Sunday, January 23, 2011

கு அழகிரிசாமியும் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களும்


கு அழகிரிசாமி (23 செப்டம்பர் 1923 – 5 ஜுலை 1970) சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை எனப் பல வடிவங்களிலும் தேர்ச்சி பெற்ற ஓர் எழுத்தாளர். இசையில் அபார ஈடுபாடும் முறையான பயிற்சியும் கொண்டவர். இடைக்காலப் பிரபந்த இலக்கியங்களில் மிகுந்த ரசனை வாய்ந்தவர். அவர் ஒரு கட்டத்தில் மலாயாவில் தமிழ் நேசன் பத்திரிகையில் பணியாற்றியவர் என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும்.

1952ல் நேசன் உரிமையாளர் மலையாண்டி செட்டியார் தமிழ்நாட்டிலிருந்து ரா வேங்கடராஜுலு நாயுடுவையும் கு அழகிரிசாமியையும் கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தார். பழுத்த பத்திரிகை அனுபவம் வாய்ந்த நாயுடு நேசனின் பிரதம ஆசிரியர். இலக்கியப் படைப்பாளி கு.அ முக்கியமாகக் கதைகளைத் தாங்கி வந்த நேசன் ஞாயிறு மலரின் பொறுப்பாளர். நாயுடு 1953ல் எலிசபெத் அரசியாரின் முடிசூட்டு விழாவைக் காண மலாயாப் பத்திரிகையாளர்களுடன் லண்டன் சென்று வந்தார். உடல் நலம் காரணமாக நாயுடு நேசனைவிட்டுப் போக நேர்ந்தபோது எழுத்தாளர் கு. அழகிரிசாமி ஆசிரியர் பொறுப்பையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டார்.

மலாயா, சிங்கப்பூர்த் தமிழ்த் தினசரியில் இந்த அளவுக்குப் பிரபலமான, திறமையான தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவர் பணியாற்ற வந்து சேர்ந்தது இதுவே முதன் முறை. இதுவே கடைசி முறையும் கூட.

முப்பது வயதில் கோலாலம்பூர் வந்த கு.அ அன்றைய மலாயாத் தமிழ் எழுத்துலகில் இனிய தென்றலாக வீசி எழுத்தாளர்கள் பலரை அன்பாலும் அரிய பண்பாலும் கவர்ந்தவர். ஏன், வசியப்படுத்தியவர் என்றுகூடச் சொல்லலாம். அவருடைய மந்திரச் சொல்லிலும் ஆளுமையிலும் கட்டுண்டு கிடந்தனர் இங்குள்ள எழுத்தாளர்கள். சி. கமலநாதன், எஸ். வி. சுப்பிரமணியன், சி. வடிவேல் போன்றவர்கள் அழகிரிசாமியையும் அவர் நடத்திய அபூர்வமான இலக்கிய வட்டம் எழுத்துப் பயிற்சியையும் ஆதங்கத்தோடு நினைவுகூர்ந்து பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதிலும் சி. கமலநாதன் அழகிரிசாமியை கிட்டத்தட்ட ஒரு கலைத் தெய்வமாகவே வணங்கினார் எனலாம்.

வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே இருக்கும் அழகிரிசாமிக்கு டொரியான் பழம் என்றால் உயிர். வந்த சில ஆண்டுகள் கழித்து இங்கேயே ஒரு பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு போன்ற பிரபந்தங்களைத் திருச்செந்தூர் சகோதரிகள் கோலாலம்பூரில் மேடையேற்றியபோதும் வானொலியில் படைத்தபோதும் அவற்றுக்கு இசைவகுத்துக் கொடுத்து உதவியவர் கு.அ. அப்பொழுது ஏற்பட்ட காதல் கலப்புத் திருமணத்தில் முடிந்தது.

தமிழ் நேசன் வேலையும் அழகிரிசாமிக்கு அலுத்துவிட்டது. மலாயாவின் இலக்கியச் சூழ்நிலையும் அவருக்கு உகந்ததாக இல்லை. இப்படி சொல்லிவிட்டுத்தான் ஐந்தாண்டு வாசத்திற்குப் பிறகு 1957ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்தோடு சென்னைக்குத் திரும்பினார் கு.அ. அவருடைய இலக்கிய தாகத்திற்குத் தமிழ் நேசன் வேலை தகுந்த தீனி போடுவதாக இல்லை எனலாம்.

இங்கிருந்தபோது மலாயா எழுத்தாளர்களைப் பற்றி அவர் அவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை. யாரும் புண்படாத வண்ணம் இதை வெளியில் சொல்லவும் அவர் தயங்கியதில்லை.

‘நீங்களெல்லாம் ஏன் ஐயா சிறுகதை இலக்கணம் தெரியாமலேயே கதை எழுத வந்துவிட்டீர்கள்’ என்பார் ஓர் ஆரம்ப எழுத்தாளரிடம். மனச்சோர்வுடன் திரும்பிச் செல்வார் புதிய எழுத்தாளர். ஆனால் மறு வாரமே அவருடைய கதை திருத்தங்களுடன் ஞாயிறு மலரில் வரும்’ என்று எழுத்தாளர் எஸ். வி. சுப்பிரமணியன் ஒரு கட்டுரையில் நினைவுகூர்கிறார்.

மாறாக, சென்னைக்குப்போய் மூன்றாண்டுகள் கழித்து சரஸ்வதி இதழில் எழுதிய மலாயாத் தமிழ் எழுத்தாளர்கள் கட்டுரையில் அவர்களைத் தாராளமாகவே புகழ்ந்து தள்ளினார். இது அவருடைய விசித்திரமான போக்கு என்பதை அக்காலத்திய முக்கிய எழுத்தாளர்கள் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். 1960 நவம்பர் மாதம், மலர் 7 இதழ் 5ல் வெளியான நான்கு பக்கக் கட்டுரையை இங்கே தருகிறேன். நம் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் படித்துச் சுவைக்கவேண்டிய வரலாற்றுத் துளி. இந்தக் கட்டுரை இல்லாமல் சிறுகதை வரலாறு இல்லை.

ஐம்பதுகளில் எழுத்தாளர் என்றால் பெரும்பாலும் சிறுகதை எழுத்தாளர்கள்தாம். அவர்களையே கு.அ. முதன்மைப்படுத்தி எழுதுவதையும் கவனிக்க வேண்டும்.

மலாயாவில் தமிழ் எழுத்தாளர்கள்

கு. அழகிரிசாமி

மலாயாவில் நாற்பது அல்லது ஐம்பது பேர் எழுதிய ஒரு கதையோ அல்லது சில கதைகளோ அந்நாட்டின் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும். அவ்வாறு எழுதியிருப்பவர்களில் சுமார் இருபது பேர் குறிப்பிடத்தக்கவர்கள்; தமிழ் எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள். இந்த இருபது பேரும் மொத்தம் முந்நூறு கதைகளாவது எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இருபது எழுத்தாளர்கள் என்பது பெரிய எண்ணிக்கையா, சிறு தொகையா என்பதை அந்நாட்டின் நிலைமைகளைக் கொண்டுதான் சொல்லவேண்டும். நான் அதைப் பெரிய எண்ணிக்கையாகவே கருதுகிறேன். மலாயாவில் இருபது எழுத்தாளர்கள் இருப்பது, தமிழ்நாட்டில் இரண்டாயிரம் எழுத்தாளர்கள் இருப்பதற்குக் சமம் என்றே சொல்லிவிடலாம்.

மலாயாவில் சுமார் ஆறு லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். சுமார் ஆயிரம் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ரப்பர்த் தோட்டங்களில் தொழிலாளர்களின் குடியிருப்புக்கு நடுவே நான்கு வகுப்புக்களோடும், ஐம்பது மாணவர்களோடும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களோடும் நடைபெற்று வருபவையாகும்.

எந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலும் ஆறாம் வகுப்புக்கு மேல் கிடையாது. ஏழாம் வகுப்பை வீட்டிலிருந்து படித்துத் தேறுவது உண்டு. அதற்குமேல் தமிழுக்கு வாய்ப்பில்லை. (சமீபத்தில் தமிழ்க் கல்விக்கு சர்வகலாசாலை வரையில் ஸ்தானம் கொடுக்கப்பட்டிருக்கிறது.) ஏழாம் வகுப்பில் தேறினால் வாத்தியார் வேலைக்கு மட்டுமே போக முடியும். அந்தப் படிப்புக்கு வேறு எந்த உத்தியோகமும் கிடைக்காது. அதனால் இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. அந்தக் குழந்தைகள் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடசாலைகளில் படித்து – சிலர் தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளாமலேயே – சீனியர் வகுப்புக்குத் தேறியதும், உத்தியோகத்துக்கு வந்து விடுகிறார்கள். வசதியுள்ளவர்களில் தாய்மொழிப் பற்றுள்ளவர்களும் உண்டு. அவர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை முற்பகலில் ஆங்கிலப் பாடசாலைக்கும் பிற்பகலில் தமிழ்ப் பாடசாலைக்கும் அனுப்பி வைப்பார்கள். பெரிய உத்தியோகங்களை அடைவதற்குத் தமிழ்ப் படிப்பு உதவி செய்யாது என்ற நிலையில், அதற்கு அந்தஸ்து இல்லாமல் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் இல்லாத ரப்பர்த் தோட்டங்களில், தொழிலாளிகளின் குழந்தைகள் வேறு வழியில்லாமல் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்குப் போவார்கள். நகரங்களில் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளே தமிழ்ப் பள்ளிக்குப் போவார்கள். அந்தஸ்து பெறாத தமிழ்க் கல்வியின் தரமும் அதைக் கற்பிக்கும் பள்ளிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமமல்ல.

அநேக தோட்டப் பள்ளிக்கூடங்கள் மாட்டுத் தொழுக்களைப் போலவே காட்சியளிக்கும். அவ்வளவு சிறிய கட்டடங்கள். இப்படிப்பட்ட பள்ளிகளில் படித்து ஏழாம் வகுப்புத் தேறியவர்களே மலாயாவின் தமிழ் எழுத்தாளர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள். ஏழாம் வகுப்போடு முடியும் அரைகுறைத் தமிழ்க் கல்வியைப் பயின்று, அருமையான சிறுகதைகளைப் படைக்கும் திறனைச் சுயமுயற்சியினால் தேடிக்கொண்ட எழுத்தாளர்கள் பத்துப் பேருக்கு மேலேயே அந்நாட்டில் இருக்கிறார்கள். மலாயாத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமைப்படவேண்டிய விஷயம் இது. நாட்டின் கல்வி நிலையைப் பார்க்கும்போது, இருபது எழுத்தாளர்கள் என்பது மிகப் பெரிய தொகை என்பதை இப்போது கண்டுகொள்ளலாம்.

மலாயாவில் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றியது சுமார் பத்து வருஷங்களுக்கு முன்புதான். அதற்கு முன்னதாக இரண்டொருவர் கதை கட்டுரைகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் பொதுப்படையாகச் சொல்வது என்றால், கடந்த பத்து வருஷ காலமாகவே அந்நாட்டில் தமிழ் இளைஞர்கள் கதைகள் எழுதி வருகிறார்கள் என்று சொல்ல வேண்டும். கதைகளை வெளியிடுவதற்கு இரண்டு பெரிய தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. ஒன்று, மலாயாவின் தலைநகராகிய கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் நேசன்; மற்றொன்று சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு. இந்த இரண்டு பத்திரிகைகளும் தொடங்கப்பெற்று முறையே சுமார் 35 வருஷங்களும் 25 வருஷங்களும் ஆகின்றன. இவை போக, வாரப் பத்திரிகைகளும் மாதப் பத்திரிகைகளும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன.

பத்து வருஷங்களுக்குமுன் மலேயாவில் சிறுகதை எழுத்தாளர்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் தமிழ் நேசன் பத்திரிகையில் திரு சுப. நாராயணன், திரு பைரோஜி நாராயணன் என்ற இருவரும் கதை வகுப்பு என்ற ஒரு பகுதியை நடத்தி வந்தார்கள். (இந்த வகுப்பு இதே பெயரிலோ வேறொரு பெயரிலோ தமிழ் முரசிலும் பிறகு நடைபெற்றதாகக் கேள்விப்பட்டேன்.­) பலரையும் எழுதச் சொல்லி, அவர்களுடைய எழுத்துக்களைப் பிரசுரித்து அவற்றிலுள்ள குறை நிறைகளைப் பத்திரிகையிலேயே சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து வந்தார்கள். கதை வகுப்பு சுமார் ஒரு வருஷம் நடந்து வந்தது. அந்த வகுப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாமல் அதைப் படித்து வந்தவர்களும் பலர். எல்லோருக்குமே கதை வகுப்பு ஒரு தூண்டுகோலாக, பால பாடமாக இருந்து உதவியது. அநேகர் கதைகளை எழுதிக் குவிக்கலாயினர். அவர்களிள் கடும் உழைப்பாலும், புத்திக் கூர்மையாலும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்தவர்கள் இருபது பேராவது இருப்பார்கள். இந்த இருபது பேரிலும் நாலைந்து பேருடைய எழுத்துக்கள் ஏதாவது ஒரு அம்சத்தில் பாராட்டத்தக்கவாறு இருந்தன. மற்றவர்கள் அந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இது கதை வகுப்பு முடிந்து இரண்டு வருஷங்களுக்குப் பிறகு இருந்த நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் -1952ல்- நான் மலாயாவுக்குப் போய்ச் சேர்ந்தேன். தமிழ் நேசன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பைத் தயாரிக்கும் முழுப் பொறுப்பும் என்னுடையதாயிற்று. ‘இந்நாட்டு எழுத்தாளர்கள் எழுதியனுப்பிய சிறுகதைகள்’ என்று நூறு நூற்றைம்பது கதைகளைக் கொண்ட ஒரு கட்டு என்னிடம் கொடுக்கப்பட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. இந்நாட்டில் கதை எழுதக்கூடியவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

நான் மலாயாவில் போய் இறங்கியபோது, அங்கே கதை எழுதுகிறவர் என்று ஒருவர் இருப்பார் என்றே நான் நினைக்கவில்லை. எதிர்பாராத ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கதைக் கட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். நூற்றைம்பது கதைகளில் ஐந்தாறைப் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்தேன். பிறவற்றைத் தள்ளிவிட்டேன். அதிலிருந்து வாராவாரம் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வந்தேன். என்னால் முடிந்த வழியிலெல்லாம் அவர்களுக்குப் பத்திரிகை வாயிலாகவும், நேரிலும் உற்சாகமூட்டி வந்தேன். நான்கு வருஷ காலத்துக்குப் பிறகு சுமார் இருபது பேர் சிறந்த எழுத்தாளர்கள் ஆவதற்குரிய திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்களுக்குத் திரும்பவும் ஒரு கதை வகுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்தேன்.

எல்லா எழுத்தாளர்களையும் ஓரிடத்தில் மாதத்திற்கு ஒரு முறை கூடும்படி செய்து கதை வகுப்பு நடத்தினால் அநேக குறைகளைக் களைந்துவிடலாம் என்று கருதினேன். இந்த அபிப்பிராயத்தை ஒருநாள் ஸ்ரீ கி. மூர்த்தி என்ற அன்பரிடம் தெரிவித்தேன். அவர் ரெயில்வேயில் பெரிய உத்தியோகம் வகிப்பவர். இலக்கியத்தில் அபாரமான ஈடுபாடு உடையவர். மலாயாவில் அவரைப்போல் புத்தகங்களை வாங்கிக் குவித்து, மேல்நாட்டு இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் நாள் தவறாமல் படித்துக் கொண்டிருப்பவர்களை நான் பார்க்கவில்லை. கி. மூர்த்தி இரண்டொரு கதைகளும் எழுதியிருக்கிறார்கள். என் அபிப்பிராயத்தைக் கேட்டதும் அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்து, ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமையன்று பிற்பகலில் தம் இல்லத்திலேயே மலாயாவின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் எழுத்தாளர்களை வரவழைத்து இலக்கிய வட்டம் என்ற பெயருடன் சிறுகதை வகுப்பு நடத்துவதற்கு ஆதரவளிக்க முன்வந்தார். மறுநாளே எல்லா எழுத்தாளர்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.

முதல் கூட்டம் 1957 ஜனவரி கடைசிச் சனிக்கிழமையன்று அவர் வீட்டில் நடந்ததாக ஞாபகம். சுமார் 30 எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். சிலர் நூறு மைலுக்கு அப்பாலுள்ள ஊர்களிலிருந்தும் ரப்பர்த் தோட்டங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.

சிறுகதையின் லட்சணங்களைப் பற்றிய ஒரு சொற்பொழிவு அன்று நடைபெற்றது. அடுத்த மாதம் கடைசி சனிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் ஓ ஹென்றியின் கதையொன்று வாசிக்கப்பட்டு எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. மற்றொரு மாதம் சிதம்பரம் சுப்ரமணியம் எழுதிய ஒரு சிறந்த கதையைப் பற்றிய விமர்சனம் நடந்தது. நல்ல சிறுகதைக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள், இருக்கக்கூடாத விஷயங்கள் எவை எவை என்பதை ஒவ்வொருவரும் தாமாக உணரத் தொடங்கினார்கள். பிறகு, மலாயா எழுத்தாளர்களின் கதைகளையே விமர்சிப்பது என்று தீர்மானித்தோம். மறுபடியும் கூட்டத்துக்கு வருவதற்குமுன் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு சிறுகதையை எழுதியனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவ்வண்ணமே பல கதைகள் வந்தன. அவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தில் வாசித்தோம். வந்திருந்த முப்பது எழுத்தாளர்களும் விமர்சனத்திலும் விவாதத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வாக்கியமுமே அலசி ஆராயப்பட்டது. வேண்டாத வளர்த்தல்கள், மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய கட்டங்கள், பாத்திர சிருஷ்டியின் குறை நிறைகள், அர்த்தமற்ற அடுக்குச் சொற்கள், விஷயத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் பாஷை நடை, எழுத்துப் பிழைகள் முதலிய எத்தனையோ விஷயங்களை ஒவ்வொருவரும் தெள்ளத் தெளிவாகக் கண்டுகொள்ளத் தொடங்கினார்கள்.

கடைசிக் கூட்டம் 1957 அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்றது. 19ஆம் தேதி நான் இந்தியாவுக்குக் கப்பல் ஏறினேன்.

மொத்தம் பத்து மாதங்களில் பத்து கூட்டங்கள் நடந்து முடிந்தன. இந்தப் பத்துக் கூட்டங்களுக்குப் பிறகு எழுத்தாளர்கள் எழுதிய கதைகளைப் பார்த்தபோது அவர்கள் அடைந்த அபார வளர்ச்சி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கதை வகுப்பில் ஆசிரியர் என்று யாரும் கிடையாது. நான் உள்பட எல்லோருமே ஆசிரியர்களாகவும், அதே சமயத்தில் மாணவர்களாகவும் இருந்தோம். மலாயாவின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றி இன்று பேசினாலும், தமிழ் நேசனில் நடந்த கதை வகுப்பையும், கி.மூர்த்தி வீட்டில் நடைபெற்ற பத்து விமர்சனக் கூட்டங்களையும் குறிப்பிடாமல் தீராது. கதை வகுப்பு இளைஞர்களை எழுதத் தூண்டியது. விமர்சனக் கூட்டமோ அவர்களை எழுத்தாளர்களாக்கி விட்டது.

வகுப்பு நடைபெற்று வந்தபோது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு மற்றொரு வாய்ப்பும் கிட்டியது. அந்நாட்டிலுள்ள தமிழ்ப் பண்ணை ஸ்தாபனத்தார் அந்த வருஷத்தில் வருஷாந்தர விழா நடத்த ஏற்பாடு செய்து, கட்டுரைப் போட்டி நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வந்தனர். நான், ‘கட்டுரைப் போட்டி வேண்டாம். சிறுகதைப் போட்டி நடத்துவோம். பரிசுகளாகப் புத்தகங்களைக் கொடுக்காமல் தங்கப் பதக்கங்களைக் கொடுப்போம்’ என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அப்படியே போட்டி நடத்தப்பெற்று ஆண்டு விழாவன்று முதல் பரிசு பெற்ற இருவருக்குத் தலா ஒன்றரைப் பவுன் தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசு பெற்ற ஒருவருக்கு ஒரு பவுன் பதக்கமும் வழங்கப்பட்டன. போட்டிக்கு வந்த கதைகள் சுமார் 30.

சில மாதங்களுக்குப் பிறகு ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் தேவன் காலமான செய்தி கிடைத்ததும், அவர் ஞாபகார்த்தமாக மற்றொரு சிறுகதைப் போட்டியைத் தம் சொந்தச் செலவில் நடத்த ஸ்ரீ கி. மூர்த்தி முன்வந்தார். தேவன் மலாயாவுக்கு வந்திருந்தபோது ஸ்ரீ மூர்த்தி அவருடைய நண்பர் ஆனார். இந்தப் போட்டிக்கு முதல் பரிசு 150 ரூபாய், இரண்டாவது 75 ரூபாய். போட்டி நடைபெற்றது. இரண்டு எழுத்தாளர்களுக்கு அந்த இரண்டு பரிசுகளையும் வழங்கினார் ஸ்ரீ மூர்த்தி.

மேற்கண்ட ஒவ்வொரு போட்டியிலும் மூர்த்தி, குணசேகர், நான் ஆகிய மூவரும் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். தமிழ்ப் பண்ணைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள்: சி. வேலுசுவாமி (கோலாலம்பூர்), ராமசாமி (பாரிட் புந்தார்), எஸ். வி. சுப்பிரமணியன் (கோலாலம்பூர்).

தேவன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள்: நாகுமணாளன் (பத்து தீகா எஸ்டேட்), எஸ். வடிவேல் (லாபு எஸ்டேட்). இந்த இருவரும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்.

மலாயா எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களுடைய எழுத்துக்களைப் பற்றிய மேலும் சில விபரங்களையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

மலாயாவின் இருபது எழுத்தாளர்களும் – குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்கள் – சிறுகதைகள் மட்டுமே எழுதுகிறவர்கள். ஒருவர் மட்டுமே விதிவிலக்காக ஒரு தொடர் நாவலும் சில ஒலிபரப்பு நாடகங்களும் எழுதியிருக்கிறார். மேற்படி இருபது பேரில் சேராத மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் ஒலிபரப்பு நாடகங்களே எழுதுபவர்; இருவர் கட்டுரைகள் மட்டுமே – அதிலும் திருக்குறளைப் பற்றிய கட்டுரைகைள் மட்டுமே – எழுதிக் கொண்டிருந்தார்கள்.

மேற்படி இருபது பேரில் ஒரு எழுத்தாளர் பெண்மணி; அவரைத் தவிர மற்றப் பெண் எழுத்தாளர்களும் சுமார் ஐவர் உண்டு.

இருபது பேரில் என் கருத்துப்படி முதல்தரமான சிறுகதை ஆசிரியர்கள், ஸ்ரீ செ. ஆலிவர் குணசேகர், பொ. சா. பரிதிதாசன், சி. வேலுஸ்வாமி, நாகுமணாளன், சி. வடிவேல், இராச இளவழகன், மு. தனபாக்கியம் ஆகியோர். தமிழ்நாட்டின் எந்தப் பத்திரிகையிலும் இடம்பெறக்கூடிய சிறுகதைகளை எழுதக்கூடியவர்கள் இவர்கள். தமிழகத்தின் பிரபலமான பத்திரிகைகளில் எழுதும் பிரபலமான எழுத்தாளர்களின் கதைகளைவிட எந்த விதத்திலும் தரத்தில் குறையாத கதைகளை இவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

செ. ஆலிவர் குணசேகரின் சிறுகதைத் தொகுதி ஒன்று நினைவின் நிழல் என்ற பெயருடன் சென்னை ஸ்டார் பிரசுராலயத்தினரால் வெளியிடப்பெற்றிருக்கிறது. இனிய, லாவகமான, பரவசம் ஊட்டுகின்ற தமிழ் நடையில் பல சிறந்த காதல் கதைகள் எழுதியிருக்கிறார். இவர் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதக்கூடியவர். ஆங்கிலப் பள்ளி ஆசிரியராகவும், பின்பு ஆங்கிலத் தினசரிப் பத்திரிகை ஒன்றின் நிருபராகவும் இருந்தவர். இப்பொழுது ஓர் ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியர்.

பொ. சா. பரிதிதாசன் – இவர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர். உருக்கமான கட்டங்களை உருக்கமான நடையில் சித்திரிப்பதில் அரிய திறமை படைத்தவர். இவர் எழுதிய பறந்து சென்ற பைங்கிளிக்கு என்ற கதை அற்புதமான கதை.

சி. வேலுஸ்வாமி தமிழ்ப் பண்ணைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மீனாட்சி என்ற சிறந்த கதையை எழுதியவர். இவரும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்.

நாகு மணாளன், சி. வடிவேல் -- இருவரும் தேவன் ஞாபகார்த்தப் போட்டியில் பரிசு பெற்ற கதாசிரியர்கள். தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்.

இராச. இளவழகன் ஓரியண்டல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றுபவர். இவருடைய கதைத் தொகுதி ஒன்று வெளிவந்தால் தமிழுலகம் நிச்சயம் வரவேற்றுப் பாராட்டும்.

மு. தனபாக்கியம் மலாயாவில் ஆங்கிலப் பள்ளி ஆசிரியையாக இருந்த யாழ்ப்பாணப் பெண்மணி. இப்போது திருமணமாகி கணவருடன் கொழும்பில் இருக்கிறார்.

சி. கோன் இவர் ஒருவர்தான் சிறுகதைகள் எழுதுவதோடு தொடர் நாவலும், நாடகங்களும் எழுதியிருக்கிறார். வலுவான தமிழ் நடையில், பரபரப்பூட்டும் சம்பவங்களை நன்கு சித்திரிப்பவர். அரசாங்கத் தகவல் இலாகாவில் ஓவியராகப் பணியாற்றுகிறார். மேடை நாடகங்களிலும் நடிக்கக்கூடியவர். இவர் ஜமைக்காவில் பிறந்து மலாயாவில் குடியேறிய தமிழர்.

சி. அன்பரசன் – தமிழ்ப் பள்ளி ஆசிரியர். அருமையான தமிழ் நடையில் எழுதக்கூடியவர்.

எஸ். வி. சுப்பிரமணியன் குடும்ப வாழ்க்கையின் சலனங்களை நன்றாகச் சித்திரிப்பவர்.

கி. மூர்த்தி இவர் எழுதிய கதைகள் மிகக் கொஞ்சம். சுந்தரராமனின் தற்கொலை என்ற கதை முதல்தரமான கதை.

சி. சோமசேகரன் புத்தக வியாபாரி. நல்ல எழுத்தாளர்.

தூதன் அச்சுக்கோக்கும் தொழிலாளி. ஹாஸ்யமாக எழுதுவதில் வல்லவர். இவர் எழுதிய லட்சியவாதி என்ற நாடகம் மேடையில் வெற்றிகரமாக நடிக்கப்பெற்றது. தமிழ்நாட்டு மேடையில் நடிக்கப்பெறும் 90 சதவிகித நாடகங்களுக்கு இணையாகச் சொல்ல வேண்டிய நாடகம் அது.

சி. கமலநாதன் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். ஹாஸ்யமாக எழுதுபவர். மலாயாவின் சூழ்நிலையைத் தத்ரூபமாகச் சித்திரிப்பவர்.

இத்தனை எழுத்தாளர்களுக்கும், பத்து வருஷ கால எழுத்து முயற்சிக்குப் பிறகு ஓரளவு சலிப்புத் தட்டியதுபோல் தோன்றியது. இதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய கதைகளுக்குப் பத்திரிகைகள் அன்பளிப்பு கொடுக்க முன்வராததுதான். மலாயா ரேடியோவில் அவ்வப்போது ஒலிபரப்பும் நாடகங்களுக்கு மிகவும் குறைந்த தொகையே – நாடகத்துக்கு 15 ரூபாய் வீதம் – சன்மானமாகக் கொடுக்கப்படுகிறது. அந்நாட்டின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது, இது மிகவும் குறைந்த தொகை. தமிழ்நாட்டில் ஐந்து ரூபாய் வாங்குவதைப் போன்றது.

வாசகர்களும் மலாயா எழுத்தாளர்களின் கதைகளைப் பாராட்டுவதில் போதிய அக்கறை காட்டவில்லை. தமிழ் நாட்டிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளே உயர்ந்த கதைகளாக இருக்க முடியும் என்ற தப்பபிப்பிராயமும் பலருக்கு இருந்து வருகிறது. அவர்கள் தங்கள் மூட பக்தியினால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவரும் மட்டமான சில கதைகளைக்கூட, மலாயா எழுத்தாளர்களின் நல்ல கதைகளைவிடச் சிறந்தனவாகக் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட சாதகமற்ற நிலைகள் மாறவேண்டும். எழுத்தாளர்களுக்கு ஊதியமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், அருமையான நவீன இலக்கியங்கள் பல அந்நாட்டில் தோன்றுவது நிச்சயம்.

இன்றைய நிலையிலும், 20 தமிழ் எழுத்தாளர்களின் 20 சிறந்த கதைகளைத் திரட்டி ஒரு தொகுப்பு வெளியிடத் தீர்மானித்தால், 2 கதைகளையாவது மலாயாவிலிருந்து தருவிக்காமல் முடியாது. மீதி 18 கதைகளில் 8 கதைகளைத் தமிழ்நாட்டிலிருந்து பொறுக்கி எடுத்தாலும் ஒன்றுதான் மலாயாவிலிருந்து பொறுக்கி எடுத்தாலும் ஒன்றுதான் என்னும்படி இருக்கும்.

இப்படி நல்ல கதைகளை சிருஷ்டிக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுடைய எழுத்துக்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிடத் தொடங்கினால், தமிழுக்குப் புதியதொரு செல்வத்தை ஈட்டும் சிரிய பணியாக இருக்கும் என்பது என் திடமான கருத்து.

ஒரு வகையில் பார்த்தால், காலம் கடந்த பிறகு, கு. அழகிரிசாமி ‘ஐஸ்’ வைத்து எழுதுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில், கு.அ சொல்வதுபோல இந்த எழுத்தாளர்கள் அந்தச் சிகரத்தை எட்டவில்லை என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. உலகப் போருக்குப் பிறகு மீண்டும் தலைதூக்கிய பத்திரிகைகள் சொந்தக் காலில் நின்று நிலைபெற தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தன. வாசகர் கூட்டம் குறைவு. எழுத்தாளர்களுக்கும் ஒரு தெளிவான பாதை இல்லை. எழுத்தில் மெருகேற நேசனையும் முரசையும் விட்டால் வேறு கதி இல்லை. எழுத்துப் பயிற்சி கொடுப்பது பத்திரிகையின் வேலை அன்று. காலத்தின் கோலத்தால் நேசனும் முரசும் அதில் ஈடுபடவேண்டியதாயிற்று.

1957ல் மலாயா சுதந்தரம் பெற்றது. அந்த ஓராண்டில் நிகழ்ந்த சில முக்கிய இலக்கியச் செய்திகளை அவற்றில் சம்பந்தப்பட்ட கு.அ மூலம் கேட்பது சுவையாகவே உள்ளது. தமிழ் நேசன் 1957 மெர்தேகா ஆண்டு மலர் கு. அழகிரிசாமியின் கைவண்ணத்தில் உருவானது. சுதந்தர மலாயாவின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் வண்ணப் படத்தை முகப்பில் போட்டு அழகு பார்த்தார் கு.அ. அந்த பாக்கியம் அழகிரிசாமிக்குக் கிடைத்தது எதிர்பாராத ஒரு நற்பேறு.

தமிழகம் திரும்பிய கு.அழகிரிசாமிக்கு வாழ்க்கை வளமாக அமையவில்லை. நோய்வாய்ப்பட்டார். இந்நிலையிலும் இலக்கியமே கதி என்று கிடந்தார். எழுதும் கை மட்டும் ஓயவில்லை. 47ஆவது வயதில் 1970ல் இறந்து போனார். காலமான சில மாதம் கழித்து அவ்வாண்டின் சாகித்திய அகாடமி பரிசு அழகிரிசாமிக்கு வழங்கப்பட்டது. அவருடைய சாதனைகள் பலதரப்பட்டவையாக இருந்தபோதிலும் அன்பளிப்பு என்ற சிறுகதைத் தொகுதியை முன்னிறுத்தியே பரிசு அளிக்கப்பட்டது. கல்கி, பாரதிதாசன் ஆகியோரைத் தொடர்ந்து காலமான பிறகு விருது பெற்ற மூன்றாவது படைப்பாளி கு. அழகிரிசாமி. தென் தமிழகத்தில் கோவில்பட்டிக்கு அருகில் இடைச்செவல் கிராமத்தில் பிறந்து அரிய சாதனை படைத்த அழியாச்சுடர் அவர்.

அதே கிராமத்தில், அழகிரிசாமிக்கு ஒரு வாரம் முன்னதாகப் பிறந்தவர் மற்றோர் இலக்கியப் படைப்பாளி கி. ராஜநாராயணன். இருவரும் இனிய தோழர்கள். ஆனால் இலக்கியப் பாதையில் அவர்களின் பயணம் வேறு திசைகளில் சென்றது. ராஜநாராயணனுக்கும் 1991ல் சாகித்திய அகாடமி பரிசு கிடைத்தது கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக. ஒரே கிராமத்தில் பிறந்த இரண்டு பேருக்கு சாகித்திய அகாடமி பரிசு கிடைத்தது இந்திய இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கும் அபூர்வ சம்பவம். இரண்டு பேருமே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதும் சற்று அபூர்வந்தான். *


No comments: