Friday, September 11, 2009

சந்திப்பு 1. ந. பழனிவேல் ( N. Palanivelu )



சிங்கப்பூரின் முதுபெரும் எழுத்தாளர் காலஞ்சென்ற திரு ந. பழனிவேல் அவர்கள். தமிழ்நாட்டின் சிக்கல் அவர் பிறந்த ஊர். பிறந்த தேதி 20 ஜுன் 1908. 92 வயதில் 2000ல் காலமானார். அவரை நான் 1982 மே 5ம் தேதி தோ பாயோவில் அவருடைய வீட்டில் சந்தித்தேன். காலை 11 மணி முதல் பிற்பகல் 2.15 வரை சந்திப்பு சுவையாகவும் விறுவிறுப்பாகவும் போனது. அன்றைய குறிப்பிலிருந்து இப்போது எழுதுகிறேன். அவர் தொடர்பான செய்திகளை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்தார். சண்முகவடிவேல் என்பது அவரது இயற்பெயர்.

. 13 ஜுன் 1928ல் ரஜுலா கப்பல் ஏறி வந்தேன். அப்போது வயது இருபது. நேராக சிங்கப்பூருக்கு வரவில்லை. முதலில் தெலுக் ஆன்சனுக்குப் பக்கத்தில் உள்ள பாகான் பாசிர் எஸ்டேட்டுக்குப் போனேன். 1928/29ல் ஒரு வருஷம் அங்கேயிருந்தேன்.

. ஊரில் SSLC முடித்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அப்போ பாஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஹார்பரில் விற்ற டிக்கட் வாங்கி கப்பலில் ஏறிக்கொண்டேன். டிக்கட் பத்து ரூபாய்க்குள்தான். கிளாங்கில் இறங்கினேன்.

. எஸ்டேட்டில் Check roll clerk வேலை. அப்போதுதான் தோட்டத்தில் தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டி முடித்திருந்தார்கள். நான்தான் முதல் ஆசிரியர் அதில். வாத்தியார் சம்பளம் 30 வெள்ளி. கிளார்க் சம்பளம் 25 வெள்ளி. இரண்டும் சேர்ந்து 55 வெள்ளி. பெரிய சம்பளம் அது.

. 1929ல் ஈ வே ராமசாமி நாயக்கர் தெலுக்கான்சனில் கூட்டத்தில் பேசியதைக் கேட்டேன்.

. மாமா ராம. அ. ராமசாமி Banting-கில் எஸ்டேட் வைத்திருந்தார். ஜப்பான் ஆட்சிக்காலத்தில் விற்று கரன்சியாக அடுக்கி வைத்திருந்தார்.

. எஸ்டேட் வேலை 1929 ஜுலை 15ல் முடிந்தது. பிறகு வேலை இல்லை. தோட்ட வாழ்க்கையும் பிடிக்கவில்லை. 1930 ஜுன் மாதம் சிங்கப்பூருக்கு வந்தேன். டிசம்பர் 4ம் தேதி Singapore Traction கம்பெனியில் வேலைக்குப் போனேன். Wages clerk வேலை. 19 வருஷம் அங்கிருந்தேன். பிறகு 1949ல் ரேடியோ சிங்கப்பூரில் சேர்ந்தேன். 1965 வரை அங்கு வேலை பார்த்தேன். ரேடியோ சிங்கப்பூர், ரேடியோ மலேசியா, RTS என்று பேர் மாறிக்கொண்டே இருந்தது. SBC-ல் மட்டும் வேலை செய்யவில்லை.

. 1930ல் ரேடியோ இருந்தது. கிராமபோன் records பாட்டு போடுவார்கள். பிறகு 5 நிமிடம் செய்தி.

. ரேடியோவில் broadcasting assistant, producer, creative worker, news translator, news reader என்று வேலை. பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். இப்பவும் எழுதிக் கொடுக்கிறேன்.

. நான் ஏற்கனவே குடிஅரசு சந்தாதாரர். ஆனால் மலாயாவில் இருந்தவரை நான் பத்திரிகை எதுவும் பார்த்ததில்லை.

. சிங்கப்பூரில் சீர்திருத்தம், நவநீதம் இதழ்களைக் கண்டேன். அவற்றைப் படித்தபிறகு நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது. தமிழர் சீர்திருத்த சங்கத்தில் சேர்நதபிறகுதான் வேகம் வந்தது. கோ.சா..தான் சரியான தூண்டுதல். தமிழ் நேசனும் அப்போது வந்துகொண்டிருந்ததது.

. கோலாலம்பூரிலிருந்து ஆர். ராமனாதன் 1932ல் சிங்கப்பூர் வந்தார். என்னுடன் தங்கினார். கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதுவரை நான் கதையே எழுதியதில்லை.

. 1934ல் கிராமக் காட்சி என்ற தலைப்பில் கதை எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். இதுவே நான் எழுதிய முதல் கதை. (பாரதமித்திரன் என்ற வார இதழை ராமனாதன் கோலாலம்பூரில் நடத்தினார். பததிரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்காக பழனிவேல் அனுப்பிய கதை அது. 5 வெள்ளி பரிசு கிடைத்தது. ஆனால் பரிசுப் பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. பரிசு அனுப்பினார்களா என்பது சந்தேகமே.)

. 1932 ல் வலிமை என்ற தலைப்பில் கவிதை எழுதி நவநீதம் இதழுக்கு அனுப்பினேன். எம். எம். புகாரி அதன் ஆசிரியர். சுமார் முப்பது பக்கம் கொண்ட ஒரு மாத இதழ் அது. தற்போதைய முத்தமிழ் இதழைப்போல. சமூக சீர்திருத்த இலக்கியப் பத்திரிகை அது.

. முன்னேற்றம் வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. கோ.சா இதன் ஆசிரியர் மட்டுமே. தமிழ் முரசு ஆரம்பித்த பிறகு முன்னேற்றத்துடன் தகராறு வந்துவிட்டது கோ. சாவுக்கு.

. சீர்திருத்தம் பத்திரிகையையும் கோ. சா நடத்தினார். ஈ வே ராவின் செல்வாக்கு அடிச்சுவட்டைப் பின்பற்றி நடத்தப்பட்ட இதழ் அது.

. முதல் சிறுகதைக்குப் பிறகு எழுதிய எல்லாமே கவிதைதான்.

. சண்டைக்குப் பிறகு திராவிட முரசு வந்தது. து. லெட்சுமணன் பொறுப்பு அதற்கு. என் கதை, கட்டுரை, கவிதை எல்லாம் அதில் நிறைய வந்தது.

. ஆனந்தபோதினி என்ற சஞ்சிகைக்கு நான் ஒரு சந்தாதாரர். முனுசாமி முதலியார் நடத்தியது அது. நிறைய கதைகள் வரும் அதில். சமயம் இலக்கியம் பற்றியும் உண்டு. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் எழுதினார்கள்.

. ஆரணி குப்புசாமி முதலியார் நடத்தியது ஜகன்மோகினி. 60 பக்கம். 8 அணா விலை. முழுக்க முழுக்க நாவலே. இதைப் படித்துப் படித்து எழுத வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது.

. இந்தியாவில் எதுவுமே எழுதியதில்லை. எழுத பயம். பள்ளி மாணவன். படிக்கும் ஆர்வம்.

. தசீசங்கத்திற்குக் காங்கிரஸ் பற்றுதல் கொண்டோர் எதிர்ப்புக் காட்டுவார்கள். ஒரு கூட்டத்தில் மிளகாய்த் தூள் தூவினார்கள். காண்ட்ராக்டர் ரங்கராஜன் அவர்களில் ஒருவர். சி. ஆர். தசரதராஜ் சங்கத்தை எதிர்ப்பவர். அவர் ஒரு நாளிதழ் நடத்தினார். அதில் தசீசங்கத்தைத் தாக்கி எழுதினார். அப்பத்திரிகை முதலில் வார ஏடாக இருந்து பின்னர் நாளிதழாகியது. அந்தப் பத்திரிகை 2, 3 வருஷம் நடந்திருக்கும். தமிழ் முரசுக்குப் போட்டி. அந்த ஏட்டுக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. நன்றாகத்தான் ஓடியது. ஏன் நின்றது என்று தெரியவில்லை. (சி. ஆர். நரசிம்மராஜ் நடத்திய புதுயுகம் பத்திரிகையைத்தான் பழனிவேல் சொல்கிறார்.)

. தசீசங்கத்திற்கு எதிர்ப்புக் காட்டிய மற்றொருவர் கே. எஸ். அனந்தநாராயணன்.
(ஜப்பானியர் காலத்தில் நடந்த தமிழ் ஏடுகளுக்கு முதலில் ஆசிரியராக இருந்தவர். பிறகு சி. வீ. குப்புசாமி ஆசிரியரானார்.)

. நோரிஸ் ரோடில் ஆரிய சமாஜம் இருந்தது.

. 1930களில் படிக்கும் மோகம் அதிகம். ஆனந்தவிகடன் very very popular. சீர்திருத்த சங்கத் தோழர்கள் 50, 60 புஸ்தகம் வாங்கி அதைக் கொளுத்துவார்கள். தசீசங்கத்தின் நா. கிருஷ்ணசாமி இதில் முக்கியமானவர்.

. சுதேசமித்திரன், தினமணி ஆகிய தினசரிப் பத்திரிகைகளுக்கும் செல்வாக்கு அதிகம்.

. 1932ல் கலைமகள் வந்தது. தமிழ்நாடு உட்பட நான்தான் அதன் முதல் சந்தாதாரர். சந்தா நம்பர் 1. கதைகளுக்குத்தான் அது மிகவும் பிரபலம்.

. சீர்திருத்தப் போக்கு குடிஅரசு வார ஏட்டில்தான் இருந்தது. கைவல்ய சாமியார் கட்டுரை அதிகமாக வரும். கதை அறவே கிடையாது.

. கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கோ. சா சொன்னார். கதையாக இருந்தால் நல்லது. பத்திரிகையில் மூன்று column-த்துக்கு மேல் வரக்கூடாது. இது ஒரு வழி என்றார். இதற்குமுன் சீர்திருத்தக் கதைகள் என்று ஒரு form கிடையாது. கலைமகள், ஆனந்தவிகடன் கதைகளில் தென்பட்ட ஒரு form-மையும் கோ. சா எடுத்துச் சொன்ன சீர்திருத்தத்தையும் சேர்த்து ஒரு புதிய வடிவத்தை நான் கொடுத்தேன்.

. என் கதைகளுக்காகவே தமிழ் முரசு வாங்கியவர் உண்டு. வாரத்தில் ஒரு நாளில் கதை வரும். புதன்கிழமை கதை வரும் தினம். திங்கள், சனிக் கிழமைகளிலும் கதைகள் வருவதுண்டு.

. சிறுகதை எழுதிய மற்றவர்கள்.
ரெ. சீனிவாசன், டி. ஆறுமுகம், பக்ருதின் சாகிப், சி. வீ. குப்புசாமி. சண்டைக்கு முன்பு எல்லாமே சீர்திருத்தக்கதைகள்தான். கோ. சா ஒரு கதை கூட எழுதியது கிடையாது.

. புனைபெயர்கள். ரெ. சீனிவாசனுக்கு பிரம்மசாரி.
ந. பழனிவேலுக்கு நபர்.
கோ. சா குறும்பன் எனும் பெயரில் எழுதியிருக்கலாம்.

. அன்று தமிழ் முரசில் முக்கியமானவர்கள் கோ. சா, வை. இராஜரத்தினம்,
ரெ. சீனிவாசன், கிருஷ்ணசாமி.

. கோ. சா என்மீது மிகவும் அன்பு காட்டினார். கவிதை மலர்கள் நூலை அச்சடிக்க 1947ல் என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தார். எல்லாச் செலவுகளுக்கும் ரூபாய் 1,500 கொடுத்தார். நான் சென்னை போய் வந்தேன்.

. இப்ப என் கதைகளைப் படித்தால் பைத்தியக்காரத்தனமாக இருக்குது. அப்பவே நான் கடவுள் இருக்குதுன்னு சொல்லி வந்தேன். கடவுளைப் பற்றிக் கேவலமா பேச ஆரம்பிச்சாங்க. இதுவே என் எதிர்ப்புணரச்சியைத் தூண்டியது.

. நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். மார்ல்பரோ தியேட்டரில் பார்த்தேன். பாட்டெல்லாம் தமிழ். வசனமெல்லாம் தெலுங்கு.

(இந்த இடத்தில் காளிதாஸ் படத்தை சிங்கப்பூரில் பார்த்த மற்றொருவரின் அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர்தாம் அ. நா. மெய்தீன்.

1931லேயே தமிழ் பேசும் படம் சிங்கப்பூருக்கு வந்துவிட்டது. திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கட் எடுப்பது பெரும்பாடாக இருந்தது. படம் ஆரம்பிப்பதற்குப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாக முட்டு மோதல்களும் அடிதடிகளும் நடக்கும். படம் முடிந்து வெளியே வருவதென்பது பெரும் சிரமமான காரியம். இங்குத் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். ராஜலெக்ஷ்மி என்ற நடிகையும் ஒரு தெலுங்கு நடிகரும் நடித்த படம் அது. அந்தப் படம் பீச் ரோட்டிலிருந்த அல்ஹம்ரா மேடையில் திரையிடப்பட்டது. அது 3 மாதங்கள் வரை ஓடியது. அந்தப் படம் பாதி தெலுங்கு பாதி தமிழ் கலந்தது. அது மிகவும் வேகமாக ஓடிய படம். ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தின் கதை-- மரம் வெட்டினான் தாலி கட்டினான் என்பதுதான். மரத்துக்குமேலே இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டிய காளிதாஸ் இறுதியில் தாலி கட்டினான். பேசும் படத்தைப் பார்த்து நான் ஆச்சிரியப்பட்டு விட்டேன். அது பெரிய அதிசயமாக எனக்குத் தோன்றியது.
நெஞ்சில் பதிந்த நினைவுச்சுவடுகள், பக்கம் 5.)

. சிங்கப்பூரில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார் சிங்காரம். நாடகம் மூலம் சம்பாதிக்கப் பார்த்தார். ஒரு கதை கொண்டு வந்தார். ஜானி ஆலம் ஒரு முஸ்லிம் கதை. நாடகமாக்கிக் கொடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே பேரில் நாடகமாக்கினேன். 1933ல் அலெக்சாண்டிரா கூத்து மேடையில் நடந்தது. கதை பாடல் எல்லாம் நான். நன்றாக ஓடியது. காசும் வந்தது.

. இன்னொரு நாடகம். கிறிஸ்துவக் கதை இஸ்தாக்கியர். அது படு தோல்வி. வசனம் பாடல் எல்லாம் நான். நஷ்டம்.

. இதை வைத்து தசீசங்கத்தில் என்னை நாடகம் போடக் கேட்டார்கள். சங்கத்தின் நாடக சபாவுக்கு நான் தலைவர். சுகுணசுந்தரம் அல்லது ஜாதி பேதக் கொடுமை நாடகம் போட்டோம். கோ. சா இதற்கு முரசில் தலையங்கம் எழுதினார். நாடகம் நடந்த அன்றே நாடகக் கதை ஒரு சிறுகதையாகப் பிரசுரிக்கப்பட்டது முரசில்.

. கௌரி சங்கர் அல்லது கிழமணக் கொடுமை என்று மற்றொரு நாடகம். இதில் கோ. சா மேடையில் தோன்றி நடித்தார்.

. பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தையும் இங்கு நடத்தினோம்.

. கதையின் பின்னணி என்ன? அன்று சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் வேறு வேறு என்று நினைக்கவே இல்லை. சிங்கப்பூர் தனிநாடு என்ற எண்ணமே தோன்றவில்லை. இரண்டும் ஒன்றுதான்.

. கதைச் சம்பவங்கள்? நான் நேரில் பார்த்தவை பிறர் சொல்லக் கேட்டவை. கொஞ்சம் கற்பனை.

. பாரதிதாசன் நிதி திரட்டுக் குழுவுக்கு நான்தான் தலைவர். தலைவருக்குப் போட்டி நடந்தது. காமுனிஸ்ட்டுத் தோழர் எஸ். ஏ. கணபதி தோல்வி கண்டார். இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் சேர்த்து அனுப்பி வைத்தோம்.

. 1938ல் சிக்கல் ஊரில் திருமணம் நிகழ்ந்தது. ஆண் மக்கள் நால்வர். பெண் மக்கள் மூவர் உளர்.

. 1934 முதல் 1960 வரை நிறைய எழுதினேன். வானொலிக்கு மட்டும் முப்பதுக்கும் அதிகமான கதைகளை வழங்கினேன். 1965ல் கடைசிக் கதை வானொலியில் வந்தது.

. பத்திரிகையில் எழுதி சம்பாதிக்க முடியாது. இதுவரை 1962ல் தமிழ் நேசனிலிருந்து ஒரு 5 வெள்ளி வந்தது முருகு ஆசிரியராய் இருந்தபோது.
அக்கரை இலக்கியத்தில் இடம்பெற்ற மலேசியாவே மலேசியாவே வா வா கவிதைக்கு 40 ரூபாய் கிடைத்தது. யுத்தம் முடிந்த கையோடு சிங்கப்பூர் ராமகிருஷ்ணா மடம் நடத்திய பாரதிதாசன் கவிதைப் போட்டியில் முதற் பரிசாக 25 வெள்ளி பெற்றேன்.


( ந. பழனிவேலின் விரிவான இலக்கியப் பணிகள் பற்றி அறிந்துகொள்ள சிங்கப்பூர் National Library இணையத் தளத்தில் Singapore Literary Pioneers தொகுப்பில் தமிழ்ப் பிரிவில் ந. பழனிவேலு எனும் பெயரில் காண்க. )






No comments: