Monday, May 19, 2008
பழைய பேரரசுகள் அடங்கி ஒடுங்கிவிட்டன. அமெரிக்கப் பேரரசுக்கும் அந்த கதி வந்து கொண்டிருக்கிறதா?
(வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் மே 18ல் கெவின் பிலிப்ஸ் எழுதிய கட்டுரையைப் படித்ததும் மனது மேலும் நைந்துவிட்டது. அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக உலகில் செல்வாக்கு இழந்து வருகிறது என்பது உண்மை. அதன் அரசியல், பொருளியல் போக்குகள் சரியான பாதையில் போகவில்லை என்பதை மற்ற நாடுகள் கவனித்து வருகின்றன. அதன் மகத்தான இராணுவ வலிமைகூட ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செல்லுபடியாகவில்லை. அமெரிக்காவின் பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றையெல்லாம் ஆராய்ந்து, பிரிட்டன், நெதர்லந்து, ஸ்பெயின் ஆகிய பழைய பேரரசுகள் தாங்கள் அழிவதற்குமுன் எந்தெந்தப் பிரச்னைகளைச் சந்தித்தனவோ அதே மாதிரியான பிரச்னைகளை அமெரிக்கா இப்போது சந்திப்பதாகக் கெவின் கூறுகிறார். தமிழர்கள் அனைவரும் அறியவேண்டிய ஒரு செய்தி இது.)
வீட்டை அடைமானம் வைத்துக் காசு புரட்டும் பழக்கம் கட்டுமீறி விசுவரூபம் எடுத்து அமெரிக்கர்கள் பயந்துபோய் பீதியடைந்த தருணத்தில், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன் (Alan Greenspan) கலக்கமடைந்த மக்களுக்குச் சற்று தைரியம் கொடுத்தார். 1998ன் ரஷ்யக் கடன் நெருக்கடி போலவும் 1987ன் அமெரிக்கப் பங்குச் சந்தை சீரழிவைப் போலவும் தற்போதைய குழப்பநிலை தென்படுவதாக அவர் கருத்துரைத்தார். ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை என்றார் அவர்.
பெரிய அரசியல், பொருளியல் பூகம்ப அதிர்வுகளைத் தொடர்ந்து முக்கல் முணகல்களைப் பின்னணியில் யாரும் கேட்க முடியும். ஒன்பது மாதம் கழித்து இப்போது கிரீன்ஸ்பேனின் ஆறுதலான வார்த்தைகள் நம்பிக்கை தரவில்லை என்பதை உணர்ந்துகொண்டோம். இதுவரை காணாத அளவு கடன் சுமை, மூலப்பொருள் விளைபொருள் ஆகிவற்றின் மிதமிஞ்சிய விலை, வீட்டு விலை வீழ்ச்சி, டாலரின் பலவீனம் ஆகியவற்றால் அமெரிக்கப் பொருளியல் தள்ளாடுகிறது. இதுதான் இன்றைய நிலவரம். அண்மையில் பொருளியலை நிலைப்படுத்த சில நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், 1930களுக்குப் பிறகு மிக மோசமான கட்டத்தை உலகம் விரைவில் எதிர்நோக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.
அந்த உவமானம் சரியன்று. 1930களின் மகா பொருளியல் வீழ்ச்சி போன்று எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது பங்குச் சந்தை 80 விழுக்காடு சரிந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் 25 விழுக்காடு இருந்தது. அமெரிக்காவின் உள்மாநிலங்களைவிட்டு லட்சக் கணக்கில் மக்கள் வேலைதேடி கலிபோர்னியாவுக்கு ஓடினார்கள். ஆனால் குறிப்பாக பிரிட்டன் போன்ற செல்வச் செழிப்பு மிக்க முந்தைய பேரரசுகளைச் சாய்த்த உலகப் பொருளியல் கொந்தளிப்புக்குச் சமமான ஒரு குழப்ப நிலவரத்தைத் தற்சமயம் நாம் காண்கிறோம்.
நாம் தவறான பாதையில் போகிறோம் என்று அமெரிக்கர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் நம்புகின்றனர். மற்ற நாடுகளின் வரலாறு நமக்குப் பொருத்தமானது அன்று எனக் கருதுவோர் பலர் உளர். அமெரிக்கா ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடு, கடவுள் கிருபை அதற்குண்டு என்பது அவர்களின் எண்ணம். பழைய பொருளியல் வல்லரசுகளான ரோம், ஸ்பெயின், நெதர்லந்து, பிரிட்டன் ஆகியவையும் அப்படித்தான் நம்பின. இன்றைய நியூயார்க் முன்பு நெதர்லந்து வைத்திருந்த நியூ ஆம்ஸ்டர்டம் என்ற ஊர்தான். 17ஆம் நூற்றாண்டுக் கடல் வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்தது நெதர்லந்து. அந்நாடுகளின் ஆரம்ப பலமே அவற்றின் கடைசி பலவீனமாக மாறியது. 1980 தொடங்கி இன்று இருக்கும் அமெரிக்க நிலவரம் அந்தப் பழைய ஜாம்பவான்களின் கடைசிக் கட்டச் சரிவை ஞாபகப்படுத்துகின்றன.
அந்நாடுகளின் சரிவுகளையும் அவற்றுக்கான காரணங்களையும் விவரிக்கும் நூல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் படிக்கும்போது, ஏகாதிபத்திய ஸ்பெயினும் கடல்வணிக நெதர்லந்து எனப்படும் ஹாலந்தும் தொழில்வள பிரிட்டனும் படிப்படியாக உச்சிக்குப்போய் பாதாளத்தில் விழுவதற்கு ஆறு காரணங்கள் பொதுவாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.
1. நிலவரம் சரியில்லை.. ஏதோ தவறான வழியில் செல்கிறோம் என்ற உணர்வு.
2. மாற்றார் கருத்துக்கு இடந்தராமல் சொந்தக் கொள்கையைத் தீவிரமாக வற்புறுத்தும் வெறி.
3. படை பலத்தால் சமாளிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகளை வளர்த்துக்கொள்ளுதல்.
4. வேறுபட்ட பொருளியல் கொள்கைககளின் வித்தியாசங்களை மிகைப்படுத்தித் தன் கொள்கையே சிறந்தது எனக் கருதுதல்.
5. தொழிற்துறையை ஓரங்கட்டிவிட்டு நிதித்துறை முந்திக் கொள்ளுதல்.
6. மிதமிஞ்சிய கடன்.
இந்த ஆறு அம்சங்களும் இன்றைய அமெரிக்காவில் எவ்வாறு தென்படுகின்றன என்பதை இனி காணலாம். எந்த ஒரு நாட்டிலும் மோசமான பேரழிவுகள் வரக்கூடும் என்பதை முன்னரே உணர்ந்து சொல்லும் சிலர் இருக்கவே செய்தாலும் அவர்கள் சொன்ன உடனே அப்படி எதுவும் நடந்துவிடுவதில்லை. கொஞ்ச காலம் கழித்தே அந்த மோசமான விளைவுகள் ஏற்படும். உதாரணத்திற்கு பிரிட்டனில் 1860களிலேயே சிலர், நாடு சீரழிந்து ஹாலந்து போல ஆகிவிடும் என்று அச்சப்பட்டனர். மீண்டும் 1890களில் மேலும் சிலர் ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவற்றின் தொழில்வளர்ச்சிக்கு பிரிட்டடன் ஈடுகொடுக்க முடியாது என்று ஐயம் தெரிவித்தனர். ஆயினும் 1940களில் அந்த சந்தேகங்கள் உண்மையாகின.
அமெரிக்காவிலும் முன்கூட்டியே சிலர் இவ்வாறு அச்ச உணர்வுடன் பேசினார்கள். 1968ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு தேசத்தில் ஒரு புதிய பயம் அலை அலையாகத் தோன்றி வீசியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க மேலாதிக்கம் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சிலர் குரல் எழுப்பினர்.
அதற்கு முதல் காரணம், 1968க்கும் 1972க்கும் இடையில் ஏற்பட்ட சில சம்பவங்கள். உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பும் நாணய நெருக்கடியும் சேர்ந்து நிலவரத்தை மோசமாக்கின. தென்கிழக்காசியாவில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தோற்றது. அமெரிக்க ஆதிக்கம் முடிந்துவிட்டதா என்ற தொனியில் பல ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. வாட்டர்கேட் ஊழலும் சைகோன் வீழ்ச்சியும் மற்ற சில களங்கமான நிகழ்ச்சிகள். 1980களின் பிற்பகுதியில் புத்தெழுச்சியுடன் நடைபோடத் தொடங்கிய ஜப்பான் அமெரிக்க உற்பத்தித் துறைக்கும் நிதித்துறைக்கும் சவால் கொடுத்து அதிர வைத்தது. 1991ல் அமெரிக்க அதிபர் பதவியில் ஆர்வம் காட்டிய ஜனநாயகக் கட்சியின் பால் சோங்காஸ் (Paul Tsongas), ரஷ்ய அமெரிக்கக் கெடுபிடிப் போர் முடிந்தது... ஜெர்மனியும் ஜப்பானும் ஜெயித்துவிட்டன என்றார். அப்படி சொல்லிவிட முடியாது.
2008ல் மற்றொரு ஆபத்தான பத்தாண்டுக் காலக்கட்டத்தின் கடைசிக்கு வந்திருக்கிறோம். 1997க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவான இணையத் தொழில்நுட்ப மோகமும் அந்த வெறியால் விளைந்த பேரழிவும், அதனால் உண்டான பங்குச் சந்தை வீழ்ச்சியும் தொழில்முனைப்பை பாதித்தன. 2001 செப்டம்பர் 11ல் பயங்கரவாதிகள் நியூயார்க்கில் நடத்திய தாக்குதல்கள் அமெரிக்காவை நிலைகுலைய வைத்தன. 2003ல் புஷ் நிர்வாகம் ஈராக்கில் கவனமின்றி ஆரம்பித்த நெறிமுறையற்ற தாறுமாறான போர் இன்னமும் நின்றபாடில்லை. இதன்பிறகு ஓப்பெக் நிறுவனம் எண்ணெயின் $22-$28 விலையைக் கைவிடுவதாக அறிவித்து. இன்று விலை பீப்பாய்க்கு $100ஐத் தாண்டிப் பறக்கிறது. ஈராக் சண்டை இழுபறியால் அமெரிக்காவின் மதிப்பு காற்றில் பறக்கிறது. நொறுங்கி விழும் அமெரிக்க வீட்டுச் சந்தையும் அதனால் விளைந்த கடன் குமிழியும் புதிய பிரச்னைகளைத் தோற்றுவித்தன. 2002க்குப் பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு யூரோவுடன் ஒப்பிடும்போது பாதி விழுந்துவிட்டது. ஒரு சிறு உலக நிதி நெருக்கடி உருவாகியுள்ளது என்பதில் வியப்பில்லை.
இதோ அதிர்ச்சி தரும் விஷயம். மற்றோர் உலக நெருக்கடி தலையெடுத்தால் 1970க்கும் 2020க்கும் இடைப்பட்ட அமெரிக்க அரைநூ¡ற்றாண்டு, 1950க்கு முந்தைய பிரிட்டனின் அரை நூற்றாண்டுக்குச் சமமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்காவுக்கு இது ஆகப்பெரிய பிரம்மாண்டமான மகா நெருக்கடியாக இருக்கலாம். அமெரிக்காவின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்துவிடும். வரிசையாக நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைக் கவனிக்கும்போது அது நியாயம் என்றே தென்படுகிறது. நாற்பது ஆண்டுகளாகக் கேள்விப்படும் நடுக்கந்தரும் முன்எச்சரிக்கைகள் சத்தமின்றி உண்மையாகவே போய்விடும்.
ஓங்கி உயர்ந்து தேங்கித் தாழ்ந்த முந்தைய பேரரசுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய காரணங்களுள் மிகவும் அச்சந்தரக்கூடிய ஒன்று எதுவென்றால், பொருளியல் வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக அமெரிக்கா நிதித் துறையை அதிகமாக நம்புவதுதான். இது ஆபத்தானது. 18ஆம் நூற்றாண்டில் ஹாலந்து அல்லது டச்சுக்காரர்கள், தேக்கமடைந்த தொழில்துறைகளையும் சரிந்துவரும் வாணிக நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு சமாளிக்க முடியாமல், வெளிநாடுகளுக்கும் மன்னர்களுக்கும் பெருமளவில் கடன்கொடுத்துச் சம்பாதித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் 1760களிலும் 1770களிலும் தோன்றிய தொழில் முடக்கங்களும் திவால் பிரகடனங்களும் ஹாலந்தின் பொருளியலை நசுக்கிவிட்டன. 1900களின் முற்பகுதியில் பிரிட்டனில் அமைச்சர் ஒருவர், வங்கிகளில் முதலீடுகளைப் பெருக்குவதன் மூலம் நாடு பிழைத்துவிட முடியாது என்று எச்சரித்தார். வங்கித் தொழிலால் நமக்குச் செல்வச் செழிப்பு வந்து விடாது என்றும் செல்வத்தின் காரணமாகவே வங்கித் தொழில் செழிக்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார். 1940களின் பிற்பகுதியில் இரண்டு உலகப் போர்களின் விளைவாக ஏற்பட்ட அபரிமிதமான கடன் சுமை வங்கித் தொழிலின் உண்மையான சொரூபத்தை உணர்த்தியது. பிரிட்டனின் பொருளியல் மேலாதிக்கம் அதனுடன் ஒரு முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவில் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கில், நிதிச் சேவைத் துறை 1990களின் நடுப்பகுதியில் உற்பத்தித் துறையை மிஞ்சியது. இது கவலை தரும் விஷயம். எனினும் நிதிச் சந்தையின் மீது மக்கள் காட்டிய ஆர்வத்தால் அந்த விஷயம் அடிபட்டுப்போனது. விவாதம் எதுவும் எழவில்லை. 1970களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு 25 விழுக்காடாகவும் நிதிச் சேவைத்துறையின் பங்கு 12 விழுக்காடாகவும் இருந்தன. ஆயினும் 2003/2006 பகுதியில் நிதித்துறை 20-21 விழுக்காட்டுக்கு ஏறியது. உற்பத்தித் துறை 12 விழுக்காட்டுக்கு இறங்கியது.
இதில் ஒரு பாதகமான அம்சம் என்னவெனில், 1990களிலும் 2000களிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதித்துறை அனுபவித்த நான்கு அல்லது ஐந்து விழுக்காட்டு ஏற்றத்திற்குத் தீங்கு தரக்கூடிய சில விஷமத்தனமான நடவடிக்கைகளும் சுய ஒப்பந்தச் செயல்களும் ஒரு காரணமாகும். அசாதாரணமான, வித்தியாசமான வீட்டு அடைமானப் பெருக்கம் முதன்முறையாக நிகழ்ந்தது. ஆயினும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் அந்த வீட்டுக் கடன்கள், சூதாட்டு நிலையங்களுக்கே உரித்த கற்பனையில் வெவ்வேறு புதுப் பெயர்களிலும் திட்டங்களிலும் முதலீடு செய்யப்பட்டன. நெறிமுறையின்றி வழங்கப்பட்ட கடன் காசு இக்கட்டான நெருக்கடியிலிருந்து பலருக்கு விடுதலை கொடுத்தது. 1987க்கும் 2007க்கும் இடைப்பட்ட இருபதாண்டில் அமெரிக்காவின் மொத்த கடன் 11 டிரில்லியன் டாலரிலிருந்து மளமளவென 47 டிரில்லியன் டாலருக்குத் தாவியது. இந்த சுகபோகக் கொண்டாட்டத்தில் தனியார்-நிதித்துறைகளின் கடன் பங்கு மிகக் கணிசமானது.
1980களிலும் 1990களிலும் நிதிச் சேவைத்துறையின் மீது வாஷிங்டன் அதிகமான அன்பு பாராட்டியது. ரொக்கக் கடன் வசதிகள் ஏராளமாக வழங்கப்பட்டன. நிதி நிறுவனங்கள் நொடித்துப் போனால் அவற்றை உற்சாகமாக மீட்டுக் கொடுத்தது அரசாங்கம். எதையும் சாதிக்கக்கூடிய கிரீன்ஸ்பேன், முன்னாள் நிதியமைச்சர் ராபர்ட் ரூபின், தற்போதைய நிதியமைச்சர் ஹென்றி பால்சன் ஆகியோர் நிதிச்சேவை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தத் தவறியது மன்னிக்கமுடியாத செயல். முதலீட்டுக் குமிழிகளை எல்லாரும் ஆதரித்தது போலத் தோன்றுகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விவசாயத் துறையை ஒதுக்கிவிட்டுத் தொழில்துறை முன்னுக்கு வந்ததுபோல, பொருளியல் பரிணாமத்தில் நிதிச்சேவைத் துறை அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட கம்பீரமான புதிய துறையாக முகிழ்த்துள்ளது என்று அவர்கள் கருதியிருக்கலாம்.
அடுத்த பெரிய பொருளியல் வல்லரசாக வரக்கூடிய நாடு (சீனா, இந்தியா, பிரேசில்) நிதித்துறையை முக்கியமாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கமுடியுமா?
பெரிதாக வளர்ந்துவிட்ட நிதிச்சேவைத் துறையின் உதவியால் 2008ஆம் ஆண்டு அமெரிக்கா உலகின் ஆகப் பெரிய கடன்கார நாடாக வளர்ந்துள்ளது. ஏற்றுமதியைவிட அதிகமாக இறக்குமதி செய்கிறது. மிகப் பெரிய நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. 1930களுக்குப் பிந்தைய மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படுமானால் அதன் சேதம் எவ்வளவு என்பதை மதிப்பிட முடியாது. பிரிட்டனையும் ஹாலந்தையும் ஆட்கொண்ட பொருளியல் ஆதிக்கச் சரிவு அமெரிக்காவின் அடிவான விளிம்பில் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
Kevin Phillips is the author, most recently, of Bad Money: Reckless Finance, Failed Politics, and the Global Crisis of American Capitalism.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment