Monday, September 14, 2009

சந்திப்பு 4: எம் கே நாராயணன் (M K Narayanan)



சிங்கப்பூர் வானொலியின் இந்தியப் பகுதித் தலைவராக இருந்தபோது எம் கே நாராயணன் அவர்களைச் சந்தித்தேன். Controller Radio 4 என்பது அவருடைய பதவி. SBC எனும் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் செயல்பட்ட நேரம் அது. நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவர் பொறுப்பு. செய்திப் பிரிவு தனியாக இயங்கியது. சந்தித்த தினம் 5 மே 1982. பிற்பகல் 2.45 முதல் மாலை 5.30 வரை பேசினோம்.




. வானொலி அரசாங்க நிறுவனம். இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்பது அதன் நோக்கமல்ல.

. எழுத்தாளர் தொகை இல்லை. எழுத்து வளர்ச்சி இல்லை. 15 வருஷத்துக்குமுன் எழுதியவர்களே இன்றும் எழுதுகிறார்கள். புது எழுத்தாளர்கள் விடாப்பிடியாக எழுதுவதில்லை.

. RTS (Radio TV Singapore) ஒலிபரப்பும் சிறுகதையில் தரமில்லை. இரு பெண்கள் நாடகம் எழுதுகிறார்கள். முதிர்ச்சி இல்லை. ஏன்? பரந்த வாழ்க்கை நோக்கு இல்லை. இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் கொண்டவர்கள்/ அறிந்தவர்கள் இல்லை.

. எழுத்தாளர்களுக்குப் பொதுவாக மதிநுட்பம் குறைவு என்பது என் தனிப்பட்ட எண்ணம். அவர்கள் 25 வயதுக்குள் இருப்பதால் நன்றாக எழுதக்கூடியவர் என்றாலும் ஒரு முதிர்ச்சி தென்படுவதில்லை.

. காதல் அதிகமுண்டு. Plot (கதைப்பின்னல்) என்றால் 32 வகை plot-தான் உண்டு. அந்த plot-டுக்கு மறு உருவம் கொடுப்பதே எழுத்தாளர் வேலை.

. வருகின்ற எழுத்துப் படிவத்தை முதலில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் படித்துப் பார்ப்பார். பிறகு மற்றொரு தயாரிப்பாளர் படிப்பார். இரண்டு பேரும் இணங்கினால் அதை ஏற்றுக் கொள்வோம். முரண்பட்ட விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் நானும் படித்துப் பார்த்து முடிவு செய்வோம்.

. படுபயங்கரமான கற்பனை உண்டு. இரு நண்பர்கள் மீன்பிடிக்க கடலுக்குப் போகிறார்கள். போகுமுன் ஒரு சபதம் எடுத்துக்கொள்கிறார்கள்.நான் செத்தால் என் நீற்றை நீ நெஞ்சில் பூசு. நீ செத்தால் உன் நீற்றை நான் நெஞ்சில் பூசுகிறேன். நம் இயல்புக்கு மீறிய காட்டுமிராண்டித் தனமான கற்பனை. எங்கோ ஆங்கிலத்தில் படித்துவிட்டு ஒப்புவிக்கிறார்கள் போலும்.

. தமிழ்நாட்டுத் திரைப்படம் கற்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாழ்வில் நடப்பதை அப்படியே காட்டினால் என்ன தவறு என்று கேட்கிறார்கள். இளம் தலைமுறை கொஞ்சம் துடுக்குத்தனமாக நடக்கலாம்.

. எந்த மாதிரிப் படைப்பு என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதில் தயாரிப்பாளரின் கருத்துக்கு 80 விழுக்காடு இடமுண்டு.

. 1950-60களில் இருந்த வளர்ச்சி இப்போது கிடையாது. அந்தக் காலத்தில் தமிழ் படித்தவர் குறைவு. இப்போது அதிகமானோர் தமிழ் படிக்கிறார்கள்.

. தமிழ் இரண்டாம் மொழியாக, கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. பாட நூல்களும் மற்ற துணை நூல்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகின்றன.

GCE O Level தமிழ் கட்டாயம்.
PreU A Level விருப்பப்பாடம் (optional).
U Level தமிழ் கிடையாது.
I E (கல்விக் கழகம் அதாவது ஆசிரியர் பயிற்சிக் கழகம்) மட்டும் தமிழ்.

. தமிழுக்குக் கிடைக்கும் reading materials (வாசிப்பு நூல்கள்) தரம் குன்றியவை.

. ஆங்கிலத்திற்குக் கிடைக்கும் வாசிப்பு நூல்கள் பிரிட்டன், அமெரிக்காவிலிருந்து வருகின்றன. தரமாக உள்ளன.

. தொலைக்காட்சிப் படங்கள் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கின்றன. தமிழில் அப்படி வருவதில்லை.

. தமிழ் மொழி மட்டமாக (inferior) கருதப்படுகிறது. அதனால் படைப்பிலக்கியங்கள் வருவதில்லை.

. தமிழ் மொழி வளர்கிறதா? ஆமாம்.
. தமிழ் உயிருள்ள மொழியா? ஆமாம்.
. தமிழில் பேசினால் கூலி என்ற ஓர் எண்ணம் முன்பு இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை.

. தமிழும் முக்கியம். அதே சமயத்தில் ஆங்கிலமும் முக்கியம்.

. Speak Mandarin Campaign தமிழுக்கு அபாயமோ என்று பலர் ஐயப்பட்டனர். அதனால் தமிழின் முக்கியத்துவம் வலுத்தது.

. இரண்டாம் மொழித் தேர்வில் இந்தியர்கள் சிறப்பாகச் செய்கின்றனர். பெற்றோர் சிலர் பிள்ளைகளிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்கின்றனர்.

. வானொலிக்கு 30 முதல் 40 பேர் எழுதுகிறார்கள். ஆனால் அனைவரும் தொடர்ந்து சீராக எழுதுவதில்லை. விட்டு விட்டு எழுதுவர்.

. ஒரு வாரத்திற்கு எங்களுக்கு என்ன தேவைப்படுகிறது?

அரை மணி நேர சமூக நாடகம்.
அரை மணி நேர மர்ம நாடகம்.
அரை மணி நேர இலக்கிய நாடகம்.
கால் மணி நேர காட்சியும் கானமும்.
கால் மணி நேர சிறுகதை.
நகைச்சுவைச் சித்திரம், கதம்ப மாலை உண்டு.
இளையர் சமுதாயம், குடும்ப விளக்கு, இலக்கியச் சோலை எல்லாம்
magazine வகை நிகழ்ச்சிகள்.

கால் மணி நேர இலக்கியப் பேச்சு.
ஐநது நிமிட எளிய தமிழ். வாரத்திற்கு ஆறு முறை.
கல்வி புகட்டும் நிகழ்சசிகள், தகவல் தரும் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
என்று இவற்றை வகைப்படுத்தலாம்.
பொழுதுபோக்கிக் களிப்பூட்டும் நிகழ்சசிகள் 60 சதவிகிதம்.
மற்றவை 40 சதவிகிதம்.

. உதாரணத்திற்கு 1982 ஜனவரி:

10 சிறுகதைகள் கிடைத்தன. பத்துப் பேர் எழுதினர். 7 பேர் மலேசியாவிலிருந்தும் 3 பேர்
சிங்கப்பூரிலிருந்தும் கதைகளை அனுப்பியிருந்தனர்.

3 நாடகங்கள் வந்தன. 3 பேர் எழுதினர். மலேசியாவிலிருந்து 1. சிங்கப்பூரிலிருந்து 2.

கிடைத்த மொத்த எழுத்துப் படைப்புகள் 250. மலேசியாவிலிருந்து 60 சதவிகிதம். சிங்கப்பூரிலிருந்து 40 சதவிகிதம்.

Rate of Acceptance. ஏற்பு விகிதம் சிங்கப்பூர் 60 விழுக்காடு. மலேசியா 40 விழுக்காடு.
மலேசியப் படைப்புகளில் முதிர்ச்சி (maturity) குறைவு.

எங்கிருந்து எதை ஏற்க வேண்டும் என்பதற்கு அதிகாரபூர்வ நிலை எதுவும் கிடையாது. எல்லாம் சிங்கப்பூர்ப் பின்னணியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

. தொலைக்காட்சிப் படங்கள் இறக்குமதி ஆகின்றன. நன்றாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்தே அவை கொண்டுவரப்படுகின்றன.

. தேசிய தின நாடகம் உள்ளூர்ப் படைப்பாக இருக்க வேண்டும்.

. மற்றபடி எந்த நாட்டிலிருந்தும் எதையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை சிங்கப்பூருக்கு ஏற்ப modify செய் என்பது சிங்கப்பூர்க் கொள்கை.
உதாரணத்திற்கு, கங்காணி கொடுமையால் கஷ்டப்படுவதையும், மலாய் தெரியாமல் குடும்பத் தலைவர் பதவி இழந்து கோலாலம்பூர் தெருவில் அல்லற்படுவதையும் இங்குக் காட்ட முடியாது.

. பார்க்கப்போனால் சிங்கப்பூரிலிருந்து எழுதுவதற்கு எதுவுமே இல்லை எனலாம். கதைக்கரு கிடைக்காது. எல்லாம் flat. பக்கத்துவீட்டில் சீனர். சீனருடன் நல்ல அண்டைவீட்டு நட்பைக் காட்டலாம். இது மட்டுந்தான். Housing estate-ல் வேறு என்ன எதிர்பார்ப்பது? தொழிலாளிகளைப் பற்றிக் கொஞ்சம் தொட்டுப் பேசலாம்.

. நகர வாழ்க்கை. 24 மணி நேரமும் பகல்/விளக்கு வெளிச்சம். இருட்டு இல்லாமல் மர்மத்திற்கே இடமில்லை இப்போது.

யார் வானொலி கேட்கிறார்கள்?

. Professionals. படித்த கூட்டம். அவர்களுக்குத் தேவைப்படுவது கர்னாடக இசையும் semi classical பாட்டும்.

. 15 முதல் 20 வயது: ஒரு பிரிவினர் TMS வகைப் பாடல்களை ரசிப்பர். மற்றொரு பிரிவினர் காம இச்சைப் பாடல்களைக் கேட்கப் பிரியப்படுவர் (sexy and lewd songs).

. திரைப்பாடல்களுக்குத்தான் எப்போதும் மவுசு. உள்ளூர்ப் பாடல்கள் எல்லாம் அப்புறந்தான்.

. இந்த மாதம் (ஜுன்) முதல் வானொலி ஒலிபரப்பு நேரம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

. Feedback
கடிதங்கள் அனுப்பி நிறை குறைகளைச் சொல்கிறார்கள்.

. வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். தொலைபேசி விருப்பத்தில் நிறைய பங்கேற்கிறார்கள்.

. 1981 ஜுலை மாதத்திலிருந்து பார்த்தால்
பொன் சுந்தரராசு,
நா கோவிந்தசாமி,
வீரப்பன் லட்சுமி,
பரணன்,
க து மு இக்பால்,
ந பழனிவேலு,
கமலாதேவி அரவிந்தன்
முதலானோர் வானொலிக்கு நிறைய எழுதியவர்கள் என்று சொல்லலாம்.

. மலேசியாவிலிருந்து
லட்சுமணன்,
P S சுப்பிரமணியம்,
சக்கரவர்த்தி சுப்பிரமணியம்,
ஆர் கிருஷ்ணன்,
பால்ராஜ்,
அஞ்சலை
முதலானோர் அதிகம் எழுதினர்.

. மக்களுக்குத் தெரிந்த எழுத்தாளர் என்றால் அவர் வானொலி மூலம் வந்தவர் என்று நிச்சயம் சொல்ல முடியும். எழுத்துப் படியைத் திருத்திப் பணமும் கொடுக்கும் ஊடகம் வானொலியைத் தவிர வேறு எதுவும் இல்லை.



இலக்கியக் களம்

இலக்கியக் கள மதிப்பீட்டை தமிழ்நாட்டுக்கு ஏன் அனுப்ப வேண்டும்?

சிங்கப்பூரில் ஏன் இலக்கியம் வளரவில்லை? புதுப்புது எழுத்தாளர்கள் ஏன் தோன்றவில்லை? ஆராய்ச்சி செய்து இதற்கான காரணங்களைப் பார்க்கவேண்டும்.

இங்குள்ள மலேசிய எழுத்தாளரை தமிழ்நாடு மதிப்பீடு செய்வதில்லை.

நல்ல படைப்பிலக்கியத்திற்கு அனைத்துலக கால, தேச எல்லை கிடையாது. இலக்கியத்தை ரசிக்க வேண்டுமானால் அடிப்படைச் சூழலை அறியவேண்டும். நீதிபதிகள் international theme-மை முக்கியமாகத் தேர்வு செய்வார்கள்.

இலக்கியக் கள விமர்சகர்கள் இந்நாட்டுச் சூழலைத் தொட்டு எழுதிய கதைகளைச் சிறப்பாகக் கருதவில்லை.

We don't recognise our own talents?
இங்குள்ளவர் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது?

சிங்கப்பூரில் அமைந்த இலக்கியக் களம் ஏன் மலேசியக் கதைகளைப் போடவேண்டும்? 15 வயது மாணவனுக்கு மலேசியா தெரியாது. இவன் இங்கே பார்ப்பது வேகமான கார், உயர்ந்த கட்டடம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை கதைகளும் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகளில் வந்தவை. வானொலி கதை இல்லையா?

இலக்கியக் களம் போட்ட கதைகளின் தொகுப்பு நூல் புதுமையானதா? இல்லை. எல்லாம் ஏற்கனவே வந்த கதைகளின் மறுபதிப்புதான். It is a waste of time.

வருங்காலத் திட்டங்கள்?

. SBC மூலம் தரமான சிறுகதைகளையும் நாடகங்களையும் படைக்கவேண்டும்.

. ஒரு சொல் கேளீர் எனும் நிகழ்ச்சியைக் கேட்டிருப்பீர்கள்.
T S மோகனம் எழுதித் தயாரிப்பது அது. தமிழ் முரசு ஞாயிறு தோறும் அதை எடுத்துப் போடுகிறது. இந்த மாதிரி ஆய்வு இதற்குமுன் வந்ததில்லை.

. 1981 நவம்பரில் எழுத்தாளர்களைக் கூட்டிக் கலந்துரையாடல் நடத்தினோம். வானொலிக்கு அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை எடுத்துச் சொல்வதே அதன் நோக்கம்.
Radio is not an institution அதாவது வானொலி ஒரு பயிற்சிப் பள்ளி அல்ல என்பதைத் தெளிவாக விளக்கினோம். இலக்கியம் வளர துணை செய்ய முடியும். வகுப்புகள் நடத்த முடியாது. எங்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.
40 பேருக்கு அழைப்பு விடுத்தோம். 25 பேர் மட்டும் வந்தனர்.

No comments: