Tuesday, January 11, 2011

தப்புத் தாளங்கள்: தாளம் 1. இராம கண்ணபிரானின் அணிந்துரை



சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. (1936 - 1960, தொகுதி I). 2009. ­

தொகுப்பாளர்கள்: சுந்தரி பாலசுப்ரமணியம், யசோதா தேவி நடராஜன்.

தொகுப்பாசிரியர்: டாக்டர் சீதாலட்சுமி.

அணிந்துரை: இராம கண்ணபிரான்.

மேற்குறிப்பிட்ட நூலை தேசிய நூலக வாரியம் 2009ல் வெளியிட்டது.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் என்று தலைப்பிட்டு நூல் புனையும்போது முதற் கடமையாக அந்தக் கதைகள் எப்படிப்பட்டவை என்பதை வரையறுக்க வேண்டியது அவசியம்.

. இங்கேயே பிறந்து குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் எழுதிய கதையா?

. நிரந்தரவாசம் பெற்றவர்கள் எழுதிய கதையா?

. இரைதேடும் பறவையாக சிங்கப்பூருக்கு வந்து போன பயணத் தமிழர்கள் எழுதிய

கதையா?

. சிங்கப்பூரின் தமிழ்ப் பத்திரிகைகளிலும் மற்ற ஊடகங்களிலும் இடம்பெறும்

எல்லா நாட்டவரின் கதையுமா?

. மலேசியா, இந்தியா போன்ற வெளிநாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் பிற

ஊடகங்களிலும் இடம்பெறும் சிங்கப்பூரர்களின் கதையா?

சிறுகதை வரலாற்றைச் சிந்திக்கும்போது சிங்கப்பூரைப் போன்ற பண்பாட்டுக் கலப்பு மிக்க ஒரு நாட்டுக்கு இந்தப் பாகுபாடு அவசியம்.

நூலுக்கு அணிந்துரை எனும் பெயரில் சிறு கட்டுரையை கண்ணபிரான் பக்கம் 4, 5, 6, 7ல் எழுதியிருக்கிறார். ஓர் அடைவு நூலுக்கு முன்னுரையோ அணிந்துரையோ முக்கியம் என்றும் அதன் பயன் யாது என்றும் தமிழ் இலக்கணம் இயம்புகிறது.

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்

பாயிர மில்லது பனுவல் அன்றே

பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு

நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும்

என்பது இலக்கணம்.

நூலினை இனிது விளங்கிக் கொள்ள கண்ணபிரானின் அணிந்துரை உதவுகிறதா? இல்லை என்று சொல்வதற்குத் தயக்கமில்லை. ஏன்? காரணங்கள் சில.

ஒன்று:

சிறுகதை வளர்ச்சி நிலைகளை வருணிக்கும் கண்ணபிரான் இரண்டு கட்டங்களைச் சொல்கிறார்.

‘தொடக்க காலம் 1930 – 1949’

‘வளர்ச்சிக்குரிய காலம் 1950 – 1964’

தொடக்க காலக் கதைகள் முரசில் 1936 முதல் 1949 வரை கிடைக்கின்றன என்கிறார். ‘இக்காலகட்டத்தில் பி. எம். கண்ணன், கண முத்தையா போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளே மிகுதியாகப் பிரசுரமாகி உள்ளன. இவை தமிழகச் சூழலில் புணையப்பட்டு (புணை என்ற எழுத்துப்பிழையும் உண்டு), இரட்டைத் தலைப்புகளுடன், துப்பறியும் அம்சத்தோடு, ஜாதி ஒட்டுகளைத் தாங்கிய கதாபாத்திரங்களுடன் உலாவருகின்றன’ என்கிறார்.

தமிழகச் சூழல், இரட்டைத் தலைப்புகள், துப்பறியும் அம்சம், ஜாதிப் பெயர்கள் ஆகியவை எத்தனை கதைகளில் வருகின்றன? இவற்றுக்குக் கண்ணபிரானே போதிய உதாரணங்களைக் காட்டி சிறுகதை வரலாற்றில் அவற்றின் தாக்கத்தை விளக்க வேண்டும்.

தொடக்க காலக் கட்டத்தில் மொத்தம் 75 கதைகள் வந்ததாக நூலில் தெரிகிறது. அத்தனையும் தமிழ் முரசு கதைகள் மட்டுமே.

இவற்றுள் பி. எம். கண்ணன் எழுதியவை மூன்றே மூன்று கதைகள்.

பவழமாலை 4 மார்ச் 1941

கட்டுமரக்காரன் சொன்ன கதை 22 மார்ச் 1941

மைதிலியின் கவலை 27 மே 1941

கண முத்தையா எழுதியது ஒரே ஒரு கதை.

மறுபடியும் ஒன்றா? 23 மே 1948

தொடக்க காலக்கதைகள் 75. இவற்றுள் கண்ணனும் கண முத்தையாவும் எழுதியவை வெறும் நான்கு கதைகள் மட்டுமே. உண்மை இப்படி இருக்க இவர்களை எப்படி முதன்மைப்படுத்திப் பேசுவது? ஏன் பேசவேண்டும்?

தமிழ்நாட்டு எழுத்தாளர் என்று பார்க்கும்போது சா. குருசாமி என்பவரே (பின்னாளில் குத்தூசி குருசாமி என்று அறியப்பட்டவர்) தொடக்க காலக் கட்டத்தில் அதிகமாகக் கதை எழுதியிருக்கிறார். 25 கதைகள் அவர் புனைந்தவை. மொத்த 75 கதைகளில் மூன்றில் ஒரு பங்கு. அவருடைய பெயரைக் கண்ணபிரான் ஏன் சொல்லவில்லை?

1947 ஏப்ரல் முதல் 1949 ஏப்ரல் வரை, இரண்டே ஆண்டுகளில் சா. குருசாமி 25 கதைகள் வரை எழுதினார். அதன் பிறகு சா. குருசாமியின் கதையைக் காணோம். (இணையத்தில் தென்படும் தேசிய நூலகத்தின் சிறுகதை எழுத்தாளர் பட்டியல் அவரை சா. குருசாமி என்றும் எஸ். கே. குருசாமி என்றும் பெயரிட்டுக் கதை எண்களைக் குறித்தபோது, அவருடைய ஏழு கதைகளை விட்டுவிட்டது.) சா. குருசாமிக்கு ஓய்வில்லை கதை எழுத. அவரை முரசுக்குக் கொண்டுவர விரும்பினார் கோ. சா. ஆனால் அவர் வர விரும்பவில்லை. அவருக்கு பதிலாக சிங்கப்பூருக்கு வந்தவர்தான் வி. டி. அரசு.

அரசுவைப் பற்றிய விவரங்களையும் முரசுக்கு அவர் வர நேர்ந்த சந்தர்ப்பத்தையும் என் வலைப்பதிவில் பார்க்கலாம். சிறுகதை பற்றிய பல அரிய விஷயங்கள் உண்டு. இலக்கியக் களவாணிகளுக்கும் இலக்கியக் கடத்தல்காரர்களுக்கும் ‘அல்வா’ தான்.

http://balabaskaran24.blogspot.com/

சா. குருசாமிக்கு அடுத்தபடியாக அதிகமாகக் கதை எழுதியவர் யார் என்று பார்த்தால் ‘உள்ளூர்க்காரர்’ ந. பழனிவேலு வருகிறார். 19 கதைகள் எழுதியிருக்கிறார். ‘மறவன்’ எனும் புனைபெயரில் ஜவுளி வியாபாரி எம். டி. ஜெகதீசன் 10 படைப்புகளை எழுதினார். இவர் சிங்கப்பூர்வாசி அதாவது resident.. இவரை உள்ளூர்க்காரர் என்பதா தமிழ்நாட்டவர் என்பதா? இந்தப் பத்துப் படைப்புகளில் மூன்று மட்டுமே கதைகள். மற்றவை கட்டுரைகள். உள்ளூரோ வெளியூரோ ஆளுக்கு ஓரிரு கதை எழுதியவரே மற்றவர்கள். நிலவரம் இவ்வாறு இருக்க, பி. எம். கண்ணனையும் கண முத்தையாவையும் முனைப்பாகக் குறிப்பிட்டது தவறு அல்லவா? நூலின் உள்ளடக்கத்தைப் பார்த்து எழுதினாரா, பார்க்காமல் எழுதினாரா கண்ணபிரான்?

இரண்டு:

அடைவு நூலைத் தொகுத்தவர்களும் ஒரு மாபெரும் பிழையைச் செய்துவிட்டனர். நூலில் இடம்பெற்றிருக்க வேண்டிய முதல் கதை அவர்கள் கண்களில் தட்டுப்படவில்லை போலும். அவர்களின் கண்ணில் படாமல் போன செல்லம் அல்லது சிட்டு என்ற அந்த முதல் கதையை எழுதியவரும் ந பழனிவேலுதான். தொகுப்பாளர்களும் தொகுப்பாசிரியரும் கவனிக்காமல் விட்டுவிட்டனர். இதற்கு அணிந்துரையாளர் கண்ணபிரானைக் குற்றம் சுமத்த முடியாது.

16 ஜுலை 1936ல் ‘ஒரு சிறுகதை’ என்று விளக்கம் போட்டு அதற்குக் கீழே ‘செல்லம் அல்லது சிட்டு’ கதையை எழுதினார் ‘ந. பழனிவேலு’. சிட்டு அரிஜனப் பெண். பக்தவத்சல நாயுடு வீட்டில் வேலை செய்கிறாள். நாயுடுவின் மகன் தீனதயாளும் சிட்டுவும் காதல் வயப்படுகின்றனர். தந்தைக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காதலியுடன் ஓட்டம் பிடிக்கிறான் மகன். நாயுடு மனம் மாறி மருமகளை ஏற்றுக்கொள்கிறார். சீர்திருத்தத் தொண்டிலும் இறங்கிவிடுகிறார். இந்தக் கதைக்குப் பிறகுதான் 25 ஜுலை 1936ல் அடைவுநூல் அடையாளம் காட்டும் முதல் கதையான சீதா தேவியின் சுயசரிதை இடம்பெறுகிறது.

ந பழனிவேலு 1934ல் கோலாலம்பூரிலிருந்து வந்த பாரதமித்திரன் ஏட்டுக்கு கிராமக் காட்சி எனும் சீர்திருத்தக் கதையை அனுப்பியிருந்தார். இதுதான் அவருடைய முதல் கதையும்கூட. பணக்கார இளைஞன் தன் செல்வத்தையெல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்குவது கதை.

(தமிழ் முரசில் எப்படி சீர்திருத்தக் கதைகள் நுழைய ஆரம்பித்தன? தமிழ் முரசு ஆசிரியர் கோ. சாரங்கபாணி தெரிவித்த யோசனையின் அடிப்படையில் ந பழனிவேலு எவ்வாறு சீர்திருத்தப் பாணி கதைகளைப் படைத்தார் என்பது சிறுகதை வரலாற்றுப் பாடம். அந்த விவரத்தையும் என் வலைப்பதிவில் படித்துப் பாருங்கள்.)

‘மறவன்’ என்பவர் எழுதிய படைப்புகளில் அவருடைய கனகராஜன் கண்ட உண்மை எனும் சிறுகதையும் நூல் அடைவில் இடம்பெறக் காணோம்.19 செப்டம்பர் 1940ல் பிரசுரமானது. ஆசாரசீலரான ஒரு வியாபாரியைப் பகுத்தறிவு வாதம் எப்படி ஈர்த்தது என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

நான் அறிய, முதல் முப்பது கதைக்குள்ளேயே இரண்டு கதைகள் விடுபட்டுப் போயுள்ளன. இந்தப் போக்கைப் பார்த்தால் தொகுப்பாளர்கள் மேலும் சில / பல படைப்புகளை கவனக்குறைவாகவோ அவசரம் காரணமாகவோ பார்க்காமல் போயிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

மூன்று:

கண்ணபிரானின் அணிந்துரைக்கு வருவோம்.

‘முப்பது நாற்பதுகளில் இடம்பெற்ற தமிழ் முரசின் கதையங்கத்தில் உள்ளூர் எழுத்தாளர்களாகப் பளிச்சிடுகிறவர்கள் ந பழநிவேலுவும், சுப நாராயணனும் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, இங்கே குடியேறி இம்மண்ணின் படைப்பிலக்கியத்தில் காலூன்றியவர்கள்’ என்கிறார் கண்ணபிரான்.

ந பழனிவேலு காலூன்றியவர். சரிதான். சுப நாராயணன் பளிச்சிடுகிறாரா? இந்த அடைவு நூலில் சுப நாராயணன் எழுதிய ஒரே ஒரு கதையாக இடம்பெறுவது 23 ஜனவரி 1949ல் வந்த விதவையின் காதல். இளம் விதவை ஒருத்தி முஸ்தபாவைக் காதலித்து மணப்பதுதான் கதை. முதலில் சிவப்புக் கொடி தூக்கிய தந்தை கடைசியில் பச்சைக் கொடி காட்டுகிறார். அவ்வளவுதான். சுப நாராயணன் ஒரு தீவிர விமர்சகரே தவிர திறமையான கதையாசிரியர் அல்லர்.

நான்கு:

சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் என்று நூலுக்குப் பேர் வைத்துவிட்டுத் தமிழ் முரசின் கதைகளை மட்டும் போடவேண்டிய நோக்கம், தேவை என்ன? முரசுக்கு முந்திய கதைகளும், மற்ற ஏடுகளில் வந்த முரசின் சமகாலக் கதைகளும் என்ன ஆயின? ஏன் அவற்றைச் சேர்க்கவில்லை? ஒருக்கால், முரசு தவிர்த்த, மற்றக் கதைகள் எதுவும் இல்லையா? அல்லது இந்த நூல் தமிழ் முரசின் கதைகளை மட்டும் கொண்ட நூலா? விளக்கம் இருந்தால் நல்லது.

அணிந்துரையில் 1930ல் வந்த ஒரு சிறுகதை நூலைக் குறிப்பிட்டு அதையும் கோ. சாரங்கபாணியின் கண்ணோட்டத்திலேயே காண்கிறார் கண்ணபிரான். சாரங்கபாணி என்ன சொன்னார் என்ற விவரமும் இல்லை. அந்தக் கதைகள் என்ன ஆயின? ஏன் அவற்றை அடைவு நூலில் சேர்க்கவில்லை? 1930ல் வெளியான சிங்கப்பூர்ச் சிறுகதைகள் என்றால் எவ்வளவோ வரலாற்று முக்கியத்துவம் உள்ளதே!

ஐந்து:

அணிந்துரைக்கு மீண்டும் வருவோம்.

‘சிங்கப்பூர்ச் சிறுகதை எழுத்தாளர்களாக ந. பழநிவேலு, எம். கே. பக்ருதீன் சாகிப், முகிலன், சே. வெ. சண்முகம், மு சு குருசாமி, பாக்கியசிற்பியன், மா ஜெகதீசன், சிங்கை நிமலன், பி பி காந்தம், புதுமைதாசன், ரா நாகையன், எம் கே நாராயணன், ஐ உலகநாதன், அ ரெசுவப்பா, மு தங்கராசன், இராம கண்ணபிரான் முதலியோரும் தமிழ் முரசின் கதைப்பண்ணையில் வளர்க்கப்பட்டுச் சிறுகதையின் தொடக்கக்கால வரலாற்றில் உள்ளூர் எழுத்துலக அணியைப் பிரதிநிதித்தனர்’ என்கிறார் கதைசொல்லி கண்ணபிரான்.

முதலியோர் என்ற சொல் மிக முக்கியமானது. ஆகியோர் என்ற சொல் போடப்படவில்லை. முதலியோர் என்பதால் இவர்கள்தாம் முதல்வர்கள். மற்றவர்கள் இவர்களுக்குப் பிந்தியவர்கள் என்பது அர்த்தம். ஆகியோர் என்றால் இவர்களோடு சரி. இவர்களுக்குப் பிறகு யாரும் இல்லை என்பது அர்த்தம்.

கண்ணபிரான் வரையறுக்கும் ‘சிறுகதையின் தொடக்கக்காலம்’ எது என்பதை முன்னரே பார்த்தோம். தெளிவுக்காக மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்வோம். ‘இங்குள்ள சிறுகதை வரலாற்றை 1930 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு முடிய தொடக்கக்காலமாகவும், 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1964 ஆம் ஆண்டுவரை வளர்ச்சிக்குரிய காலமாகவும் பகுக்கலாம் என்கிறார்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது மேற்கண்ட எழுத்தாளர்கள் எல்லாரும் கண்ணபிரான் கூறுவதுபோல ‘தொடக்கக்கால’ எழுத்தாளர்களா? 1930 முதல் 1949 வரை எழுதியவர்களா? பட்டியலில் சொல்லப்படும் பதினாறு பேரில் ந. பழனிவேலு ஒருவரே தொடக்கக்கால எழுத்தாளர். இரண்டாவது காலக்கட்டத்தில்கூட அவர் எழுதுகிறார். அவரைத்தவிர மற்றப் பதினான்கு பேர் இரண்டாவது காலக்கட்டத்துக்கு உரியவர்கள். பட்டியலில் எஞ்சியிருக்கும் கடைசி நபரான இராம கண்ணபிரான் இரண்டு காலக்கட்டத்துக்கும் உரியவர் அல்லர் என்று நூல் காட்டுகிறது. ஆகவே, கண்ணபிரானின் பெயருக்கு அங்கே என்ன வேலை? எந்த முகாந்தரமும் இல்லாமல் தம் பெயரைக் கண்ணபிரான் சேர்த்துக்கொண்டது ஏன்?

மேலும், ‘சிறுகதையின் தொடக்கக்கால வரலாற்றில் உள்ளூர் எழுத்துலக அணியை இவர்கள் (இந்தப் பதினாறு பேர்) பிரதிநிதித்தனர்’ என்று சொல்வதும் மிகப் பெரிய தவறு. ஏன் தவறு என்பதற்கு இந்தப் பதினாறு பேரும் எத்தனை கதை எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். 1960 வரைதான் நூல் பட்டியல் போடுகிறது. 1964 வரை அன்று. கண்டிப்பாக 1964 வரை உள்ள கதைகளை இந்த அடைவு நூலில் சேர்த்திருக்க வேண்டும். அவற்றைத் தேடி எடுக்க காலமோ பொறுமையோ இல்லை போலும்.

பெயருக்குப் பிறகு காணப்படும் முதல் எண் தொடக்க காலத்திலும், இரண்டாவது எண் அடுத்த காலக்கட்டத்திலும் எழுதிய கதைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றன.

ந. பழநிவேலு 19 ------ 9

எம். கே. பக்ருதீன் சாகிப் 0 ------- 1

முகிலன் 0 -------- 2

சே. வெ. சண்முகம் 0 -------- 2

மு. சு. குருசாமி 0 --------- 8

பாக்கியசிற்பியன் (மா. பக்கிரிசாமி) 0 -------- 3

மா. ஜெகதீசன் 0 -------- 3

சிங்கை நிமலன் 0 --------- 1

பி. பி. காந்தம் 0 -------- 3

புதுமைதாசன் (பி. கிருஷ்ணன்) 0 -------- 7

ரா. நாகையன் 0 -------- 3

எம். கே. நாராயணன் 0 --------- 1

ஐ. உலகநாதன் 0 --------- 2

அ. ரெசுவப்பா 0 --------- 5

மு. தங்கராசன் 0 ---------- 5

இராம கண்ணபிரான் 0 ---------- 0

உள்ளூர் எழுத்துலக அணியைப் பிரதிநிதித்தவர்கள் எத்தனை கதை எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? 74 கதைகள். இவைதாம் சுதந்தரத்துக்கு முந்திய சிங்கப்பூர்ச் சிறுகதையின் வரலாறு என்று உணர்த்துகிறாரா கண்ணபிரான்?

மலாயாவிலிருந்து எழுதியவர்களே அநேகர். மலாயா எழுத்தாளர்களின் ஆரம்ப கால வரலாற்றுக்குத் தமிழ் முரசு மிக முக்கிய ஆவணம்.

1936 முதல் 1960 வரை என்று போடப்பட்டுள்ள அடைவு நூலில் தென்படும் கதைகளின் மொத்த எண்ணிக்கை 602. இவற்றுள் உள்ளூர் எழுத்துலக அணியைப் பிரதிநிதித்தவர்கள் புனைந்த கதைகள் 74 மட்டுமே. இந்த 74ல் மொத்தம் 28 கதைகளை (38%) படைத்தவர் ந பழனிவேலு.

இந்த 1936 – 1960 காலக் கட்டத்தில் மிக அதிகமாகக் கதை எழுதிய எழுத்தாளர் தமிழ்நாட்டின் வல்லிக்கண்ணன் ஆவார். 1952 அக்டோபர் முதல் 1955 பிப்ரவரி வரையிலான இரண்டரை ஆண்டில் அவர் எழுதித் தள்ளிய கதைகள் சுமார் எழுபது.

முரசின் துணையாசிரியர் அ. முருகையன் 1953 மார்ச் முதல் 1955 அக்டோபர் வரை, 20 கதைகள் எழுதியிருந்தார். அவர் உள்ளூர் எழுத்தாளர் அணியைப் பிரதிநிதிக்கவில்லையா? முரசைவிட்டுப் போய் சிங்கப்பூர் வானொலி தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைவராகவும், பிறகு வானொலி இந்தியப் பகுதியின் தலைவராகவும் இருபது ஆண்டுகள் பணியாற்றி 1981ல் ஓய்வு பெற்றவர் அவர்.

ஒரு வேளை அடைவு நூலில் இடம்பெறாத 1961 – 1964 கதைகளில் தாம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில் கண்ணபிரான் தம் பெயரையும் சேர்த்துக் கொண்டிருப்பாரோ? அப்படி நினைத்திருந்தால் அது அநீதி அல்லவா? ஏனெனில் அவரைப்போல இளம் எழுத்தாளர்கள் பலர் இந்த 1961 – 1964 கட்டத்தில் புதிதாகத் தலையெடுத்து இருப்பார்கள் அல்லவா? அவர்களை விட்டுவிட்டுத் தன் பெயரை மட்டும் கண்ணபிரான் எப்படி போட்டுக் கொள்ள முடியும்?

ஆறு:

‘மறவன்’ எனும் புனைபெயரில் நூலில் காணும் 9 படைப்புகளில் இரண்டு மட்டுமே கதைகள். மற்ற ஏழும் நான் கேட்ட வரலாறு – பாரதியைப் பற்றி எனும் பொதுத்தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றே தோன்றுகிறது. அடைவு நூலில் இவற்றைக் கதைகளாகச் சேர்த்திருக்க வேண்டிய தேவையில்லை. ‘மறவன்’ என்பவர் புதுச்சேரி, சென்னை, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் ஜவுளி வர்த்தகம் நடத்திய எம் டி ஜெகதீசன் பிரதர்ஸ் உரிமையாளரான எம் டி ஜெகதீசன் ஆவார். புதுச்சேரி வட்டாரத்தைச் சேர்ந்த அவர் அங்கு வாழ்ந்த கவிஞர் பாரதிதாசனை நேரில் அறிந்தவர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1910 முதல் 1918 வரை புதுச்சேரியில் தலைமறைவாக வசித்ததால் அவருடன் பழகிய பலர் 1940களில் இன்னமும் உயிரோடு இருந்தனர். அவர்கள் மூலமாகக் கேட்ட செய்திகளைத்தான் ‘மறவன்’ தமிழ் முரசில் எழுதினார். ஜப்பானிய ஆக்கிரமிப்பு ஆரம்பிப்பதற்குமுன் ஜுலை 1941ல் தாயகத்திற்குத் திரும்பிவிட்டார் ‘மறவன்’. இவர் எழுதிய கனகராஜன் கண்ட உண்மை எனும் சிறுகதை, அடைவு நூலில் விடுபட்டுப் போனதை மேலே இரண்டு எனும் பத்தியில் குறிப்பிட்டுள்ளேன்.

ஏழு:

நூலின் முன் அட்டையில் தமிழ் மலர், பின் அட்டையில் ஜனோபகாரி, தமிழ் நேசன், சிங்கை நேசன் ஆகிய பத்திரிகைகளின் தலைப்புகள் (mast heads) போட்டிருப்பது ஏன்? இந்தப் பத்திரிகைகளிலிருந்து ஒரு கதைகூட நூலில் இடம்பெறவில்லை. தமிழ் மலர் 1964 மார்ச் முதல் தேதி சிங்கப்பூரில் வெளியானது. 1914 பிப்ரவரி 2 முதல் வந்த ஜனோபகாரி , 1924 செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கிய தமிழ் நேசன் ஆகிய இரண்டும் மலாயா ஏடுகள். சிங்கை நேசன் 1887 ஜுன் 27ல் ஆரம்பித்தபோது சிறுகதை பற்றிய உணர்வே தமிழில் தலையெடுக்காத காலம்.

அடைவு நூலுக்கு உதவியாக, யார் யார் எத்தனை கதைகள் எழுதினார்கள் என்பதற்கு சிறுகதை எழுத்தாளர் பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனி போல தகவல்கள் உண்டு. இந்த அட்டவணையே இல்லாவிட்டாலும்கூட அடைவு நூலைக்கொண்டே வேண்டிய விவரங்ளை வேண்டிய கோணத்தில் திரட்டிக் கொள்ள இயலும். நிலவரம் இப்படி இருக்க ஏன் கண்ணபிரான் ஆதாரமில்லாத கருத்துகளைக் கூற வேண்டும்? பிழையான இந்தக் கூற்றுகளில் என்ன சாரம் உள்ளது? நம் சிறுகதை வரலாற்றுக்கு அவற்றின் பயனும் முக்கியத்துவமும் என்ன? வேறு யாரும் இந்தப் பிழைகளைக் கவனிக்கவில்லையா? அல்லது பரவாயில்லை என்று சமரசம் செய்து கொண்டு, பொருட்படுத்தாமல், புறக்கணித்து விட்டார்களா? கதைகளின் விவரம் தெளிவாகவே இருக்க, கண்ணபிரானுக்குக் குழப்பம் எப்படி வந்தது? விவரங்களைப் பார்க்காமல் அணிந்துரை எழுத வேண்டிய அவசியம் என்ன?

தடி எடுத்தவன் தம்பிரான் எனும் வகையில், ஆராய்ச்சி என்ற பெயரில் அள்ளித் தெளித்த அவசரக் கோல அணிந்துரையை யார் பெரிதாகக் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமா? முதன் முதலாக ஓர் அடைவு நூலில் தமிழ்ச் சிறுகதை வரலாற்றைப் பதிவு செய்வதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு வீணாகிவிட்டது. இந்தக் குறைகளை என்னால் செரிக்க முடியவில்லை. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு நேர்ந்த ஓர் அவமானமாகவே இதைக் கருதுகிறேன்.

No doubt, Mr Kannabiran’s incomplete presentation is an affront and awkward embarrassment to Tamil scholarship in Singapore.

சீதாலட்சுமியும் முன்னுரையும்

நூலுக்கு முன்னுரை எழுதிய தொகுப்பாசிரியர் டாக்டர் சீதாலட்சுமி, ‘இந்நூலில் காணப்படும் சிறப்புகள் அனைத்துக்கும் இதற்கு உதவிய அனைவரும் காரணமாவர். இதில் தென்படும் குறைகளுக்கு நான் பொறுப்பாவேன் என்றும் அத்தகைய குறைகளைத் தாங்கள் காரண காரியத்துடன் சுட்டிக்காட்டும்போது அவற்றை அடுத்த பதிப்பில் சரிசெய்வேன் என்பதுடன் தொடரும் பதிப்புகளை இன்னும் சிறப்பாக வடிவமைப்போம்’ என்று கூறுகிறார். குறைகள் நிச்சயம் தென்படும் என்ற முடிவுக்கு சீதா வந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இவ்வாறு முன்ஜாமீன் வாங்கித் தற்காத்துக்கொள்வது இலக்கிய அழகு அன்று. ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் இவ்வாறு முன்ஜாமீன் வாங்குவதில்லை எழுத்தாளர்கள். ஆராய்ச்சியை முடித்துவிட்டு வாசகர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறார்கள்.

கண்ணபிரானின் அணிந்துரையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். அது எத்துணை அலசலாக, ஆழமில்லாமல், விஷயமின்றி இருக்கிறது என்பதைக் கண்கூடாகத் தெரிந்து கொள்ளலாம். தொகுப்பாளர்கள் இன்னும் எதையாவது விட்டுவிட்டார்களா என்பதையும் கண்டறியுங்கள். கற்க கசடறக் கற்பவை என்றும் கல்விக்கழகு கசடற மொழிதல் என்றும் கற்றிருக்கிறோம். கசடு இல்லாத அடுத்த பதிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எழுத்துப் பிழைகளையும் சற்றுத் திருத்திவிடுங்கள்.

சிங்கப்பூர் / மலேசியச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பத்திரிகைகள் எல்லாவற்றுக்கும் தெளிவான வரலாறுகள் உள்ளன. இவை பல இடங்களில் ஒளிந்தும் மறைந்தும் பதுங்கியும் கிடக்கின்றன. அதுதான் உண்மை. இவற்றைக் கண்டுபிடித்துத் தேடி எடுப்பதற்கு இடையறாத உழைப்பும் முயற்சியும் தேவை. இருட்டறையில் கைவிளக்கைப் பிடித்துக் கொண்டு தேடுவதுதான் உண்மையான ஆராய்ச்சி.

அடைவு நூல் அருமையான முயற்சி. ஆனால் பல கோளாறுகள் தென்படுகின்றன. சுட்டிக் காட்டியதுபோல ந பழனிவேலுவின் முதல் சிறுகதை சேர்க்கப்படவில்லை. கட்டுரைகள் சிலவற்றைக் கதையாகச் சேர்த்துவிட்டார்கள். யார் எத்தனை கதை எழுதினர் என்பதில் குழப்பம் உண்டு. தமிழ் முரசு கதைகள் மட்டும் சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் ஆகிவிடாது. முரசுக்கு முன்னரே வந்த கதைகளைச் சேர்க்காமல் விட்டது ஏனோ தானோ என்ற மெத்தனப் போக்கின் அறிகுறி.

நூலுக்கு அறிமுகம் அவசியம். அதற்குக் கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பு விரயமாகிவிட்டது. நூலில் இடம்பெறும் கதைகளின் போக்கையோ அவற்றைப் புனைந்த கதையாசிரியர்களின் திறனையோ சிங்கப்பூரின் உண்மையான சிறுகதை வரலாற்றையோ கண்ணபிரானின் அணிந்துரை கொஞ்சம்கூடப் பிரதிபலிக்கவில்லை. பெரிய ஏமாற்றம். பிரதிபலிப்பு சரியில்லை என்பது மட்டும் புகார் அன்று. தவறான விஷயங்களை ஆராய்ச்சியின் முடிபாகப் புலப்படுத்துவதும் அச்சில் பதிப்பிப்பதும் பெரும் பிழை அன்றோ?

நானும் நூலைப் படித்துவிட்டுப் பொருட்படுத்தாமல்தான் இருந்தேன். ஆயினும் மறுபடியும் மறுபடியும் இந்த அடைவு நூலைப் புரட்டும்போதெல்லாம் அதன் களங்கமும் கறையும் கண்ணையும் நெஞ்சையும் உறுத்திக் கொண்டே இருக்கின்றன. எத்தனையோ தப்புத் தாளங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இனி வரும் அரங்கேற்றங்களாவது சுருதி சுத்தமாக இருக்கவேண்டும் என்ற நியாயமான ஆசையின் விளைவே என்னுடைய புகார்ப்படலம். என்னைப் போன்ற வாசகர்களுக்கு நீங்கள் சொல்லத் தீர்மானித்துவிட்ட விஷயங்களும் தகவல்களும் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது என் தார்மீக, சட்டபூர்வ உரிமை.

இந்தத் திருவள்ளுவன் இருக்கிறானே அவன் எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் கைகொடுக்கும் ஓர் அதிசயப் பிறவி. அவன் சொன்ன ஒரு குறள் ஞாபகத்திற்கு வருகிறது. ஆராய்ச்சியாளர்களும் தொகுப்பாளர்களும் நினைவில் கொள்வது அவசியம்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். (517)

‘இந்தத் தொழிலை, இக்கருவியால், இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.’ (மு. வ. திருக்குறள் தெளிவுரை)

செயல், கருவி, கர்த்தா ஆகிய மூன்றுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறான் வள்ளுவன்? ஆளைத் தேர்ந்தெடுப்பதற்கே முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று யோசனை சொல்கிறான். அதன்பிறகே ஆய்வாளன் உண்மையான ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். #

No comments: