Sunday, September 13, 2009

சந்திப்பு 3: நா. கோவிந்தசாமி (Naa Govindasamy)உலக அரங்கில் சிங்கப்பூரின் தமிழ் முகமாகத் திகழ்ந்த நா. கோவிந்தசாமி 26 மே 1999ல் திடீரென்று காலமானார். 1946 ஏப்ரல் 14ல் பிறந்தவர். அசல் சிங்கப்பூரர். தமிழுக்காக தமிழ் பேசும் பகுதிகள் எல்லாவற்றையும் சுற்றியவர். தமிழ்க் கணினியின் தந்தை என்றெல்லாம் போற்றப்படுவதற்கு முன்னரே அவரை 1982 மே 3ல் கல்விக்கழக அலுவலகத்தில் சந்தித்தேன். மாலை நாலரை மணிமுதல் இரவு எட்டரை மணிவரை நாங்கள் பேசினோம்.. சிங்கப்பூரின் சுதந்தரத்திற்குப் பிறகு எழுத்தாளர்களிடம் ஒரு குழப்ப நிலை. ஏனெனில் 1963ல் மலேசியாவில் இணைந்தபோது உடனே மலேசிய உணர்வு. மலேசியாவை எதிர்த்த இந்தோனேசியா மீது போர்ப்பரணி பாடினார்கள் நம் கவிஞர்கள். மக்கள், எழுத்தாளர்கள் எல்லாரிடமும் இந்த உணர்வு தென்பட்டது.

. 1965ல் பிரிவினை. புதிய சூழலுக்கேற்ப சரிசெய்யும் போக்கு தேவை. 1965லிருந்து 1968/69 வரை மூன்று நான்கு வருஷம் எங்கே நிற்கிறோம் என்ற எண்ணமில்லை. அரசியல் தலைவர்களும் பிரிவினை தற்காலிகந்தான் என்ற சிந்தனையில் செயல்பட்டார்கள். இதன் பாதிப்பு மக்களிடமும் எழுத்தாளர்களிடமும் படிந்தது.

. அரசியல் தலைவர்கள் சிலர் மலேசியாவிலிருந்து வந்தவர்கள். ராஜரத்னம், தோ சின் சை, தேவன் நாயர் போன்றவர்கள். தமிழர்களும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் மலேசியாவிலிருந்து வந்தவர்கள். ஒரு வகையான குழப்ப நிலை.

. 1965 பிரிவினைக்குப் பிறகு 1966 ஆகஸ்ட் 9ல் முதல் சுதந்தர தினம். சிங்கப்பூர் வாழ்த்துப்பா பாடினார்கள் நம் கவிஞர்கள். ஆகஸ்ட் 31 வந்ததும் அதே எழுத்தாளர் மலேசிய வாழ்த்துப் பாடினார். நான்கு வருஷம் இந்த நிலை.

. பத்திரிகைகளுக்கும் இதே குழப்ப நிலைதான். தமிழ் மலர் 1964ல் இங்கு தோன்றியது. மலேசியாவில் அச்சடிப்பு. அவர்களும் அதை வளர்த்தார்கள். எழுத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலை. சே வெ சண்முகம் போன்றோர் இத்தவற்றைப் புரிந்தனர்.

. தமிழ் முரசுக்கும் இந்த நிலைதான். மலேசியாவில் பத்திரிகை உண்டு. பிரிவினை பற்றி கோ சா தலையங்கம் எழுதினார். மக்களைக் கேட்டு இணைந்தார்கள் மக்களைக் கேட்காமலே பிரிந்தார்கள் என்று.

. 1970க்குப் பிறகுதான் சிங்கப்பூர்த் தனித்தன்மை வேரூன்றத் தொடங்கியது. சிங்கப்பூர் மயமான இலக்கியம் ரேடியோவில் எழுந்தது. வானொலி அரசு இயந்திரம். கா பெருமாள் சிங்கப்பூர்ப் பாடல்கள் இயற்றினார். நூல் வந்தது. நாட்டுப்பற்றுப் பாடல் வந்தது.

. வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் சிங்கப்பூரைத் தனியாகக் காட்டவேண்டிய கட்டாய சூழல். மலேசியாவிலிருந்து வந்த மு தங்கராசு போன்றோர் Reality of separation என்ன என்று என்பதை உணர்ந்தனர்.

. தேசியதினம் வந்துவிட்டால் நாடகம், பாடல், கவிதை, கவியரங்கம் எல்லாம் சிங்கப்பூரைப் பற்றியே. Survival after பிரிவினை. இப்ப அரசாங்கம் கலைவிழா நடத்துகிறது. நாடகப் போட்டிக்கு $ 3000 வெள்ளி பரிசு. Singa ஏடும் வருகிறது. அதற்கு முன்பு சிறுகதை நாடகப் போட்டிகள் தேசிய அளவில் நடந்தன. 1974க்குப் பிறகு நான்கு மொழிகளிலும் போட்டி ஆரம்பித்தது. சிங்கப்பூரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இரண்டு சிறுகதைப் போட்டிகள் நடந்துள்ளன.

. வானொலியிலும் போட்டிகள். தற்போதைய சூழலில் படைக்க வேண்டும். அ முருகையன் நல்ல குடும்பம் படைத்தார்.

. தமிழ் முரசும் இப்படி செய்தது. அதன் முரசொலி பகுதி மாதந்தோறும் விட்டு விட்டு வரும்.

. கடந்த 3 வருஷமா நல்ல எழுத்தாளர் யாரும் முரசில் எழுதுவதில்லை. முரசு எப்போதுமே எழுத்துக்குக் காசு கொடுப்பதில்லை. (சிங்கப்பூர் மலேசியாப் பத்திரிகைகள் எல்லாமே இப்படித்தான்.) ரேடியோவில் சிறுகதைக்கு 55 வெள்ளி தருகிறார்கள். புது ஆட்கள் மட்டுமே முரசுக்கு எழுதுவார்கள். பழையவரை அங்கீகாரம் பண்ணுவதில்லை. தமிழ் முரசு செல்வாக்கு இழந்துவிட்டது. இதுவும் ஒரு காரணம்.

. 1975க்குப் பிறகு சிங்கப்பூர்ப் பற்று வலுத்துவிட்டது.

. கவிஞர்= பாடுபொருள் சிங்கப்பூர் என்றாலும் தமிழ்நாட்டுக் கவிஞர் மலேசியக் கவிஞர் போலவே எழுதவேண்டும் என்ற ஆர்வம். அவர்களே முன்மாதிரி.

. புதுக்கவிஞர்கள்= இளங்கோவன் முனைப்பாக இருக்கிறார். ஆங்கிலக் கல்வி பலம். சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர். 24 வயது.

. சிறுகதை எழுத்தாளர்கள்= ஆசிரியர்கள், நல்ல வேலையில் உள்ளவர்கள் எழுதுகிறார்கள். புது எழுத்தாளர்களும் உண்டு.

. நாவல்துறை வளரவில்லை.

தற்போதைய எழுத்தாளர்கள்.
கவிஞர்கள்= பரணன், முத்தமிழன், இக்பால், முல்லைவாணன், அமலதாசன், வனம், ந பழனிவேலு, பெரி நீல பழநிவேலன், இளமாறன்.

புனைகதை= சே வெ சண்முகம், மா இளங்கண்ணன், இராம கண்ணபிரான், ஏ பி சண்முகம், சுந்தரராசு, ந பழனிவேலு, நா கோவிந்தசாமி.

Journalist: சர்மா, மெ சிதம்பரம், எஸ் எஸ் மைதீன்.

ரேடியோ= சே வெ சண்முகம் (நாடகம், சிறுகதை)
நா கோவிந்தசாமி (நாடகம், சிறுகதை, கட்டுரை)
பொன் சுந்தரராசு (நாடகம், சிறுகதை)
வீரப்பன் லட்சுமி (நாடகம்)
கிருஷ்ணன், எம் கே நாராயணன், சந்திரன், பன்னீர்செல்வம், கலைச்செல்வன்.

. மலேசிய இலக்கியத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அநேகர் மலேசியாவில் உள்ளனர். சிங்கப்பூரில் ஒரு சிலரே.
ஒன்று கொடுத்தாலும் நாங்கள் தரமாகக் கொடுக்கிறோம். அளவைவிட தரம் முக்கியம். அங்கீகாரம் கிடைக்கவில்லை. பவுன் பரிசு மட்டும் அங்கீகாரம் இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை உண்டு அங்கு. மலேசியப் பத்திரிகைகளில் வருவது பெருமை என்று நினைத்த காலம் இருந்தது. இப்ப இல்லை. சிங்கப்பூர் இலக்கியம் மலேசியாவின் ஒரு பகுதி எனவே 1963 வரை இருந்தது.

. உதாரணம் மா இளங்கண்ணன். பவுன் பரிசு வாங்கவேண்டும் என்று விடாப்பிடியாக எழுதினார். மலேசியத் திறனாய்வாளர்கள் பவுன் பரிசு வட்டத்தையே பெரிதாக நம்புகிறார்கள்.

. மலேசியத் தமிழ் இலக்கியத்தை உயர்வாகவே கருதுகிறோம். ஒரு தாய்க்குக் கொடுக்கும் மரியாதை உண்டு.

. சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது நிரந்தரமாக வசிப்பவர்கள்.

. கவிஞர்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. வாழும் கூட்டிலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள். குடும்பம் தமிழ்நாட்டில். இரண்டு வருஷம் இருந்துவிட்டு ஊருக்குப் போவார்கள் சிலர். தொழில் IMG group (உடலுழைப்பு தொழிற்சாலை ஊழியர்கள்). பெரும்பாலும் அவர்களுக்கு ஆங்கிலப் பின்னணி கிடையாது. சிலர் விதிவிலக்கு. உதாரணம் இக்குவனம், இக்பால்.

. புனைகதை எழுத்தாளர்கள் கவிஞர்களை அதிகம் மதிப்பதில்லை. கவிஞர்கள் இந்நாட்டை அதிகம் அறிய விரும்பவில்லை என்பதும் சிங்கப்பூரின் பண்புகள் வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புனைகதை எழுத்தாளர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு. நவீன சிங்கப்பூரின் பண்புகளைக் காட்டுவதில் புனைகதை எழுத்தாளர்கள் திறமையாகச் செயல்படுகிறார்கள்.

. 1965லிருந்து சிறுகதை, நாவல், நாடகம் என எல்லா வகைகளிலும் 40க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன.

. ஏ பி சண்முகம் முடிதிருத்தும் தொழிலர். இந்தியத் தொடர்பு கொண்டவர். கப்பல் பயணத் தமிழர். அதிகமான புத்தகங்களைப் போட்டிருக்கிறார். மா இளங்கண்ணனும் நிறைய நூல்கள் வெளியிட்டிருக்கிறார். உள்ளூர் themes அதிகம் உண்டு.

. 300 படிகள் விற்றாலே பெரிய சாதனை.

. சிங்கப்பூரில் இலக்கிய எதிர்காலம்.
ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் உண்டு. உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் நாற்பதுக்கும் அதிகம். ஆசிரியர் உற்சாகம் காட்டுவதில்லை. ஆசிரியத் தொழில் சார்ந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு.

. மரபுக் கவிஞர்கள் புதிதாக உருவாகும் சூழ்நிலை இல்லை. ஒருவர் பரணனிடம் பயிற்சி பெறுகிறார். தொழில் நிபுணத்துவர்கள் எழுத்துத்துறைக்கு வருவது கிடையாது.

. சிங்கப்பூர்த் தமிழில் இலக்கண சுத்தம் கூடுதலாகத் தென்படும். நல்ல தமிழ் எழுதவேண்டும் என்ற எண்ணம் மிகுதியாக உண்டு.

. தற்போதைய கல்வித்திட்டத்தில் PreU வரை இரண்டாம் மொழி கட்டாயம். இந்தத் தமிழை வைத்து அவர்கள் continue பண்ணுவார்களா என்பது பிரச்னை.

. அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு தடவை நாடக விழா நடத்துகிறது. சே வெ சண்முகத்தின் சின்னஞ் சிறுசுகள், சர்மாவின் இரு நாடகங்கள், தழுவல் செய்யப்பட்ட இலங்கை நாடகம் இடம்பெற்றன.

. 1977லிருந்து சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இருந்து வருகிறது.

இலக்கியக் களம்.

இது 1976 டிசம்பரில் வித்திடப்பட்டது. நான் 1974 டிசம்பர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது நடைபெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இரா மோகன், சு வேங்கடராமன், அ கண்ணன் ஆகியோருடன் நான் போனேன். அந்தக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் சக்கரம் நிற்பதில்லை கதைக்குப் பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்புக்குப் பிறகு நாங்கள் பேசிக்கொணடிருந்தபோது ஓர் எண்ணம் உதித்தது. ரெ கார்த்திகேசு, அகிலன் ஆகியோரைத் தமிழ்ப் புத்தகாலயத்தில் சந்தித்தேன்.

1975 ஜுனில் அகிலன் இங்கே வந்திருந்தபோது என்னுடன் தங்கினார். அவர் அபார ஊக்கம் கொடுத்தார். நல்ல இலக்கியம் வளர்வதற்கு தரமான வாசகர் கூட்டம் அவசியம் என்பதை அகிலன் வற்புறுத்திச் சொன்னார். நல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்து ரசித்து விமர்சனம் செய்வது ஒரு நல்ல வாசகரின் இயல்பான பண்பு என்றார் அவர். அவருடைய தூண்டுதல் அதிகமாக இருந்தது.

பிறகு 1975 இறுதியில் தி ஜானகிராமன் சிங்கப்பூர் வந்தார். பேசியபோது கருத்து சொன்னார். படிப்படியாக வாசகர் கூட்டத்தை உருவாக்கினால்தான் இலக்கியம் வளரும் என்று அவரும் எடுத்துச் சொன்னார். தரமறிந்து படிக்கும் வாசகர் கூட்டம் இல்லையென்றால் இலக்கியத்தை ரசிக்கவும் முடியாது வளர்க்கவும் முடியாது என்று ஜானகிராமன் ஆணித்தரமாகக் கூறினார்.
பெரும்பாலும் வாசகர்கள் ஆழமான கதைகளைப் படிப்பதில்லை என்றாலும அதற்காக மனம் சோர்ந்துவிடக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் தமிழ் மலரில் எனக்கு ஒரு column இருந்தது. 1976 ஜுன் மாதம் முதற் கொண்டு எண்ண அதிர்வுகள் என்ற தலைப்பில் சுமார் ஓராண்டுக்கு எழுதி வந்தேன். வாசகர் தரத்தை எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி என் கருத்தை வெளியிட்டேன். முதலிலேயே கண்ணபிரான், இளங்கண்ணன், சே வெ சண்முகம், ஏ பி சண்முகம், ந பழனிவேலு, சுந்தரர்ராசு, எஸ் எஸ் சர்மா, இளங்கோவன், உதுமான் கனி முதலான நண்பர்களுடன் கலந்து பேசினேன். முகம் தெரியாதவர்க்கு அஞ்சல் வழி அனுப்பிக் கேட்டோம்.

இலக்கியக் களம் என்று பேர் வைத்து இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கூடி விவாதிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

1976 டிசம்பர் 1977 ஜனவரியில் பணி தொடங்கப்பட்டது. முதல் திறனாய்வு 1977 ஜனவரி/பிப்ரவரி கதைகளுக்கு நடந்தது. இதுவரை 1977 முடிந்து நூலாகியது. 1978 ஆண்டிறுதித் திறனாய்வை டாக்டர் தண்டாயுதம் பார்க்கிறார்.

ஒவ்வொரு திறனாய்வாளரும் 2 மாதங்களில் 4 கதைகளைத் தேர்வு செய்வார். ஓராண்டுக்கு 24 கதைகள் வரும். ஆண்டிறுதியில் ஒரு திறனாய்வாளர் 24 கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தேர்வாகும் 4 கதைகளில் ஒரு கதை சிறப்பானதாகத் தேர்வு செய்யப்பட்டு அதற்கு 30 வெள்ளி தரப்படும். இறுதிச் சுற்று ஆண்டுக் கதைக்கு எழுத்தாளரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு கேடயம் மட்டும் பரிசாக வழங்கப்படும்.

1978 அமைப்பு. டாக்டர் தண்டாயுதம் 24 கதைகளில் சிறந்த 10 அல்லது 12 கதைகளைப் பொறுக்கி எடுப்பார். 2 மாதங்களில் முதற்பரிசு பெற்றாலும் அந்தக் கதை இறுதிச் சுற்றில் இடம்பெறாமற் போகலாம்.

1977, 78, 79 ஆண்டுகளில் மலேசிய சிங்கப்பூர்க் கதைகள் யாவும் இடம்பெற்றன.

1980ல் சிங்கப்பூர்க் கதைகளை மட்டும் திறனாய்வு செய்யத் தீர்மானித்தோம். சிங்கப்பூரின் தனித்தன்மையைக் காட்ட இது உதவும். மேலும் மலேசிய இதழ்கள் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

சிலர் ஆரம்பம் முதற்கொண்டே மலேசியக் கதைகளைச் சேர்க்கவேண்டாம் என்று விரும்பினர். ஆனால் broader aspects-சை முன்னிட்டு சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.

முதல் நூல் செலவு. (1977ஆம் ஆண்டுக் கதைகள் 1981ல் நூலாகப் போடப்பட்டன. தமிழ்ப் புத்தகாலயம் ஏற்பாடு) சிங்கப்பூர்க் கதைகள் கொண்ட எழுத்தாளர் 5 பேர் ஆளுக்கு 50 வெள்ளி கொடுத்தனர். அச்சடிக்க செலவு 4100 ரூபாய். சுமார் 1000 வெள்ளி. எல்லாச் செலவையும் அச்சகத்துக்குக் கொடுத்துவிட்டோம். ஆயிரம் வெள்ளி முதலீட்டில் 500 வெள்ளி திரும்ப கிடைத்துவிட்டது. ஆயிரம் பிரதிகள். சிங்கப்பூர் மலேசியாவுக்கு 300 பிரதிகள் கொடுத்தோம். ஒவ்வோர் எழுத்தாளருக்கும் 3 பிரதிகள் அன்பளிப்பு. 300 பிரதிகளும் விற்று முடிந்தன.

இரண்டாவது தொகுப்புக்குத் திட்டம். மொத்தம் பத்து கதைகள் தேர்வானால் ஒவ்வொரு கதையாசிரியரிடம் சுமார் 100 வெள்ளி வாங்கவேண்டும்.

மூன்றாவது நூலும் காலம் தாழ்த்தாமல் வரும் என்ற உறுதி. மூன்று நூல் சாதனை அப்படி ஒன்றும் பெரிய சாதனை அல்ல.

இலக்கியக் களம் வெறும் தனிப்பட்ட உரையாடல் கூட்டந்தான். விளம்பரம் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. 1981 டிசம்பரில் சிங்கப்பூரில் முதல் நூல் வெளியிட்டபோதுதான் விளம்பரம் தெரிந்தது.

எழுத்தாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தரமான மதிப்பீட்டுடன் அச்சிடப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நூல் பரவவேண்டும் என்பதே எங்கள் ஆசை. இதுவே முதல் குறிக்கோள்.

ஆரம்பத்தில் இரு மாதத்திற்கு ஒரு முறை தனிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன. 1980க்குப் பிறகு மந்தம். கதைகளை thorough ஆகப் பேசுவோம். ஒருவருக்கு ஒரு இதழ் பிரித்துக் கொடுப்போம். அவர்கள் படித்து வடிகட்டி ஐந்து கதைகளைக் கொண்டு வருவார். அவரே ஒரு தரவரிசை போட்டு விவாதிப்பார்.

இதில் தலையாய நன்மை என்னவென்றால் விவாதம் பயனுள்ளதாக இருந்ததைச் சொல்லவேண்டும். எல்லா அம்சங்களையும் அலசிப் பார்த்தோம். விவாதம் ஆழமாக இருந்தது. சில சமயம் கதையைவிடவும் விவாதம் நன்றாக இருந்தது எனலாம்.

போலி எழுத்தாளரையும் திருட்டு எழுத்தாளரையும் கண்டு ஒதுக்கினோம். உதாரணம் எல். முத்து. ஒவ்வொரு எழுத்தாளரையும் நன்கு கவனித்தோம். ஒரு கதை எழுதினாலும் தரமாய் எழுதக் கூடியவர் யார் என்று தெரிந்தது. பேருக்கு எழுதுவோர் யார் என்று புரிந்தது. இது ஒரு முக்கியமான கணிப்பு. சிறுகதையின் முழுமையான வளர்ச்சியை நேரில் ஆழமாகத் தலையிட்டு முழு ஈடுபாட்டுடன் கணிக்க முடிந்தது.

தற்போதைய கள உறுப்பினர்கள். சர்மாவைத் தவிர 8 பேரும் அப்படியே உள்ளனர்.
நா. கோவிந்தசாமி, கண்ணபிரான், இளங்கண்ணன், ஏ. பி. சண்முகம், சே. வெ. சண்முகம், பொன் சுந்தரராசு, இளங்கோவன், உதுமான் கனி.
ந. பழனிவேலு கௌரவ உறுப்பினர்.

அந்த சமயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஆளுக்கு 5 வெள்ளி நிர்வாகச் செலவு. ந. பழனிவேலு தவிர. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கேடயம். இதுவரை மொத்த செலவு 1000 வெள்ளி.

கோலாலம்பூர் வெளியீட்டு விழாச் செலவு நண்பர்கள் ஏற்பு. 25 நூல்கள் அங்கு விற்றன. விலை ஒரு புத்தகம் 5 வெள்ளி.

சிறுகதையின் மூலம் அனைவரும் முதல் தடவையாக சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டோம். அந்தப் பிணைப்பு பொது உறவாக முகிழ்த்தது.

சிங்கப்பூர் இலக்கியத்திற்கு இலக்கியக் களம் தீவிரமாகத் தொடர்ந்து பங்காற்றும்.

எதிர்காலத் திட்டங்கள்.

1965 முதல் சிங்கப்பூரில் வந்த நூல்கள் அனைத்தையும் திரட்டி ஒரு சிறந்த நூலுக்கு 1000 வெள்ளி பரிசு தரத் திட்டம். ஒரு மதிப்பீடு evaluation நடந்து கொண்டே இருக்கிறது. இது நிச்சயம் வரும். 1982 கடைசியில் அல்லது 1983 ஆரம்பத்தில் இது நிகழும். திட்டமிட்ட தொடர்ச்சியான வளர்ச்சி இது. ஆரவாரமற்றது.

நாவல் திட்டத்தை அறிவிக்கலாம்.

புதிய எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தரவேண்டும். தனிப்பட்ட முறையில் அரங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். எழுத்தாளர் கதையை வாசிக்க வேண்டும். இலக்கியக் கள உறுப்பினர்கள் கதையைக் கேட்டுக் குறை நிறை சொல்வார்கள்.

ஒவ்வோர் உறுப்பினர் வீட்டில் ஒரு முறை அரங்கம் கூடுதல் வேண்டும்.

இலக்கியக் களத்தின் சாதனை என்ன?

. சிங்கப்பூர் எழுத்தாளர்கள் நெருங்கிப் பழகினோம். தொடர்பு வளர்ந்தது.

. மலேசியக் கதை சிங்கப்பூர் எழுத்தாளர் கதையுடன் ஒப்பிடப்படுகிறது. மலேசியாவைவிட சிங்கப்பூர்க் கதை மோசம் என்ற கருத்து உடைபட்டது.

. சிங்கப்பூரின் எழுத்து தமிழ்நாடு வரை செல்கிறது.

. எழுத்தாளர் யார்? எழுத்தாளரை நன்கு அடையாளம் காண முடிகிறது இப்போது. அவருடைய திறமை வெளிக்கொணரப்படுகிறது. சிங்கப்பூர்க் கதைகளின் பட்டியல் வருகிறது. யார் யார் எந்த எந்தக் கதையை எழுதுகிறார் என்ற விவரம் தெளிவாகிறது.

இலக்கியக் கள உறுப்பினர்கள் எப்படியும் இரண்டு மாதத்திற்கு ஒரு கதையாவது எழுத வேண்டும் என்று முடிவு செய்தோம். அதைச் சாதிக்க முடியவில்லை.


(இலக்கியக் கள முயற்சியை கடுமையாக எதிர்க்கிறார் எம் கே நாராயணன். அவருடைய கருத்தை சந்திப்பு 4: எம் கே நாராயணன் பதிவில் படியுங்கள்.)

No comments: