Thursday, December 9, 2010

கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களும்


எழுத்தாளர்களுக்குக் கதைகளின் உத்தி முறையை எடுத்துக் காட்ட இரண்டு நாராயணர்களும் 1950-1951ல் தமிழ் நேசனில் ஏழெட்டு மாதத்திற்கு நடத்தியது கதை வகுப்பு. பெயர்தான் கதை வகுப்பே தவிர கதையோடு மற்ற எல்லா இலக்கிய வடிவங்களும் வகுப்பில் பேசப்பட்டன. வகுப்பை நடத்தியவர் 37 வயது சுப நாராயணன் ஆகிய கந்தசாமி வாத்தியார். அவருக்குத் துணையாக இருந்தவர் 19 வயது பைரோஜி நாராயணன் ஆகிய வானம்பாடி.

தமிழ்நாட்டின் சக்தி இதழில் பணியாற்றிவிட்டு சிங்கப்பூர்-மலாயாவுக்கு வந்தவர் சுபநா. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களான தி ஜ ர, புதுமைப்பித்தன், ரகுநாதன், மஞ்சேரி ஈஸ்வரன், வல்லிக்கண்ணன், லா ச ரா, தேவநேயப் பாவாணர், மு வரதராசன் முதலானோருடன் நேரில் உறவு கொண்டாடியவர் அவர்.

சிங்கப்பூர் வானொலியில் தமிழ்ச் செய்தி வாசித்திருக்கிறார். கோலாலம்பூர் போய் போலீஸ் இலாக்காவில் எழுத்தராகப் பல ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்றவர். சக்தி போன்ற ஒரு சஞ்சிகையில் பணியாற்றுவதற்குரிய ஆற்றல் படைத்தவர். எழுத்துத் துறையில் அனுபவம் வாய்ந்தவர். படைப்பாளி என்பதைவிடவும் ஒரு திறமையான விமர்சகர். தமிழ்நாட்டில் ஆரியப் புல்லுருவி, மதம்பிடித்த மடாதிபதிகள், சீனமும் சீன மக்களும், வாழப்பிறந்தோம் என்ற கட்டுரை நூல்களும், கவிதை, கலை, விமர்சனம் என்ற விமர்சன நூலும், கற்பளித்த கன்னி என்ற நாவலும் அவர் எழுதி வெளிவந்தன. இங்கு வந்த பின்னர் பேசத் தெரியுமா, எண்ணமும் எழுத்தும் என்ற நூல்களைக் கொண்டு வந்தார். 1945ல் வெளிவந்த ஜனநாயகம் நாளிதழில் எண்ணச் சுழலில் எனும் தலைப்பில் செய்திகள் பற்றி விமர்சனம் செய்தார். தைப்பிங்கில் மா செ மாயதேவன் அக்டோபர் 1955ல் கையெழுத்துப் பிரதியாக ஆரம்பித்து ஜுன் 1956ல் அச்சிட்டு வெளிப்படுத்திய திருமுகம் மாத இதழில் மீனாவின் கல்யாணம் நாடகத்தைத் தொடராக எழுதினார்.

வானொலிக்கு நாடகங்கள் அனுப்பியிருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக் குறை நிறைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒலிக்கலையில் ஓராண்டு என்ற பெயரில் 1960களின் முற்பகுதியில் வானொலி நடவடிக்கைகளின் ஓராண்டுக் கண்ணோட்டத் தொகுப்பு நிகழ்ச்சி மலேசிய வானொலியில் ஒலியேறிய நேரம். நான் அதை ஒரு முறை தயாரித்தேன். தமிழ் நிகழ்ச்சிகள் அப்போது மத்திம அலை வரிசையிலும் சிற்றலையிலும் போகும். பிற்பகலில் மூன்று மணிக்குப் பிறகும் இரவில் ஏழரை மணிக்குப் பிறகும் சிற்றலையில் மட்டுமே ஒலிபரப்பு. சரியாகக் கேட்க முடியாது. ஒரே ‘கரா முரா” ரீங்காரந்தான். தமிழுக்குக் கிடைத்த மரியாதை அது. ஒரு விடுமுறை தினத்தில் பிற்பகலில் மூன்று மணிக்கு என்று நினைக்கிறேன், ஒலிக்கலையில் ஓராண்டு நிகழ்சசிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஒரு பயலும் அதைக் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. விசையைத் திருப்பி சரியான மீட்டருக்குக் கொண்டு வந்து நிறுத்தி ஆஹா தமிழ் வந்துவிட்டதே என்று சந்தோஷப்பட்டு ரேடியோவை விட்டுக் கொஞ்சம் விலகினால் போதும். மறுபடியும் கரா முரா விவகாரந்தான். ஒலிபரப்பு கேட்கமுடியவில்லை என்ற புகார்க் கடிதங்கள் நிறைய வந்துகொணிடிருந்தன. அப்படியிருந்தும் தமிழ் ஒலிபரப்பை அரை குறையாகக் கேட்டு ரசித்தனர் தமிழ் மக்கள் ! தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சி மேற்பார்வையாளர் மொஹமட் ஹனீப். அவர்தான் நிகழ்ச்சிப் பட்டியலைத் தயாரிப்பார். அது ஒன்றுதான் அவருடைய வேலை. மத்திம அலைக்கு என் நிகழ்ச்சியை மாற்றிவிடுங்களேன் என்றேன். மத்திம அலை ஒலிபரப்பு நேரம் குறைவு. அதுவும் என் நிகழ்ச்சி ஓரு மணி நேரம். அவ்வளவு நேரம் மத்திம அலையில் தர முடியாது என்று மாற்றிவிட மறுத்துவிட்டார். மனக்குறையோடு அவருடைய அறையைவிட்டு வெளியே வந்தேன். ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக உயிரைவிட்டுத் தயாரிக்க வேண்டும். எதைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பது என் பாணி. உருப்படாத spot என்பதற்காக அலட்சியம் செய்யவில்லை. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அற்புதமாகச் செய்து முடித்தேன். எனக்குப் பரம திருப்தி. நிகழ்ச்சியும் ஒலியேறிவிட்டது. சில நாள் கழித்து எனக்கு அலுவலகத்தில் போன் வந்தது. மறுமுனையில் சுப நாராயணன். ‘உன் programme-மை BBCயிலே போடலாம். போ’ என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு மிகக் குறைவாகவே பேசியபின் போனை வைத்துவிட்டார். என்னுடைய ஆத்ம திருப்திக்காக நான் ரசித்துத் தயாரித்த நிகழ்ச்சி அது. மோதிரக் கையால் குட்டா அல்லது வசிஷ்டர் வாயால் பிரமரிஷி பட்டமா?

கவர்ச்சியான பரிசுத்தொகை கொண்ட ஆங்கில நாவல் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறார் சுபநா. மொத்தமே மூன்று பேர்தான் அதற்கு எழுதினர் என்று நினைக்கிறேன்.

கதை வகுப்பு முடிந்துவிட்டதால் மறுபடியும் அதைப்போன்று ஒரு வகுப்பு தமிழ் முரசில் நடத்தவேண்டும் என்ற அரிப்பு கந்தசாமி வாத்தியாரின் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்துள்ளது. பேரா மாகாணத் தோட்டத் தொழிலாளர் சங்கம் 25 டிசம்பர் 1951ல், பண்டிட் எஸ் முத்துசாமி, பண்டிட் கிருஷ்ணதாசன் ஆகியோரை முறையே ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் கொண்டு, ஈப்போவில் தொடங்கிய நாகரிகம் மாத ஏட்டில் அந்த அரிப்பைக் கொட்டியிருக்கிறார் சுபநா. மார்ச் 1952 இதழில் வந்த செய்தி.

மலாயாத் தமிழ் எழுத்தாளர்கட்கு ! உங்களுக்கு ரசிக்கத் தெரியுமா? இதோ அழைக்கிறார் -- கோலாலம்பூர் கந்தசாமி வாத்தியார் ரசிக்க வாரீரோ.

‘மலாயாத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கூட்டுவது சம்பந்தமாக முரசுக்கு எழுதுங்கள். இதற்கிடையில் ரசனை வகுப்பு ஒன்றை முரசில் தொடங்கி நடத்த எனக்கு ஆசை. அதைச் செய்தால் நீங்கள் வகுப்புக்கு ஆஜராகிப் பணி புரிவீர்களா? முரசில் பதில் தாருங்கள்’ என்று வாத்தியார் எழுதினார். கோ சாரங்கபாணியையும் அவருடைய முரசையும் பலபடப் பாராட்டி அவருக்கே கடிதம் அனுப்பினார் வாத்தியார். அதற்குக் கோ சா, ‘பொருத்தமில்லாமல் இருக்கிறது. முரசு எளியவன் பத்திரிகை. இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. நேர் நடையில் விண்ணப்பமாக எழுதியனுப்பினால் தக்கபடி பிரசுரிக்கிறேன்’ என்று மரியாதையுடன் பதில் போட்டார்.

அதன் பிறகுதான் தமிழ் முரசில் 19 ஏப்ரல் 1952 முதல் 28 ஜுன் 1952 வரை ரசனை வகுப்பு தொடங்கினார் சுபநா. கந்தசாமி வாத்தியார் எனும் பெயரிலேயே அதை நடத்தினார். அவருக்குத் துணையாக இருந்தவர் தும்பி எனும் புனைபெயரில் பறந்துகொண்டிருந்த வை திருநாவுக்கரசு. மேற்பார்வை முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி. கதை வகுப்புப் பாணிதான் அது. ஆயினும் போனியாகவில்லை. அண்ணாதுரை அறிஞரா என்ற சர்ச்சை எழுந்தது. வாசகர்கள் அறிஞரே என்று எழுதி விலாசித்தள்ளி விட்டனர். ‘அறிஞர்-மேதை அண்ணாத்துரையின் பக்தர்களுக்கு அடிபணிய வேண்டிய நல்ல காலம் வேறு வந்துவிட்டது. மலைக்காதீர்கள் தம்பி, தங்கைகளே! இந்தப் பிள்ளையாண்டான்கள் கொடுத்த சம்மட்டி அடியில் என் வழுக்கை மண்டை டாராகப் பொளந்து போய் ரத்தம் பீறிட்டு விட்டது. ரத்தம் வழிந்து கண்ணாடியை மறைத்தாலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் உமிழ்ந்துருட்டிவிட்ட கண்ணீரால் கறை விலகி, ஆழ்ந்து தற்சோதனை, படிப்பாராய்வு செய்ய உந்துதல் கிளர்ந்து கொப்பளித்தது. (அண்ணாவின் நூல்களைப் படித்து அவர் மேதையே என்பதை ஒப்புக்கொண்டார்.) வாத்தியாருக்குப் பாடம் கற்பித்த தம்பிகளுக்கு என் – ஆம் பளா பளாவோ !!!’ என்று எழுதிவிட்டு விலகிக் கொண்டார்.

வேறு யாரும் ரசனை வகுப்பை நடத்த முன்வரவில்லை. ஒன்பதாவது வாரத்துடன் அதை முடித்துவிட்டார் கோ சா. அதற்கு மறுவாரத்திலேயே 6-7-1952ல், முரசின் பதினெட்டாம் ஆண்டு ஆரம்பத்தில், எழுத்தாளர் பேரவை தொடங்கியது. சுபநா பதினேழு பதினெட்டு வயதில் எழுதிய மனிதனும் பாம்பும் என்ற மொழிபெயர்ப்புக் கதையை கோ சா 1929ல் தொடங்கப்பட்ட முன்னேற்றம் இதழில் ஏற்கனவே திருத்திப் போட்டிருக்கிறார்.

முரசில் 1951-1952ல் இடம்பெற்ற புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சையின்போது அவர் ஒரு மேதையே என்று வாதிட்ட கந்தசாமி வாத்தியார் இப்படித்தான் தன் கட்டுரையை ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தன் மேதையா? ஆம் அவர் மேதைதான்.

விபரீத ஆசை (புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை) ஆபாசமானதா? இல்லை. அது தூய்மையான அருமையான சிறுகதைக் காவியம்.

புதுமைப்பித்தனை வெற்றிகரமாகத் தாக்கி வருகிற அன்பர் சபாபதி படித்தவரா? ஆம், அவர் படித்தவர்தான்.

புதுமைப்பித்தனுக்கு வக்காலத்து பேசும் அன்பர்கள் ரசிகர்களா? ஆம், அவர்கள் ரசிக்கத் தெரிந்தவர்கள்தான்.

இந்த மாதிரியான வாக்குவாதம் நல்லதா? ஆம், நல்லதே. விஷயத்தை விளக்க இது தேவைதான்.

தமிழ் முரசு ஆசிரியர் இதில் பங்கெடுத்துக் கொள்வாரா? ஆம். உரிய காலத்தில் கருத்துரைக்கத்தான் செய்வார்.

மேதைகளை எல்லோராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது? எல்லோராலும் ரசிக்க முடியும்; சிலரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஏன் இப்படி? பக்குவப்படி; விளக்க முடியுமா? ஆம், முடியும்.

கேளுங்கள் சொல்கிறேன்.

இப்படி செல்கிறது வாத்தியாரின் விமர்சனம்.

(எம் எஸ் ஸ்ரீலட்சுமி. புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951 – 1952. 2006. பக் 115-6.)

1955ல் கோலாலம்பூரில் தமிழ்க் கலைமன்றத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு 1956 சங்கமணி மே தின மலரில் (பக் 34-36) கந்தசாமி வாத்தியார் மலாயாத் தமிழ் எழுத்தாளர் என்று ஒரு கட்டுரை வரைந்தார். (சுப நாராயணனுக்கும் பைரோஜி நாராயணனுக்கும் மாநாட்டுக்கு அழைப்பில்லை.) சங்கமணி வார ஏடு கோலாலம்பூரில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் குரலாக ஒரு மே தினத்தில் 1 மே 1952ல் தொடங்கியது. ஆசிரியர் பைரோஜி எஸ் நாராயணன். அப்போது அவருக்கு வயது 21. தொழிற்சங்கப் பத்திரிகையாக இருந்தாலும் கலை இலக்கிய இதழாக அது பவனி வந்தது. பைரோஜி 24ஆம் வயதில் 9 டிசம்பர் 1955ல் திருச்சியில் திருமணம் செய்துகொண்ட படம் 27 டிசம்பர் 1955ல் சங்கமணியில் வந்துள்ளது. கவிஞர் கா பெருமாள் அதில் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அவருடைய துயரப்பாதை நாவலும் சங்கமணியில்தான் 1958ல் தொடராக வந்தது.

மலாயாத் தமிழ் எழுத்தாளர் (கந்தசாமி வாத்தியார்)

மலாயாவிலுள்ள ஏழரை லட்சம் இந்தியரில் ஆறு லட்சத்துக்கு மேற்பட்டவர் தமிழர். உலகத் தமிழர் நான்கு கோடிக்கு மேற்பட்டவர். வெளியகத் தமிழர் முப்பது லட்சமிருப்பர். தமிழகத் தமிழர் நான்கு கோடியிருப்பர்.

இது பிழைக்க வந்த நாடு. உலகமெங்கும் பள்ளி, பத்திரிகை, ரேடியோ, சினிமாவில் தமிழ் சீர் குன்றி வருகிறது. தமிழகத்தின் தமிழ் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. மலாயாவில் தமிழ் ஓரளவு வாழ்வது மலாயாத் தமிழ் எழுத்தாளரிடமே.

மலாயாவில் தமிழ் எழுத்தாளர் இல்லையென்ற கருத்துப்பட முன்னாள் தமிழ் நேசன் ஆசிரியர் ஆதி நாகப்பன் 1949 வாக்கில் தலையங்கமெழுதினார். அவர் லண்டன் சென்ற பிறகு நானும் வானம்பாடியுஞ் சேர்ந்து 1950-51ல் எழுத்தாளர் வகுப்பு நடத்தி மணியான எழுத்தாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். வகுப்புத் தொடங்கிய பொழுது தமிழ் முரசு தலையங்கமெழுதி (7 ஜனவரி 1951), மலாயாவில் எழுத்தாளர் இல்லையென்ற கருத்துப்பட நையாண்டி செய்தது.

எழுத்தாளர் மாநாடு கூட்ட அன்று முயன்றது கைகூடவில்லை. அப்பொழுது தட்டிக் கழித்த தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி 1955ல் கோலாலம்பூரில் நடந்த எழுத்தாளர் மாநாட்டிற் கலந்து கொண்டார். மாநாட்டில் தலைமையுரையாற்றிய சி வீ குப்புசாமி தமிழ் நேசன், கந்தசாமி வாத்தியார், வானம்பாடியின் தொண்டை மறைத்தார். மாநாட்டுப் பேச்சளார் சிலர் நினைவுபடுத்திப் பேசிய பேச்சுக்களைத் தமிழ் முரசு மறைத்தது.

மறைப்பவர், மறப்பவர், மறுப்பவர் சிலர் இன்னும் இருந்து வந்தாலும் மலாயாவில் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர் மிகப் பலர் உள்ளனர் என்பது உண்மையாகும்.

சுங்ஙய் சிப்புட் அ இராமனாதன் (இப்பொழுது ஈப்போவில்), தஞ்சமாலிம் கிருஷ்ணதாசன், காஜாங் சி மாரியப்பன் மூவரும் மேதை எழுத்தாளராகத் தேறியவராவர். பரீட்சை எழுதியவர் 72 பேர் என ஞாபகம். 30 பேர் போற்சிறந்த எழுத்தாளராகத் தேறினர். 20 பேர் போல் நல்ல எழுத்தாளராகவும் மீதிப் பேர் ஆர்வ எழுத்தாளராகவுந் தேறினர். இப்பொழுது அனைவரும் படி உயர்ந்திருக்கின்றனர்.

சிறந்த எழுத்தாளராகத் தேறிய ஒருவர், தமிழ் சரிவர எழுதத் தெரியாத மலையாள அறிஞர் – கிருஷ்ணன் நாயர், நாட்டுப்புறம்.

விஷய அறிவும் விஷயத்தை வேண்டியபடி எழுதத் தெரிகிற அறிவுமே மிக முக்கியமாம். எழுத்து, இலக்கணப் பிழையிராமலிருப்பது நல்லதுதான். தமிழ்நாட்டுப் ப்ரபலப் பெரும் எழுத்தாளர் பலரிடம் விஷய, எழுத்து, இலக்கணப் பிழைகள் நிறையவிருக்கின்றன.

எலிசபெத் அரசியாரது முடிசூட்டு விழாப்பற்றி முன்னாள் தமிழ் நேசன் ஆசிரியர் ரா வேங்கடராஜுலு லண்டனிலிருந்து எழுதி மலாயாத் தமிழ்ப் பத்ரிகைகளில் வெளிவந்த கட்டுரை உயர்தரமானதன்று. இந்நாள் தமிழ் நேசன் ஆசிரியரென்று கருதப்படுகிற கு அழகிரிசாமி மேற்படி முடிசூட்டு விழாவைச் சிறப்பிக்க எழுதி ரேடியோவில் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அசல் நாடகமன்று, சிறப்புடையதன்று. ‘கைப்பாடை’, ‘கணவனைச் சாகக் கொடுத்த விதவை மகுடாபிஷேகஞ் செய்துகொள்வது’ என்ற அமங்கலச் சொல்லையுங் கருத்தையும் முறையே மேற்கண்ட எழுத்தாளர்கள் கையாண்டிருந்தது மிகவும் வருந்தத்தக்கதாம். இவ்விருவரும் மலாயாத் தமிழ் எழுத்தாளரைக் கூசாமற் குறைகூறி வந்தனர். முன்னாள் ஆசிரியர் தமிழகத்துக்குத் திரும்பியுள்ளார். இந்நாள் ஆசிரியர் இன்னும் இங்கிருக்கிறார். உள்ளூரார்மேற் குறை காணும் இத்தகையவர்க்குத் தமது குறைபாடுகள் தெரியாமலிரா. மமதையில் மூடி மறைக்கிறார்கள். இருவர்க்கும் பத்ரிகைத் தொழில் சரிவரத் தெரியாது, மொழிபெயர்க்கச் சரியாய் வராது, செறிவாக எழுத வராது, கவிதை மாற்றறியத் தெரியாது.

நம் நாட்டின் திறமை மிக்க எழுத்தாளர் பெயர்களை இதோ பாருங்கள். ஞாபகம் வந்தவரைதான் சொல்லுகிறேன். எனக்குத் தெரிந்தவரைதான் சொல்லுகிறேன். சில பேர் மாதிரி, எல்லாந் தெரிந்ததாகப் பாவனை பண்ணவில்லை. பெயரையடுத்துப் பிறைக் குறிக்குள் அவரவரது தனித்துறைத் திறமைகளைக் குறிக்கிறேன். வரிசைக் கிரமம் பார்க்காதீர்கள். ஞாபகத்துக்கு வந்தபடி சொல்கிறேன். குறிக்கத் தவறிய பலருள்ளனர்:-

1. அ. இராமனாதன், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர், ஈப்போ (தமிழ்ப் புலவர், கட்டுரை, பாடப் புத்தகம் எழுத வல்லவர், சிறந்த சொற்பொழிவாளர்)

2. கிருஷ்ணதாசன் என்ற பண்டிட் ஆறுமுகம், தஞ்சமாலிம் (கவிதை, கட்டுரை,கதை, நாவல்)

3. சி. மாரியப்பன், தமிழாசிரியர், காஜாங் (மேற்படி போல்)

4. சி. கோன், கோலாலம்பூர், ஓவியர், தமிழாசிரியர் (கதை, நாவல், நாடகம், ஓவியம்)

5. மா. செ. மாயதேவன், ஆசிரியர் திருமுகம், போண்டோக் தஞ்சம், தைப்பிங் (கட்டுரை, கதை, பத்திரிகைத் தொழில்)

6. மா. ராமையா, எண்டாவ், மெர்ஸிங் (கதை, கவிதை, கட்டுரை)

7. சி. வடிவேல், தமிழாசிரியர், கோல சிலாங்கூர் (கதை, கட்டுரை)

8. சிவசுப்பிரமணியம், தமிழாசிரியர், தம்பின் (கவிதை, கட்டுரை)

9. ந. கரீம், பினாங்கு (கட்டுரை, கவிதை)

10. கலைதாசன், பினாங்கு (நாடகம், கட்டுரை)

11. புதுமைதாசன், சிங்கய் (கதை)

12. ர. வெற்றிவேல் (கட்டுரை, கதை, பத்திரிகைத் தொழில்)

13. நிமரன் என்ற ரமணி, மனோகரன் ஆசிரியர், சிங்கய் (கதை, கட்டுரை)

14. ஷண்முகம், மனோகரனில், சிங்கய் (கட்டுரை)

15. சை. சு. முஹ்தீன், ஆசிரியர் மலாயா நண்பன், சிங்கய் (தலையங்கம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, அரபு கற்றவர்)

16. எச். ஏ. ரஹீம், மலாயா நண்பனில், சிங்கய் (கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு)

17. செ. குணசேகர், கோலாலம்பூர் (கதை)

18. மு. அப்துல் லத்தீப், ஆசிரியர் மாணவர் பூங்கா, கோலாலம்பூர் (பத்திரிகைத் தொழில், கட்டுரை, கதை)

19. ந. பழனிவேல், ரேடியோ மலாயா, சிங்கய் (கதை, கட்டுரை)

20. ரத்னமணி, மேற்படி, சிங்கய் (கட்டுரை, மொழிபெயர்ப்பு)

21. ராமையா, மேற்படி, மேற்படி, (கதை, கட்டுரை)

22. மெ. திருநாவுக்கரசு, மேற்படி, மேற்படி, (தமிழ்ப் புலவர், கட்டுரை, பாட நூல்)

23. கமலா துரை, மேற்படி, மேற்படி (கட்டுரை)

24. ஹனீப், மேற்படி, பினாங்கு (கட்டுரை, மொழி பெயர்ப்பு, கல்வி)

25. வி. ரோச், ரிடிஃப்யூஷன், கோலாலும்பூர் (கட்டுரை, மொழி பெயர்ப்பு)

26. பைரோஜி ஸ்ரீ நாராயணன், ஆசிரியர் சங்கமணி, கோலாலும்பூர் (கட்டுரை, கவிதை, கதை, நாடகம், பத்ரிகைத் தொழில், தலையங்கம்)

27. தி. சு. சண்முகம், செய்தி ஆசிரியர், மேற்படி, மேற்படி (கட்டுரை, கவிதை, கதை, மொழி பெயர்ப்பு, தலையங்கம், பத்ரிகைத் தொழில்)

28. தங்கக்காளீஸ்வரன், சங்கமணி (கட்டுரை, பேச்சாளர்)

29. கோ. சாரங்கபாணி, ஆசிரியர் தமிழ் முரசு, சிங்கை (கட்டுரை, தலையங்கம், மொழிபெயர்ப்பு, பத்ரிகைத் தொழில், பேச்சாளர்)

30. வை. திருநாவுக்கரசு, உதவி ஆசிரியர், மேற்படி (கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

31. முருகு சுப்பிரமணியன், மேற்படி (கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

32. அ. முருகையன், மேற்படி (கதை, கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

33. மெ. சிதம்பரம், மேற்படி (தமிழ்ப் புலவர், கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

34. சி. வீ. குப்புசாமி, கோலாலும்பூர் (கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்ரிகைத் தொழில்)

35. கு. அழகிரிசாமி, தமிழ் நேசன் ஆசிரியர், கோலாலும்பூர் (தமிழ்ப் புலவர், கட்டுரை, கதை, கவிதை, நாடகம்)

36. சு. நடராஜன், தமிழ் நேசன் மானேஜர், மேற்படி (கட்டுரை, பேச்சாளர், மொழிபெயர்ப்பு)

37. புலவர் சேதுராமன், தமிழ் நேசன் மேற்படி (தமிழ்ப் புலவர், கட்டுரை, பேச்சாளர்)

38. சு. நாராயணன் (கந்தசாமி வாத்தியார்), கோலாலும்பூர் (தமிழ்ப் புலவர், கட்டுரை, கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, பத்ரிகைத் தொழில்)

39. வ. சோதிலிங்கம், கோலாலம்பூர் (கட்டுரை)

40. அ. கி. அறிவானந்தன், மூவாறு (கதை, கட்டுரை)

41. சோமசன்மா, மூவாறு (கவிதை, கட்டுரை)

42. கா. அண்ணாமலை, கோலாலும்பூர் (கட்டுரை, பத்திரிகை நிருபம்)

43. ராஜ இளவழகன், மேற்படி (கட்டுரை, கதை)

44. கா. பெருமாள், மேற்படி, (கவிதை, கட்டுரை, கதை)

45. பனைக்குளம் மு அப்துல் மஜீது, பினாங்கு (கட்டுரை, கவிதை, தமிழ்ப் புலவர்)

46. மா. மரகதம், தமிழாசிரியை, தைப்பிங் (கட்டுரை, கல்வி)

47. போ. பெரியசாமிப் பண்டிதர், தமிழ் முரசு, சிங்கய் (தமிழ்ப் புலவர், கட்டுரை, கல்வி)

48. மா. பொன்னுசாமி, தஞ்சரம்புத்தான், தமிழாசிரியர் (கட்டுரை, கவிதை, கல்வி)

49. மு. ராமசாமி செட்டியார், ஈப்போ (தமிழ்ப் புலவர், கட்டுரை)

50. சுப. மருதப்பன், துரோலோ (கதை, கட்டுரை)

51. சி. ஆர். நரசிம்மராஜ், கோலாலும்பூர், ஆங்கில ஆசிரியர் (கட்டுரை, பேச்சாளர், நாடகம்)

52. தமிழாசிரியர் பொன்னையா, ஈப்போ (கதை, கட்டுரை, கல்வி)

53. கனகசுந்தரம், சேவிகா ஆசிரியர் (பத்ரிகைத் தொழில், கட்டுரை, மொழிபெயர்ப்பு)

சிங்லன் (கட்டுரை, கதை), லோகநாதன், ரா நாகய்யன், கவிஞர் முகிலன், சிவராமன், பெ மு இளம்பருதி, நாயர், எஸ் வேலுசாமி, ச மா வாசகம் ….. மற்றும் பெயர் தெரியாத மேலும் 50 பேர்.

மேற்கண்ட நூற்றொருவருஞ் சேர்ந்து முயன்றால் இவரை வெல்லத் தமிழ் நாட்டில் ஆள் (எந்த ஆளும் !) இல்லையென்று உத்தரவாதமளிக்கிறேன். இதைப் பார்க்கும் தமிழ் நாட்டார் எங்களுடன் எத்துறையிலும் போட்டிக்கு வரலாம். மலைநாட்டுத் தமிழ் மேலானது என்று நிரூபிக்க முடியும் – நிரூபித்திருக்கிறோம்.

நம் பத்ரிகைகளும் தமிழ் நாட்டுப் பத்ரிகைகள்போல் எழுத்தாளருக்குத் தம்மாலியன்ற வெளியீட்டுக் கைம்மாறு அளிக்க வேண்டும். பிழைப்புத் தரும் நாட்டில் வாழ்வு நடத்தத் தீர்மானித்து வாழ்வு சுவைக்க எழுதுவோமாக. மே தினம் நமக்கு மேன்மை தருமாக.

பேசுவது போலவே எழுதவேண்டும் என்பது வாத்தியாரின் விருப்பம். அதன் விளைவுதான் சிங்கய், பத்ரிகை. 1954ல் வெளியிட்ட பேசத் தெரியுமா நூலின் சாரம் இதுதான். கன்தஸாமி வாத்தியார் என்றே தம் பெயரை அதில் போட்டிருந்தார்.

தமிழ்நாட்டை எத்துறையிலும் வெல்ல முடியும் என்பது அபத்தமானது இல்லையா? காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது எவ்வளவுதான் உண்மை என்றாலும் வாத்தியார் மிகைப்பட வீறாப்புடன் கூறுவதை ஜீரணிப்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டம்.

கந்தசாமி வாத்தியார் நையாண்டி செய்த தமிழ் முரசின் தலையங்கம் 7 ஜனவரி 1951 ஞாயிற்றுக்கிழமை வந்தது. எதிரொலி என்ற தலையங்கப் பகுதியில் மூன்றாவது விஷயமாக இடம்பெற்றது ‘சிறுகதைகள்’ துணைத் தலையங்கம். அது கூறுவது இதுதான்:

“ சிறுகதைகள் ”

தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வாரந்தோறும் சிறுகதைகள் பிரசுரிக்கும்படி வாசகர்கள் பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வாரந்தோறும் சிறுகதைகள் பிரசுரிப்பது நமக்கும் சுலபமான காரியந்தான். இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளில் ஒன்றை வாரந்தோறும் கத்தரித்து கம்பாசிட்டரிடம் கொடுத்தால் கதையாகிவிடும். இரண்டொரு பிளாக்கும் செய்து போட்டுவிடலாம். ஆனால் சிறுகதைகள் சமூகத்தில் நிலவும் கோளாறுகளை சித்திரித்துக் காட்டி சிந்தனையைக் கிளறிவிடக் கூடியதாய் இருக்கவேண்டுமென்பது நமது ஆசை. அந்த ஆசையை நமது நண்பர் திரு சா. குருசாமி பீ ஏ அவர்கள் சிறிது காலம் நிறைவேற்றித் தந்தார்கள். அவரின் கதைகளுக்கேற்ற சித்திரங்களும் சென்னையிலேயே தயாரிக்கப்பட்டு வந்து பிரசுரித்து வந்தோம். அன்னாருக்கு ஓய்வு இல்லாததால் படிப்பவர் மனதைத் தொட்டிழுக்கும் அன்னவரின் கதைகள் நின்றுவிட்டன. பின்னர் சிறுகதை போட்டி ஆரம்பித்து மலாயாவிலுள்ள எழுத்தாளர்களுக்குக் கதை எழுத சந்தர்ப்பமளித்தோம். பல கதைகளுக்குப் பரிசு வழங்கினோம். சென்ற மாதப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ஒன்றை இன்றைய பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறோம். போட்டிக்குக் கதை எழுதுகிறவர்கள் சிலர் முயற்சி எடுத்து எழுதுகிறார்கள். சிலர் கதையா, கட்டுரையா, கடிதமா என்பது கூடத் தெரிந்துகொள்ள முடியாத தோரணையில் எழுதியனுப்புகிறார்கள். அவை யாவற்றையும் படித்துப் பார்த்துப் பரிசீலனை செய்யப்படுகிறது. சிலர் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளைக் காப்பியடித்து அனுப்பி விடுகிறார்கள் என்றாலும் சிறுகதைப் போட்டியை நாம் தொடர்ந்தே நடத்தி வருகிறோம். சிறுகதைகள் எப்படியிருந்தால் ஜன சமுகத்திற்கு நன்றாக இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணங்காட்ட இதே பத்திரிகையில் நண்பர் சா. குருசாமி அவர்கள் எழுதிய பஸ் கண்டக்டர் கதை ஒன்றைப் பிரசுரித்திருக்கிறோம். சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் தமிழ் முரசில் ஏற்கனவே வெளியான நண்பர் சா. குருசாமி அவர்களின் கதைகளைப் பலமுறை படிக்க வேண்டுகிறோம். தமாஷா கதை எழுத விரும்புகிறவர்கள் கலைமகள், விகடன், கல்கி முதலான இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகளைப் படித்துக் கதைகள் சித்திரிக்க முயற்சிக்கலாம். வாசகர்களின் ஆசையைத் தீர்க்க சில காலத்திற்குக் கத்தரிப்பு மேஸ்திரி வேலையை மேற்போட்டுக் கொள்கிறோம்.

சா குருசாமி சாரங்கபாணியின் பள்ளித் தோழர். கோ சா-வின் மற்றொரு பள்ளித் தோழர் ரா வேங்கடராஜுலு நாயுடு. மூவரும் திருவாரூர் Board High Schoolல் ஒன்றாகப் படித்தவர்கள். வேங்கடராஜுலு நாயுடு தமிழ்நாட்டில் டாக்டர் வரதராஜுலு நாயுடு நடத்திய தமிழ்நாடு பத்திரிகையிலும் தி சு சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த தினமணி நாளிதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றிவிட்டு 1952ல் கோலாலம்பூர் தமிழ் நேசன் பத்திரிகைக்குத் தலைமை ஆசிரியராக வந்தவர். நேசனின் ஞாயிறு பக்கங்களை கவனித்துக்கொள்ள அவருடன் வந்தவர்தாம் கு அழகிரிசாமி. 1951ல் சா குருசாமியைத் தமிழ் முரசுக்கு வருமாறு அழைத்தார் கோ சா. அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தவரே, சேலத்தில் 1947ல் பூந்தோட்டம் இதழைச் சொந்தமாக நடத்தியபின், சி பா ஆதித்தன் சேலத்தில் ஆரம்பித்த தினத்தாள் பத்திரிகையிலும் பெரியாரின் விடுதலை பத்திரிகையிலும் துணையாசிரியாகப் பணியாற்றிய வை திருநாவுக்கரசு.

முரசின் தலையங்கம் குறிப்பிட்ட சா குருசாமியின் பஸ் கண்டக்டர் கதை 7 ஜனவரியில் இடம்பெற்றது. ஆசிரியர் ஒருவர் போராட்டத்தில் கலந்துகொண்டு வேலை நிறுத்தம் செய்யும் தருணத்தில் அரசாங்கத்தின் சீற்றத்திற்கு ஆளாகி வேலையை இழந்து விடுகிறார். வறுமை தொடர்கிறது. மனைவியும் சாகிறாள். பிறகு பஸ் கண்டக்டர் வேலைக்குப் போகிறார். சமூகத்தையும் அரசாங்கத்தையும் கொஞ்சம் சீண்டிவிட்டுக் கிண்டல் செய்து பார்க்கும் கதை அது. இந்தக் கதை இதே தலைப்பில் ஏற்கனவே 6 பிப்ரவரி 1949ல் வந்துள்ளது.

1949ல் சா குருசாமியின் 6 கதைகள் முரசில் வந்தன. அவற்றுள் ஒன்றுதான் மீண்டும் பிரசுரமான பஸ் கண்டக்டர். 21 மார்ச் 1950ல் முரசு சிறுகதைப் போட்டிக்குக் குறிப்புகள் தரும்போது ‘கதைகள் மலாயா நாட்டுப் பழக்க வழக்கங்களையும் சுற்றுச் சார்புகளையும் அடிப்படையாகக் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கதைகள் சமூக சீர்திருத்த நோக்கங்களையும் கருத்துகளையும் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னாளில் குத்தூசி குருசாமி என்று பிரபலம் அடைந்த சா குருசாமியின் கதைகள் முரசின் கதை இலக்கணத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்தன. குருசாமி 1947ல் 15 கதைகளும், 1948ல் 4 கதைகளும் முரசில் எழுதினார். 1949க்குப் பிறகு அவருடைய கதைகள் முரசில் இடம்பெறக் காணோம்.

சீர்திருத்தக் கதைகளை சா குருசாமிக்கு முன்னதாகத் தமிழில் மிக ஆரம்பக் கட்டத்திலேயே எழுதிய ந பழனிவேல் 1936ல் 14 கதைகளை வரைந்து தள்ளினார். அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில் வருஷத்துக்கு ஒரு கதையாக எழுதிய அவர் 1952ல் 8 கதைகளை எழுதிவிட்டு, 1955ல் ஒரு கதை மட்டுமே புனைந்தார்.

1952க்குப் பிறகு சிறுகதையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இரண்டு பேர். வல்லிக்கண்ணன் 1952 முதல் 1955 வரை மொத்தம் 67 கதைகள் எழுதினார் முரசில். அவற்றுள் 33 கதைகள் ஒரே ஆண்டில் 1953ல் இடம்பெற்றன. முருகு என்ற புனைபெயரில் 1953 முதல் 20 கதைகள் எழுதியவர் முரசின் உதவி ஆசிரியர் அ முருகையன்.

கந்தசாமி வாத்தியாரின் விதவையின் காதல் சிறுகதை முரசில் 23 ஜனவரி 1949ல் வந்தது. ‘செல்வச் செழிப்பில் வளர்ந்த பெண்ணொருத்தி இளம் வயதிலேயே தன் கணவனை இழந்து விதவையாகிறாள். அதனால், அவள் இன்பம் கனவாகிறது. பிறகு அவள் முஸ்தபா என்ற இளைஞனைப் பார்த்ததும் துயரத்தை மறந்து நெருங்கிப் பழகுகிறாள். ஆரம்பத்தில் அதை எதிர்த்த தந்தை பின்னர்ச் சம்மதிக்கிறார். இறுதியில், அவருடைய ஆசியினால் விதவையின் காதல் மலர்ந்து மணம் வீசுகிறது.’ (இந்தக் கதைச்சுருக்கம் இடம்பெற்ற நூல் தேசிய நூலகம் 2009ல் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936-1960, தொகுதி I பக்கம் 33.)

கந்தசாமி வாத்தியார் ஒரு தேர்ந்த விமர்சகரே தவிர கற்பனை மிக்க படைப்பாளி அல்லர். தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டித் தொடரில் 1958 மார்ச் மாதத் தலைப்பு விளையாட்டு பொம்மை. காமம், காதல் இல்லாமல் மலாயாச் சூழ்நிலையில் கதை இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கிணங்க ரெ கார்த்திகேசு முதற்பரிசாக 25 வெள்ளியைத் தட்டிச் சென்றார். அலோர் ஸ்டார் ச சாந்தினிக்கு இரண்டாம் பரிசு 15 வெள்ளி. முல்லை எனும் புனைபெயரைக் கொண்ட பினாங்கு ம முருகையனுக்கு மூன்றாம் பரிசு 10 வெள்ளி. இப்போட்டியில் சு நாராயணன் எனும் பெயரில் பங்கேற்ற கந்தசாமி வாத்தியாருக்கு ஆறுதல் தகுதியே கிடைத்தது. #

No comments: