Tuesday, December 7, 2010

சி வீ குப்புசாமியும் மலாயாத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடும்


1955 அக்டோபர் 29ஆம் தேதி கோலாலம்பூரின் சீன அசெம்பிளி மண்டபத்தில் மலாயா சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் முதல் மாநாடு ‘கோலாகலமாக’ நடைபெற்றது. தமிழ்க் கலை மன்றத்தினர் அதற்கு ஏற்பாடு செய்தனர். தமிழர் நடத்தும் மன்றம், சங்கம் என்றால் அதில் இருப்பவர்க்குத் தீவிரமான விருப்பு வெறுப்பு கண்டிப்பாக இருக்கும் அல்லவா? அதை மாநாட்டில் காண முடிந்ததில் வியப்பேதும் இல்லை. அந்த மாநாட்டின் தலைவர் 40 வயது சி வீ குப்புசாமி. தமிழ் எழுத்தாளர்க்கென சங்கம் அமைப்பதில் தீவிர முயற்சி செய்து அச்சங்கத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர். அப்போது அவர் தகவல் இலாகா பிரசுரித்த தமிழ் ஏடுகளின் பிரதம ஆசிரியாகச் செயற்பட்டார்.

( ஜப்பானியர் ஆதிக்க காலத்தின்போதே 1943ல் மலாயா சிங்கப்பூர் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜப்பானிய ராணுவ நிர்வாக செய்தித் துறை முக்கிய எழுத்தாளர்களை மலாயாவின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று முக்கிய இடங்களை நேரில் பார்த்து நாட்டின் மறுசீரமைப்புப் பற்றிக் கட்டுரைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டது. அதற்கிணங்க சி வீ கு ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேரா, பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுக்குப் போய் வந்து யுவபாரதம் வார இதழில் மலாய் நாட்டுப் புனர் நிர்மாணம் எனும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். )

1950-51ல் தமிழ் நேசனில் கதை வகுப்பு நடத்திய கந்தசாமி வாத்தியாராகிய சுப நாராயணன் எழுத்தாளர் மாநாடும் நடத்திவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். ஆயினும் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அவரைப் பிடிக்காத கலை மன்றத்தினர் சி வீ குப்புசாமி, தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி, மா ராமையா முதலியோரைக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கிவிட்டு முதல் ‘மாநாடு’ நடத்தினர். வரவேற்புக் குழுத் தலைவர் அ தினகரன்.

மாநாட்டுத் திறப்பாளராகிய மா ராமையா மாநாட்டின் லட்சணத்தைத் தம் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு 1978 நூலில் கூறியுள்ளார். ‘சிதறிக் கிடக்கும் எழுத்தாளர்கள் அனைவரையும் ஓரிடத்தில் சந்திக்கச் செய்து கருத்துப் பரிமாற்றம் ஏற்படவேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் முழுதாக நிறைவேறவில்லை என்றாலும் கூட்டும் முயற்சியில் அவர்கள் வெற்றி காணவே செய்தனர்’ என்கிறார். காலை பத்து மணிக்குத் தேநீர் விருந்தும் கலந்துரையாடலும் நடைபெற்றன. கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கி ஒரு நீண்ட சொற்பொழிவாற்றினார் சாரங்கபாணி. மாலை 4 மணிக்குத் தொடங்கிய மாநாட்டில் குறைந்த அளவு எழுத்தாளர்களே கலந்துகொண்டார்கள். பலர் பேசினர். ஆழி அருள்தாஸ், ‘பெரியோர்களே, தாய்மார்களே என்பதைவிடத் தூண்களே சுவர்களே என்று சொல்வது எவ்வளவோ பொருந்தும். காரணம் சீனர்கள் அதிகமான தூண்களையும் சுவர்களையும் எழுப்பியிருக்கிறார்கள்’ என்று வேடிக்கையாகவும் மனம் வெதும்பியும் குறிப்பிட்டார்.

அப்போதுதான் வெளிவந்த திருமுகம் இதழ் ‘மலாயாவில் இருநூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் அறிக்கையைக் கண்ணுற்றிருப்பார்கள் என்பது தெரியாது. முதலில் எழுத்தாளர் பட்டியல் ஒன்றைத் தயாரித்து எழுத்தாளர் அனைவருக்கும் அறிக்கை அனுப்பியிருக்கலாம். மலாயாவில் இருக்கும் எழுத்தாளர்களில் ஓர் ஐம்பது பேராவது மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால் அது எழுத்தாளர் மாநாடாக இருக்க முடியும்’ என்று நிலவரத்தை அம்பலப்படுத்தியது.

மாநாட்டில் பங்கேற்க பெயர் கொடுத்தவர்களே மொத்தம் 29 பேர்தான். இவர்களுள் சிலர் எழுத்தாளர்களே அல்லர். ‘மேலும், இந்நாட்டில் எழுத்தாளர்கள் தோன்றக் காரணமாயிருந்தவர்களில் சுப நாராயணன் (கந்தசாமி வாத்தியார்), பைரோஜி நாராயணன் (வானம்பாடி) இருவரும் முக்கியமானவர்கள். இவர்களும் இன்னும் சிலரும் அழைக்கப்படவில்லை’ என்கிறார் ராமையா. எழுத்தாளராகச் சேர மனு செய்யும் படிவங்கள் மாநாட்டிலேயே வழங்கப்பட்டன. எனினும் கலை மன்றத்தில் உறுப்பினராகச் சேருவோர் மட்டுமே எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் பெற முடியும் என்பது எழுத்தாளர்களின் ஆவலைச் சிதைத்துவிட்டது. பலர் படிவங்களை வாங்கி சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு போய்விட்டனர்.

இர ந வீரப்பன், எஸ் வி சுப்பிரமணியன், அ மருதப்பன், சி அன்பரசன், பெ மு இளம்வழுதி, சி வடிவேல், மு கந்தன், அ ந பெ சாமி, மு அப்துல் லத்தீப், கு நா மீனாட்சி, பழ மனோகரன், செ குணசேகர், அ கதிர்ச்செல்வன் போன்ற தெரிந்த எழுத்தாளர்கள் சிலர் மாநாடில் கலந்துகொண்டார்கள்.

கூட்டத் தலைவர் சி வீ குப்புசாமி நீண்டதோர் உரை ஆற்றினார். ஒரு விசித்திரம் என்னவெனில் அவருடைய முழு உரையும் அன்றைய தினமே தமிழ் முரசில் கிட்டத்தட்ட ஒரு முழுப் பக்கத்தை அடைத்துக்கொண்டு பிரசுரிமானது. எழுதித் தயாரித்த உரையை முன்கூட்டியே முரசுக்கு அனுப்பி அன்றைய நாளில் வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். அவருடைய பேச்சின் முக்கியப் பகுதிகளைப் பார்ப்போம். கொட்டை எழுத்தில் தலைப்புப் போட்ட செய்தியாக அது வெளிவந்தது.

தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூட, கலந்து பேச ஒற்றுமையை வளர்க்க

புதுப்புது எழுத்தாளர்களுக்கு, புதுப் படைப்புகளுக்கு ஆக்கமளிக்க

மலாய் நாட்டின் சரித்திரத்தில் கண்டுள்ள

முதலாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு

கோலாலம்பூரில் இன்று ஆரம்பம்

சி வீ குப்புசாமி தலைமையுரை

கோலாலம்பூர், அக் 29.

மலாய் நாட்டின் சரித்திரத்தில் இப்போதுதான் முதல் முதலாக தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு இனிவரும் மாநாடுகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாய் அமைகிறது. மலாய் நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடி பரஸ்பரமாகக் கலந்து பேசவும், ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவும், புதுப்புது எழுத்தாளர்களுக்கு ஆக்கமளித்து அற்புதமான படைப்புகளை அவர்கள் வெளிக்கொணரும்படி செய்யவும் இது தூண்டுகோலாயிருக்குமென்று நம்புகிறேன்’ என இன்று இங்கு சீனர் அசெம்பிளி மண்டபத்தில் ஆரம்பமான அகில மலாயா தமிழ் எழுத்தாளர் முதலாவது மாநாட்டில் திரு சீ வீ குப்புசாமி நிகழ்த்திய தலைமையுரையில் கூறினார்.

கோலாலம்பூர் தமிழ்க்கலை மன்றத்தார் இந்த மாநாட்டைக் கூட்டியதற்காக மலாய் நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மலாய் நாட்டு எழுத்தாளர்கள் இன்று எந்த விதத்திலும் திறமை குறைந்தவர்களாகக் காணப்படவில்லை. தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்களுக்குச் சமதையான திறமையுடன் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை நன்றாக வடித்தெடுத்துக் கொடுக்கிறார்கள் அவர்கள். அவர்கள்து கற்பனாசக்தியிலிருந்து வெடித்தெழும் எண்ணங்கள் சமுதாய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிபவையாய் இருந்து வருகின்றன. தமிழ் மொழி சிறப்படையவும் தமிழினம் புகழுடன் வாழவும் அவர்கள் அரிய தொண்டுகளைச் செய்து வருகிறார்கள்.

பெரும் பொறுப்பு ஒரு நாட்டின் சிறப்பை, ஒரு மொழியின் சிறப்பை மேலோங்கச் செய்பவர்களில் எழுத்தாளர்களும் முக்கிய பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர். ‘வாளைவிட பேனா வலிமையுடையது’ என்று ஒரு அறிஞன் கூறினான். அத்தகைய வலிமையுடைய எழுத்தை நாம் கையாளுகிறோம். பலாத்காரத்தினால் சாதிக்க முடியாதவற்றை எழுத்தினால் நாம் சாதித்துவிட முடியும். பலாத்காரம் அழியக்கூடியது. எழுத்து சாசுவதமானது. நிலைத்த தன்மையை அது நிலைநாட்ட வல்லது. அரசியலறிஞர்களும் போர் வீரர்களும் கண்டு அஞ்சுவது அது. ஆனால் எழுத்து நன்கு சிந்தித்துப் புடம் போட்டு எடுக்கப்பட வேண்டும். மக்களை நல்வழிக்குத் தூண்டக்கூடியதாக அது இருக்க வேண்டும். எழுத்தினால் ஒரு நாட்டை அழிக்கவும் முடியும். ஆக்கவும் முடியும்.

குப்பைகளையும் கூளங்களையும் சாரமற்ற இலக்கியங்களையும், காமத்தையும் கோபத்தையும் வெறுப்பையும், பகைமையையும் பொறாமையையும் காழ்ப்பையும், பலாத்காரத்தைத் தூண்டும் நூல்களையும் வெறுத்தொதுக்க வேண்டுமென்று சான்றோர்கள் கூறுகின்றனர். சமுதாயத்தை நல்ல முறையில் சிருஷ்டிப்பதற்கு எழுத்தாளர்கள் பெரும் பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர். நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு எழுத்தாளர்களிடம் இருக்கிறது.

பிறமொழி எழுத்தாளர்களைவிட தமிழ் எழுத்தாளர்கள் இன்று மிகவும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்களுக்குப் போதிய ஊதியமில்லை. வறுமையிலேயே அவர்கள் குமிழிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஒரு காலத்தில் உன்னத நிலை பெற்றிருந்த தமிழர்களின் வாழ்வு இன்று சீர்குலைந்து மொழி வளர்ச்சியில்லாமல் தேங்கிக் கிடப்பதால் பத்திரிகைகளையும் நூல்களையும் பெருவாரியாக வாங்கிப் படிக்கும் வகையின்றி அவர்கள் இருக்கின்றனர். இதனால் தமிழ்ப் பத்திரிகைகளும் தமிழ் நூல்களும் அதிகமாக விற்பனையாவதில்லை. இந்தக் காரணங்களினால்தான் தமிழ் எழுத்தாளர்களுக்குப் போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இத்தகைய நிலையிருந்தும்கூட பல எழுத்தாளர்கள் அற்புதமான இலக்கியங்களையும் நவீனங்களையும் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் சிருஷ்டித்து வருகின்றனர். இத்தகைய சிறப்பான தொண்டைச் செய்து வரும் எழுத்தாளர்களுக்கு மக்கள் உற்சாகமும் ஆதரவும் காட்டவேண்டியது அவசியம்.

மலாய் நாட்டுப் பத்திரிகைகள் மலாய் நாட்டில் சென்ற முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்ப் பத்திரிகைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எத்தனையோ பத்திரிகைகள் தோன்றித் தோன்றி மறைந்துவிட்டன. அவற்றை ஆரம்பித்த பலர் பொருளிழந்து வறுமையில் வாடி சீர்குலைந்து விட்டார்கள். என்றாலும் சில பத்திரிகைகள் விடாமுயற்சியுடன் எதிர்நீச்சு நீந்தி இன்று நிலைத்திருக்கின்றன. நான் அறிந்த மட்டில் மலாய் நாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் தோன்றியுள்ளன.

பினாங்கில் தேசாபிமானி, தேசநேசன், ஜனவர்த்தமானி, போனிக்ஸ் கெஸட் (ஆங்கிலம்-தமிழ்), ஜேய்ஹிந்த், சேவிகா, ஜோதி, பாலபாரதம் ஆகிய பத்திரிகைகளும், பேராவில் (ஈப்போ) இந்திய மித்திரன், தமிழன், கலியுக நண்பன், உதய சூரியன், புது உலகம், முயற்சி, சங்கநாதம், இனமணி ஆகிய பத்திரிகைகளும், சிலாங்கூரில் (கோலாலம்பூர்) தமிழகம், தமிழ் நேசன், தமிழரசி, தமிழ்ச்செல்வன், பாரதமித்திரன், சமுதாய ஊழியன், தொழிலாளி, மலாய் நாடு, பொதுஜன பாதுகாவலன், ஜெயமணி, ஜனநாயகம், நவயுகம், முன்னணி, சோலை, தமிழ்ச்சுடர், சங்கமணி, அறம் ஆகிய பத்திரிகைகளும், மலாக்காவில் தமிழ்க்கொடியும், சிங்கப்பூரில் கலைநேசன், தினவர்த்தமானி, பொதுஜனமித்திரன், முன்னேற்றம், நவநீதம், தமிழ் முரசு, சீர்திருத்தம், வாலிப சக்தி, புது உலகம், பாரத நேசன், சுதந்தர இந்தியா, சுதந்தரோதயம், யுவபாரதம், நவயுகம், பாட்டாளி முரசு, தமிழ் மணி, புது யுகம், இந்தியன் மூவி நியூஸ், இந்தியன் ஸ்கிரீன் கைடு, மனோஹரன், பேனா முனை, மலயா நண்பன், தமிழோசை, திராவிட முரசு, தூதன் ஆகிய பத்திரிகைகளும் சென்ற முப்பத்தைந்து ஆண்டுகளில் தோன்றியுள்ளன.

இந்த பத்திரிகைகளின் மூலமாக மலாய் நாட்டில் எத்தனையோ ஆயிரம் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கின்றனர். கடல் கடந்து வந்து இந்நாட்டில் தமிழ்ப் பத்திரிகைகள் மூலமாக அரிய தொண்டு செய்து வந்த, செய்து வரும் ஆசிரியர்களது முயற்சியையும் தளராத உழைப்பையும் நாம் ஏற்றிப் போற்றவேண்டியவர்களாக இருக்கிறோம். பத்திரிகைத் தொழிலினாலேயே தமது வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு, வறுமையில் உழன்று, உயிரை இந்த நாட்டிலேயே விட்டுவிட்ட ஆசிரியர்களுக்கும் நாம் அனுதாபம் தெரிவிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். அவர்களது எழுத்தும் லட்சியமும் நம்மைவிட்டு அகலவே கூடாது. அவர்களுக்கு அந்தரங்கசுத்தியாக நன்றி செலுத்த வேண்டுமானால் அவர்கள் விட்டுப்போன பணியை நாம் விடாது செய்து தமிழ்ச் சமுதாயத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதில் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும்.

மலாய் நாட்டில் தோன்றிய பத்திரிகைகளில் ஒரு சில மிகவும் மோசமானதாயும், பகைமையையும் வெறுப்புணர்ச்சியையும் தூண்டக்கூடியதாயும் இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன. இத்தகைய பத்திரிகைகளால் நாட்டுக்கும் நன்மை இல்லை, அவற்றை நடத்துபவர்களுக்கும் நன்மையில்லை. தமக்குப் பிடித்தமில்லாதவர்களைத் திட்டுவதற்கென்றே சில பத்திரிகைகள் தோன்றின. ஒரு சில பத்திரிகைகள் காமக் கிளர்ச்சிகளைக் கொண்ட கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி இலக்கியச் சந்தையைக் கறைப்படுத்தின, கறைப்படுத்துகின்றன. இத்தகைய ‘மஞ்சள்’ பத்திரிகைகளால் சமுதாயம்தான் சீர்குலைந்துவிடும். எழுத்தாளர் பணி தூய்மையும் வாய்மையும் நிறைந்ததாக இருக்கவேண்டுமே ஒழிய தீயொழுக்கத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கக் கூடாது. சமுதாயத்தை நல்ல வழிக்குத் திருப்பிச் செல்வதில் எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் பாடுபடவேண்டும். பலே செய்திகளையும் அக்கப்போர்களையும் கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பது சமுதாயத்தைத் தீயவழிக்கு அழைத்துச் செல்வதாகும். வியாபாரத் தந்திரத்திற்காகவும் பொருள் சேர்ப்பதற்காகவும் கயிறு திரித்துவிடும் செய்திகள் பல பத்திரிகைகளில் இடம்பெறுகின்றன. இவற்றை அறவே நீக்கி உண்மைகளை மக்களுக்கு விளக்கி வைப்பதையே பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும். எழுத்தாளர் பணி கௌரவமானது. அதற்கு மாசு தேடக்கூடிய வகையில் எவரும் நடந்து கொள்ளக்கூடாது.

எழுத்தாளர் கடமை நல்ல மனது படைத்த ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் புது எழுத்தாளர்களுக்கு ஆக்கமளிப்பதையே தமது கடமையாகக் கொண்டிருப்பர். சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கிவிடுவதே அவர்களது தொண்டாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் மண்டைக் கனம் படைத்தவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் எழுத்தாளர் வர்க்கத்திற்கே துரோகிகளாக இருந்து வருகின்றனர். சக எழுத்தாளர்களைக் கைதூக்கி விடவும் புதுப்புது எழுத்தாளர்களுக்கு ஆக்கமளித்துக் கொண்டும் இருந்தால்தான் தமிழ் மறுமலர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உண்மையாகப் பாடுபடுபவர்களாகக் கருதப்படுவர். அப்படியில்லாமல் சுயநலமும் பொறாமையும் அவர்களிடம் குடிகொள்ளுமானால் தமிழ் வளராது. எழுத்தாளர்களும் வளரமாட்டார்கள். தமிழனமும் வளராது. தமிழிலக்கியமும் வளராது.

தமிழ் முரசு தமிழகத்தில்கூட அவ்வளவு சிறந்த முறையில் வெளியிடப்படாத பத்திரிகையாக அது இருந்து வருகிறது. சிறந்த தலைப்புகளுடனும் அருமையான தொடர்கதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், பாட்டாளிகளுக்கு உபயோகமுள்ள பல கட்டுரைகள், சிந்தனையைக் கிளரும் கவிதைகள், மாணவர்களுக்கு மதியூட்டும் கட்டுரைகள் போன்றவற்றுடனும் அது வெளிவந்து எத்தனையோ நல்ல எழுத்தாளர்களை உற்பத்தி செய்திருக்கிறது. இந்த அரும்பெரும் காரியத்தை அது ஆரம்பித்து புதுப்புது எழுத்தாளர்களை உருவாக்கி வருவதற்கு இளம் எழுத்தாளர் உலகம் கடமைப்பட்டிருக்கிறது. இந்த அரிய நற்றொண்டை மேற்போட்டுக் கொண்டுள்ள அதன் ஆசிரியராகிய திரு சாரங்பாணி அவர்களுக்கு எழுத்தாளர் சார்பாக நாம் நன்றி செலுத்துவோம். தமிழ் முரசின் சிறப்பைக் குன்றக்குடி அடிகளார், இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் சேவியர் தனிநாயகம், சொல்லின் செல்வர் ரா பி சேதுப்பிள்ளை, டாக்டர் மு வரதராசனார், திரு சி என் அண்ணாதுரை ஆகியோரும் இதரரும் பாராட்டி இத்தகைய பெருமைசால் தினத்தாள் தமிழகத்திலும் இலங்கையிலும்கூட கிடையாதென்று கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தொண்டு செய்க இந்நாட்டிலுள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் காதல் கதைகளை மட்டுமே அபரிமிதமாக எழுதி வருகின்றனர். ஆராய்ச்சிக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள், மனோதத்துவத்தையும் மறுமலர்ச்சியையும் வளர்க்கும் எழுத்தோவியங்கள் ஆகியவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்குப் படைக்க முன்வரவேண்டும். காதல் கதைகள் அறவே வேண்டாமென்பது எனது கருத்தல்ல. ஆனால் அத்தகைய கதைகளிலும் கருத்துகளும் நீதியை உணர்த்தக்கூடிய தத்துவங்களும் இருக்க வேண்டும். கதை கதைக்காக மட்டும் படைக்கப்படக்கூடாது. கருத்திற்காகவும் படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் எழுத்தாளர்கள் அரிய பணியைச் செய்பவர்களாக விளங்க முடியும்.

மலாயா பின்னணி மலாயா இப்போது சுதந்தரப் பாதையில் முன்னேறி வருகிறது. மலாயா தேசிய இனம் உருவாக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் கூறுகின்றனர். இத்தகைய ஒரு நிலையில் நமது கட்டுரைகளும் சிறுகதைகளும் தொடர்கதைகளும் மலாயாவின் பின்னணியைக் கொண்டதாக இருத்தலே சாலச்சிறந்தது. சென்னையிலும் பம்பாயிலும் இலங்கையிலும் நடைபெற்றதாகக் கதைகளை சிருஷ்டித்துப் பயனில்லை. மலாயாவில் உள்ள இடங்களில் சம்பவங்கள் நிகழ்வதாக கதைகள் சிருஷ்டிக்கப்படவேண்டும். மேலும் தமிழர்களை மட்டும் பாத்திரமாகக் கொண்டுள்ள கதைகளைவிட மலாய்க்காரர், சீனர், சீக்கியர், ஆந்திரர், மலையாளிகள், ஐரோப்பியர், யூரேஷியர் போன்ற பல மொழியினரையும் பாத்திரமாகக் கொண்டுள்ள கதைகளைச் சிருஷ்டித்தால் இந்நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சுவையுடையதாக இருக்கும். மலாய் மொழியில் உள்ள கதைகளை மொழிபெயர்த்தோ அல்லது தழுவியோ எழுதுவதும் நல்லது. அப்போதுதான் இந்நாட்டின் பண்பாடுகளையும் பழக்கங்களையும் தமிழ் மக்கள் நன்கறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். மலாய் நாடு சம்பந்தமான பரம்பரைக் கதைகள், நாட்டுப் பாடல்கள், வரலாறுகள் ஆகியவற்றையும் நாம் எழுத வேண்டும். அந்த முறையைப் பின்பற்றினால்தான் இந்நாட்டில் உள்ளவர்களுடன் நாம் சுமுகமான உறவு கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். இத்துறையில் இதுவரை யாரும் இறங்காவிட்டாலும் இனியாவது இறங்க வேண்டும் என்பதே என் ஆசை.

சி வீ குப்புசாமியின் முழக்கத்தை இப்போது நான் மீண்டும் நினைவுபடுத்துவதற்குக் காரணம் தமிழ் எழுத்தாளர்களின் போக்கு அந்நாளில் எப்படி இருந்தது என்பதை எடுத்துக்காட்டவே. சுப நாராயணன், பைரோஜி நாராயணன் போன்ற பலரை உதாசீனப்படுத்திவிட்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்துவதற்குப் பெரும் துணிச்சல் தேவை. அந்தக் காலத்திலிருந்தே எழுத்தாளர் சங்கங்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பதை உணரமுடியும். தமிழன் எங்கெங்கு வாழ்கிறானோ அங்கெல்லாம் இந்தப் பிரிவினைப் போக்கு பொருந்தும்.

இன்னொன்று, குப்புசாமி எதையுமே மனத்தில் வைப்பதைவிட குறிப்புகளைத் தாளில் எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். பழைய பத்திரிகைகள் பலவற்றைச் சொல்கிறார். 1915ல் பிறந்த அவர் 1930லிருந்து ஏராளமான பத்திரிகைகளோடு அணுக்க தொடர்பு வைத்திருந்தவர். பல பத்திரிகைகளில் ஆசிரியர், துணையாசிரியர், நிருபர் என்று பல நிலைகளிலும் பணியாற்றியவர். 1932ல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் கிரேடில் தேர்ச்சி பெற்றவர். இத்தனை பத்திரிகைகளைச் சொல்கிறார். ‘ஆயிரக்கணக்கான’ எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். இந்த நிலையில் 1946க்கு முன்னால் இந்த நாட்டில் இலக்கியமே இல்லை, அப்படி ஏதும் இருந்தால் அது குடியேறிகளின் கைவண்ணம், இந்நாட்டு மண்ணின் மைந்தர்களின் கைப்பட்ட உள்ளூர் இலக்கியம் அல்ல என்று நினைக்கும் பழுத்த பழங்களும் உண்டு. இந்தப் போக்கு தவறானது மட்டுமன்று அபாயமானது ஆபத்தானதும்கூட. இதைப் பிறகு கவனிப்போம்.

டாக்டர் ராம சுப்பையாவின் தமிழ் மலேசியானா நூல்-பத்திரிகை விவரப் பட்டியல் வருவதற்கு முன் குப்புசாமியின் பட்டியல் விநோதமாக இருந்திருக்க வேண்டும்.

குப்புசாமியின் பத்திரிகைப் பட்டியலை ஒரு எழுத்தாள ஜன்மம்கூட எனக்குத் தெரிந்து ஒரு பொருட்டாகக் கருதியதாய்த் தெரியவில்லை. ஏனென்றால் அதன் பிறகு இந்தப் பட்டியலை யாருமே எங்குமே சரியாகப் பயன்படுத்தியதில்லை. மீண்டும் ஒருமுறை குப்புசாமியே 13 ஆண்டுகள் கழித்து 1968ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து மைக் பிடித்து ஐம்பது ஆண்டாகத் தமிழ் மலேசியாவில் வளர்கிறது என்று நினைவுபடுத்த வேண்டியிருந்தது. அதன்பிறகும் பூஜ்யந்தான்.

தமிழ் மலேசியானாவை வைத்துக்கொண்டு நம் இலக்கியத்துக்கு 130 ஆண்டுகள் வரலாறு என்று பூரிப்பு அடைந்தவர்கள் உண்டு. அந்தப் பழைய இலக்கியத்தைப் படைத்தவர்களும் கொஞ்ச காலம் இங்கே வாழ்ந்துவிட்டு தாய்நாட்டுக்குத திரும்பிப் போனவர்கள்தாம். மண்ணின் மைந்தர்கள் அல்லர்.

அதே வேளையில் அவருக்கும் தெரியாத ஏராளமான பத்திரிகைகள் 1930க்கு முன்னரே சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெளிவந்து அற்பாயுளில் செத்து மடிந்தன. இத்தனை பத்திரிகைகளா என்று அதிசயப்பட்டுப் போவீர்கள். 1875 முதல் 1941 வரை சிங்கப்பூரில் சுமார் 50 தமிழ்ப் பத்திரிகைகளும், மலேசியாவில் 1883 முதல் 1941 வரை ஏறத்தாழ 50 தமிழ் ஏடுகளும் வெளியாகியுள்ளன. இவற்றோடு இந்தியர்கள் நடத்திய ஆங்கில, மலாய், சீனப் பத்திரிகைகளும் உண்டு. நமக்காகப் பலர் சிரமப்பட்டு நடத்திய இவையெல்லாம் இன்றைய வாரிசுகளுக்குச் சொந்தம் இல்லை என்றால் வேறு எதுதான் சொந்தம்?

No comments: