Tuesday, December 7, 2010

ராஜாஜியும் மலாயாத் தமிழ்ச் சிறுகதையும் தூக்கில் தொங்கிய கணபதியும்


ராஜகோபாலன் எனும் பெயரை வடநாட்டுப் பாணியில் ராஜாஜி (10.12.1878 – 25.12.1972) என்று அழைத்தவர் காந்திஜி. பாரத ரத்னா ராஜாஜி அபூர்வமான மனிதர். விசித்திரமானவர். பெரும் படிப்பாளி. மகா புத்திசாலி. The wisest man in India என்றும் மூதறிஞர் என்றும் புகழப்பட்டவர். சாமர்த்தியமான வழக்கறிஞர். தந்திரமான அரசியல்வாதி. நிறைவாழ்வு வாழ்ந்தவர். தனக்குப் பிடித்ததை யார் எதிர்த்தாலும் பொருட்படுத்தாமல் செய்யக்கூடியவர். 1938ல் கட்டாய இந்தி நுழைவும் 1952ல் குலக்கல்வித் திட்டமும் அவரால் கொண்டுவரப்பட்டு பெரியாருடைய தீவிர எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டவை. ஒத்துழையாமைக்காக சிறைவாசம் அனுபவித்தவர். சென்னை மாகாணத்தின் முதலமைச்சர். மத்திய அரசாங்க அமைச்சர். கவர்னர் ஜெனரல் நாற்காலியில் அமர்ந்த ஒரே இந்தியர். பிளவுபட்ட வங்காளத்தின் மேற்குப் பகுதிக்கு கவர்னர். இத்தனை பதவிகளையும் வகித்துவிட்டுத்தான் ஓய்வு எடுக்காமல் 1952 தேர்தலில் தோற்றுப்போன காங்கிரஸ் கட்சியைப் பதவியில் அமர்த்த 74ஆம் வயதில் இரண்டாவது தடவையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மொழிவழி மாநிலக் கோரிக்கை வலுத்தபோது சென்னை மாநகரை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தவர். கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் 58 நாள் உண்ணாவிரதம் இருந்து 16 டிசம்பர் 1952ல் உயிர்விட்டபோதும் கொஞ்சம்கூட மசியவில்லை ராஜாஜி. காங்கிரசின் சோஷலிஸ்டுப் போக்கை எதிர்த்து 1959ல் சுதந்தராக் கட்சியை 81ஆம் வயதில் ஆரம்பித்தவர். திமுக-வோடு சேர்ந்து 1967ல் அண்ணாதுரையை முதலமைச்சராக்கியவர். ‘நான் என் பூணூலைப் பிடித்துக் கொண்டு சொல்கிறேன். நீங்கள் திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று தம் தரப்பை நியாயப்படுத்திச் சொன்னவர் ராஜாஜி. அப்போது அவருக்கு வயது 89.

1962 தேர்தலில்தான் ராஜாஜி திமுக பக்கம் வந்தார். காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அண்ணாதுரையும் அத்தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதிக்கு முன்னாள் ஜஸ்டிஸ் கட்சி ஏ ராமசாமி முதலியாரின் மகன் ஏ கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். கடைசி நாள் பிரச்சாரத்தில் (22.2.1962) காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ராஜாஜியும் அண்ணாவும் ராமசாமி முதலியாரும் கலந்துகொண்டு பேசினார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கூட்டம் அது. அண்ணாவின் தமிழைக் கேட்டு மோகித்துப் போனேன் என்று ராஜாஜி அங்கமெல்லாம் பூரிக்க, ராஜாஜி அவர்களுடன் நாங்கள் ஏற்படுத்திக் கொண்டது கூடா நட்பு அல்ல தேடா நட்பு என்று அண்ணா தம் பாணியில் விவரிக்க பல்லாயிரம் பேர் பார்த்து, கேட்டு மகிழ்ந்து புல்லரித்த மாபெரும் கூட்டம் அது. (நானும் எனது தோழர்கள் இருவரும் அந்த அதிசயக் கூட்டத்தை ரசிக்க புதுச்சேரியிலிருந்து சைக்கிளில் சென்று வந்தது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.)

ராஜாஜிக்கு வயதோ முதுமையோ ஒரு பொருட்டில்லை. விரும்பியதைச் சாதிக்க எதையும் எப்போதும் எப்படியும் செய்யலாம் என்பதில் விடாப்பிடி குணம் வாய்த்தவர். இப்பேர்ப்பட்ட அசகாய சூரர் ஒரு மகத்தான எழுத்தாளராகவும் திகழ்ந்தார் என்பதுதான் நமக்கு வேண்டிய செய்தி. தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் புனைந்துள்ளார். கவிதை, கதை, நாவல், என்று கை வரிசை காட்டினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார். டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதம் சிறையில் அடைப்பட்டுக் கிடந்த ராஜாஜி வெளியே வந்ததும் சிறையில் தவம் எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். ஐந்து முறை சிறை சென்றவர் அவர்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற ராஜாஜியின் ராகமாலிகைப் பாடல் எம் எஸ் சுப்புலட்சுமியின் மதுர கானத்தில் மேடைகள் தோறும் இடையறாது ஒலித்தது. இரு பெரும்புள்ளிகளின் கூட்டில் விளைந்த பயன் அது. எம் எஸ் அப்பாடலை 1966 அக்டோபர் 23ஆம் தேதி நியூயார்க்கில் ஐக்கியநாட்டுப் பொதுச்சபை மன்றத்தில் பாடினார். மீரா, சகுந்தலை போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் கதாநாயகியும் கர்னாடக இசைக்கலைஞரான மதுரை சுந்தரவடிவு சுப்புலட்சுமியும், அவரது கணவராகிய கல்கி பத்திராதிபர் சதாசிவமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும் ராஜாஜியை தெய்வமாகவே மதித்து வணங்கியவர்கள். 1933ல் ஆனந்தவிகடனில் புதிதாகத் தொடங்கப்பட்ட விளம்பர இலாக்காவின் நிர்வாகியாக வந்து சேர்ந்தவர் டி சதாசிவம். 1926ல் பூதூர் வைத்தியநாதய்யர் ஆரம்பித்த ஆனந்தவிகடன் இதழை 1928ல் எழுத்துக்கு 25 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்து வாங்கிய எஸ் எஸ் வாசனிடம் வேலைக்குப் போனவர் கல்கி எனும் புனைபெயரில் எழுதிய ரா கிருஷ்ணமூர்த்தி. 1. 8. 1941ல் சதாசிவம் கல்கி இதழைத் துவக்கியபோது கல்கி கிருஷ்ணமூர்த்தியும் அதில் போய் இணைந்தார். பத்திரிகையில் 25% பங்கு கல்கிக்கு. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம். கல்கியைத் தொடங்குவதற்கு எம் எஸ் சுப்புலட்சுமி 1941ல் சாவித்திரி படத்தில் ஆண் வேடத்தில் நாரதராக நடித்துப் பணம் வாங்கிக் கொடுத்தார்.

ராஜாஜி புனைந்த பக்திப் பாட்டின் பின்னணியில் ஒரு சோகமான முரணை உணர்கின்றனர் சிலர். ராஜாஜி தம் 37ஆம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைக் குட்டி லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது மகள் லட்சுமிக்கு 45 வயது. காந்திஜியின் மகன்தான் தேவதாஸ். இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்த வண்ணம் இருந்த அவரால் குறை ஒன்றும் இல்லை என்று எப்படி பாட முடிந்தது என்பதை அதிசயமாகப் பார்த்தவர் பலர்.

தமிழ்ப் பற்றில் கொஞ்சமும் சளைத்தவரல்லர் இளைஞர் ராஜாஜி. சேலம் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்தார். அறிவியல் சொற்களை அழகு தமிழில் சொல்ல 1916ல் தமிழ் அறிவியல் சொற்கழகத்தை நிறுவி பள்ளிகளில் தமிழிலேயே பாடம் சொல்லித்தர வேண்டும் என்று வலியுறுத்தினார். தனித்தமிழ் இயக்கத்தின் எதிரொலியாகக் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்களுக்கு அதிக இடந்தரவேண்டும் என்பதை வற்புறுத்த 1930களில் தமிழிசை இயக்கம் தொடங்கியபோது ஆரம்பத்திலேயே அதனை ஆதரித்துத் தமிழ் இசைச் சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டவர் ராஜாஜி. அவருடைய ஈடுபாட்டினால் கல்கியும் சதாசிவமும் எம் எஸ்ஸூம் தமிழிசை வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர். தமிழிசைச் சங்கம் என்ற பெயர் சூட்டக் காரணமாயிருந்தவரும் ராஜாஜிதான்.

ஒரு பெரிய சீர்திருத்தவாதி ராஜாஜி. மகளின் கலப்பு மணத்தை ஆதரித்து காந்திஜியின் சம்பந்தி ஆனவர். 1939ல் முதல் தடவை முதலமைச்சராக இருந்தபோது தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுக்கு வகை செய்யும் மசோதாவைக் கொண்டுவந்தவர். பொதுக்கிணறு, குளங்களில் தலித்துகள் தண்ணீர் எடுக்கவும், தலித்துகளும் மற்றவர்களும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பிரவேசிப்பதற்கும் பாடுபட்டவர். 1925ல் பஞ்சமன் (கீழ்ச்சாதி) ஒருவன் பக்திப் பரவசத்தில் தன்னையும் மறந்து ஏனைய பக்தர்களோடு திருச்சானூர் கோயிலுக்குள் நுழைந்த குற்றத்திற்காக திருப்பதி நீதிமன்றம் தண்டனை வழங்கியதைப் பத்திரிகையில் படித்துவிட்டுக் குமுறினார் ராஜாஜி. காந்திஜியின் அன்புக் கட்டளைக்கிணங்கி வக்கீல் தொழிலைப் புறக்கணித்து ஏழாண்டு ஆனபோதிலும் மறுபடியும் நீதிமன்றம் ஏறி அந்த ஏழை பஞ்சமனுக்காக வாதிட்டு அவனுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்து சமூக அநீதியை உடைத்தெறிந்தார்.

1954ல் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது ராஜாஜிக்கு வயது 76. அதன்பிறகு ராமாயணத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். கல்கி வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை சக்கரவர்த்தித் திருமகன் எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைச் சுவையாக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே சக்கரவர்த்தித் திருமகன் எனுந்தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அத்தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று. அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958ல் கிடைத்தது. ஒரு பழைய இதிகாசத்தைச் சுருக்கி எழுதியதற்குப் பரிசா என்று சிலர் வெகுண்டனர். அகாடமியின் போக்கைக் கண்டித்து சரஸ்வதி இதழில் க நா சுப்பிரமணியம், தொ மு சி ரகுநாதன், டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் முதலானோர் கண்டித்து எழுதியதை சுந்தர ராமசாமி ஏழாண்டுக்குமுன் நினைவுகூர்ந்தார். சாகித்திய அகாடமியின் விருது வரிசையில் மூன்றாவதாகப் பரிசு வாங்கியவர் ராஜாஜி. முதல் விருது 1955ல் ரா பி சேதுப்பிள்ளையின் தமிழின்பம் கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்தபோதே சலசலப்பு எழுந்தது. இரண்டாவது விருது ராஜாஜியின் சீடர் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு 1956ல் அலை ஓசை நாவலுக்காக வழங்கப்பட்டது. ராஜாஜியை மையமாக வைத்து எழுந்த சர்ச்சை ஓய்ந்தபிறகு மூன்றாண்டு கழித்தே நான்காவது விருது 1961ல் டாக்டர் மு வரதராசனின் அகல் விளக்கு நாவலுக்குக் கிடைத்தது.

ராமாயணத்தை ஏன் ராஜாஜி தேர்ந்தெடுத்தார்? 1951ல் மகாபாரதச் சுருக்கத்தையும் ராமாயணச் சுருக்கத்தையும் பாரதிய வித்யா பவனுக்காக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டபோதே தமிழிலும் அவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கலாம். பத்தாண்டுக்கு முன்பே ஆங்கில மகாபாரதம் 40 பதிப்புகளும் ராமாயணம் 34 பதிப்புகளும் போடப்பட்டு ஒவ்வொன்றும் பத்து லட்சம் பிரதிகளைத் தாண்டியது.

ஈ வே ராமசாமிப் பெரியார் (17.9.1879 – 24.12.1973) கூறுவதைக் கேளுங்கள். ‘ நான் இராமயணப் பாத்திரங்கள் (1930) என்று புத்தகம் போட்டு அதில் இராமன் அயோக்கியன், பித்தலாட்டக்காரன், வீரமில்லாதவன் என்று ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறேன். இதை மாற்றித் திருப்பவேண்டும் என்பதற்காக இராசகோபாலாச்சாரியார் சக்கரவர்த்தித் திருமகன் என்று 300 பக்கத்தில் ஒரு புத்தகம் போட்டு ஒரு ரூபாய் விலையில் விற்றார்கள். அரசு என்னடா என்றால் சக்கரவர்த்தித் திருமகன் எழுதியதற்காக சிறந்த நூல் என்று ஐயாயிரம் ரூபாய் பரிசு தருகிறார்கள்.’ மாயவரத்தில் 31.3.1959ல் பெரியார் பேசியது இது. ராமாயணத்தின் 13 கதாபாத்திரங்கள் மீது பெரியார் வீசும் குற்றச்சாட்டுகளின் பட்டியல்தான் அவருடைய நூல். சீதையை ராமன் கொடுமைப் படுத்தினான், சீதை கற்புள்ள பெண் அல்லள், ராவணன் மீது அவள் விருப்பம் கொண்டிருந்தாள், ராமன் மீட்டபோது சீதை மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தாள் என்றெல்லாம் பெரியார் எழுதியிருந்தார்.

பெரியார் 1919 முதல் 1925 வரை தமிழ்நாட்டுக் காங்கிரசில் இருந்தபோது செயலாளர், தலைவர் பதவிகளை வகித்தவர். 1922ல் திருப்பூர்க் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மனுதர்மத்தையும் ராமாயணத்தையும் எரிக்கவேண்டும் என்று யோசனை சொன்னார். ராமாயணத்தை எரித்ததாகக்கூட ஒரு தகவல். பெரியாரின் ஆப்த நண்பரான ராஜாஜி, பெரியார் மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால் கட்சித் தேர்தலில் அவருக்கு இன்னும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.

தமிழகத்தின் இருபெரும் துருவங்களான பெரியார், ராஜாஜி ஆகியோரின் மூலம் ராமாயணம் தமிழ்நாட்டு அரசியலிலும் தமிழர்களின் வாழ்க்கையிலும் பிரச்னைக்குரிய ஒரு புத்தகமாகிப் போனது. மகாபாரதச் சுருக்கம் வியாசர் விருந்து எனும் பெயரில் புத்தகமாக வந்தது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதே தாம் இந்திய மக்களுக்குச் செய்த தலையாய தொண்டு என்று அழுத்தமாக வருணித்தார் ராஜாஜி. கிருஷ்ணன் மகிமையைச் சொல்லும் பாகவதம் கதையை அடுத்தபடியாகக் கல்கியில் எழுதலாம் என்று சதாசிவம் சொன்னபோது அதில் பகவானின் லீலைகளும் அற்புதங்களும் மிகுதியாக இருப்பதால் அதைச் சுருக்கிச் சொல்வதில் நாட்டமில்லை என்று கருத்துரைத்தார் ராஜாஜி.

பாரதியாரை 1909ல் சந்தித்த ராஜாஜி வ உ சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பரும்கூட. 1919 ஏப்ரல் 13ஆம் தேதி அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் ஜாலியன்வாலாபாக் பூங்காவில் Rowlatt சட்டத்தின் கெடுபிடியை எதிர்த்து மக்கள் அமைதியாகக் கூடிக் கண்டனம் தெரிவித்தபோது, ராணுவம் அப்பாவி மக்களைத் தாக்கி சுமார் ஆயிரம் பேரைக் கொன்ற படுகொலையைக் கண்டித்து ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதேபோல பெரியாரும் ஈரோட்டு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். ரவீந்திரநாத் தாகூர்கூட சர் பட்டத்தைத் திருப்பியனுப்பிவிட்டார். காங்கிரஸ்வாதி எஸ் ஸ்ரீனிவாச ஐயங்கார் சென்னை மாகாணத்தின் Advocate General பதவியைத் தூக்கியெறிந்தார்.

திக்கற்ற பார்வதி எனும் ராஜாஜியின் நாவல் 14 ஜுன் 1974ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் திரைப்படமாக வந்து மத்திய அரசாங்க விருதையும் Filmfare விருதையும் வாங்கியது. லட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்தனர். மதுவின் தீமைகளை விளக்கும் அந்தப் படம் ராஜாஜி நடத்திய ஒரு வழக்கின் உண்மைக் கதை என்று ஸ்ரீகாந்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய ராஜாஜி அதற்காகவே 1929 ஆகஸ்ட் 29ல் விமோசனம் மாத சஞ்சிகையை திருச்செங்கோடு ஆசிரமத்திலிருந்து நடத்தினார். மதுவிலக்குக் கதைகள் நிறைய எழுதினார். கல்கி அப்பத்திரிகையின் உதவி ஆசிரியர். அவரும் குடியின் கொடுமையைச் சித்திரிக்கும் எட்டுக் கதைகளை எழுதினார். மொத்தம் 21 மதுவிலக்குக் கதைகள் விமோசனத்தில் வந்தன. 1930ல் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு ராஜாஜி ஒன்பது மாதச் சிறைத்தண்டனை பெற்றபோது மேலும் ஓர் இதழை மட்டும் கொண்டுவந்து பத்தாவது இதழுடன் (மே 1930) பத்திரிகையை முடித்துக்கொண்டார் கல்கி. முதல் இதழ் ஆயிரம் பிரதிகள் போனது. ஒன்பதாவது பத்தாவது இதழ்கள் நாலாயிரம் விற்றன.

1940ல் ராஜாஜியின் பரிந்துரையின் பேரில் ஆயிரம் தமிழ் நூல்களை தாகூர் நடத்திய சாந்தி நிகேதன் கல்வி நிலையத்துக்குக் கொண்டுபோய் வழங்கினார் கல்கி. ரசிகமணி டி கே சியும் உடன் சென்று வந்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்குக் கதைக் கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்து வைத்திருந்தார். வளர்ந்து வரும் சிறுகதையின் உத்தி முறைகளை அவர் ஒரு கட்டுரையில் மிக அழகாக விவரித்தார். அந்த அற்புதமான கட்டுரை எந்தத் தமிழ்நாட்டு சஞ்சிகையில் வந்தது என்று தெரியவில்லை. 1948ல் கோலாலம்பூரிலிருந்து தலைகாட்டிய தமிழ்ச்சுடர் மாத இதழ் அதன் முதல் ஜனவரி இதழிலேயே (பக்கம் 41-45) அக்கட்டுரையை எடுத்துப் போட்டு அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டது. தமிழ்ச்சுடரில் காணப்படும் தலைப்பு சிறுகதைப் பண்பு. ராஜாஜி சூட்டிய தலைப்பும் அதுதானா என்பது தெரியவில்லை. நவீன இலக்கிய வடிவம் ஒன்றை உள்வாங்கி அதனைப் புரிந்துகொண்ட விதம் வியப்பாக இருக்கிறது. தமிழ்ச் சிறுகதை பற்றிய விமர்சனக் கட்டுரைகளில் மிகச் சிறந்த ஒன்றாக இதனைக் கருதலாம்.

சிறுகதைப் பண்பு (ராஜாஜி)

(மலாயா எழுத்தாளர்கள் சிறுகதைத் துறையில் கவனம் செலுத்தவில்லை. பத்திரிகை வசதி இல்லாததையும் காரணமாகக் கூறலாம். ‘தமிழ்ச்சுடர்’ சிறுகதைத் துறையில் மலாயாவில் எழுச்சியை உண்டுபண்ணி விரைவில் சிறுகதைப் போட்டி ஒன்றும் ஆரம்பிக்கவிருப்பதால் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ராஜாஜியின் இச்சிறுகதை இலக்கணம் மிக உதவியாகவிருக்கும்.)

நீண்ட கதை எழுதுவதற்கு வேண்டிய பொறுமையும் அவகாசமுமில்லாமல் சுருக்கமாக எழுதப்பட்ட கதை சிறுகதை ஆகும் என்று யாராவது எண்ணினால் அது தவறாகும். சிறுகதை வேறு, பெருங்கதை வேறு. அளவு வித்தியாசம் மட்டுமல்ல; வகையே வேறு. ஆலமரம், புளியமரம் முதலிய மரங்கள் ஒரு ஜாதி, கிளைகளின்றி ஒரே தண்டாக வளரும் தென்னை, பனை, கமுகு முதலிய மரங்கள் வேறு ஜாதி, அதைப்போல் சிறுகதை வேறு, பெருங்கதை வேறு.

சிறுகதை நெடுங்கதையைப் போல் ஒரு நீடித்த காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்தரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்தரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்படமாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால் கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்சென்று தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும்.

சிறுகதையில் பிரதான பாத்திரங்கள் என்றும் பிரதானமல்லாத பாத்திரங்கள் என்றும் இரு வகையாக இருக்காது. எல்லாருமே முக்கியமாக இருக்கவேண்டும். எல்லாருடைய லட்சணங்களும் தூக்கிக் காட்டி நிற்கவேண்டும். கதையும் இரண்டு மூன்று கிளைகளாக வளர்ந்து ஆங்காங்கே பிணைவதும் பிரிவதும் நெடுங்கதைகளில் இருப்பதுபோல் சிறுகதைக்குப் பொருந்தாது.

சிறுகதையில் நிகழ்ச்சி அமைப்பு பல்வேறு இடங்களிலும் பல்வேறு காலங்களிலும் பரவிச் செல்லாமல் அனேகமாக நின்ற இடத்தில் நின்று முடியும். கதைப்போக்கும் விசையோடு செல்லும். பல விஷயங்கள் கதையில் அமைந்து நின்றாலும் கிளைப் பொருள்கள் சுருக்கமாகவும் சூசனை முறையிலும்தான் காணப்படும். நிகழ்ச்சியின் நடுப்பகுதியானது சிறுகதையில் சிறியதாகவே இருக்கும்.

சிறுகதையின் உயிர் அதில் விளங்கும் கருத்து. பல கருத்துக்கள் காடுபட்டுக் கிடக்காது. நெடுங்கதையில் அனேக கருத்துக்கள் தாண்டவமாடலாம். சிறுகதையில் திட்டவட்டமான ஒரு மனோவேகம் அல்லது கருத்தே இடம்பெற்றிருக்கும். மொத்தத்தில் சிறுகதை நாடகத்தையடுத்த கலைவகை என்று சொல்லலாம். சிறுகதையானது வாமனாவதாரத்தைப் போன்ற கலையுருவும் மனதைக்கவரும் அழகும் அவயவ அந்தமும் பெற்றிருக்கும். குறளுருவமானாலும் எதையும் மூன்றடிகளில் தாவியளக்கும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.

சிறுகதை எழுதுவது எப்படி? வாழ்க்கையில் நாம் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறோம். மனதை ஆட்டிக் குலைக்கும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அவற்றை உட்கொள்ளவேண்டும். உண்ட உணவானது செரித்து எவ்வாறு தசையும் ரத்தமும் நரம்புமாகிறதோ அவ்வாறு அந்த நிகழ்ச்சியை நம்முடைய உணர்ச்சியில் உருவு கொள்ளச் செய்ய வேண்டும். அது பிறகு சிறுகதை இலக்கணத்துடன் வெளியாகவேண்டும். கற்பனா சக்தி ஒரு பிறவிச் செல்வமா அல்லது பயிற்சிப் பொருளா என்ற கேள்வி உண்டு. எவ்வாறாயினும் எல்லாரும் ஓரளவு கற்பனா சக்தி படைத்திருக்கிறோம். அதற்குப் பயிற்சி தந்தால் வளரும். தராமல் போனால் அழிந்துபோகும். நன்றாக கண்ணையும் காதையும் செலுத்தி உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் கவனித்து வரவேண்டும். இதுவே கற்பனாசக்திக்குத் தரவேண்டிய உரம். கண்ணும் காதும் திறந்திருந்தால் மட்டும் போதாது. உணர்ச்சி பாய்ந்த முழு கவனம் செலுத்தவேண்டும். அன்பு வேண்டும். இரக்கம் வேண்டும். புஸ்தகங்களைப் படிப்பது போதாது என்று சொல்ல வேண்டியதில்லை.

சிறுகதையில் ஏதேனும் ஒரு கருத்து அல்லது மனோவேகம் பாய்ந்து ஓடாமல் வெறும் கதைக்கட்டு மட்டும் சாமர்த்தியமாக அமைந்துவிட்டால் போதாது. கருத்து என்றால் பிரசாரமல்ல. ஆத்திசூடியல்ல. அழகு, பெருந்தன்மை, அன்பு, இரக்கம், ஆனந்தம், வெறுப்பு, வருத்தம், கோபம், தாபம், ஆசை, கவலை முதலியவற்றுள் ஏதேனும் ஒரு வேகமோ வாழ்க்கைத் தத்துவமோ கதையில் பாய்ந்து வேலை செய்யவேண்டும். இதுவன்றி வெறும் நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் நிகழ்ச்சி நிரவல் ஜீவன் கொண்ட கதையாகாது. பல கருத்துக்கள் இங்குமங்கும் சிதறிக்கிடக்காமல் கதைக்கட்டுடன் கருத்துக்கட்டும் சிதைவின்றி அழகுடன் அமைந்து விளங்கவேண்டும். வியப்பு தரும் நிகழ்ச்சியமைப்பு இல்லாமலும் முதல் தரமான சிறுகதைகள் உண்டு. வியப்புச் சம்பவங்களில் கவர்ச்சி சக்தி உண்டு. ஆனால் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. வாழ்க்கை முறைக்கும் அனுபவத்திற்கும் விரோதமாக நிகழ்ச்சிகள் வெகுதூரம் சென்றால் படிப்பவர்களுடைய மனம் கதையில் படியாது. கதையின் கவர்ச்சி வேகம் வரவரப் பெருகிக் கொண்டு போகவேண்டும். தாழ்ச்சி கூடாது. இது சிறுகதைக்கு இன்றியமையாத இலக்கணம். ஆரம்பத்தில் நன்றாக அமைந்து பிறகு காரசாரமில்லாமலோ, அசம்பாவித முறையிலோ, அல்லது அர்த்தம் குறைந்தோ முடிவதை அனேக சிறுகதைகளில் பார்க்கிறோம். கவர்ச்சி வேகம் பெருகிக்கொண்டே போகவேண்டும்.

இறங்கு கதி கூடாது என்பது வெகு முக்கிய அம்சம். திடீர் திடீர் என்று எதிர்பாராத உண்மை நிகழ்ச்சிகள் தோன்றவேண்டுமென்பது தேவையில்லை. நன்றாக ஓடும் வண்டியின் வேகத்தைப்போல் தூக்கிவாரிப் போடாமலேயே கவர்ச்சிவேகம் விருத்தியடைந்து கொண்டு போகலாம். சிறுகதையில் அதிகச் சிக்கலான கதைக்கட்டு வேண்டியதில்லை. கூடாதென்றே சொல்லலாம். கதை எவ்வளவுக்கெவ்வளவு சரளமாகப் போகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது உண்மைத் தோற்றம் பெற்று வாழ்க்கைச் சித்திரமாக விளங்கும். கதையில் உள்ள சம்பாஷணையானது சம்பாஷணையாகவே இருக்க வேண்டும். சின்ன கட்டுரைகளாகவோ பிரசங்கங்களாகவோ இருக்கக்கூடாது. சந்தர்ப்பத்தை ஒட்டியும் பாத்திரத்தை ஒட்டியும் பேச்சு இருக்க வேண்டும். ஒரு உணர்ச்சிக் கொதிப்பால் எவ்வாறு பேச்சு வருமோ அதுதான் சிறுகதையில் அமையக்கூடிய சம்பாஷணை. நீண்ட சம்பாஷணையில் ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதைக் குறிப்பாக ஆசிரியரின் பேச்சாகவே சொல்லி விடுவது சிறுகதை முறை. பேச்சு பேச்சாகவே இருக்கவேண்டும். உண்மை என்றால் சுருக்கெழுத்து ‘ரிப்போர்ட்’ அல்ல. எழுத்து வேறு. பேசும்போது கேட்கமுடியும். அதையே எழுத்தில் பதிவு செய்தால் படிக்க முடியாது. கொச்சையும் ஆபாச மொழிகளும் ஓரளவு கலந்து பேச்சுக்கு உயிர் தருவது உண்டு. ஆனால் இது அளவுக்கு மிஞ்சிப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

வாழ்க்கையில் உள்ளதை உள்ளபடி சித்தரிப்பதுதான் இலக்கிய முறை. ஆனாலும் வாழ்க்கையில் மேன்மையும் உண்டு. பயன் படுவதுமுண்டு. பயனற்றதுமுண்டு. பொறுக்கி எடுத்துக் கொள்வதில்தான் எழுத்தாளர்களின் கலைத்திறமை நிற்கிறது. கலையில் உண்மை இருக்கவேண்டும். உண்மையின்றிக் கலை இல்லை. ஆனால் உண்மையெல்லாம் கலை ஆகிவிடாது. நிகழ்ச்சிகளையே பதிவு செய்துவிட்டால் இலக்கியமாகிவிடாது. எது கலைக்கு உதவும் என்பதைக்கண்டு அதைத் தனிப்படுத்தி இலக்கிய உருவத்தைத் தந்தால் அது கலையாகும்.

இதுவரையில் எழுத்தில் பதிவுபெறாத குடும்ப விஷயங்களை அச்செழுத்தில் பதிவு செய்தாலே படிப்போருக்கு வேடிக்கையாக இருக்கும். பல்வேறு பழக்க வழக்கங்களும் ஜாதிபேதங்களும் மலிந்து கிடக்கும் நாட்டில் எதுவும் வேடிக்கையாக இருக்கும். சில காலத்திற்கு இவை இலக்கியத் தோற்றம் காட்டும். பிறகு இவை பயனற்ற பேச்சாய்ப் போகும். கருத்தும் அழகும் பொருந்தி நின்றால்தான் உண்மையான இலக்கிமாகும்.

நல்ல கதை என்பதற்கு அடையாளம் அதில் யாரேனும் மனதைச் செலுத்திப்படித்தால் உள்ளத்தில் ஒரு அதிர்சிசி உண்டாகும். இதயத்தைக் கலக்கவோ ஆட்டவோ செய்யும். இது உண்மையேயாயினும், கலைஞானமும் பயிற்சியும் அடையாமல் கண்ணீர்ப் பெருக்க உண்டாகக்வே எத்தனித்தால், நல்ல கதை உண்டாகாது. நிகழ்ச்சிகள் முதிர்ந்து உருப்பெறாமல் உணர்ச்சி வேகத்தை உண்டாக்க முயன்றால் எழுததாளர் தோல்வி அடைவார். அது புகை போட்டுக் காயைப் பழுக்க வைப்பது போலாகும். எளிதில் ஒழுகும் கண்ணீர் கலைக்கு உதவாது. கலையில் காணவேண்டிய உணர்ச்சி, கம்பீரம், இயற்கை, உண்மை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் தன்மை இவை இருக்கவேண்டும். எவ்வித்திலாவது தனிப்பண்பு பெற்றதாயும் இருக்கவேண்டும். பண்பில்லாத பொருளுக்கு இலக்கியத்தில் இடமில்லை.

ஒரு சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அல்லது ஒரு கதையைப் படித்துக் கொண்டிருந்தால் வேறு யாராவது கண்டால் சிரிப்பார்கள் என்று வெட்கப்பட்டு மறைத்துக் கொள்ளவும் பார்க்கிறோம். நல்ல பொருளுக்கும் பயனற்றதற்கும் உள்ள பேதம் இதுவே. தனிப் பண்பு, கம்பீரம், பயன்படும் தன்மையும் இல்லாத பொருளைக் கொண்டு இன்பம் பெறுவதைப் பற்றி வெட்கப்படுகிறோம். இது நியாயமே.

காதல் கதைகள் எத்தகையவாயினும், வளரும் வயதில் உள்ள வாலிபர்கள் மனதைப் பற்றும். இந்தக் கதைகளைத்தான் விரும்புவார்கள் என்று அதற்காக எழுத்தைக் கெடுத்துக் கொண்டே போனால் இலக்கியம் சரியான முறையில் வளர்ச்ச அடையாது. கம்பீரமும் அழகும் பொருந்திய காதல் கதைகள் எழுதவேண்டும். ஆனால், வெறும் காமவிகாரங்களெல்லாம் நூலுக்குப் பொருளாகமாட்டாது. தமிழ் எழுத்தில் பதிவு பெறவேண்டிய விஷயங்கள் பெருந்தன்மை பெற்ற விஷயங்களாக இருக்க வேண்டும்.

பெருந்தன்மை பொருந்திய காதல் கதைகள் தோன்றவேண்டியதே. ஆனால் காதலின்றிக் கதையில்லை என்று எண்ணக்கூடாது. மனிதனுடைய சரீர தருமத்தில் வேண்டிய அளவுக்கு மேலேயே அமைந்திருக்கிற ஒரு வேகத்தை இலக்கியமாகக் கொண்டு பெருக்க வேண்டிய அவசியமில்லை. உலகத்திற்கு வேண்டியனவும், மலிந்து கிடக்காதனவுமான பண்புகள் பல இருக்கின்றன. அவற்றைக் கண்டெடுத்து இலக்கியத்தில் புகுத்தி மக்களிடையே பரப்ப வேண்டும். ஈரம், இரக்கம், தியாகம், அன்பு தைரியம் முதலிய பண்புகள் உலகத்தில் வேண்டிய அளவில் காணப்படவில்லை. அவற்றை வளர்க்க இலக்கியம் வேண்டும். வேண்டியதற்கு நூறு மடங்கு அதிகமாகக் காமவேகம் பிறவியுடன் பெற்றிருக்கிறோம். அதற்கு இலக்கிய விவசாயம் வேறு வேண்டியதில்லை.

முறை தவறிய காதலை எடுத்துக்கொண்டு சித்தரிப்பது எளிது. கதையும் கவர்ச்சியாக அமையும். ஆனால் அது மக்களுக்குப் பயன்படாது. காரண காரிய விதி வாழ்க்கையில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குவதற்காக நெறிதவறிய காதலைப்பற்றிக் கதைகள் எழுதப்பெறலாம். ஆனால் விஷம் கலந்து மருந்துகளைப்போல அது மிக்க ஜாக்கிரதையாகவே கையாளப்படவேண்டும்.

இப்பொழுது சில சிறுகதைகளைப் பார்த்தால் நண்பர்கள் தங்கள் மனைவிமார்களை கோஷாவில் வைத்துக் காப்பாற்ற வேண்டும்போல் இருக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசுவதே அபாயம் என்று இப்போது வெளியாகிவரும் கதைகளினால் ஏற்படும்போலிருக்கிறது. கதையில் ஒருத்தியை ஒருவன் சந்தித்ததுமே தருமத்திற்கு அபாயம் நேரிட்டுவிடுகிறது. இத்தகைய இலக்கியத்தை உண்டாக்குவது எளிது. விற்பதும் எளிது. கள்ளிப் பலகையில் தச்சு வேலை செய்வது எளிது. ஆனால் அப்படி செய்த சாமானில் உறுதி இல்லை. பயனும் இல்லை. வழி புரண்ட காதலைக் கொண்டு அவசரமாகத் தோற்றுவிக்கும் சிறுகதையிலும் இவ்வாறே பயனற்றவை என்பதோடு நிற்பதில்லை. இலக்கியம் என்று ஏமாற்றிச் சமூகத்திற்கு விஷம் ஊட்டுவது போலாகும்.

சிறுகதையின் லட்சணங்களைப் பற்றி எழுத ஆரம்பித்ததில் எங்கேயோ போய் முடிந்தது. ஆராய்ச்சியும் விமர்சனமும் செய்வது எளிது. கலைப்பொருள் ஒன்றை உண்டாக்குவது அரிது. எல்லா இலக்கண விதிகளையும் புறக்கணித்து அற்புதமான இலக்கியப் பொருள் தோன்றுவதுண்டு. வரப்பிரசாதத்தில் தோன்றிய இலக்கியம் அல்லது வேறு கலைப்பொருளை விமர்சனக்காரர்கள் அடக்கியாள முடியாது.

நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப்படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.

ஆங்கிலத்தில் உள்ள விமர்சனங்களைப் பழுதறப் படித்துவிட்டுத்தான் இந்தக் கட்டுரையைப் புனைந்திருக்கிறார் ராஜாஜி என்பதில் ஐயமில்லை. சிறுகதைக்குத் தேவையான தனி உணர்ச்சிக்கோலம், ஒருமை, செறிவு, திட்டமான ஒரு மனோவேகம், உண்மையனுபவம், மேன்மையான பெருந்தன்மையான கற்பனை, பிரசாரமற்ற தொனி, கவர்ச்சி வேகம், தெளிவான கதைப் பின்னல், பிரசங்கம் இல்லாத உரையாடல், குறிப்பால் உணர்த்தும் பாங்கு, ஓரளவு கொச்சை நடை, சம்பவத் தேர்வு, காதல் காமம் கண்ணீர் தவிர்த்த அம்சம் ஆகியவற்றை இக்கட்டுரை விளக்கியது.

ஆனால் ராஜாஜி எப்போதுமே ஒரு moralist. ஆகவே சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு moral இருக்கவேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். இந்தப் போக்கு ஆங்கிலக் கதைகளுக்குப் பொருந்தாது. அதனால் அவருடைய கதைகளில் பிரச்சார தொனி சற்றுத் தூக்கி நிற்கிறது என்று சொல்லிக் குறை காணும் விமர்சகர்கள் உண்டு.

தமிழ்ச்சுடர் மாதப் பத்திரிகை 1948ல் தை மாதம் தொடங்கியது. தமிழரசுப் பிரசுராலயம் 163 பத்து ரோடிலிருந்து இதனை வெளியிட்டது. நிர்வாக ஆசிரியர் வி மாணிக்கம். 83 கேம்பல் ரோடிலிருந்த மலாயன் பிரிண்டர்சில் இதழ் அச்சடிக்கப்பட்டது. ஒவ்வோர் இதழும் புத்தக அளவில் ஐம்பது அறுபது பக்கமாவது வந்திருக்கலாம். ஒரு தரமான பத்திரிகை வழக்கமாக எல்லாப் பத்திரிகைகளையும் போலவே அற்பாயுளில் மடிந்து போனது. தமிழ்ச்சுடர் வெளியாகப் போவதை அறிந்த ஓர் இலக்கிய ஆர்வலர் அதை மனப்பூர்வமாக வரவேற்றுச் செய்தி அனுப்பினார். ‘மக்களின் கொள்கைகளுக்கு மெருகிட்டு, நல்வழிப்படுத்தும் சக்தி உடையது சஞ்சிகைதான் என்ற அறிஞர் வாக்கை தமிழ்ச்சுடர் மெய்ப்பிக்கும் என விரும்புகிறேன். மலாய் நாட்டின் மணிக்கொடியாக ஒளிவீசி இங்கே புதுமைப்பித்தன்களையும், வ.ரா-க்களையும், கல்கிகளையும், குமுதினிகளையும் உற்பத்தி செய்ய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன். இலக்கியப் பைத்தியங்களின் ஆர்வத்தால் தமிழ்ச்சுடர் வார ஏடாக மலரும் நாளையும் எதிர்பார்க்கிறேன்.’ இந்தச் செய்தியை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெரும்பாலும் பைரோஜி நாராயணன் என்றே நினைக்கிறேன். மலாயாவின் மணிக்கொடி என்று தமிழ்ச்சுடரை வருணித்தவர் பைரோஜி என்பது எனக்குத் தெரியும்.

இதழாசிரியர் தி சு சண்முகம் போருக்கு முன்பு மலாயா வந்தவர். ஜப்பானியர் காலத்தில் கோலாலம்பூரில் ஜப்பானிய வானொலியின் தமிழ்ப் பகுதிக்குப் பொறுப்பாயிருந்து செய்திகளை ஒலிபரப்பியவர். போர் முடிந்த கையோடு 1945ல் இந்திய தேசிய ராணுவ வழக்கு எனும் 42 பக்க நூலை 1945ல் கொண்டு வந்தார். போர் ஓய்ந்த பிறகு, நேதாஜி நடத்திய இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்ற அதிகாரிகளையும் வீரர்களையும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் தேச விரோதிகளாகக் கருதி புதுடில்லியில் அவர்கள் மீது வழக்குப் போட்டு விசாரணை செய்து அலைக்கழித்த விவகாரம்தான் அது. இந்தியத் தலைவர்களின் இடையறாத நெருக்கடியால் அந்த வழக்கு பிறகு கைவிடப்பட்டது. அதன் விவரத்தையே தி சு ச சுருக்கமாக எழுதியிருந்தார். கோலாலம்பூர் எஸ் லாசர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அடிக்கப்பட்ட புத்தகம் அது. ஸ்காட் ரோடில் உள்ள இந்த அச்சுக்கூடத்தைப் பின்னர் தமிழ் நேசன் வாங்கியது.

1948ல் தமிழ்ச்சுடர் சஞ்சிகையில் தி சு சண்முகத்தைக் காண்கிறோம். அது ஒரு வருஷத்தைத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் 1949ல் ஏ ஆறுமுகனார் வெளியிட்ட கப்பலோட்டி மாத இதழில் தி சு ச ஆசிரியர் பணி ஏற்றிருக்கிறார். பைரோஜி நாராயணன் இதில் கட்டுரை, சினிமா பகுதிகளைக் கவனித்துக்கொண்டார். கப்பலோட்டி வி கனகசபை என்பவரின் பொறுப்பிலும் இருந்திருக்கிறது. பிறகு 1952ல் வெளிவந்த சோலை இதழில் தி சு சண்முகத்தின் கைவண்ணம் தெரிகிறது. 1950-51ல் மலாயா இந்தியர் காங்கிரசின் மூன்றாவது தலைவராகப் பொறுப்பேற்ற சைவப் பெரியார் கா ராமனாதன் சோலையை 1952 ஜனவரியில் ஆரம்பித்துவிட்டு ஊருக்குப் போன சமயம் தி சு ச அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பைரோஜி நாராயணனும் இதில் இருந்திருக்கிறார். எட்டு மாதத்தோடு சோலை முடிந்தது. தமிழ் நேசன் நடத்திய கதை வகுப்பு பாணியில் விமர்சனம் எழுதி சிறுகதையைப் போட்ட பத்திரிகை சோலை என்று பைரோஜி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தப் பாணி தமிழ்நாட்டில் வந்த சக்தி இதழில் முனைப்பாக இருந்தது. அதில் கடைசிக் கட்டத்தில் பணியாற்றிவிட்டுக் கோலாலம்பூர் வந்த சுப நாராயணன் கதை வகுப்பில் அறிமுகம் செய்த பாணிதான் அது. கதைகள் எல்லாம் இந்நாட்டுச் சரக்காய் இருக்க வேண்டும் என்பதைக் கதை வகுப்பு வலியுறுத்தியதைப் போலவே சோலை பத்திரிகையும் வற்புறுத்தியது.

தி சு ச மலாய் பேசுவது எப்படி எனுந்தலைப்பில் 36 பக்கத்தில் ஒரு சிறு நூலை 1953ல் வெளியிட்டார். கோலாலம்பூர் பத்து ரோடில் இருந்த மனோன்மணி விலாச புத்தகசாலை அதை வெளியிட்டது. பல பதிப்புகள் கண்ட அந்த நூல் அப்படியே இன்னமும் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருவது ஆச்சரியந்தான். தமிழ்-மலாய் அகராதி நூலையும் அவர் வெளியிட்டார். தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் நடத்திய சங்கமணி வார ஏட்டுக்கும் ஆசிரியராகப் போனார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். நான் 1963 ஜனவரியில் மலாயா / மலேசிய வானொலியில் சேர்ந்தபோது தி சு ச அங்கே தமிழ்ச் செய்திக்குப் பொறுப்பாயிருந்தார். அந்தப் பணியில்தான் அவர் ஓய்வு பெற்றார்.

ஓரளவு ஆங்கிலமும் அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகத் தமிழும் தெரிந்த குடியேறிகள் ஜப்பானிய ஆதிக்கத்திற்கு முன்னும் பின்னும் மலேசிய, சிங்கப்பூர்ப் பத்திரிகை உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம் அது. உள்ளூர் ஆசாமிகள் மிகவும் அரிது.

(சி வீ குப்புசாமி மட்டும் ஒரு விதிவிலக்கு. கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் 1915ல் பிறந்த அவர் தம்புசாமி தமிழ்ப் பள்ளியில் மூன்றாண்டு படித்துவிட்டு விக்டோரியா இன்ஸ்டிட்யூஷனில் 1932ல் சீனியர் கேம்பிரிட்ஜ் முதல் கிரேடில் தேர்ச்சி பெற்றுப் பெரியாரின் சுயமரியாதைக் கருத்தில் திளைத்துக் கடைசிவரை பகுத்தறிவாளராகத் திகழ்ந்தவர். முப்பதுக்கும் அதிகமான பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டவர். கடைசியாக நாற்பது வயதில் தகவல் இலாகாவில் Division One அதிகாரியாகச் சேர்ந்து 55 வயதில் ஓய்வு பெற்றார். அந்தக் காலத்திலேயே சீனியர் கேம்பிரிட்ஜ் Grade One வைத்துக்கொண்டு ஆர்வ மிகுதியால் தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றிய ஒரே நபர் இவராகத்தான் இருக்கக்கூடும். மற்றொரு சந்தர்ப்பத்தில் சி வீ கு-வைப் பற்றி விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.)

சிறுகதை பற்றிய சிந்தனைகள் ராஜாஜிக்கு முன்னதாகவே இங்குள்ள பத்திரிகைகளில் வந்ததுண்டு. 21.5.1947ல் தாமதமாக வெளிவந்த மூன்றாம் தமிழ் முரசு ஆண்டு மலர் முன்னுரையில் ஆசிரியர் கோ சாரங்கபாணி இளம் எழுத்தாளர்களின் போக்கைக் குறிப்பிட நேர்ந்தது. அந்தக் குறிப்பே ஒருவகையில் சிறுகதை விமர்சனந்தான். ‘மலாயாவில் உள்ள ஆரம்ப எழுத்தாளர்களுக்குத் தமிழ் முரசு ஆண்டு மலர் எப்போதும் ஒரு களமாக இருந்துவரும். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் என்பதைத் தமிழ் முரசு ஆண்டு மலர் பிரதிபலித்துக் காட்டும். ஆரம்ப எழுத்தாளர்கள் காதல் கதைகள் எழுதுவதில் அடங்காத ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். கதை எழுத விரும்புகிறவர்கள் பார்த்த சினிமாக்களையும், படித்த கதைகளையும் கருத்தில்லாமல் கொட்டி அளக்கக்கூடாது. கதைகளில் கருத்துகள் இருக்கவேண்டும். கதாபாத்திரங்களின் வாயிலாக மக்கள் மனதைத் தொடக்கூடிய அறிவுரைகள் வெளிப்பட வேண்டும். எழுத்து நடையில் அழகு மிளிர வேண்டும். சொற்றொடர்கள் சுவைக்கச் சுவைக்க இனிக்க வேண்டும். இந்தப் பரீட்சையில் தேறமுடியாத பல கதைகளை ஒதுக்கிவிட்டோம். எழுத்தாளர்கள் மன்னிப்பார்களாக’ என்று அன்றைய நிலவரத்தை ஒளிவு மறைவின்றி சுட்டிக் காட்டினார். ஆனால் பகுத்தறிவுக் கதைகளை மனத்திற்கொண்டு அறிவுரைகள் வெளிப்படவேண்டும் என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டு மலரில் 13 சிறுகதைகள் இடம்பெற்றன. கவிஞர் பாரதிதாசனின் முதற் சிறுகதையான எது வேண்டும் இந்தத் தமிழ் முரசு ஆண்டு மலரில்தான் வந்தது.

தமிழ் முரசு இதற்கு முன்னரேகூட சிறுகதை பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. சிறுகதை எழுத்தாளர் தி ஜ ர எழுதிய ‘வளரும் தமிழ் நடை: இந்தச் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ் முரசில் 5. 9. 1940ல் இடம்பெற்றது. முரசுக்காக எழுதிய எழுத்து என்று இதனைச் சொல்ல முடியாது. ஏனெனில் 4. 9. 1940ல் முரசில் வளரும் தமிழ் நடை: காந்தியும் மனித வாழ்க்கையும் எனும் தலைப்பில் வ. ரா. எழுதிய குறுங்கட்டுரை பிரசுரமானது. கீழே ஹனுமான் என்றுள்ளது. அக்கால எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்பளித்த ஹனுமான் 1938 ஜனவரியில் பழுத்த பத்திரிகையாளர் எம் எஸ் காமத் என்பவரால் தொடங்கப்பட்ட வார இதழ். பத்திரிகை நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவர் 191 நூல்களை வெளியிட்ட பதிப்புலகின் தந்தை என்று போற்றப்படும் சக்தி வை. கோவிந்தன் (1912 - 1966). அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி.

இந்தச் சிறுகதைகள் (தி. ஜ. ர.)

சிறுகதைகள் ஏராளமாய் மலிந்துவிட்ட ஆங்கிலத்தில்கூட, திட்டமாக சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்படவில்லை. விதவிதமான ரூபத்தில் சிறுகதைகள் பிறந்திருக்கின்றன; பிறந்தும் வருகின்றன. சில சமயம் ஒரு வியாசத்தின் தன்மையைக்கூடச் சிறுகதைகள் அடைந்துவிடுகின்றன. நடைச் சித்திரமாகவும், பாத்திர வர்ணனையாகவும், விசித்திரக் கற்பனையாகவும் பல்வேறு ரூபம் பெற்ற சிறுகதைகள் உண்டு. ராஜா, மந்திரி, ஜமீந்தார் அவசியமில்லை. ராஜாக்களைவிட ஏழை எளிய ஜனங்கள்தான் மிக அதிகம். இரவு பகல் 24 மணி நேரமும் மனிதன் காதலையே சிந்தித்துக் கொண்டிருக்கவுமில்லை. மனிதனுக்குக் காதலைத் தவிர வேறு உணர்ச்சிகளே கிடையாவா? கோபமும் ரோஷமும் தீரமும் அச்சமும் மகிழ்ச்சியும் சோகமும் வியப்பும் ஆனந்தமும் எத்தனை எத்தனையோ விஷயங்களில் ஏற்படுகின்றனவே – அவற்றையெல்லாம் காட்டக்கூடிய கதைகளை எழுதக்கூடாதா என்ன? நவரச பரிதமான பலவிதக் கதைகளையும் நாம் எழுதவேண்டும்; படிக்கவும் வேண்டும். ஆற்றங்கரை, நீலக்கடல், மஞ்சள் வெயில், செவ்வானம், பசுஞ்சோலை, இளந்தென்றல் போன்ற இடம், போதுகளுக்கே திரும்பத் திரும்ப தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், போரடி, நடவு வயல், உலைக்களம் இவை போன்ற கால தேசங்களை நாம் பயன்படுத்தலாகாதா? நமது கதையில் நமது பழக்க வழக்கங்கள் நிறைந்திருக்க வேண்டும்; நமது நடையுடை பாவனைகள் நிரவியிருக்க வேண்டும். தேசீய மணம் கமழவேண்டும். இதைவிட்டு அன்னிய நாட்டுப் பழக்க வழக்கங்களைப் புகுத்தி எழுதுவது அசம்பாவிதமாகும்! அதனால் பயனுமில்லை. இப்படிச் செய்வதைவிட அயல்நாட்டுச் சிறந்த கதைகளை மொழிபெயர்ப்பதே மேலாயிருக்கும். கதைகள் ஒவ்வொன்றிலும் தெள்ளத் தெளியப் பிரச்சாரம் இருக்க வேண்டுமென்று எண்ணுவதும் தவறு. தற்காலத்தில் பிரச்சாரத்திற்கும் தேவை இருக்கிறது என்பது வாஸ்தவந்தான். ஆனால் என்றும் மங்காப் புகழுடன் பொலியக்கூடிய கலைச்சுவை நிரம்பிய சௌந்தர்யமான கதைகளும் வேண்டும். அவைதான் திரும்பத் திரும்ப எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத தெள்ளமுதாயிருக்கும்.

ராஜாஜியின் சிந்தனையும் எழுத்து நடையும் தி ஜ ர-வின் நடையிலிருந்தும் விஷயத்திலிருந்தும் எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டு உணரலாம்.

வை கோவிந்தன் ஆரம்பித்த சக்தி இதழுக்கு ஆசிரியராக வந்தவர் தி ஜ ரங்கனாதன். தி ஜ ர 1948ல் மஞ்சரி–க்கு ஆசிரியராகப் போய் 25 ஆண்டுகள் அங்கிருந்தார். சுப நாராயணன், ரகுனாதன், கு அழகிரிசாமி ஆகியோர் பிறகு சக்தியை நடத்தினர். சக்தி 1939 ஆகஸ்ட் முதல் 1954 தொடக்கம் வரை வெளிவந்த மிகத் தரமான மாத இதழ். வை கோவிந்தன் சக்தி தவிர மங்கை, அணில், பாப்பா, கதைக்கடல் போன்ற இதழ்களையும் நடத்தினார். அணிலுக்கு ஆசிரியராக இருந்தவர் தமிழ்வாணன்.

சக்தி மாத இதழின் தீவிர தமிழுணர்வுக்கு உதாரணமாக, மலாயா சம்பந்தப்பட்ட அதன் 1949 மே மாதத் தலையங்கத்தைக் கூறலாம். மலாயாத் தொழிலாளர் தலைவர் எஸ் ஏ கணபதி கம்யூனிஸ்டுத் தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பேரில் கோலாலம்பூர் புடு சிறையில் 1949 மே 4ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24. உணர்ச்சிமயமான அந்தத் தலையங்கம் இதோ.

‘சமீபத்தில் மலேயா தொழிலாளர் தலைவர் ஸ்ரீ கணபதி தூக்கிலிடப்பட்ட செய்தி இந்தியாவுக்கே அவமானம் தருவதாகும். ஒரு இந்தியப் பிரஜையை, தஞ்சாவூர்க்காரனை ஒரு தமிழனை சிலாங்கூர் சுல்தான் என்னும் ஒரு சிறிய நாட்டுச் சுல்தான் தூக்கேற்றுவதைத் தடுக்காமல் இந்தியா வாளாவிருந்துவிட்டது. இது விஷயத்தில் இந்தியா தலையிட்டு தண்டனையைக் குறைத்திருக்கலாம். 1916ம் வருஷம் நடந்த (அயர்லந்து) ஈஸ்டர் கலகத்தின்போது கைதியான டிவேலராவுக்கு (Eamon de Valera) பிரிட்டிஷ் சர்க்கார் தூக்குத் தண்டனை விதித்தது. அவர் ஒரு அமெரிக்க பிரஜை என்று கூறி அமெரிக்க சர்க்கார் குறுக்கிட்டதால் டிவேலராவின் தண்டனை தீவாந்தர தண்டனையாக மாறிற்று. சிலாங்கூர் சுல்தானுக்குப் பின்னிருந்து திரை மறைவில் வேலை செய்வது மலேயா ரப்பர் தோட்டத்து வெள்ளை முதலாளிகள்தான். வெள்ளையர்களின் துணையிருக்கிறது என்ற தைரியத்தில்தான் சிலாங்கூர் சுல்தான் இந்தியா போன்ற மகத்தான தேசத்தையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீ கணபதியைக் கொன்று விட்டார். பிரிட்டிஷார் நம்முடன் உறவு கொண்டாடி இந்தியாவைக் காமன்வெல்த்தில் சேர்க்கும் அதே வேளையில், இன்னொருபுறம் ஒரு இந்தியரின் உயிர் பலியாகிப் போனது வெள்ளையர்களின் பரம்பரைக் குணத்துக்கு அத்தாட்சியாகும். ஸ்ரீ கணபதியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இந்தியாவின் மலேயா ஸ்தானிகர் ஸ்ரீ திவி முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும் அதையும் மீறி, தூக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட்டார் சிலாங்கூர் சுல்தான். ஆகவே, இந்தியா இது விஷயத்தில் பலமான முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்றே ஆகிறது. இதனால் இந்தியாவுக்கு அன்னிய நாடுகளில் ஸ்தானிகர் காரியாலயங்கள் நியமிப்பதிலும் அர்த்தமில்லை. ஸ்ரீ கணபதியின் தண்டனையைக் கண்டித்து உலகத் தொழிலாளர் சங்கங்களும் இந்தியத் தலைவர்களில் சிலரும் கண்டித்திருக்கிறார்கள். ஸ்ரீ கணபதிக்கு நேர்ந்த கதி, அவரைப்போன்ற இன்னொரு தொழிலாளர் தலைவரான ஸ்ரீ சாம்பசிவத்துக்கும் காத்திருக்கிறது. இந்திய சர்க்கார் கணபதி விஷயத்தில் அசிரத்தையாயிருந்ததுபோல சாம்பசிவம் விஷயத்திலும் அசிரத்தை காட்டாமல் உடனே தலையிட்டு இந்தியரின் மானத்தையும் பிரஜா உரிமையையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறோம்.’

சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்தின் தலைவர் எனும் முறையில் சிலாங்கூர் சுல்தான் மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டதையே சக்தி தலையங்கம் சாடுகிறது. கணபதி தூக்குமேடை ஏறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருடைய தம்பி எஸ் ஏ சற்குணம் சிங்கப்பூரிலிருந்து வந்து புடு சிறையில் அண்ணனைப் பார்த்துப் பேசினார். செம்பருத்தி ஜனவரி 2010 இதழில் தஞ்சாவூர் பரக்கல் கோட்டை கிராமத்தில் சற்குணத்துடன் நிகழ்த்திய சந்திப்பின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ‘நான் செய்த தொண்டிற்குத் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது’ என்று அண்ணன் தம்பியிடம் சொன்னதாகத் தெரிகிறது. 1947ல் புதுடில்லியில் நடைபெற்ற ஆசியத் தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் கணபதி கலந்துகொண்டார். இந்தியப் பிரதமர் நேருவும் லண்டனில் இந்தியத் தூதராகவிருந்த வி கே கிருஷ்ணமேனனும் கணபதி விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட்டுத் தண்டனையைக் குறைக்குமாறு கேட்டிருந்தனர். அது பலிக்கவில்லை.

தமிழ் முரசின் ஆதரவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு நிதி திரட்டும் முயற்சி தொடங்கியது. ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பதவிக்குப் போட்டி கடுமையாக இருந்தது. கணபதி போட்டியிட்டார். அவரை எதிர்த்தவர் எழுத்தாளர் ந பழனிவேலு. கணபதி தோற்றுப்போனார்.

கணபதி தூக்கில் தொங்கிய தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக (3. 5. 1949) செல்வாக்கு பெற்ற மற்றொரு தொழிற்சங்கத் தலைவர் பி வீரசேனன் என்பவரை நெகிரிசெம்பிலானின் ஜெலுபு மாவட்டத்தில் Pertang இடத்திற்கு அருகில் கூர்காப் படை மறைந்திருந்து தாக்கி சுட்டுக் கொன்றது. உயிர் பிரிந்தபோது முப்பது வயதுகூட நிரம்பவில்லை அந்தத் தொண்டருக்கு.

சாம்பசிவம் என்ற 25 வயது தொழிற்சங்கவாதி 1948 செப்டம்பர் மாதம் ஜோகூரில் ஒரு கைத்துப்பாக்கியும் பத்து தோட்டாக்களும் வைத்திருந்த குற்றத்திற்காகக் கைதானார். விசாரணையின்போது தோட்டாக்கள் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்படாமல் போனது. துப்பாக்கி வைத்திருந்த குற்றத்தின் பேரில் அவர் மறுபடியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். மலாயாவிலிருந்து கிரிமினல் வழக்குகளை லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால் மலாயா சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜான் ஏ திவி அவசரம் அவசரமாக சிங்கப்பூருக்கு வந்து சாம்பசிவத்துக்காக மேல் முறையீடு செய்தார். பிரிவி கவுன்சிலும் வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்குக்கு ஆன செலவை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 1950 மார்ச் 30ஆம் தேதி சாம்பசிவம் குற்றவாளி அல்ல என்று பிரிவி கவுன்சில் தீர்ப்பளித்தது. பலவித சோதனைகளைக் கடந்து சாம்பசிவம் விடுதலை ஆனார். இந்த வழக்கு ஒரு விசித்திரமான வழக்கு என்ற முத்திரையைப் பெற்று மற்ற பல வழக்குகளில் உதாரணமாகக் கையாளப்பட்டு வருகிறது.

சாம்பசிவம் விவகாரத்தால் தமிழ்நேசன் 1949ல் நீதிமன்ற அவதூறு வழக்கில் சிக்கி அபராதம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. தொழிற்சங்கவாதிகளான கணபதியையும் வீரசேனனையும் பலிகொடுத்த தமிழ்ச் சமுதாயம் சாம்பசிவம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து அவருடைய விடுதலைக்கு பாடுபட்டது. சக்தி இதழைப் போலவே தினமணி நாளேடும் சாம்பசிவத்தின் விடுதலைக்காகப் பரிந்து பேசும் எண்ணத்தில் 3 ஜுன் 1949ல் ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை எடுத்துப்போட்டுத் தமிழ்நேசன் 9 ஜுன் 1949ல் ஒரு கட்டுரை பிரசுரித்தது. ‘சாம்பசிவத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற அக்கட்டுரை, 5 மே 1949ல் தூக்கிலிடப்பட்ட கணபதியின் விவகாரத்தையும் குறிப்பிட்டு, அவருக்கு நியாயமான முறையில் நீதி கிடைக்கவில்லை என்ற தொனியில் எழுதியது. அரசாங்கம் அதைக் கடுமையாகக் கருதியது. நீதிமன்ற அவமதிப்புக்கு அக்கட்டுரை இடந்தருவதாகக் குற்றஞ்சாட்டி தமிழ்நேசனின் கூட்டு உரிமையாளர் எம் மலையாண்டி செட்டியார், ஆசிரியர்-பிரசுரகர்த்தா-வெளியிடுவோர் ஆகிய ஆதி நாகப்பன் இருவர் மீதும் 2 ஜுலை 1949ல் வழக்கு தொடுத்தது அரசாங்கம். மற்றொரு கூட்டு உரிமையாளர் எஸ் ஆர் என் பழநியப்பன் இந்தியாவுக்குப் போயிருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பவில்லை.

கோலாலம்பூரின் புகழ்பெற்ற வழக்குரைஞர் ஆர் ரமணி அவர்களுக்காக வாதாடினார். உண்மையில் செட்டியாரும் நாகப்பனும் அந்தக் கட்டுரைக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாக ரமணி தெரிவித்தார். அதே நேரத்தில் அந்தக் கட்டுரையை அதுவரை நிகழ்ந்திருக்கும் சம்பவங்களின் ஒட்டுமொத்தமான பின்னணியில் படித்தால் அதில் அவதூறுக்கு இடமிருக்காது என்று அவர் எடுத்துரைத்தார். இருப்பினும் கணபதியின் வழக்கு முறையாக நடைபெற்று, தண்டனை முறையீடு செய்யப்பட்டு, மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு, சிலாங்கூர் சுல்தானின் மன்னிப்பும் மறுக்கப்பட்டு எல்லா வழிகளும் அடைபட்ட பின்னரே கணபதி தூக்கு மேடை ஏறியதாக அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் S Foster-Sutton வாதித்தார். நீதிபதி Spenser Wilkinson பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அபராதம் மட்டும் விதித்தார். மலையாண்டி செட்டியாருக்கு 750 வெள்ளியும் ஆதி நாகப்பனுக்கு 1,000 வெள்ளியும் அபராதம். செலவுத்தொகையாக அவர்கள் 250 வெள்ளி தரவேண்டும் என்றும் 20 ஆகஸ்ட் 1949ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

அமைச்சர் பதவி வரை உயர்ந்த ஆதி நாகப்பன் ஒன்பது வயதில் ஒரு வார்த்தை ஆங்கிலம் அறியாமல் 1935ல் பினாங்கு வந்தார். புக்கிட் மெர்டாஜம் High School-ல் பயின்றார். ஜப்பானிய ஆதிக்கம் கல்விக்குத் தடையானது. சில பத்திரிகைகளில் பணியாற்றினார். சண்டை முடிந்து 1947ல் 22ஆம் வயதில் கோலாலம்பூருக்கு வந்து செட்டியார் இருவரும் நடத்திய தமிழ்நேசனின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1948ல் தமிழ்ச்சுடர் ஏட்டில் கற்பழிக்கப்பட்ட மனைவி எனும் கதையை ஆதிநாகப்பன் எழுதியிருந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த அவலத்தையும் மனைவியின் கற்பு இக்கட்டான சூழ்நிலையில் பங்கமடைந்தால் கணவன் அவளை மீண்டும் ஏற்று வாழ்வளிக்க வேண்டும் என்ற காந்திஜியின் தத்துவத்தையும் புலப்படுத்திய கதை அது.

1948 ஏப்ரல் மாதம் ஏழு பத்திரிகையாளரில் ஒருவராக மலாயாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று ஒரு மாதம் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார் நாகப்பன். அவருடன் சென்ற எழுவரில் ஒருவர் உத்துசான் மெலாயுவைப் பிரதிநிதித்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் யுசுப் பின் இஷாக். பத்திரிகைத்துறை டிப்லோமா பயிற்சி பெற மீண்டும் 1950ல் லண்டன் சென்றார்.

கதை வகுப்பு நேசனில் தொடங்குவதற்கு ஒருவகையில் ஆதிநாகப்பனே காரணம் எனலாம். ‘மலாயாவில் தமிழ் எழுத்தாளர் இல்லையென்ற கருத்துப்பட முன்னாள் தமிழ்நேசன் ஆசிரியர் ஆதி நாகப்பன் 1949 வாக்கில் தலையங்கம் எழுதினார். அவர் லண்டன் சென்றபிறகு நானும் வானம்பாடியுஞ் சேர்ந்து 1950-51ல் எழுத்தாளர் வகுப்பு நடத்தி மணியான எழுத்தாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். வகுப்புத் தொடங்கியபொழுது தமிழ் முரசு தலையங்கமெழுதி, மலாயாவில் எழுத்தாளர் இல்லை என்ற கருத்துப்பட நையாண்டி செய்தது’ என்று கதைவகுப்பின் ரிஷி மூலத்தைக் கந்தசாமி வாத்தியாராகிய சுப நாராயணன் 1956ல் மலாயாத் தமிழ் எழுத்தாளர் என்ற சங்கமணி மே தின மலர்க் கட்டுரையில் அம்பலப்படுத்தினார். வானம்பாடியாக வலம் வந்தவர் பைரோஜி நாராயணன்.

1952 வரை நேசனில் பணியாற்றிவிட்டு மறுபடியும் லண்டனுக்குப் போய் சட்டம் பயின்று திரும்பி வந்து டத்தோ சர் Clough துரைசிங்கம் நிறுவனத்தில் பங்காளியாக இருந்துவிட்டு 1957ல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலந்தொட்டே மலாயா இந்தியர் காங்கிரசில் முனைப்பாக இருந்து 1949ல் 24 வயதில் சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தலைவர் ஆனார். 1959ல் மிக இளம் வயதில் (35) செனட்டர் பதவியில் அமர்ந்து மிகச் சிறப்பான பணிகள் ஆற்றி மஇகா-வின் துணைத் தலைவர் ஆகி, துணை சட்ட அமைச்சராக உயர்ந்து முழு அமைச்சராகவும் முன்னேறிய தருணத்தில் 1976 மே 9ல், 52ஆம் வயதில் காலமானார். முழு அமைச்சராகி இரண்டு மாதமே ஆனது. பாராட்டுக் கூட்டங்கள் முடிந்தபாடில்லை. அத்தகைய கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுத் திடீரென்று உயிர் பிரிந்தது. மஇகா-வுக்கே காலமெல்லாம் உழைத்தவர் ஜானகி தேவரைக் கலப்பு மணம் புரிந்துகொண்ட ஆதி நாகப்பன் செட்டியார். அவர் புதல்வர் ஈஸ்வர் நாகப்பனோ 2008ல் ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார். அறுபது வயதைக் கடந்த வழக்கறிஞரும் கலைப்பிரியருமான ஈஸ்வர் சிங்கப்பூரில் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஈஸ்வரின் மனைவி குமாரி நாகப்பன் ஓவியக்கலையில் முதுநிலைப் பட்டதாரி. அழகான சித்திரங்களை வரைந்துகொண்டு அவனி முழுதும் சுற்றி வரும் அற்புதக் கலைஞர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உளர். #

No comments: