Wednesday, May 21, 2008

மலாயா-சிங்கப்பூர் ஆரம்ப காலக் கதைகளும் நாவல்களும் அல்லது பினாங்கில் போட்ட பிள்ளையார் சுழி



பாலபாஸ்கரன்


நம்மில் பலருக்கு இதுவரை தெரியாத கதை இலக்கிய வரலாறு இது. சரியாக 95 ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் ஒரு பத்திரிகை தோன்றியது. பெயர் பினாங்கு ஞானாச்சாரியன். முதலில் வாரம் இருமுறையாக வந்து நான்கு மாதம் கழித்து தினசரியாக மாறியது. அந்த நான்கு பக்கப் பத்திரிகையை வெளியிட்டவர் சம்சுகனி ராவுத்தர். பத்துக் கையொப்பம் வாங்கி அனுப்புகிறவர்களுக்கு ஒரு பத்திரிகை இனாமாய் தரப்படும் என்ற அறிவிப்பு முதல் பக்கத்திலேயே விடாமல் வந்தது. அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில், ஆங்கில ஏடு உட்பட எந்தப் பத்திரிகையும் வராது. அதனால் கதை கட்டுரை எல்லாமே வாரப் பத்திரிகையில்தான் இடம்பிடிக்கும். பேசும் சினிமா இன்னும் தலைகாட்டவில்லை.

1912 மார்ச் 15ல் உதயமான ஞானாச்சாரியன் தட்டுத்தடுமாறி ஒன்றரை ஆண்டு உயிர்பிழைத்தது. சென்னையிலிருந்து வித்வான் எஸ். எல். மாதவராவ் முதலியார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வந்தார்கள். அவர் நல்ல படிப்பாளி. ஆங்கிலம் தமிழ் அறிந்தவர். நாவல் புனைவதில் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர். அவர் எழுதிய சிவசாமி அல்லது நாட்டுப்புறத்தான் எனும் 64 பக்க நாவலின் நான்காம் பதிப்பு 1922ல் சென்னையில் வந்தது. முதற்பதிப்பின் விவரம் தெரியவில்லை.

மாதவராவ் முதலியார் பத்திரிகை ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் தாம் ஏற்கனவே எழுதி அச்சிடாமல் வைத்திருந்த ஒரு நாவலை ஞானாச்சாரியனில் தொடராய் வெளியிடுவதாக அறிவித்தார். முதல் இதழிலேயே முதல் பக்கத்தில் அந்த அறிவிப்பு இடம்பெற்றது.
இரத்தினமாலை அல்லது காணாமற்போன இராஜகுமாரத்தி
“இஃது எம்மால் புதிதாய் செய்யப்பெற்ற ஓர் அரிய நாவல்! தற்காலத்தில் நாவல்கள் என்று கூறப்படும் கதைகளில் இது வெகு சிறந்ததென்று இதை வாசித்த வித்வான்களால் நற்சாட்சி தரப்பெற்றது. பல கிளைக்கதைகள் ஒன்றாய்ச்சேர்ந்த ஓர் பெருங்கதை. இது வாசிக்க வாசிக்க இன்பம் தரும். இப்புத்தகம் முழுவதும் பல படிப்பினைகள் அடங்கியது. சிறுகச் சிறுகத் தொடர்ச்சியாய் சிறிது தூரம் வெளிப்படுத்துவோம். இதை வாசித்துத் திருப்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர் விலாசம் முதலியவைகளையும் எத்தனை புத்தகம் வேணுமென்பதையும் தெளிவாய் எழுதி எமக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

25, பீச் ஸ்திரீட், பினாங்கு எனும் முகவரி தரப்பட்டுள்ளது. இந்த நாவல் இரண்டு, மூன்று வாரம் வந்தது. பிறகு நின்றுவிட்டது. ஆசிரியரை மாற்றி விட்டார்கள். நம்முடைய முதல் தமிழ் நாவலின் கதை இப்படித்தான் முளையிலேயே கருகிப்போனது. இதை நம் முதல் தமிழ் நாவல் எனக் கொள்ள முடியுமா என்றும் சிலர் வினவலாம்!

நாவலை அறிமுகப்படுத்திய ஞானாச்சாரியன் புரிந்த வேறு சில முயற்சிகள் மிக முக்கியமானவை. 1913 ஜுன் 24ல் கனகாம்புஜத்திற்கும் கனகரத்தினத்திற்கும் நடந்த சம்பாஷணை எனும் உரையாடல் இடம்பெற்றது. எழுதியவர் பாஸ்கரன். இது ஒரு கற்பனைச் சம்பவம். ஆனாலும் கிட்டத்தட்ட ஒரு கதையைப் போன்றது. இத்தகைய உரையாடல்கள் அந்தக் காலத்து இதழ்களில் நிறைய வந்தன.

1913 செப்டம்பர் 2ல் ‘ஓர் கட்டுக் கதை’ என்று தலைப்பிட்டு மகோஷதன் மனைவியைத் தேர்ந்தெடுத்தல் என்ற கதை வெளியானது. பௌத்தர்களின் ஜாதகக் கதைகளை ஒட்டியது என்ற குறிப்பும், மானசி பங்காளிப் பத்திரிகையின் ஆனி மாச சஞ்சிகையிலிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலும் இருந்தன. இந்தக் கதையை எழுதியவர் பாபு வியோமகேச முஸ்தாபி. மகோஷத ராஜகுமாரனுக்கு வயது பதினாறுதான்.... எனக் கதை ஆரம்பிக்கிறது.

1913 செப்டம்பர் 10ல் தாராபாய் கதை பிரசுரமானது. தொடர் கதை என்று போடாமலேயே சில வாரங்களுக்கு இது நீடித்தது. எழுதியவர் MVS என்று ஆங்கிலத்தில் இருந்தது. எம். வி. சுந்தரேச ஐயர் என்பவரே இவர். இதே கதையை தாராபாய் (A Tale) என்ற தலைப்பில் இவர் 1917ஆம் ஆண்டில் ஈப்போவில் ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டார். 22 பக்கக் கதை அது.
தாராபாய் ஒரு புகழ்பெற்ற கதையாகத் தெரிகிறது. 1903ல் தமிழ்நாட்டின் சக்கரவர்த்தினி சஞ்சிகையில் மாணிக்ககசாமி முதலியார் என்பவர் தாராபாய் என்ற பெயரிலேயே ஒரு தொடர்கதையைப் படைத்தார். (சக்கரவர்த்தினி மகாகவி பாரதியார் நடத்திய பத்திரிக்கை அல்ல. பாரதியாரின் சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெளியானது.) எம். வி. சுந்தரேச ஐயர் பிரிட்டிஷ் மலாயா பூகோள புஸ்தகம் என்ற 173 பக்கப் பாட நூலையும் 1926ல் கோலாலம்பூரில் வெளியிட்டார்.

1913 அக்டோபர் 29ல் மாலதி 'ஒரு அருமையான நாவல், முன் தொடர்ச்சி' என்று வந்தது. முந்தைய இதழில் இது தொடங்கியிருக¢க வேண்டும். அந்த இதழ் காணக் கிடைக்கவில்லை. இந்த நாவல் முறையாக வந்ததாகத் தெரியவில்லை. சில இதழ்கள் கழித்து இது நின்றுவிட்டது. எழுதியவர் பெயரில்லை.

1915ஆம் ஆண்டில்தான் வ. வே. சு. ஐயர் இலக்கியத் தரம் வாய்ந்த முதல் தமிழ்ச் சிறுகதை என்று கருதப்படும் குளத்தங்கரை அரசமரம் கதையை விவேகபோதினி சஞ்சிகையில் இரண்டு பாகங்களாக எழுதினார். அவர் புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்ததால் மனைவி சு. பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அக்கதை பிரசுரமானது. அதன் பிறகு 1917ல் வ. வே. சு. ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பைப் புதுச்சேரியில் தாம் நிறுவிய கம்ப நிலையம் சார்பில் வெளியிட்டார். ஐந்து கதைகள் அதில் இடம்பெற்றன. 1925ல் ஐயர் காலமானார். மேலும் மூன்று கதைகளைச் சேர்த்து மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற அதே தலைப்பில் மற்றொரு தொகுப்பு 1927ல் கொண்டுவரப்பட்டது.
கதைகளைவிட ஐயர் எழுதிய முன்னுரை வரலாற்றுச் சிறப்பபானது. ‘ரீதி புதிது’ என்று, அவர் தாம் எழுதிய புதிய ரகச் சிறுகதையை வருணித்த பாங்கு அழகானது, அர்த்தமானது.

1912ல் புனைகதைத் துறைக்கு வித்வான் மாதவராவ் முதலியார் பினாங்கில் போட்ட பிள்ளையார் சுழி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

இஸ்லாமிய சாயலுடன் தொடங்கிய பினாங்கு ஞானாச்சாரியன் பதினாறு மாதம் கழித்து ஆர்வமும் துடிப்பும் மிக்க என். ஆர். பார்த்தா என்பவரின் கைக்கு மாறியது. அவர் பத்திரிகையை சுதேசமித்திரன் அளவில் மாற்றி இந்திய தேசிய உணர்வுகளுக்கு இடங்கொடுத்து, உள்ளூர் விவகாரங்களை முடுக்கிவிட்டார். ஆங்கிலத்தில் தலையங்கம் எழுதினார். அரசாங்கத்துடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டார்.

இருப்பினும் கைமுதல் இன்றி எத்தனை காலம் பத்திரிகையை நடத்த முடியும்? ஐந்து மாதத்தில் பத்திரிகை நின்றது. அச்சகத்தை ஏலத்தில் எடுத்த மற்றொரு தரப்பினர் ஞானாச்சாரியன் பெயரை ஜனோபகாரி என்று மாற்றி 1914 பிப்ரவரி மாதத்திலிருந்து பத்திரிகையை நடத்தினர். அதுவும் ஓராண்டில் நின்றது.

என். ஆர். பார்த்தாவின் முழுப்பெயர் நிர்மலானந்த ராஜா பார்த்தசாரதி நாயுடு. தஞ்சாவூர் பகுதியிலிருந்து புறப்பட்டுப் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் வழியில் 1905ம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர்களின் அவல நிலையைக் கண்டு அவர்களுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டு ஒரு கல்வி நிலையத்தை நிறுவினார். 1907ல் The Orient என்ற பெயரில் ஒரு காசு விலையில் நான்கு பக்க ஆங்கில தினசரியும், விஜயன் என்ற பெயரில் தமிழ்ப் பத்திரிகையும் நடத்தினார். எதுவும் நிலையாக நீடிக்கவில்லை. அதன்பிறகே அவர் சிங்கப்பூரைவிட்டுப் பினாங்கு சென்றார்.

ஆரம்ப காலத்தில் நூல்கள் தனியாக, சொந்தமாக அச்சடிக்கப்பட்டாலும் சிறுகதை பத்திரிகைகளையே சார்ந்து வளர்ந்தது எனலாம்.

(மலாயா - சிங்கப்பூர் வட்டாரத்தின் முதல் நூல் சிங்கப்பூர் சித்திரகவி நாவலர் வெ. நாராயணசாமி நாயகர் புனைந்த நன்னெறித் தங்கம் பாட்டு என்பதாகும். இங்குத் தமிழ் அச்சகம் இல்லாத காரணத்தால் 1868ம் ஆண்டில் அந்த 27 பக்கக் கவிதை நூல் சென்னை வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடத்தில் அடிக்கப்பட்டது. நாராயணசாமி நாயகர் இசைப்புலவர். சித்திரகவிகள் பாடுவதில் வல்லவர். 1866 மே 28ல் தத்துவபோதினி இதழில் இருந்தும் பலனென்ன ஐயையோ இறந்தும் பலனென்ன என்று தொடங்கும் அவருடைய இருபது வரிப் பாடல் பிரசுரமானதை முரசு நெடுமாறன் (மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் 1997) குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி நாயகரின் தந்தை வெள்ளையப்பு நாயகரும் ஒரு புலவர்.)

பினாங்கிலிருந்து சத்தியவான் என்று ஒரு பத்திரிகை 1919 ஏப்ரல் 7ல் உதயமானது. வாரத்திற்கு இரண்டு இதழ்கள். நான்கு பக்க ஏடு. சமயச் சொற்பொழிவு செய்யத் தமிழ்நாட்டிலிருந்து வந்த பாலகந்தகசிவம் என்பவர் இங்கேயே தங்கிச் சொந்தமாக நடத்திய பத்திரிகை அது. 1918ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்த பாதுகாவலன் என்ற மற்றொரு பினாங்கு பத்திரிகையுடன் சிவம் மற்போர் நடத்தாத குறைதான். இரண்டு பத்திரிகைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டு விரைவிலேயே மடிந்து போயின.

இதில் நமக்கு வேண்டிய தகவல் என்னவெனில், சத்தியவான், 1919 மே 26லிருந்து வஸந்தசேனா எனும் ஓர் இனிய செந்தமிழ் நாவல் தொடரை வெளியிட்டது. இதை எழுதியவர் கே. லெட்சுமணப் பிள்ளை. நாவலைப் பிரசுரிப்பதில் ஒழுங்கு தென்படவில்லை. நாவல் முற்றுப்பெறாமலே நின்றுவிட்டது.

சர்வஜனமித்திரன் 1920 ஜுன் 2ல் பினாங்கில் தோன்றிய மற்றொரு பத்திரிகை. அதனை அச்சடித்து வெளியிட்டவர் ஈ. ஏ. மரைக்கான். இதில் புனைகதை எதுவும் தென்படவில்லை என்றாலும் ‘கடிதம்’ பகுதியில் மா. மலையப்பன் நாயகனை வஞ்சித்த நாரி எனும் தலைப்பில் ஒரு தொடர் எழுதினார். பத்மாபுரி எனும் நகரில் சம்பவம் நடக்கிறது. அறுபது வயது கிழவனை 19 வயது குமரி ஏமாற்றிய கதை அது. சிறுகதை போலத் தோன்றினாலும் சிறுகதைக்குரிய விறுவிறுப்பான கதைப்பின்னலோ அழுத்தமான கதைமாந்தர் விளக்கமோ கிடையாது.

இதன்பிறகுதான் சிங்கப்பூரின் பொதுஜனமித்திரன் ஏட்டில் சில கதைகளைப் பார்க்க முடிகிறது. 1923 செப்டம்பர் 15 முதல் 1925 ஏப்ரல் 4 வரை சுமார் இருபது மாதம் நடைபெற்ற ஒரு முக்கியப் பத்திரிகை அது. தமிழ் நேசனை ஒரு கட்டத்தில் சீனர்கள் வாங்கிக் கொஞ்ச காலம் நடத்தியது வரலாறு. ஆனால் பொதுஜனமித்திரனை ஆரம்பத்தில் சீனர்களின் Jitts & Co நடத்திக் கடைசிக் கட்டத்தில் தமிழர்களிடம் ஒப்படைத்தது.

அச்சுத்துறையில் கொஞ்சம் வசதியான ஒரு கங்காணியாக (foreman) இருந்த எம். பி. கிருஷ்ணசாமி நாயுடு என்பவர் சிங்கப்பூரில் அப்போது தமிழ்ப் பத்திரிகை இல்லாத குறையைப் போக்க, நட்பின் காரணமாக சீனர்களை அணுகி உருவாக்கிய பத்திரிகைதான் பொதுஜனமித்திரன். வார இருமுறை ஏடு. எட்டுப் பக்கம். ஐந்து காசு விலை. நிறைய விளம்பரங்கள் இடம்பெற்றன. ஆசிரியர், துணையாசிரியர், அச்சுக்கோப்பாளர் பற்றாக்குறை. இருபது மாதத்தில் நான்கு ஆசிரியர்கள் மாறி மாறி வந்தனர். முதலில் வந்த ஜே. பெர்னாண்டஸ் கடைசியில் பொறுப்பேற்க வந்தபோது பத்திரிகையை மூடவேண்டியதாயிற்று.

முதல் இதழிலேயே (1923 செப்டம்பர் 15) காணாமற்போன ஞானவல்லி எனும் துப்பறியும் தொடர்கதை ஆரம்பமாகியது. கே. எக்ஸ் எழுதிய அக்கதை நான்கு இதழ்களில் முடிவுற்றது.

பின்னர் 1923 செப்டம்பர் 29ல் ஊதாரி ‘ஓர் துப்பறியும் இனிய தமிழ் நாவல்’ தொடராக ஆரம்பித்தது. இதை எழுதியவரும் கே. எக்ஸ். சில வாரங்களே இது நீடித்தது.

1924 மே 28ல் ‘நமது கதைப்பக்கம்’ என்ற பொதுத்தலைப்பில் பாவத்தின் சம்பளம் மரணம் எனும் கதை வெளியானது. சிறுகதை என்று இதற்குக் குறிப்பு இல்லையென்றாலும் கட்டுக்கோப்பான ஒரு சிறுகதையாக இதனை நிச்சயம் கருத முடியும். நீளம் அதிகமில்லை. சுமார் 400 சொற்கள். பத்மாவதி ஒரு சீர்திருத்தப் பெண். பெற்றோர் அதிக சுதந்தரம் கொடுக்கின்றனர். கல்லூரிப் படிப்பின்போது ஒருவனைக் காதலிக்கிறாள். முற்போக்குச் சிந்தனையில் கற்பைப் பறிகொடுக்கிறாள். காதல் கைகூடவில்லை. பெற்றோர் ஏற்பாடு செய்து அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி வைக்கின்றனர். கார்த்திகேய முதலியார் கணவராக வருகிறார். கற்பை இழந்துவிட்டுக் கலியாணம் புரிந்துகொண்டது தவறில்லையா, இது கணவருக்குச் செய்த துரோகம் இல்லையா என்ற சிந்தனையில் குழம்பி நிற்கிறாள். மனப்போராட்டம் முற்றுகிறது. கடைசியாகத் தற்கொலையில் பத்மாவதியின் வாழ்க்கை முடிகிறது. வளவளவென்று ஓட்டாமல் கதைநாயகியின் உள்ளப் போராட்டத்தை மட்டுமே மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது.

‘பத்மாவதி படுத்திருந்தவள் திடீரென்று விழித்துப் பார்த்தாள். அவள் மனம் ஒருவகைக் கலக்கமடைந்தது.’ என நட்ட நடுவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.
கதையின் முடிவு: "படுக்கையிலிருந்து ஒரு துண்டுக் கடிதத்தை எடுத்து வாசித்தார். அதில் ‘ நான் செய்த பாவத்திற்கு என்னை ஈடுகொடுத்துவிட்டேன். நீங்கள் வருந்தாமல் வேறு கலியாணஞ் செய்துகொண்டு இன்புற்றிருங்கள்’ " என்று எழுதப்பட்டிருந்தது.
திடுதிப்பென்று கதை முடிவதைக் காணலாம். அநாவசியமான வார்த்தையோ புலம்பலோ இல்லை.

அந்தக் காலக்கட்டத்தில் அரும்பிய சீர்திருத்தப் போக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பதை எழுத்தாளர் தெளிவாகச் சொல்கிறார். எழுதியவர் பெயர் இல்லை. எனினும் பத்திரிகையின் மூன்றாவது ஆசிரியராக அப்போது பணியாற்றிய டி. என். நடேச முதலியார் இதனை எழுதியிருக்கலாம். இவர் 1919ல் விவேகபுர வேதியர் எனும் நாவலை சென்னையில் வெளியிட்டவர். ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய The Vicar of Wakefield கதையின் தழுவல் அது. கோலாலம்பூரில் கி. நரசிம்ம ஐயங்கார் நடத்திய தமிழகம் சஞ்சிகையில் துணையாசிரியராகவும் இருந்திருக்கிறார் நடேச முதலியார்.
தமிழகம் சஞ்சிகையை நிறுவுவதில் ஐயங்காருக்கு அரும்பாடுபட்டு உதவியதாகக் கூறிக்கொள்ளும் உடுவில் வேதாரணியன் வீரகுமார் சிங்கன் என்பவர் நடேச முதலியாருக்கு முன்னதாக பொதுஜனமித்திரனின் இரண்டாவது ஆசிரியராகப் பணியாற்றி விலகிக் கொண்டவர்.
1924 மே 31ல் ‘நமது கதைப்பக்கம் பகுதியில் இடம்பெற்ற ஒரு தொடர்கதை பரோபகார அர்த்தம் இதம் சரீரம் என்பதாகும். இதற்கும் எழுதியவர் பேரில்லை. நடேச முதலியாராக இருக்கலாம். பிரெஞ்ச் எழுத்தாளர் Victor Hugo 1862ல் எழுதிய உலகப் புகழ்பெற்ற Les Miserables நாவலின் தழுவல்தான் அது. ஏழை படும் பாடு என்ற பெயரில் சுத்தானந்த பாரதியார் இதனைத் தமிழில் மொழிபெயர்த்து பர்மா சஞ்சிகை ஒன்றில் தொடராகப் படைத்தார். அது பிறகு நாவலாகவும் நூலுருப்பெற்றது. ஏழை படும் பாடு 1950ல் தமிழில் திரைப்படமாகவும் வந்தது.

1924 ஜுலை 19ல் ‘நமது கதைப்பக்கம் பகுதியில் அம்பலவாணன் எனும் தலைப்பில் ஒரு சமூகத் தொடர்கதை ஆரம்பமாகியது. உரிமை ஆசிரியருக்கே என்று போடப்பட்டிருந்தது. எழுதியவர் பெயர் இல்லையாயினும் அவர் நடேச முதலியார் என்பதில் ஐயமில்லை. அவருக்குக் கைவந்த ஒரு கலைதானே இது. நடேச முதலியார் 1924ஆம் ஆண்டில் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

அக்காலத்தில் தோன்றிய கிறித்துவ இதழ்களும் கதையைப் பயன்படுத்தியுள்ளன என்பது ஒரு சுவையான தகவல். உதய தாரகை சிங்கப்பூரில் 1923 டிசம்பர் 8ல் உதித்த ரோமன் கத்தோலிக்க மாத சஞ்சிகை. முதல் இதழில் பாலசாமியின் பணப்பை எனும் சிறுகதை கத்தோலிக்கச் சிறுவனின் நேர்மையைச் சித்திரிக்கிறது.

1924 ஜனவரி இதழில் சுமத்ரா தீவின் சூரன் அல்லது ராஜசேகரன் எனும் அருமையான தமிழ் நாவலை ‘எதிர்பாருங்கள்’ என்று அறிவித்தனர். ‘இதில் மிக்க ஆச்சரியமும் நெஞ்சு திடுக்கிடக்கூடியனவும், ஆதி முதல் அந்தம் வரையில் மனதைக் கவரக் கூடியவைகளுமான சம்பவங்கள் நிறைந்துள்ளன. பலவித நடவடிக்கைகளையுடைய பாத்திரங்களுமிருப்பதால், அநேக நீதிகளும் புத்திமதிகளும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.’ என்ற பீடிகையுடன் அது ஒரு தொடராக வந்தது.

1928 ஏப்ரல் மாதம் சிங்கப்பூரிலிருந்து வந்த மலேயா கிறீஸ்த்துவ மித்திரன் மாத சஞ்சிகையும் முதல் இதழிலிருந்தே ஒரு தொடர்கதையை ஆரம்பித்தது. ஞானபூஷணம் அல்லது தாய்சொற் தவிரா தையாநிதி அதன் தலைப்பு. ‘இச்சரித்திரம் ஞானபூஷணத்தின் பக்தியையும் நற்புத்தியையும் காட்டுகின்றன. பெரியோர் தங்கள் பிள்ளைகளை அதன் பால்யத்தில் பெரியோர் நிந்தனை, சோரம், அசத்தியம், தற்புகழ்ச்சி, கடவுள் துரோகம் என்ற பாவக் காரியங்கலில் பிரவேசிக்கா வண்ணம் நற்புத்திப் புகட்ட வேண்டும்’ என முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

முன்னேற்றம் வார இதழ் 1929 ஜனவரி 10ல் வி. எஸ். நாராயணசாமியை ஆசிரியராகவும் கோ. சாரங்கபாணியைத் துணையாசிரியராகவும் கொண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. இருபது பக்க இதழ். விலை ஐந்து காசு. வார இதழுக்கு வேண்டிய எல்லா அம்சங்களையும் தாங்கி முழுக்க முழுக்க சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து செல்வாக்குடன் விளங்கிய சஞ்சிகை அது. பலர் அதில் எழுதினர். அ. சி. சுப்பையா தமிழ் வரி வடிவ ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடரை 1933ல் முன்னேற்றத்தில்தான் முதலில் எழுதினார். பின்னர் அத்தொடர் ஈரோட்டில் 1935ல் பெரியார் ஆதரவுடன் நூலாக அச்சிடப்பட்டது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு அ. சி. சுப்பையாவின் நூலும் ஒரு தூண்டுகோல் என்பது உண்மை.

1929 டிசம்பர் 21, 22ல் ஈப்போவில் நடைபெற்ற அகில பிரிட்டிஷ் மலாயா தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று சிங்கப்பூர் வந்த பெரியார் ஈ. வே. ரா, ‘நான் இந்நாட்டிற்கு வந்து போனதற்கு ஓர் ஞாபகம் இருக்க வேண்டுமேயானால் முன்னேற்றம் சிரஞ்சீவியாய் வாழவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். 1955 வரை முன்னேற்றம் நடைபெற்றதாக ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
1929 நவம்பரிலிருந்து அ. லெட்சுமணன் ‎புனைந்த சாந்திபுரக் கொலை எனும் தொடர்கதையை முன்னேற்றம் பிரசுரித்தது. பின்னர் 1931ல் அது நூலாகவும் வெளிவந்தது.

இவ்வேளையில், தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகியவற்றின் ஆரம்பக் கதைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

1924 செப்டம¢பர் 10ல் தமிழ் நேசன் வார ஏடாகத் தொடங்கிய காலத்தில் சிறுகதைகளும் நாவல்களும் தமிழ்நாட்டில் ஏராளமாகக் குவிந்தன. ஆனால் நேசனை ஆரம்பித்து நடத்திய கி. நரசிம்ம ஐயங்கார் அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்¢லை. எட்டு ஆண்டுகள் கழித்து 1932 மே மாதம் ‘தமிழ்நேசன் கதைப்பகுதி’ என்று ஒரு பகுதி ஆரம்பமானது. அதில்தான் முதல் தடவையாக கோ. பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய தோட்டக் கொலை மர்மம் அல்லது பத்துமலைக் கள்வன் என்ற தொடர்கதை வந்தது. 1932 கடைசியிலேயே அந்தத் தொடர்கதை 87 பக்க நூலாகவும் வந்துவிட்டது.

தமிழ்நேசனின் முதல் சிறுகதை 1933 ஆகஸ்ட் 2ல் வெளியானது. ‘ஒரு வேடிக்கைக் கதை என்று சொல்லி, ஆசிரியர் நரசிம்ம ஐயங்காரே கிராமபோன் சந்தியாவந்தனம் அல்லது சுருக்கு வழி ஜெபம் எனும் கதையை வெளியிட்டார். ‘Prayer Made Easy - A Humorous Story by K. N.’ என்று ஆங்கிலத்திலும் துணைத் தலைப்பு கொடுக்கப்பட்டது. MAHA எனப்படும் மலாயாத் தோட்ட விவசாயக் கண்காட்சியை ஒட்டி தமிழ்நேசன் வெளியிட்ட சிறப்பு இதழில் அக்கதை இடம்பெற்றது. வேலையின்போது ஜெபம் செய்ய முடியமல் தவிக்கும் தாசில்தார் வேம்பு ஐயருக்கு அவருடைய நண்பர் கிராமபோன் ஒலிப்பதிவுப் பெட்டியைக் கல்கத்தாவிலிருந்து தருவித்துக் கொடுப்பதே கதையின் சாரம்.

அதே மாஹா இதழில் மூக்கந்துரையைப் பாம்பு கடித்தது - Mr Morgan Bitten by Snake எனும் கதையும் உள்ளது. ரப்பர் விலை வீழ்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருந்த காலத்தில் மூக்கந்துரை பாம்புகள் மலிந்த ஜோகூர் தோட்டத்திற்குப் போகிறார். போய் ஐந்து பாம்புகளை அடித்துவிட்டார். இரவுத் தூக்கத்தில் புரண்டு படுத்தபோது கட்டிலில் கிடந்த இடைவாரின் கொக்கி உறுத்தவே ‘பாம்பு பாம்பு’ என்று பயத்தில் அலறி ஓடுகிறார். நிலைமையறிந்து, மூக்கந்துரையை ஊருக்கு அனுப்பிவைக்கிகிறார் நண்பர்.

1935 ஜுலை 6ல் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் அதிகாரபூர்வ பிரச்சார ஏடாக மலர்ந்த தமிழ் முரசு ஓராண்டு கழித்துச் சிறுகதைகளை ஏராளமாக வெளியிடத் தொடங்கியது. முரசின் முதல் கதையை எழுதியவர் ந. பழனிவேலு. 1936 ஜுலை 16ல் இடம்பெற்ற கதை செல்லம் அல்லது சிட்டு. முரசில் எல்லாமே சீர்திருத்த வாடைதான். தஞ்சாவூர்க் கதை அது. சிட்டு அரிஜனப் பெண். பக்தவத்சல நாயுடு வீட்டில் வேலை செய்கிறாள். நாயுடுவின் மகன் தீனதயாளுவும் சிட்டுவும் காதலிக்கின்றனர். தந்தைக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மகன் காதலியுடன் ஓட்டம் பிடிக்கிறான். நாயுடு மனம் மாறுகிறார். சீர்திருத்தத் தொண்டில் இறங்கிவிடுகிறார்.

ந.பழனிவேலுவை நன்கு அறிமுகப்படுத்தும் கதையான காதற்கிளியும் தியாகக் குயிலும் 1936 அக்டோபர் 31 தொடங்கி, நவம்பர் 17 வரை நான்கு வாரம் நீடித்தது. கதை பத்து அத்தியாயங்கள் ஓடியது. ஐந்து நீண்ட பாடல்களையும் கதையில் செருகிவிட்டார் ஆசிரியர். இவையும் போதாவென்று 24 வரிக் கவிதையுடன் கதை முடிகிறது. கதைக்கு ஆசிரியர் வரைந்துள்ள முகவுரை: ‘வலிமை பொருந்திய இரண்டு காதல்கள் ஒன்றோடொன்று மோதி, ஒளிவிடுவதை இக்கதையில் காணுங்கள். சமூக நலனுக்காகவும், தன் காதலனின் சுயநலத்துக்காகவும் தன் காதலையும் உயிரையும் அர்ப்பணம் செய்த உத்தமி விசாலாட்சியின் அற்புதத்தை இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.’

ந. பழனிவேலு, எம். ஆறுமுகம், மிஸ் த. இராஜம்மா, பி. எம். கண்ணன் முதலானோர் ஆரம்ப காலத்தில் முரசில் நிறைய கதை எழுதியவர்கள்.

இத்தருணத்தில், நூலுருப் பெற்ற முதல் நாவல், முதல் கதைத் தொகுதி எது என்பதை அறிந்துகொள்ள ஆவல் எழுவது இயல்பே.

சிறுகதையைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் வல்வை வே. சின்னையா பிள்ளை சிங்கப்பூரில் 1930ல் வெளியிட்ட நவரசகக் கதா மஞ்சரி : இவை இனிய கற்பிதக் கதைகள் என்ற தொகுதியே முதன்முதலில் வந்தது என்பதை என்னுடைய கட்டுரைகளிலும் மலேசியத் தமிழ்ச் சிறுகதை (1995) எனும் நூலிலும் ஏற்கனவே தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். ஐந்து கதைகள் அடங்கிய அந்தத் தொகுதிக்கு மதிப்புரை வழங்கியவர் முன்னேற்றம் பத்திராதிபர் கோ. சாரங்கபாணி. ‘....அன்பின் பெருமையையும், வீரத்தின் மாண்பையும், மெய்மையின் உயர்வையும், ஒழுக்கத்தின் சிறப்பையும், பொய்மையின் இழிவையும் மக்கட்குத் தெள்ளென உணர்த்தும் ஐந்து கதைகளை’ ஆசிரியர் இயற்றியிருப்பதாக மதிப்புரை தெரிவிக்கிறது. பலவகையான நீதிநெறிச் செய்யுள்கள் கதைகளின் இடையே தாராளமாகப் புகுத்தப்பட்டுள்ளன. அந்தத் தொகுப்பைப் பின்தள்ளக் கூடிய எதனையும் இதுவரை நான் காணவில்லை.

வே. சின்னையா 1936ல் தமிழணங்கு அல்லது இளநகைச் சிறுமி எனும் 40 பக்க நாவலையும் சிங்கப்பூரில் வெளியிட்டார். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னே கலிங்க தேசத்தை அரசாண்டு வந்த பிள்ளைப் பேறு இல்லாத மன்னன் வில்லவராயன் பற்றிய கதை அது என்கிறார். முழுதும் கற்பனைதான். நாவல்களில் நிறைய செய்யுள்கள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே நவரச கதா மஞ்சரியில் இடம்பெற்ற இரண்டு சிறுகதைகளையும் இந்த நாவல் நூலில் சேர்த்திருக்கிறார் சின்னையா.

நாவலைப் பொறுத்தவரை அநேக புதிய தகவல்களை அண்மையில் கண்டெடுத்தேன். ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
1904ல் நாகூர் தளவாய் சின்னவாப்பு மரைக்காயர் ஹுர்முஸ் கதை எனும் பெயரில் ஒரு வரலாற்று நெடுங்கதையை சிங்கப்பூரில் வெளியிட்டார். அலெக்சாண்டர் பேரரசரின் புதல்வர் ‎ ஹுர்முஸ் இளவரசர் கூஜான் தேசத்து அரசரின்‎ தவப்புத்திரி குல் இளவரசியைக் காதலித்து மணம் ‎புரிந்துகொள்வதற்குள் படும் துன்பங்களையும் சமாளிக்கும் சூழ்ச்சிகளையும் வீர தீர சாகசங்களையும் விவரிக்கும் கதை இது. 279 பக்கம் நீள்கிறது. இந்துஸ்தானியிலிருந்து மொழி பெயர்த்ததாக சின்னவாப்பு மரைக்காயர் தெரிவிக்கிறார். மொழிபெயர்ப்பு என்றாலும் தமிழ் இலக்கிய மணம் அற்புதமாகக் கமழ்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு என்பதால் இதனை இவ்வட்டாரத்தின் முதல் நாவல் எனக் கொள்ளமுடியாது.

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் 1879ல் வந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜி. ஸி. பெடால் எழுதிய Basket of Flowers என்ற ஜெர்மன் கதை புஷ்பக்கூடை எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. வேறு சில ஆங்கில நாவல்களும் இப்படி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றையெல்லாம் தமிழின் முதல் நாவலாகக் கருத இயலாது என்று சிட்டியும் சிவபாதசுந்தரமும் (தமிழ் நாவல் 1977) கூறுகின்றனர்.
நாகூர் சின்னவாப்பு மரைக்காயர் 1908 பிப்ரவரி மாதம் அற்புதவல்லி கதை நூலையும், மார்ச் மாதம் கஸ்ஸான் கன்னிகைச் சரித்திரம் எனும் நூலையும் வெளியிட்டார். தழுவல், மொழிபெயர்ப்பு வகையாதலால் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாமற் போகிறது.

சின்னவாப்பு மரைக்காயர் ஒரு சுறுசுறுப்பான எழுத்தாளர். மூன்று கதை நூல்களைப் படைத்ததுடன் இரண்டு பத்திரிகைகளையும் அவர் சிங்கப்பூரில் நடத்தியிருக்கிறார். 1904 அக்டோபர் 7ல் உதயமானது நூருல் இஸ்லாம் எனும் தினசரி. 1905 ஆகஸ்ட் 14ல் தோன்றியது றபீக்குல் இஸ்லாம் எனும் வார இதழ். இவை தவிர வெள்ளைக்காரக் கணவன் மனைவி இருவர் இஸ்லாமிய சமயத்துக்கு மாறியதை வருணிக்கும் பிஷாரத் பாத்திமா நூலை 1912 ஆகஸ்ட்டில் பினாங்கில் வெளியிட்டார். 64 பக்கப் புத்தகம் அது.

இவற்றைத் தாண்டி வந்தால் அசல் உள்ளூர்த் தமிழ் நாவலாக வருகிறது மீனாட்சி அல்லது மலாய்நாட்டு மங்கை. 1916ல் கிளாங்கில் பிரசுரமானது. இதனை எழுதியவர் பிரபல புத்தக வணிகரும் பத்திரிக்கை ஆசிரியரும் இலக்கியவாதியுமான கா. கந்தையா பிள்ளை. 312 பக்க நாவல் அது. அக்காலத்தில் அனைவரையும் கிறங்க வைத்துக் கொண்டிருந்த கிராமபோன் இசைத்தட்டுகளை 38, ரெம்பாவ் ஸ்திரீட், கிளாங் கடையில் விற்றவர் அவர். சொந்தப் பெயரையே கடைக்கும் வைத்துக்கொண்டார்.

1915 முதல் 1921 வரை வந்த இசைத்தட்டுப் பாடல்களைத் தொகுத்து நான்கு பகுதிகளாக சங்கீதத் திரட்டு எனும் தலைப்பில் வெளியிட்டார். மூன்று பாகங்கள் கிளங்கிலும் ஒரு பாகம் கோலாலம்பூரிலும் பிரசுரம் கண்டன. 245 பக்க மலாயாச் சரித்திரம் எனும் பாட நூலையும் 1937ல் வெளியிட்டார் கந்தையா பிள்ளை.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கிளாங்கிலிருந்து வெளியான சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் எனும் பத்திரிகைக்குக் கடைசிக் கட்டத்தில் ஆசிரியராகவும் திகழ்ந்தார் எனத் தெரிகிறது. அப்பத்திரிகை 1907 வாக்கில் தொடங்கி, குறைந்த பட்சம் 1914 வரை நடந்திருக்கிறது.

ஆகவே, தற்போதைக்கு நமது நாவல் வரலாற்றைத் தொடங்கி வைப்பவள் மீனாட்சி அல்லது மலாய் நாட்டு மங்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 1916லிருந்து 1938 வரை, மலாயா சிங்கப்பூர் தொடர்பாக, குறைந்தது 25 நாவல்களாவது நூலுருவில் நம் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒழுங்காக ஆராய்வது மிகமிக அவசியம். ஏனெனில் நம்முடைய வாழ்வும் வரலாறும் பரம்பரையும் பாரம்பரியமும் அவற்றுள் ஒளிந்து கிடக்கின்றன.


(தமிழ் நேசன் சுதந்திரப் பொன் விழா மலர் 31 ஆகஸ்ட் 2007)


No comments: