வைத்து விட்டார்கள். ஆகவே ஒரு சில ஆண்டுகளுக்காவது காதல் கதைகள் எழுதுவதில்லை என்று நம் எழுத்தாளர்கள் விரதம் பூண்டால் நன்மையாக இருக்கும்.

கைம்பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைப்பது சிறந்த சீர்திருத்தப் பணி. ஆனால் கதைகளில் திரும்பத் திரும்ப விதவைகளின் குமுறலையும் வேதனையையும் அளந்து கொண்டிருப்பது அவசியமா? கைம்பெண் மணத்தை வற்புறுத்தி கதை எழுதுவது பழைய பாணி.

அந்தப் பழைய பாணியிலும் மெருகேற்றிப் புதுமை மிளிரச் செய்வதற்குப் பெருந் திறமை வேண்டும். இளம் எழுத்தாளர்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே விதவைகளின் வேதனையைத் தீட்டுவதைச் சிறிது காலம்வரை இளம் எழுத்தாளர்கள் நிறுத்தி வைத்தால் நல்லது.

‘வழுக்கி விழுந்தவள்’ ‘வாழத் தெரியாதவள்’ ‘ஏமாந்தவள்’ – இப்படிச் சில கதைகள். பெண்களிடையே ‘ஒழுக்கக் குறைவு’ எங்கோ எப்பொழுதோ ஏற்படுகிறது. தமிழ்ப் பெண்கள் கற்பைக் காப்பதில் மிக விழிப்பாயுள்ளவர்கள். எளிதில் அவர்கள் வழுக்கி விழுந்து விடுவதில்லை. ஆனால் நம் இளம் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும் யார்க்கும் ‘தமிழ்ப் பெண்கள் எல்லாருமே ஒழுக்கங் கெட்டவர்களோ’ என்று எண்ணவே தோன்றும். பெண்கள் வழுக்கி விழும் சூழ்நிலை அசாதாரணமானது. அதனைக் கையாண்டு சிறுகதை தீட்டுவது கூரிய வாளின் மீது நடப்பது போன்றது. ஆகவே இளம் எழுத்தாளர்கள் ‘விபசாரக்’ கதைகளை எழுதாமல் இருப்பதே மேல்.

விசித்திரக் காதல் மற்றும் சிலர் தமிழ்க் குலத்திற்கே அருவருப்பான சில ‘விசித்திர காதல் முடிச்சு’க்களைத் தங்கள் கதைகளில் நடமாடவிடுகிறார்கள். தாய்க்கும் மகனுக்கும் சரசம் – மாமனாருக்கும் மருமகளுக்கும் நட்பு – அப்பாவுக்கும் மகளுக்கும் உறவு – இப்படிக் கதைகளைக் கற்பனை பண்ணுவது மன்னிக்கமுடியாத குற்றம். இந்தக் கதைகளால் தமிழும் வளராது. எழுத்தாளர்களும் வளர முடியாது. அருவருப்பூட்டும் இத்தகைய ‘அபார’ கற்பனைகளை அள்ளி விடுபவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருந் தீமை விளைவிக்கிறார்கள். இத்தகைய ‘விசித்திரக் காதல்’ கதைகளை இளம் எழுத்தாளர்கள் எழுதவே கூடாது.

சிறுகதை சமுதாயத்தைப் படம் பிடிப்பதாக இருக்க வேண்டும். மனித உணர்ச்சிகளுக்கு அது உருவம் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த லட்சியங்களைப் படிப்பவர் உள்ளத்தில் எழுப்ப வேண்டும். மக்களின் சிந்தனையைத் தெளிவடையச் செய்வதையே எழுத்தாளர்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டும். சிந்தனையைக் குழப்பும் அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகளைப் புதிய எழுத்தாளர்கள் மறந்தும் எழுதக்கூடாது.

பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரே மாதிரி நடையினையே கையாளுகிறார்கள். ‘அவள் கண்கள் குளமாகின’ என்று சொல்வது ஒரு சமயம் புதுமையாக இருந்தது. இப்போது அது படித்துப் படித்துப் புளித்துப் போய்விட்டது. எழுதும் நடையில், கையாளும் சொற்களில் புதுமை மிளிர வேண்டும். கதை சொல்லும் போக்கிலும் புதுமை காண வேண்டும். புதுமை எழுத்துத் துறைக்கு உயிர் நாடி.

ஒரு முக்கிய எச்சரிக்கை நம் எழுத்தாளர்களுக்கு மற்றொரு யோசனையையும் கூற விரும்புகிறேன். ஏதோ சில பத்திரிகைகளை மட்டும் படித்துவிட்டு எழுத்தாளராகி விடமுடியாது. தேர்ந்தெடுத்த நல்ல நூல்களை நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் நூல்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். வேற்று மொழி தெரிந்தவர்கள் அம்மொழிகளில் உள்ள சிறுகதை இலக்கியங்களைப் படிக்க வேண்டும். நூறு நல்ல சிறுகதைகள் படித்தீர்களானால் நீங்கள் ஒரு நல்ல கதையை எழுத முடியும். தமிழ் இலக்கியங்களை முறையாகப் பயில வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தமிழ் நடை வளம் பெறும். சொல்லுக்குப் பஞ்சம் ஏற்படாது.

கடைசியாக ஒரு எச்சரிக்கை. மலாயாவில் பலர் காப்பியடிப்பதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளின் பழம் பிரதிகளிலிருந்து அப்படியே எழுத்துக்கு எழுத்து பெயர்த்து எழுதித் தங்கள் பெயரைச் சூட்டிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். கதைகள் சில சமயம் பத்திரிகைகளிலும் வெளிவந்து விடுகின்றன. ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பது பழமொழி. ஒரு முறை அகப்பட்டுக் கொண்டால் போதும், இந்தக் களவாணிகள் மறுபடி தலைதூக்கவே முடியாது. இளம் எழுத்தாளரிடையே உள்ள ‘நச்சு மரங்கள்’ இவர்கள். இந்தத் திருடர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொடுப்பது வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் தலையாய கடமையாகும்.

1950களில்தான் பலரும் பத்திரிகை படிக்கக்கூடிய பழக்கம் ஓரளவு நிலைபெற்றது. இந்தப் பத்திரிகைகளே இளையர் கூட்டத்தின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. பத்திரிகையின் பக்கங்களைக் காசு கொடுக்காமல் நிரப்ப முடியும் என்பதைப் பத்திரிகாசிரியர்கள் நன்கு கண்டுகொண்டனர். காசு கொடுத்தால்தானே தரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்து கதையை வாங்கிப் போட முடியும். எழுதுவோரும் இதை நம்பி பிழைப்பு நடத்தப் போவதில்லை. சற்றுப் பேரும் புகழும் வந்தால் போதும் என்றுதான் எல்லாருமே எழுதினர். ஏனோ தானோ என்று எழுதப்படும் எழுத்து அது. ஒரு seriousness கிடையாது. எந்தக் கலையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது பதராகத்தான் மிதக்கும். கலை பயிற்சியினால் உருவாவது. கடும் பயிற்சிக்குத் தடையாக இருப்பது எழுத்தாளர்களின் சோம்பேறித்தனம். பல நூல்களை வாங்க இயலாத வறுமைத்தனத்தையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். எனவே 1950களிலிருந்து இன்றைய காலம் வரை எழுத்தாளர்கள் பயிற்சி பெறும் மேடைதான் பத்திரிகைகள். அவ்வப்போது சில பரிசுகள் கொடுத்து எழுத்தாளரின் மனக்குறையைச் சிலர் தீர்த்துக் கொண்டனர். இன்று பத்திரிகைகள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனவே. இப்போதாவது எழுத்துக்குக் காசு கொடுக்கக் கூடாதா? காசு இல்லாமல் எழுத மாட்டோம் என்று அடித்துச் சொல்லும் திராணியும், நன்றாகவே சம்பாதிக்கும் எழுத்தாளருக்கு இன்று கூடக் கிடையாது. ஏனெனில் அந்த எழுத்தாளரின் படைப்பு சுமார் என்பது அவருக்கே தெரியும். மட்டச் சரக்கை எப்படி விற்க முடியும்?

கதைகளின் தரம் தாழ்ந்து கிடப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ‘நீளம்’. மூன்று பத்திக்குமேல் கதை அனுப்பாதே என்று சாரங்கபாணி கட்டளை இட்ட வண்ணம் இருப்பார். மூன்று பத்தியில் சுமார் ஐந்நூறு வார்த்தைகளில் எப்படி உன்னதமான ஒரு சிறுகதையை எழுத முடியும்? பத்திரிகைக் கதைகள் படுமோசமாக இருப்பதற்கு இந்த இரண்டு காரணங்களையும் களைய வேண்டும். ஆனால் விசித்திரமாக அதே இரண்டு காரணங்கள் இன்றைக்கும் மலேசிய சிங்கப்பூர்ப் பத்திரிகைகளை ஆட்டி அலைக்கழிக்கின்றன.

மூன்றாவது காரணமாக, ஓழுங்கான விமர்சனப் போக்கு இல்லாத குறையைக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும். ரசனை இல்லாதபோது எப்படி விமர்சனம் பிறக்கும்? விமர்சனத்தின் விளைவு ரசனையா? ரசனையின் விளைவு விமர்சனமா? இன்றைய சூழலில் சிறுகதைக்கே தேவை இல்லாமல் போய்விட்டது. ஆகவே இணையத்தில்தான் கைவரிசையைக் காட்டவேண்டும்.

முருகு சுப்பிரமணியன் தமிழ் நேசனுக்குப் போனதும் பத்திரிகையில் இடம்பெறும் எல்லாப் படைப்புகளுக்கும் காசு கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். சிறுகதைக்கு ஐந்து வெள்ளி வழங்கியது நேசன். அதை எழுத்தாளருக்கு அனுப்பிவைக்க அதைவிட அதிகமாகக்கூடச் செலவு பிடிக்கும் சில நேரங்களில். ஆகவே அந்தத் திட்டம் தானாகவே கைநழுவிப் போனது. பெரிய தொகை என்றால் பிரச்னை இல்லை. அந்த நாளும் எந்த நாளோ?

1960ல் தமிழ் முரசில் கதை எழுதிப் பரிசு வாங்கியபோது முருகு சுப்பிரமணியன் அழைத்து அவர் தங்கியிருந்த 63 Buffalo Road முகவரிக்குப் போனபோது அவர், பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்ற சொன்னதை இராம கண்ணபிரான் நினைவுகூர்ந்தார். அதன் விவரம் கீழே:

http://balabaskaran24.blogspot.com/search?updated-min=2009-01-01T00:00:00%2B08:00&updated-max=2010-01-01T00:00:00%2B08:00&max-results=5

1961ல் தமிழ் நேசனுக்கு ஒரு சோதனை நேரம். அதற்குக் காரணமாக இருந்தவர் துணையாசிரியர் கனகசுந்தரமும் சுயேச்சை நிருபர் கா. அண்ணாமலையும். கு. அழகிரிசாமிக்குப் பிறகு கே. சி. அருண் என்பவர் நேசனுக்கு 1957ல் ஆசிரியராக வந்தார். அருண் சிங்கப்பூர் ஸ்டாண்டர்டில் உதவியாசிரியராவும் ராய்ட்டர் நிருபராகவும் இருந்த பிறகு அப்பத்திரிகை மூடப்பட்டபின் நேசனுக்கு மாறினார். தமிழ்ப் பத்திரிகையில் மாதம் ஆயிரம் வெள்ளி வாங்கிய முதல் ஆசிரியர் அருண். 1961ல் நேசனைப் பினாங்கு ரெங்கசாமி பிள்ளையிடம் ஒரு லட்சம் வெள்ளிக்கு விற்க உரிமையாளர் மலையாண்டி செட்டியார் ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார். ரெங்கசாமி பிள்ளையோ கோ சாரங்கபாணியின் மிக நெருங்கிய நண்பர். கோ. சா நிர்ப்பந்தம் கொடுக்கவே ரெங்கசாமி நேசனை வாங்காமல் விட்டுவிட்டார். நேசனின் எதிர்காலத்தில் ஐயம் கொண்ட அருண் மலாயாக் கூட்டரசு தகவல் துறையின் உயர் அதிகாரி வேலை கிடைத்தபோது அதற்குத் தாவினார். புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை கனகசுந்தரம் தலையங்கம் எழுதும் பொறுப்பை ஏற்றார். கா. அண்ணாமலை அடிக்கடி நேசனுக்கு வந்து போவார். கனகசுந்தரமும் அவரும் நெருங்கிய தோழர்கள். ஒரு நாள் தன்னிடம் exclusive செய்தி இருப்பதாகக் கனகசுந்தரத்திடம் கூறினார் அண்ணாமலை. இருவரும் மேல்மாடிக்குப் போய் செய்தியை எழுதிக் கொண்டு வந்து பத்திரிகையில் (12 அக்டோபர் 1961) போட்டுவிட்டனர். ‘ சோஷலிச முன்னணி தடை செய்யப்படும் – அரசாங்கம் முடிவு ’ என்னும் தலைப்புடன் செய்தி வந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சோஷலிச முன்னணி. அன்றைய தினமே பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் செய்தியை மறுத்தார். ஆதாரமற்ற செய்தி வந்ததைக் கண்டித்தார். அதோடு அதைக் கடுமையாகவும் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் மலையாண்டி செட்டியாரின் மகன் நாகப்பன் சிங்கப்பூருக்குச் சென்று முருகு சுப்பிரமணியத்க் கண்டு பேசி அவரை நேசனுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

(வே. விவேகானந்தன். நினைவுச் சுவடியில் சில ஏடுகள். தமிழ் நேசன் 70ஆம் ஆண்டு நிறைவு மலர். 1994)

(பிரதமர் துங்கு அன்றைய தினமே செய்தியை மறுத்ததாக விவேகானந்தன் எழுதியிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் மலாயாத் தகவல் சேவை இயக்குநர் மொகமட் சோப்பி-யின் பெயரில்தான் அன்றிரவு அறிக்கை வெளியானது. நேசன் வெளியிட்ட செய்தி ஆதாரமற்ற பொய்த்தகவல் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது. அரசாங்கத்தின் மீது வெறுப்பும், ஏளனமும், அவநம்பிக்கையும் உண்டாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட குறும்புத்தனமான செய்தி அது என்று அரசாங்க அறிக்கை வருணித்தது. நேசன் பிரசுரித்த பொய்யான தகவல் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் விசாரணைக்குப் பின் நேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.)

முருகு சுப்பிரமணியன் நேசனின் ஆசிரியப் பொறுப்பை 1961 கடைசியிலோ 1962 ஆரம்பத்திலோ ஏற்றுக்கொண்டிருக்கலாம். முருகு சேர்ந்ததுடன் கனகசுந்தரம் வானொலிக்குச் செல்லவே அவருடைய இடத்தில் விவேகானந்தன் துணையாசிரியராக அமர்ந்தார். விவேகனின் நியமனத்துக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய பள்ளித் தோழரும் நேசனின் துணையாசிரியருமான எம் துரைராஜ். கொஞ்ச நாளில் கனகசுந்தரம் மலாயா வானொலியிலிருந்து சிங்கப்பூர் வானொலிக்கு வந்து சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டுகள் வானொலி தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகளைக் கண்காணித்து ஓய்வு பெற்றபின் 1983 அல்லது 1984ல் தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காலமானார் கனகு என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த கனகசுந்தரம். திருவாரூரில் படித்த கனகசுந்தரம் மு கருணாநிதியின் பள்ளித் தோழர்.

1963 செப்டம்பரில் மலேசியா உதயம். அப்போது தமிழ் முரசு இல்லை. ஊதிய உயர்வு கேட்டுப் பத்திரிகையை அச்சடித்த ஸ்டார் பிரஸ் ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் முரசு 13 ஜுலை 1963 முதல் 10 ஜுலை 1964 வரை வெளியாகவில்லை. மலேசிய உதயத்தின்போது அரசாங்கத்தின் எண்ணத்தைத் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகை இல்லையே என்ற கவலை மக்கள் செயல் கட்சிக்கு. முரசு சமரசம் காண்பதற்குப் பிடிவாதமாய் மறுத்துவிட்டது. அதோடு, ‘தொழிற்சங்கத்தின் விடாப்பிடித் தனத்தையும் அதன் பொறுப்பற்ற போக்கையும்’ சகிக்க முடியாமல் அச்சகத்தைத் தன்னிச்சையாக மூடிவிடுவதாக நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஊழியர் தரப்பும் முதலாளி தரப்பும் சேர்ந்து பஞ்சாயத்து மன்றத்துக்குப் போகலாம் என்று, ம செ க சட்டமன்ற உறுப்பினர் ஜி கந்தசாமி, தேசியத் தொழிற் சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சி வி தேவன் நாயர் ஆகியோர் தெரிவித்த யோசனைக்கும் முரசு நிர்வாகம் இணங்கவில்லை. கடைசியாகத் தொழிலாளர் அமைச்சர் Jek Yuen Thong பஞ்சாயத்து மன்றத்துக்குப் போக இருதரப்புக்கும் ஆணையிட வேண்டிய கட்டாயம் உண்டானது. வழக்கு நிர்வாகத்துக்கு சாதகமாக முடிந்தது. முரசிலிருந்து வெளியேறிய தி செல்வகணபதி வெளியார் ஆதரவுடன் தமிழ் மலர் நாளிதழை 1 மார்ச் 1964ல் தொடங்கினார்.

தமிழ் முரசு ஓராண்டு கழித்து மீண்டும் தலைதூக்கியபோதிலும் முன்னிருந்த பொலிவை இழந்து பரிதாபமாகத் தென்பட்டது. கோ சாரங்கபாணியும் (1903 – 1974) காலமாகவே, முரசு நாற்பதாண்டுகளாகக் கட்டிக் காத்துப் பேணி வந்த நோக்கத்தையும் கொள்கையையும் பறிகொடுத்துவிட்டு சமுதாயத்துடன் ஒட்டி வாழ முடியாமல் தத்தளிக்கத் தொடங்கியது.

முரசு இல்லாத காரணத்தால் தமிழ் நேசன் கிடுகிடுவென்று வளர்ந்தது. முருகுவும் வாழ்க்கையில், சமூகத்தில் உயர்ந்தார். இருந்தபோதும் கசப்பான சூழ்நிலையில் அவர் நேசனை விட்டு 1976ல் விலகிக் கொள்ள நேர்ந்தது துர்அதிர்ஷ்டமே. உடல் நலம் குன்றி 1982 ஏப்ரல் 10ஆம் நாள் முருகு காலமானார். 1924 அக்டோபர் 7ஆம் தேதி பிறந்தவர் முருகு சுப்பிரமணியன். ஒரு கால் நூற்றாண்டுக் காலம் சிங்கப்பூர் மலேசியாவில் முதல்தரப் பத்திரிகையாளராகப் பெயர் பதித்ததே அவருடைய திறமைக்குச் சான்று. #