Saturday, December 18, 2010

சி வீ குப்புசாமியும், வாழ்க்கை வரலாறும், 1967ஆம் ஆண்டு மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழா உரையும்


மலாயா சிங்கப்பூரில் 1930 முதல் ஐம்பதாண்டுக் காலம் தமிழ் எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும் இடையறாத தொடர்பு கொண்டிருந்த ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் அவர் நிச்சயம் பகுத்தறிவாளர் சி வீ குப்புசாமியாகத்தான் இருக்க முடியும். தமிழ் ஆங்கில இருமொழித் தேர்ச்சியாளர் அவர்.

1915 ஏப்ரல் 10ல் கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் பிறந்தவர். முதல் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். ஆயினும் மலாயாவுக்கு அதனால் நேரடி பாதிப்பு எதுவும் கிடையாது. நன்கொடை திரட்டிப் பணத்தை லண்டனுக்கு அனுப்புவதில் காலனி அரசாங்கம் மும்முரமாக இருந்தது. அன்போடும் அதிகாரத்தோடும தட்டிப் பறித்தனர் பணத்தை.

ஐந்து வயது நிரம்பியதும் மகனைத் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளியில் சேர்ந்தார் தந்தை சி வீரப்பன். தாயார் பெயர் மு பாப்பம்மாள். மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு மாக்ஸ்வெல் பள்ளியில் ஆங்கிலத்துக்கு மாறினார். ஆறேழு வருடம் அங்கு பயின்றபின் விக்டோரியா இன்ஸ்டிட்யூஷனுக்குப் போனார். அங்கு இரண்டு ஆண்டு படித்து 1932ல் சீனியர் கேம்பிரிட்ஜ் முதல் கிரேடில் தேறினார். பின்னர் தேவை கருதி இந்தியும் மலாயும் கற்றார்.

இடையிடையே தலைஞாயிறு பண்டிதர் M B சிவராமதாசர், ஸ்ரீ மனோன்மணி சுவாமியார் ஆகியோரிடம் நிகண்டு, இலக்கணம், இலக்கியம், யாப்பு முதலானவற்றைக் கற்றுக்கொண்டார். 1941-42ல் சிங்கப்பூரில் சா ச சின்னப்பனாரிடம் யாப்பிலக்கணம் பயின்றார்.

1935 முதல் 1941 வரை மலாயன் ரயில்வேயில் எழுத்தராகப் பணியாற்றியுள்ளார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

குறிப்பாகப் பத்திரிகைகளோடு நீங்காத தொடர்பு கொண்டவர் சிவீகு. எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சமூகப் பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியோரை நேரில் அறிந்தவர்.

1930 – 1931: மலாய் நாடு கோலாலம்பூர் வார இதழில் பல கட்டுரைகள். YMCA-வைப் போல YMIA எனும் இந்திய இளையர் சங்கத்தின் இதழாகத் தொடங்கப்பட்ட ஏடு அது. துடிப்பும் சுறுசுறுப்பும் மிக்க இளைஞர் எம். கே. ராமச்சந்திரம் அதை நடத்தினார். ஆசிரியர் வேதன் ஏ. சந்திரராசன். இவர் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் பல பத்திரிகைகள் நடத்தியவர். எதுவும் நிலையாக நீடித்தபாடில்லை.

1931 – 1934: சென்னை தமிழ்நாடு நாளிதழில் மாணவர் பகுதிக்குக் கட்டுரைகள் எழுதியதுடன் அந்த ஏட்டின் கோலாலம்பூர் நிருபராக இருந்து வாரந்தோறும் மலாயாக் கடிதம் என்ற பகுதிக்குக் கட்டுரைகள் எழுதினார். சித்த வைத்திய டாக்டர் பி வரதராஜுலு நாயுடு 1922ல் சேலத்தில் வார இதழாக ஆரம்பித்து, பின் சென்னைக்கு மாறி 1926 ஏப்ரல் 14ல் தினசரியாக வந்தது. தேசத்தியாகி தி. சு. சொக்கலிங்கம் அதன் ஆசிரியர். சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் 1927 முதல் தம் 21ஆவது வயது தொடங்கி தமிழ்நாடு பத்திரிகையில் ஏழாண்டுகளுக்கு அச்சுக்கோப்பாளராக இருந்தவர்.

1931 – 1933: விக்டோரியா இன்ஸ்டிட்யூஷன் மாத சஞ்சிகையான THE VICTORIAN இதழில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினார் மாணவர் சிவீகு. சிங்கப்பூரில் வெளியான முன்னேற்றம் (வாரம்), பினாங்கிலிருந்து வந்த தேச நேசன் (வாரம்), ஜனவர்த்தமானி (வாரம்), ஈப்போவின் தமிழன் (தினசரி) ஆகியவற்றுக்குக் கட்டுரைகள் வழங்கினார்.

இதே காலக் கட்டத்தில் ஈரோட்டுக் குடி அரசு, பகுத்தறிவு, புரட்சி, சமரசம், டிக்கோயா (இலங்கை) ஆகியவற்றுக்கும் கட்டுரைகள் அனுப்பினார்.

1934 – 1936: கோலாலம்பூரில் நடைபெற்ற பாரதமித்திரன் வார இதழின் துணையாசிரியர். ஆர் ராமனாதன் இதன் ஆசிரியர். சிறுகதைகள், நாவல் தொடர்கள் ஆகியவை தாங்கி வந்த சீர்திருத்த ஏடு இது. பாரதமித்திரன் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில்தான் ந. பழனிவேல் கலந்துகொண்டு கிராமக் காட்சி கதை எழுதி $5 பரிசு பெற்றார். சமுதாய ஊழியன், தமிழ்ச்செல்வன், தொழிலாளி வாரப் பத்திரிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதினார் சிவீகு.

பினாங்கின் போனிக்ஸ் கெஜட் தமிழ் – ஆங்கில இதழுக்குப் படைப்புகளை அனுப்பினார்.

சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த REFORM ஆங்கில இதழ், தமிழ் முரசு, சீர்திருத்தம் மாத ஏடு, வாலிப சக்தி மாத இதழ் ஆகியவற்றுக்கும் அயராது கட்டுரைகள் அளித்தார்.

1934 – 1942: சென்னையில் நடைபெற்ற புது உலகம் மாத இதழ் மற்றும் பாரததேவி வார ஏடு, ஜனநாயகம் வார ஏடு, ஈரோட்டில் வெளியான பிரசண்ட மாருதம் மாதப் பத்திரிகை, ஜோலார்பேட்டையிலிருந்து வந்த சமதர்மம் மாத ஏடு, கும்பகோண ஏடாகிய அறிவுக்கொடி, மாயவரத்திலிருந்து வெளியிடப்பட்ட வெற்றி முரசு வார இதழ், திருச்சியின் அறிவு மாத ஏடு, தங்கவயல் வாரப் பத்திரிகையான தமிழன், புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் வந்த புதுவை முரசு ஆகியவற்றுக்கு எழுத்துப் படைப்பை அனுப்பினார்.

1942 – 1945: சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ் அமைத்த சுதந்தர இந்தியத் தற்காலிக அரசாங்கத்தின் தமிழ் வெளியீடுகளாகிய சுதந்தர இந்தியா (கட்டுரைகள், கவிதைகள்) தினசரி, யுவபாரதம் (கட்டுரைகள், கவிதைகள்) வாரம், சுதந்திரோதயம் (கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்) மாதம் ஆகியவற்றுக்குப் பிரதம ஆசிரியராக இருந்தார். ஆங்கில ஏடுகளான AZAD HIND, NEW LIGHT ஆகியவற்றுக்குக் கட்டுரைகள் எழுதியது. சுதந்தர இந்தியத் தற்காலிக அரசாங்கத்தின் செய்தி-பத்திரிகைத் துறை (Press and Publicity) துணை இயக்குநராகவும் பின்பு இடைக்கால இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1946 – 1948: கோலாலம்பூர் ஜனநாயகம் தினசரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். சிங்கப்பூரிலும் கோலாலம்பூரிலும் நடைபெற்ற நவயுகம் இதழின் ஆசிரியர்.

1951 – 1954: தமிழ் முரசு துணையாசிரியர், சிங்கப்பூர். கோ சா நடத்திய INDIAN DAILY MAIL ஆங்கில தினசரியிலும் பணியாற்றினார். 1952 /1953ல் மலேசியாவின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோலாலம்பூரில் நடத்திய சங்கமணி வார ஏட்டுக்கு சிங்கப்பூர் நிருபர்.

1957 – 1971: கோலாலம்பூர் அரசாங்கத் தகவல் இலாக்காவின் வெளியீடுகளாகிய ஜனோபகாரி (வாரம்), வளர்ச்சி (வாரம்), வெற்றி (மாதம்), ஜெயமலேசியா, மலேசியா குரல் (Warta Malaysia), பெம்பேனா (Pembena) ஆகியவற்றின் பிரதம ஆசிரியர். இங்குமங்கும் அலைந்துவிட்டுக் கடைசிக் கட்டத்தில் நல்ல வருமானம் தரும் (Division One Officer) அரசாங்க வேலையில் அமர்ந்த காலக்கட்டம் இது. 1971 ஆரம்பத்தில் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு.

1971 ஜுலை – செப்டம்பர்: தமிழ் முரசு (கோலாலம்பூர்) நாளேட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியது.

இந்நாட்டின் பத்திரிகைகள் வெளியிட்ட சிறப்பு மலர்களில் சி. வீ. குப்புசாமியின் கட்டுரைகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

தீபம், தமிழ் வட்டம் (1970), தில்லி தமிழ்ச்சங்க வெள்ளி விழா மலர் (1971) ஆகியவற்றிலும் அக்கரை இலக்கியம் நூலிலும் அவருடைய சிறப்புக் கட்டுரைகள் உண்டு.

செந்தூல் சுயமரியாதை சங்கம், செந்தூல் இந்திய வாலிபர் சங்கம், சிலாங்கூர் இந்தியர் சங்கம், கோல கிள்ளான் இந்தியர் ஒற்றுமை சங்கம், மலாயன் இந்தியர் காங்கிரஸ் ஆகியவற்றின் மூலம் பொதுப்பணிகள் ஆற்றியிருக்கிறார். பண்டித நேரு 1937ல் மலாயாவுக்கு வந்தபோது கிள்ளானில் பணமுடிப்பு அளித்துடன் அவருடைய சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்தார் சிவீகு. நேதாஜியின் சொற்பொழிவையும் பல தடவை மொழிபெயர்த்தார். பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர் விழாக்களை முன்னின்று ஏற்பாடு செய்துள்ளார். 1946 ஏப்ரல் வரை சிங்கப்பூர்ப் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார். சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர். அதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழர் திருநாள் இயக்கம் ஆகியவற்றிலும் சீரிய பணிகள் புரிந்தார்.

சிவீகு நூலாசிரியரும்கூட. வருங்கால நவயுகம் (1937), பெரியார் ஈ. வெ. ராமசாமி (1939) முதலான நூல்களைப் புனைந்தவர். காந்தாமணி அல்லது கலப்பு மணம் நாடக நூலையும் வெளியிட்டார்.

ஜப்பானியர் ஆட்சியின்போது ஒரு போலிக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டுக் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் சிவீகு. அந்தக் கசப்பான அனுபவங்களை ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் (1946) என்ற நூலில் விவரித்திருக்கிறார். ‘ சுமார் இரண்டு மணி நேரம் எனது இம்சைப் படலம் இருந்து வந்தது. முதல் ஒரு மணி நேரத்தில் கசை அடிகளும் மற்ற பாதியில் மின்சார சக்தியைப் பிடிக்கச் செய்வதும், வாய் வழியாகத் தண்ணீரைக் குழாயிலிருந்து வயிற்றுக்குப் பாய்ச்சுவதும் நடந்தேறின. அப்படியே நான் பாதி உயிருடன் சோர்ந்து விழுந்தபோது ஜப்பானிய கிராதகர்கள் மீண்டும் என்னைத் தூக்கி நிறுத்தி ஒன்றன் மேல் ஒன்றாகப் பல குத்துகள் விட்டனர். மலேரியா, பெரி பெரி, இருதய பலவீனம் முதலியவைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு எனது உடலுரத்தைச் சிதைத்துவிட்டன. ’

ஜப்பானியர் காலத்தில் ஜப்பானியரால் இம்சைப்பட்ட சி. வீ. குப்புசாமி பிரிட்டிஷார் திரும்பிவந்ததும் அவர்களாலும் இம்சைப்பட்டார். நேதாஜியின் முகாமிலிருந்தவர்கள் அச்சத்தோடும் ஐயத்தோடும் பார்க்கப்பட்டனர் வெள்ளைக்காரரால். பல பத்திரிகைகளை நடத்திப் பொதுச்சேவையிலும் சீர்திருத்தப் போக்கிலும் பிரிட்டிஷார் எதிர்ப்பிலும் முன்னணியில் இருந்த சி வீ கு-வின் மீது அவருடைய எதிரிகள் விஷமத்தனமாகப் புகார் செய்யவே, ஜனநாயகம் தினசரியை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில், அவர் கைதானார். 1948 ஜுன் முதல் 1949 டிசம்பர் வரை ஒன்றரை வருஷம் தடுப்புக்காவலில் வாட்டி வதைக்கப்பட்டார். உரலுக்கு ஒரு பக்கம் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல ஜப்பானியர் கையிலும் பிரிட்டிஷார் கையிலும் நாடறிந்த எழுத்தாளர் ஒருவர் சிக்கித் தவித்தது வியப்பாக இருக்கிறது.

மலாயாவில் பிறந்து தமிழ்நாட்டைப் பார்க்காமல் இருந்த அவருக்கு 1968ல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தம் மூதாதையர் நாட்டைக் கண்ணாரக் கண்டு களிக்கும் வாய்ப்பை வழங்கியது.

1955 அக்டோபர் 29ல் மலாயாவின் முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினார் சிவீகு. (அதன் விவரத்தைக் கீழே காணும் பதிவில் காணலாம்.)

http://balabaskaran24.blogspot.com/2010/12/blog-post_07.html

மறுபடியும், 1967 மே 26ல் நிகழ்ந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றினார் சிவீகு. தமிழ் நேசன் செய்தியை இங்கு வழங்குகிறேன். சில அரிய தகவல்கள் உள்ளன. பத்திரிகைப் பட்டியலும் எழுத்தாளர் பட்டியலும் உண்டு. மலாயா சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய, பத்திரிகை வரலாறு இதில் அடங்கிக் கிடக்கிறது. 43 ஆண்டுக்குமுன் வெளியிடப்பட்ட இந்தத் தகவல் அதுவரை இளைய தலைமுறை அறியாதது. சிவீகு நினைவிலிருந்து சொல்வதால் சில தவறுகள் தென்படலாம். அப்படிப்பட்ட ஒரு பிழைதான் தங்கை நேசன் என்ற பத்திரிகை 1865ல் பினாங்கிலிருந்து வெளியானது என்ற தகவல். இந்தப் பிழையைச் சிலர் மீண்டும் மீண்டும் விடாப்பிடியாகக் குறிப்பிடுவது சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இரண்டு மாநாடுகளுக்கிடையில் மிகப்பெரும் சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. 1957ல் மலாயா சுதந்தரம். 1960ல் அவசர காலம் முடிவு. 1963ல் மலேசியா உதயம். மலேசியமயம் எனும் பெயரில் மலாய்க்கூறுகள் வாழ்க்கையின், சமூகத்தின், சிந்தனையின், எழுத்தின் எல்லாத் தளங்களிலும் விரவி வரவேண்டும் என்ற கூக்குரல் ஒலிக்கத் தொடங்கிய காலம். உரையின் இறுதிப்பகுதியில் சிவீகு இதனை மறவாது நினைவுபடுத்துகிறார் என்பது அக்காலத்தின் எதிரொலி.

நூறாண்டுக்கு முன் தோன்றிய ‘தங்கை நேசன்’

ஐம்பது ஆண்டாகத் தமிழ் மலேசியாவில் வளர்கிறது

எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் சி. வீ. குப்புசாமி உரை

கோலாலம்பூர், மே 27 (1967) –

“ ஐம்பது ஆண்டுகளாகத்தான் இந்நாட்டில் தமிழ் வளரத் தொடங்கியது. அதற்முன் தமிழ் வளரவில்லை. இதற்குக் காரணம் அப்போதைய காலனி ஆதிக்கக் கொள்கையே ஆகும் என்றார் திரு சி. வி. குப்புசாமி.

தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழா நேற்று மாலை அப்பர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இவ்விழாவில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி திரு சி வீ உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். தன் உரையில் மேலும் கூறியதாவது:

இரண்டாவது உலகப் பெரும் போருக்குப் பிறகு தமிழ் எழுத்துத் துறையில் தீவிர உத்வேகமும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளனவென்றாலும் அவற்றுக்கு அடிப்படையாக இருந்தவை அதற்கு முந்திய சூழ்நிலையும் நிலவரங்களும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

சுமார் ஐம்பது ஆண்டுகளாகத்தான் இந்நாட்டில் தமிழ் எழுத்துத்துறை வளர்ந்து வரத் தொடங்கி இருக்கிறது. இதற்கு முன்பு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் எழுத்து வளர்ச்சியிலும் எவரும் கவனஞ்செலுத்தவில்லை. அதற்கு அடிப்படையான காரணம் அக்காலத்திய காலனி ஆதிக்கக் கொள்கையாகும். தவிர அக்காலத்தில் இந்நாட்டிற்கு வருகை தந்த தமிழர்களும் இங்கிருந்த தமிழர்களும் பெரும்பாலும் படிப்பறிவு குன்றியே இருந்தனர்.

தவிர அவர்களிற் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்களாகவும், ரயில்வே, மராமத்து, துறைமுகத் தொழிலாளர்களாகவும் இருந்தனர். எனவே முதலீடு செய்து பத்திரிகைகள் நடத்தவோ நூல்கள் வெளியிடவோ எவரும் முன்வரவில்லை. மேலும் அவற்றை வெளியிட்டால் அவற்றை வாங்கிப் படிக்கவும் போதிய தமிழறிவு படைத்தவர்கள் இல்லை.

பினாங்கில் 1865-ஆம் ஆண்டு வாக்கில் தோன்றிய ‘தங்கை நேசன்’, 1883ல் தோன்றிய ‘வித்தியா விசாரிணி’ போன்ற சில பத்திரிகைகள் இருந்தனவென்றாலும் அவை குறைப் பிரசவமாகவே ஆகிவிட்டன.

முதலாவது உலகப் பெரும் போருக்குப் பிறகு மக்களிடையே சுறுசுறுப்பும் ஆர்வமும் ஏற்படத் தொடங்கின. அதன் விளைவாகப் பினாங்கில் 1919 ஆம் ஆண்டு வாக்கில் சுவாமி பாலகந்தகசிவம் நடத்திய ‘சத்தியவான்’ என்னும் வார இதழும், முஸ்லிம் ஒருவர் நடத்திய ‘பாதுகாவலன்’ என்னும் வார இருமுறை இதழும் தொடங்கின. அந்த ஏடுகள் ஒன்றையொன்று காரசாரமாகத் தாக்கிக் கொண்டு இலக்கண, இலக்கிய, சமய சர்ச்சைகளைச் செய்ததால் ‘அற்பாயுளிலேயே’ மறைந்துவிட்டன.

1923 ஆம் ஆண்டு வாக்கில் கோலாலம்பூரில் ‘தமிழகம்’ என்ற பெயரில் ஒரு வார ஏடு தொடங்கப்பெற்றது. அதுவும் சிறிது காலத்திற்குள் மறைந்துவிட்டது. அதில் ஆசிரியராக இருந்த திரு கி நரசிம்ம அய்யங்கார் அவர்கள் அதிலிருந்து விலகி ‘தமிழ் நேசன்’ வார இதழை 1924 ஆம் ஆண்டில் தொடங்கினார். அது பிறகு வார இருமுறை, வாரம் மும்முறையாக வளர்ந்து தினசரியாகியது.

1930ம் ஆண்டுக்குப் பிறகே பல தமிழ் ஏடுகள் மலாயாவில் வளரத் தொடங்கின. சிங்கப்பூரில் ‘முன்னேற்றமும்’ (பிறகு தமிழ் முரசு), நவநீதம் (வார ஏடு), மலாக்காவில் ‘தமிழ்க்கொடியும்’ (மாதம்), ஈப்போவில் ‘இந்திய மித்திரன்’ (வார ஏடு), தமிழன் (தினசரி), ஆகியவையும், பினாங்கில் ‘தேச நேசன்’ (தினசரி), ‘ஜனவர்த்தமானி’ (வாரம்) ஆகியவையும், கோலாலம்பூரில் ‘மலாய் நாடும்’ (வாரம்), பாரதமித்திரன் (வாரம்), தொழிலாளி (வாரம்), ‘தமிழ்ச்செல்வன்’ (வாரம்) ஆகியவையும் தொடங்கப்பெற்றன.

இந்த ஏடுகளிலும் தமிழ் நேசனிலும் இந்நாட்டுத் தமிழர்களின் பல அரிய கட்டுரைகள் வெளிவந்தன. தவிர சிறுகதைகளும், தொடர்கதைகளும், கவிதைகள், பாடல்கள் முதலியனவும் வெளிவந்தன.

எனவே தமிழ் எழுத்துத்துறை 1930ம் ஆண்டுக்குப்பிறகே மலாயாவிலும் சிங்கப்பூரிலும் தீவிரமாக வளரத் தொடங்கியது என்று நாம் அறுதியிட்டுக் கூறலாம்.

1930ம் ஆண்டு வாக்கில் தமிழர்களிடைய ஒரு மறுமலர்ச்சி ஏற்படத் தொடங்கியதால் ஏடுகள் பல தொடங்கப்பெற்றன. அக்கால எழுத்தாளர்களில் திருவாளர்கள் கோ. சாரங்கபாணி, வை. ராஜரத்தினம், ம. ப. ரெத்தினசாமி, பழனிசாமி, கா. தாமோதரன், எம். எம். புகாரி, அ. சி. சுப்பையா ஆகியோரையும் கோலாலம்பூர் திரு கி நரசிம்ம அய்யங்கார், வேதன் ஏ. சந்திரராசன், ஜி. பார்த்தசாரதி, ஜெயமணி சுப்பிரமணியம், கே. பி. சுப்பையா, ஏ, ஆர். அய்யர் ஆகியோரையும், ஈப்போ பி. வேணுகோபால் நாயுடு, ரெ. ரா. அய்யாரு ஆகியோரைம், மலாக்கா திரு உ. அரு. அருணாசலம் செட்டியாரையும், பினாங்கு சுவாமி அற்புதானந்தா, ஜனாப் அ. ந. பு, ஹமீது களஞ்சியம், ஜனாப் எம். எம். மாலிம், கனகசுந்தரம் ஆகியோரையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இவர்கள் தவிர இன்னும் பலர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவையும் எழுதியுள்ளனர். அக்காலத்தில் எழுதிய பலரை இங்கு பட்டியலிட்டுக் காட்டுவது எளிதன்று. அக்காலத்தில் சிறுகதைகள் நாவல்கள் எழுதியவர்களில் திருவாளர்களாகிய ஆர். இராமநாதன், ஜி. பார்த்தசாரதி, கோ. நீ. அண்ணாமலை, ஆர். ஹாலாஸ்யநாதன், மு. முத்தழகு, நாச்சியப்பன், வில்லிநாதன், இ. தில்லையம்பலம் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

ஜப்பானியர் ஆதிக்கக் காலத்தில் (1942 முதல் 1945 வரை) தமிழ் எழுத்துத்துறை வளர்ந்தே வந்திருக்கிறது. அதுபற்றிய விவரமும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. எனவே அதனை இங்கு ஓரளவு சுட்டிக்காட்டுவது அவசியம் என்று கருதுகிறேன். அந்த நான்கு ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்பெற்ற இந்திய சுதந்தரக் கழகத் தலைமை அலுவலக ஏடுகளாகிய சுதந்தர இந்தியா (தினசரி), யுவபாரதம் (வாரம்), சுதந்திரோதயம் (மாதம்) ஆகியவற்றிலும், பினாங்கில் வெளியான ஜயபாரதம், ஈப்போவில் வெளியான புது உலகம், தைப்பிங்கில் வெளியான உதயசூரியன் ஆகியவற்றிலும் பல கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் வெளிவந்துள்ளன. வெளிநாட்டுப் பத்திரிகைகள் வராதிருந்த அக்காலவரையறையில் இப்பத்திரிகைகள் அனைத்தும் சீரிய இலக்கியத் தொண்டு செய்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஜப்பானியர் ஆதிக்கக் காலத்தில் திருவாளர்களாகிய சுவாமி அற்புதானந்தா, ஹமீதுக் களஞ்சியம், கோ. சாரங்கபாணி, சி. வீ. குப்புசாமி, பண்டிட் ப. ஆறுமுகம் (கிருஷ்ணதாசன்), கே. பி. சுப்பையா, ஜெயமணி சா. சுப்பிரமணியம், ஜி. பார்த்தசாரதி, சக்திமோகன், முத்துச் சொக்கலிங்கன், க. வீ. ம. நாராயணசாமி, கே. வீ. அழகர்சாமி, வ. கலியாணசுந்தரம், எஸ். ஏ. துரை, கு. மு. வீராசாமி, ஆதி நாகப்பன், நீ. சிவன், ந. பழனிவேலு (கவிதை, கட்டுரை, சிறுகதை), சா. சா. சின்னப்பதாஸ், சேதுராமன் ராகி, ரெ. சீனிவாசன், அ. இராசகோபால், வீ. ராஜகோபால், ஐ. டபிள்யூ. அப்துல் வஹாபு, பக்ருதீன் சாஹிப், தில்லைக்கனி, அப்துல் ஹமீது ஜங் ஆகியோரும் இன்னும் பலரும் கட்டுரை, கவிதை, சிறுகதை முதலியவற்றை எழுதியுள்ளனர். எனவே ஜப்பானியர் ஆதிக்கக் காலத்திலும் எழுத்துத்துறை கணிசமான அளவு வளர்ந்திருக்கிறது என்றே கூறலாம்.

ஜப்பானியர் சரணடைந்து, பிரிட்டிஷார் மீண்டும் மலாயாவுக்கு வருகை தந்த பிறகு தமிழ் எழுத்துத் துறையில் தீவிர மறுமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டதை இக்கால எழுத்தாளர் அனைவரும் அறிவர். ஆதலால் அவற்றை இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். ஆனால் இத்துறையில் தமிழ் நேசனும், தமிழ் முரசும் பிறகு மலைநாடும் இப்போது தமிழ் மலரும் பொன்னியும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன என்று கூற விழைகிறேன்.

மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைப் பொறுத்த வரையில் அதுவும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதோடு சில அரிய தொண்டுகளைச் சென்ற ஆறாண்டுகளாகச் செய்து வருகிறது. தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது 1955 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்க் கலை மன்றத்தின் எழுத்தாளர் மாநாடு ஆகும். அந்த மன்றம் ஏற்பாடு செய்த அம்மாநாட்டிற்கு வருகை தந்திருந்தவர்கள் எழுத்தாளர் சங்கம் ஒன்று நிறுவப்பட வேண்டும் எனக் கருதினர். அதன் விளைவாக 1958ம் ஆண்டில் முதன்முதலாக எழுத்தாளர் சங்கம் கோலாலம்பூரில் தோன்றியது. சில ஆண்டுகள் அது நடைபெற்று வந்தது என்றாலும் எழுத்தாளர்களின் ஆர்வக் குறைவாலும், பிறகு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களின் அசட்டையினாலும் அச்சங்கம் மறைந்தது. என்றாலும் தமிழ் எழுத்தாளர்களிற் சிலர் தொடர்ந்து ஆர்வங் காட்டி வந்ததால் 1962 ஆம் ஆண்டில் அச்சங்கம் பதிவு செய்யப்பெற்று இன்றுவரை இடையறாமல் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாய் இருந்துவரும் எழுத்தாளர் அன்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் சங்கம் அண்மையில் முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி இருப்பதை அன்பர்கள் அறிவார்கள். நீண்ட காலமாக நிறைவேற்றப்பட்டாமல் இருந்த எழுத்தாளர் யார்—எவர் என்னும் தொகுப்பு ‘மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பெற்றிருப்பதையும், சங்கத்தின் முத்திங்கள் வெளியீடாகிய ‘ஏடு’ என்பதை வெளியிட்டு வருவதையும் எல்லாரும் அறிவர். இந்த வெளியீடு சிறு அளவில் வெளிவருகிறதெனினும் காலப்போக்கில் அது மிகுதியான பக்கங்களையும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் கொண்டு வெளிவரவேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கம். அன்பர்களின் ஆதரவைப் பொறுத்தே அந்த முயற்சி நிறைவேற வேண்டியிருக்கிறது.

சங்கம் மேற்கொண்ட முக்கியப் பணிகளில் திறனாய்வுக் கருத்தரங்கம் நடத்தப்பெறுவதும் ஒன்று. சங்கம் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் சிறுகதை வகுப்புகளும் இலக்கிய வட்டங்களும் மொழிபெயர்ப்புப் பயிற்சியும் நடத்தப்படுவதும் அடங்கியுள்ளன. ஆனால் அத்துறையில் கவனஞ்செலுத்துவதற்கு உறுப்பினர்கள் தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டவேண்டும். மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினரானால் இக்காரியத்தை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

தமிழ் இலக்கியமும் படைப்புக்களும் நமது தேசிய மொழியில் பெயர்க்கப்படுவதிலும் தேசிய மொழிப் படைப்புக்கள் தமிழில் பெயர்க்கப்படுவதிலும் நாம் இனி சிரத்தை காட்ட வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். தமிழிலுள்ள நயங்களும் படைப்புத் திறனும் தேசிய மொழியில் இடம்பெறுமானால் நமது ஆற்றல்களை எல்லா இனத்தினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதேபோல தேசிய மொழி படைப்புக்கள் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டால் தமிழை மட்டும் அறிந்தவர்கள் அவற்றின் சிறப்புக்களை அறிந்து தமது எழுத்தாற்றலைத் தேசியக் கண்ணோட்டத்துடன் வளர்த்து வர முடியும். அதன் வழி தீவிர தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நாம் வழிவகை காணலாம். சில தமிழ் எழுத்தாளர்கள் இத்துறையில் ஆர்வங் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் அது போதுமான அளவில் இல்லை. அது பேரளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என்றே நான் விழைகிறேன்.

வெளியீட்டுத் துறையில் மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கவனம் செலுத்த ஆண்டுக்கு ஒரு நூலாவது சங்கத்தின் பெயரில் வெளிக்கொணர்ந்தால் அது சங்கத்தின் சிறப்பையும் முயற்சியையும் என்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும். எழுத்தாற்றல் மிக்க நமது உறுப்பினர்களின் படைப்புக்கள் அச்சில் வெளிவராததால் அவர்களது திறமை குடத்திலிட்ட விளக்கு போன்றே இருந்து வருகிறது. எனவே சங்கம் இத்துறையில் தீவிர கவனஞ் செலுத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன். “

தமிழகம் 1921ல் வெளியானது. சிவீகு சொல்வதுபோல 1923ல் அன்று. அவர் அறிந்தவரை தமிழ் இலக்கியத் தோற்றத்தை 1920களில் இருந்து தொடங்குகிறார். அதற்கு முன்னரே தமிழ்ப் பத்திரிகைகளும் எழுத்தாளர் படைப்புகளும் வந்துள்ளன என்பது இப்போது தெளிவாகத் தெரியவருகிறது. 1868ல் சிங்கப்பூர் வெ. நாராயணசாமி நாயக்கர் நன்னெறித் தங்கம் பாட்டு எனும் கவிதை நூலை சென்னையில் அச்சிட்டுக் கொண்டு வந்தார். இதுவே இவ்வட்டாரத்தின் முதல் தமிழ் நூல். சிங்கப்பூர் மகதூம் சாகிபும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் இணைந்து 1875ல் நடத்திய சிங்கை வர்த்தமானி பத்திரிகையே இவ்வட்டாரத்தின் முதல் தமிழ் ஏடு. 1875லிருந்து 1941 வரை சிங்கப்பூரிலும் மலாயாவிலும் மொத்தம் சுமார் 100 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துள்ளன. இவை தவிர இந்தியர்கள் நடத்திய ஆங்கில, மலாய், சீன, மலையாள, பஞ்சாபிப் பத்திரிகைகளும் இருக்கின்றன.

பல்முனை ஆற்றலும் ஏராளமான பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டவருமான சி வீ குப்புசாமியைப் போன்ற ஒருவரை மலாயாவில் காண்பது அரிது. முதல் உலகப்போரில் பிறந்து, சீனியர் கேம்பிரிட்ஜில் முதல் கிரேடில் பாஸ் பண்ணி, இரண்டாம் உலகப் போரின் இன்னல்களை அனுபவித்து, சிறையில் பதினெட்டு மாதங்களைக் கழித்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் எழுத்துத் துறையிலேயே அரை நூற்றாண்டு உழன்று வாழ்க்கையை முடித்துக்கொண்டவர் அவர். சி வீ குப்புசாமி மிகவும் நிதானமானவர், அடக்கமானவர், ஆரவாரம் இல்லாதவர், புகழுக்கு அலையாதவர். பெரும் படிப்பாளி. கடும் உழைப்பாளி.

ஜப்பானியர் காலத்தில் அவர் பணியாற்றிய மூன்று பத்திரிகைகளையும் குடி அரசு இதழ்களையும் வேறு சில நூல்களையும பாதுகாப்பாக வைத்திருந்தார். அவர் காலமான பிறகு சா ஆ அன்பானந்தனின் உதவியுடன் நானும் டாக்டர் இரா தண்டாயுதமும் சிவீகு-வின் வீட்டுக்குச் சென்று அவற்றைக் கொண்டு வந்தோம். ஜப்பானியர் காலத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற என் கட்டுரை சிவீகு-வின் பொக்கிஷத்திலிருந்து கிடைத்த பெரும் பாக்கியத்தாலே சாத்தியமானது. நான் வெளியிட்ட மலேசியத் தமிழ்ச் சிறுகதை 1995 எனும் நூலில் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். Tamil Short Stories in Malaya during the Japanese Occupation 1942 – 1945 எனுந் அந்தக் கட்டுரை மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை வெளியிடும் தமிழ் ஒளி 1981 / 1982 மலரில் இடம்பெற்றுள்ளது.

மலாயாத் தமிழ் இதழ்களின் வரலாறு பற்றி எழுத விரும்பிய தண்டாயுதம் அந்தப் பத்திரிகைகளைக் கொண்டு சென்று ஒரு கட்டுரை மட்டும் தீட்டினார். அவரும் காலமாகிவிட்டார். மலாயா சிங்கப்பூர் தொடர்பான அரிய நூல்கள், இதழ்கள் தண்டாயுதத்திடம் நிறைய சேர்ந்துள்ளன. அவற்றை யாராவது மீட்டு வந்தால் புண்ணியமாக இருக்கும். மலாயாத் தமிழ் இலக்கியத்திற்கு எப்போதும் சோதனைதான். நாற்பது ஆண்டுகளுக்குமுன் டாக்டர் ராமசுப்பையா அரிதின் முயன்று மலாயா சிங்கப்பூர் எங்கணும் சென்று ஏராளமான நூல்களையும் இதழ்களையும் சேர்த்துக் கொண்டு வந்தார். தமிழ் மலேசியானா 1969 அந்தத் திரட்டின் வழி கிடைத்த பட்டியல்தான். ஆனால் அந்தப் படைப்புகள் யாவும் இங்குமங்கும் இடம் மாறி கடைசியில் இருந்த இடமே தெரியாமல் ஆகிவிட்டது. உள்ளதும் போச்சுதடா நொள்ளைக் கண்ணா! பேராசிரியர் எஸ் அரசரத்னம், விரிவுரையாளர் இரா தண்டாயுதம், ஆராய்ச்சியாளர் ராஜேஸ்வரி அம்பலவாணர், விரிவுரையாளர் ந. லோகநாயகி, ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டு முடிக்காமல் போன மாணவர் வி ராமச்சந்திரன் போன்றோர் முக்கியமாக அந்தக் காலத்து நாவல்களையும் பத்திரிகைகளையும் பயன்படுத்திக் கட்டுரைகளும் நூல்களும் புனைந்தனர். அந்தத் தொடக்கம் அதோடு நின்றுபோனது பரிதாபம்.

தமிழ் மலேசியானாவைப் பற்றிய ஓர் அந்தரங்க விஷயம் உண்டு. மலேசியத் தமிழர்களின் ‘தன்மான மலேசியானா’ அது. 1969ல் அகால மரணமடைந்தார் ராமசுப்பையா. அவருடைய தம்பி எஸ்ஸாரெம் பழனியப்பன் மலேசிய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றபின் சமயத் துறையில் ஆழ்ந்து சில நூல்களை எழுதியவர். அவரும் இலக்கியவாதியே. 1972ல் தமிழ் நேசன் பவுன் பரிசுத் திட்டத்தைத் தொடங்கியபோது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் ஐவரில் பழனியப்பனும் ஒருவர். மற்ற நால்வர், டாக்டர் இரா தண்டாயுதம், நேசன் நிர்வாகி புலவர் சேதுராமன், டாக்டர் பிரமிளா கணேசன், ரெ கார்த்திகேசு ஆகியோர். எஸ்ஸாரெம் பழனியப்பன் 21 டிசம்பர் 1996ல் எனக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் மலேசியானாவின் ரிஷி மூலத்தைக் கொஞ்சம் பிட்டு வைத்திருந்தார்.

‘ தமிழ் எழுத்தாளர்களே இந்நாட்டில் இல்லை என்று பத்திரிகைகள் ஓலமிட்டதோடு அமையவில்லை. வெளிநாட்டு இறக்குமதிச் சரக்கான பல்கலைக்கழகச் சான்றோர் ஒருவரும் அந்தக் கூக்குரலை எழுப்பினார். அதனால் கொதிப்படைந்துதான், டாக்டர் இராம சுப்பையா, இந்நாட்டில் வெளிவந்த தமிழ் நூல்களைத் திரட்டித் தமிழ் மலேசியானாவைத் தொகுத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிக் கொணர முயன்றார். சந்தனக் கிண்ணத்தைப் பாடநூலாக்கி, இந்நாட்டு இலக்கியத்துக்கு உரிய தகுதியை உருவாக்க முயன்றார். அவரைத்தான் நன்றியில்லாத இந்தத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியருடன் கூட்டுச் சேர்ந்து கோவிந்தாப் போட்டுத் தமிழ்த் துரோகி பட்டந் தந்து பாடையும் கட்டினார்கள். ’

வெளிவந்த தருணத்தில் மகத்தான பிரமிப்பை ஊட்டிய தமிழ் மலேசியானாவுக்கு வயது ஆகிவிட்டது. புதிய தொகுப்பு எப்பொழுதோ வந்திருக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது? #

Wednesday, December 15, 2010

முருகு சுப்பிரமணியனும் தமிழ் முரசும் மலாயாச் சிறுகதை மன்னர்களும்



தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி மலாயாவில் தரமான சிறுகதை எழுத ஆளில்லை என்று நினைத்ததுடன் தரமான பத்திரிகை ஆசிரியர்கள் இல்லை என்றும் கருதியவர். 1940களிலும் 50களிலும் எல்லாப் பத்திரிகைகளும் தமிழ்நாட்டிலிருந்து ஓரளவு படித்துவிட்டுக் கப்பலேறிய இளைஞர்களையே ஆசிரிய, துணையாசிரியப் பொறுப்பில் அமர்த்தின. இங்கே வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்களைப் பத்திரிகைகள் இழுத்துக் கொண்டாலும் பத்திரிகைக்காகவே துணையாசிரியர்களை முதன்முறையாய் விசேஷமாகக் கொண்டுவந்தவர் தமிழ் நேசன் பத்திராதிபர் கே நரசிம்ம ஐயங்கார். 1936ல் சென்னையின் The Hindu நாளிதழில் தமிழ்நேசனுக்கு உதவியாசிரியர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து பை கி ஸ்ரீநிவாச ஐயங்காரையும் சா சுப்ரமணிய ஐயரையும் கொண்டு வந்தார்.

( நரசிம்ம ஐயங்கார் 4 பிப்ரவரி 1938ல் காலமான பிறகு நேசன் திசை தடுமாறியது. 1940ல் ஒரு வேலை நிறுத்தம். கே பி சுப்பையா, சா சுப்பிரமணிய ஐயர் போன்ற உதவியாசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால் இருவரும் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் தனியாகப் போய் 2 டிசம்பர் 1940ல் ஜனநாயகம் பத்திரிகையை ஆரம்பித்தனர். நேசனுக்கு ஒரு சரியான போட்டி அது. ஐயர்தான் ஆசிரியர். சண்டைக்குப் பிறகு ஜனநாயகம் மறுபடியும் வந்தது. அதனால் ஐயர் ஜெயமணி சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார். சோஷலிஸ்டுப் பாதையில் ஆர்வங் காட்டிய சுப்பிரமணியம் ஜப்பானியர் ஆட்சியின்போது 1942ல் ஹிட்லரின் சுயசரிதையான வீரன் ஹிட்லர் மேன் காம்ப் நூலைத் தமிழாக்கம் செய்தார். காகிதப் பஞ்ச காலத்தில் 272 பக்கங்களில் வெளியான நூல் அது. விழி பிதுங்கும் மொழிபெயர்ப்பு அது என்று ஜெர்மனி தமிழரசன் இனி இணைய இதழில் (டிசம்பர் 2005) ஈவிரக்கமின்றி சாடினார். ஆங்கிலேயரின் அலங்கோல ஆட்சி எனும் 84 பக்க நூலையும் ஜெயமணி சுப்பிரமணியம் 1942ல் கொண்டுவந்தார். அந்த நேரத்தில் ஜப்பானியர் மெச்சும் வகையில் ஆங்கிலேயரை வசைபாடிய சில நூல்களுள் அதுவும் ஒன்று. சண்டை முடிந்தபின் சா சுப்பிரமணியம் தமிழ்நாட்டுக்குத் திரும்பி கல்கியில் சேர்ந்துகொண்டார். கே பி சுப்பையா 1946ல் யுத்தத்தால் வந்த யுத்தம் எனும் நூலை வெளியிட்டார். முதலாம் உலகப் போரே இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்பது நூலின் சாரம். சண்டைக்கு முன் நடைபெற்ற ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும் அவர்களின் கோரிக்கைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறையும் தொழிலாளர் மரணங்களும் சற்று விரிவாகத் தமிழில் இடம்பெறும் நூல் இது.)

ஸ்ரீநிவாச ஐயங்கார் சுதேசமித்திரன் ஏட்டில் பணியாற்றிவிட்டு சென்னையில் நடந்து கொண்டிருந்த டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்தார். கருமமே கண்ணாயினார் என்பதற்கு அவரைவிடச் சிறந்த உதாரண புருஷரைக் காட்ட முடியாது. (பைரோஜி நாராயணன், நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரின் தந்தையே அவர்.) பாரதி பிறந்த தினமான செப்டம்பர் 11ல் 1934ஆம் வருஷம், தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதற்காகப் பத்திரிகை ஜாம்பவான் எஸ் சதானந்த் தொடங்கியது தினமணி நாளிதழ். தேசத் தியாகி தி சு சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியக் குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் சுப்பிரமணிய ஐயர். தமிழ் நேசன் 1937 பிப்ரவரி 20ல் நாளிதழாக வரவிருந்ததால் அனுபவம் மிக்க புதிய இளைஞர்களை இறக்குமதி செய்தார் நரசிம்ம ஐயங்கார்.

1951ல் கோ. சா முரசுக்காகக் கொண்டு வந்த வை திருநாவுக்கரசு திராவிடர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பூந்தோட்டம் என்ற மாத இதழை 1947ல் சொந்தமாக நடத்திவிட்டுப் பெரியாரின் விடுதலை பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தபோதுதான் வி திருநாவுக்கரசு முரசுக்குக் கப்பலேறினார். அரசுக்குப் பிறகு ஒரு பெரிய அணி முரசுக்குப் படையெடுத்து முரசையும் வளர்த்து சிங்கப்பூர், மலாயா/மலேசியத் தமிழர் சமூக வாழ்க்கையில் அழுத்தமான முத்திரையும் பதித்தது. அப்படி முரசுக்கு வந்தவர்களுள் தி செல்வகணபதி, அ முருகையன், முருகு சுப்பிரமணியன் ஆகியோர் முக்கியமானவர்கள். கொஞ்ச காலம் சென்றபின் வி டி அரசு அரசாங்கத் தகவல் துறைக்கு மாறிவிட்டார். அ முருகையன் ரேடியோ சிங்கப்பூரின் தமிழ்ப் பகுதித் தலைவர் பணியை ஏற்றார். (சிங்கப்பூரில் 1949ல் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகத்தில், எட்டு ஆண்டு கழித்து 1957ல் இந்திய இயல் துறை அமைந்தபோது அதற்கு முதல் தலைவராக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட திராவிடப் பற்றாளர் இராசாக்கண்ணனாரின் மைத்துனர்தாம் முருகையன். வழக்கமாகத் துறைத் தலைவர் பதவிக்கு இன்றியமையாத Ph D பட்டம் இல்லாமல் M.A மட்டுமே வைத்திருந்தவர் இரசாக்கண்ணனார். அ. முருகையன் 1952 அல்லது 1953ல் முரசுக்கு வந்திருக்க வேண்டும்.)

1955ல் முரசுக்கு வந்தவர் முருகு சுப்பிரமணியன். அவரும் திராவிட இயக்கத்தில் ஊறிய இலக்கியவாதியே. 1924ல் செட்டி நாட்டுக் கோனாப்பட்டில் பிறந்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1940களில் செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றி சுயமரியாதைக் கொள்கையையும் திராவிட உணர்வையும் பரப்பினார். அப்பகுதி இளைஞர்கள் மாதக் கணக்கில் அவரைத் தங்க வைத்தனர். பாரதிதாசன் நூல்களை அச்சிடவும் அவருடைய நாடகங்களை நடத்தவும் முத்தமிழ் நிலையம் எனும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இதற்கு உந்துதலாகத் திகழ்ந்தவர் செட்டிக்குல இளங்குருதி முருகு சுப்பிரமணியன். இளந்தமிழன் கையெழுத்து இதழை நடத்தியதோடு தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார்.

பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பான பாரதிதாசன் கவிதைகள் முதற் தொகுதி புதுக்கோட்டை, இராமச்சந்திரபுரம், செந்தமிழ் நிலையத்தால் 1938ல் அச்சிடப்பட்டது. பாரதிதாசனின் வேறு சில நூல்களையும் செட்டிநாட்டு அன்பர்கள் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

(கானாடுகாத்தான் வை சு சண்முகம் செட்டியார் மகாகவி பாரதியாரை செட்டிநாட்டுக்கு அழைத்துவந்த செய்தி பலரும் அறிந்ததே. 1919 அக்டோபர் 28 முதல் ஒன்பது நாளும், 1920 ஜனவரி 6 முதல் 10 வரை நான்கு நாளும் பாரதியார் செட்டியார் மாளிகையில் தங்கியிருந்தார். கையில் தடியுடன் பாரதியாரைக் காட்டும் ஒரு படம் அப்போது எடுத்ததுதான். செட்டிநாட்டிலேயே தங்கிவிடும்படி சண்முகம் செட்டியார் மன்றாடியபோதும் பாரதியாரின் சூழ்நிலை அவரைத் தங்கவொட்டாமற் செய்துவிட்டது.)

(1952ல் தமிழ் நேசன் மலையாண்டி செட்டியார் வசம் இருந்தபோது புகழ்பெற்ற இரு பத்திரிகையாளர்களை அவர் கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தார். தமிழ்நாடு, தினமணி ஆகியவற்றில் பணிபுரிந்த ரா வேங்கடராஜுலு நாயுடு, படைப்பிலக்கிய எழுத்தாளர் கு அழகிரிசாமி ஆகியோரே அவர்கள். 1953 ஜுன் 2ல் நிகழ்ந்த எலிசபெத் அரசியாரின் முடிசூட்டு வைபவத்தில் கலந்துகொள்ள மலாயாப் பத்திரிகையாளர் அணியில் ஒருவராக லண்டனுக்குச் சென்று வந்தவர் நாயுடு. அழகிரிசாமி தம் ஐந்தாண்டு மலாயாப் பயணத்தில், சீதாலட்சுமி எனும் பிராமண மங்கையைக் குடும்ப எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் அயராத உதவியால் 1955ல் மணம் செய்துகொண்டவர்.)

தமிழ்ப் பத்திரிகை உலகில் முருகு சுப்பிரமணியனுக்கும் அவருடைய நெருங்கிய உறவினர் அரு பெரியண்ணனுக்கும் நிலையான இடம் உண்டு. பொன்னி ஆரம்பித்தபோது முருகுவுக்கு வயது 24. இருவரும் சேர்ந்து 1947 முதல் 1953 வரை நடத்திய பொன்னி மாத இதழ் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. புதுக்கோட்டையில் தொடங்கிய இதழ் சென்னைக்கு இடம் மாறிப் பிரகாசமாக நடைபெற்று ஓய்வு எடுத்துக்கொண்டது. அதன்பிறகே முருகு சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார். பெரியண்ணன் திராவிடப் பற்றில் கைக்காசை எல்லாம் இழந்து மு கருணாநிதி நடத்திய முரசொலியின் நிர்வாகத்தில் பங்கேற்றார்.

பொன்னி அன்று இளைஞரிடம் கொடிகட்டிப் பறந்த திராவிடவேட்கைக்கு வடிகால் அமைத்துக் கொடுத்த சஞ்சிகை. திராவிட இயக்கத்துக்கென ஒரு தரமான இதழ் இல்லாதிருந்த குறையைப் பொன்னி நீக்கியது. திராவிடத் தலைவர்களும் தொண்டர்களும் கதை, கட்டுரை, கவிதை என்று அதில் நிறைய எழுதினர். இயக்கத்தைச் சாராதவர்களும்கூட பொன்னிக்கு ஆதரவு தெரிவித்தனர். வண்ணமயமான அட்டைப்படத்துடன் வந்து அனைவரையும் கவர்ந்தது பொன்னி. முதல் இதழில் எங்கெங்கோ ஊறிச் செழிக்கும் கருத்துகளை அவை தமிழர்க்கும் ஆக்கம் தருபவையானால் தேடிக்கொணர்ந்து தமிழர்க்குப் படைப்பாள் பொன்னி. தமிழ் நெஞ்சம் வளமாகும் வகையில் அவள் எண்ண ஓடை பாயும் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வெளிவந்தது பொன்னி.

பொன்னியின் மிகச் சிறந்த இலக்கியப் பணியாக அமைந்தது பாரதிதாசன் பரம்பரை என்ற கவிஞர் அறிமுக வரிசை. 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோபர் வரை நீடித்தது அந்தத் தொடர். மு. அண்ணாமலை தொடங்கி நாரா நாச்சியப்பன், சுரதா, முடியரசன், வாணிதாசன், கோவை இளஞ்சேரன், புத்தனேரி சுப்பிரமணியன், குலோத்துங்கன் (வா. செ. குழந்தைசாமி), நாஞ்சில் மனோகரன், பெரி சிவனடியான், சுப்பு ஆறுமுகம் போன்ற 48 கவிஞர்களை அப்புதுமைத் தொடர் அடையாளம் காட்டியது.

பொன்னி : பாரதிதாசன் பரம்பரை எனும் தலைப்பில் 48 கவிஞர்களின் பாடல்களையும் அவர்களின் திறனையும் வாழ்க்கைக் குறிப்புகளையும் சேர்த்து ஆய்வு நூலாக்கியுள்ளார் மு இளங்கோவன். 2003ல் வந்ததது அந்நூல். மணிக்கொடி எழுத்தாளர்கள் போல பொன்னிக் கவிஞர்கள் என்ற அடைமொழி பிறந்தது.

2004ல் பொன்னி ஆசிரிய உரைகள் நூலையும் வெளியிட்டார் மு இளங்கோவன். இந்தி எதிர்ப்பு, வடநாட்டு ஆதிக்கம், பெரியார் மணியம்மை திருமணம், திமுக தொடக்கம் போன்ற 98 தலையங்கங்ளைக் கொண்டு திராவிட இயக்கத்தின் ஆவணமாகப் பரிணமித்தது இந்நூல். முருகு, பெரியண்ணன் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெ. தூரன் தலைமையில் பேசிய அண்ணாதுரையின் பேச்சைப் புதுக்கோட்டை தாய்நாடு ஜனவரி, பிப்ரவரி 1947 இதழ்களில் பாராட்டி எழுதினார் அப்பத்திரிகையில் பணியாற்றிய கண்ணதாசன்.

அண்ணாதுரையின் பேச்சை வெளியிட்ட பிறகு ‘அவனுக்கு (கண்ணதாசனுக்கு) புதுக்கோட்டையில் சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அப்போது ‘பொன்னி’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த தோழர் முருகு சுப்பிரமணியன் அவர்களும் தோழர் பெரியண்ணன் அவர்களும் அவனுக்கு வாய்த்த இனிய நண்பர்களாவார்கள். பெரியாரை அவர்கள் கடவுளாகக் கொண்டாடியவர்கள். அண்ணாதுரையை உயிருக்குயிராய் நேசித்தவர்கள். திராவிடர் கழகத்தை ஆதரிக்கும் ஏடுகள் மிகக் குறைவாக இருந்த காலம். அவையும் அழகில்லாமல் அச்சுப்பிழை மிகுந்து வெளிவந்தன. அந்த நேரத்தில் வண்ண முகப்பு அட்டை போட்டு அழகாக நடந்த இதழ் ‘பொன்னி’ ஒன்றுதான். பத்திரிகைத் துறையில் மற்றவர்கள் செய்து காட்டாத புதுமை எல்லாம் அவர்கள் செய்து காட்டினார்கள். இன்றும் தமிழகத்தில் சிலரை அச்சுக்கலை நிபுணர்கள் என்று தேர்ந்தெடுத்தால் அவர்களில் பெரியண்ணன் மிக முக்கியமாக இருப்பார். ‘பொன்னி’யின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் குழந்தை உள்ளமும் குளிர்ந்த சுபாவமும் கொண்டவர். ‘தாய்நாடு’ இதழ் கட்டுரையைப் பற்றி அவனிடம் வெகுவாகப் பாராட்டினார். …. அப்போது ‘பொன்னி’ இதழில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற பெயரில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தினார். அந்தப் பகுதிக்கு அவனும் ஒரு கவிதை எழுதினான். நான்காவது நாள் அந்தக் கவிதை அவனுக்கே திரும்பி வந்தது. கூடவே கீழ்க்கண்டவாறு ஓர் இணைப்புக் கடிதமும் இருந்தது. “அன்புள்ள நண்பருக்கு, கதையனுப்பும்படி கேட்டிருந்தேன். கவிதை அனுப்பியுள்ளீர்கள். தயவு செய்து கதையே அனுப்பினால் நலம். அன்பன் முருகு சுப்பிரமணியன் தன் கவிதைக்குக் கிடைத்த மரியாதை அவனை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அதிர்ச்சிதான் கவிதை எழுதுவதில் அதிக ஆசையை அவனுக்கு உண்டாக்கிற்று. அதற்குப் பிறகு அவன் எவ்வளவோ கவிதைகள் எழுதினான். ஆனால் ‘பொன்னி’ மட்டும் ஒரு கவிதையைக் கூட வெளியிடவில்லை.’

(கண்ணதாசன். வனவாசம். 1965 பக் 72)

பொன்னிக்கு முன் குமரன் இதழில் முருகு ஆசிரியராய் இருந்தபோது கண்ணதாசனின் இரண்டு கதைகளை வெளியிட்டார். தாய்நாடு இதழில் அண்ணாவின் பேச்சை எழுதியபோது கண்ணதாசனுக்கு வயது 19. முருகுவைவிட மூன்று வயது இளையவர் கண்ணதாசன். மலாயாவுக்கு வந்து சேர்ந்த கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் சென்னை எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒருவர். எருமைக்கடா வாகனக் கதையை அண்ணா சொன்னது இந்த மாநாட்டில்தான். அந்தப் பகுதியைக் கண்ணதாசன் எனும் நிருபர் இப்படித்தான் report பண்ணியிருந்தார்.

“அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே (அன்னிய நாட்டிலே). கம்பராமாயணமும் கந்தபுராணமும் இங்கே. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை. (கைத்தட்டல்). ஆக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்திருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா வேண்டாமா என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுப்புறத்தான் ஒருவனை கூப்பிட்டுக் கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? தெரியாது. நமது பிரதம மந்திரி யார்? தெரியாது. இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது? தெரியாது. முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்? தெரியாது. எமனுக்கு வாகனம் என்ன? எருமைக்கடா! (பலத்த கைத்தட்டல்) இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம். கர்னாடிக் மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள். அயோத்தியில் தசரதன் மாளிகையைப் பற்றி அல்ல, ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள். அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கைத்தட்டல்).

31 வயதில் சிங்கப்பூருக்குக் கப்பலேறிய முருகு சுப்பிரமணியன் இங்கு செல்வாக்குடன் இருந்தார். 1950களில் கதைப்போட்டிகளின் மூலம் இளையரிடத்திலும், தமிழர் திருநாள் மூலம் பொதுமக்களிடமும், தமிழர் சீர்திருத்த சங்க நடவடிக்கைகள் மூலம் பகுத்தறிவாதிகளிடமும் முரசு புகழோடும் பெருமையோடும் இருந்த காலம் அது. சீர்திருத்த சங்கத்தின் செயலாளராகவும் முருகு இருந்திருக்கிறார். வானொலியில் இலக்கிய உரைகள் ஆற்றினார். அவை பிறகு நூலுருவம் பெற்றன.

முருகு முரசுக்கு வந்த கையோடு 1955ல் நான்கு சிறுகதைகள் எழுதினார். அக்டோபர் 23ல் அன்னையின் சோகம்.

‘கணவனை இழந்த தங்கம்மாள் தன் மகனை மிகவும் செல்லமாக வளர்க்கிறாள். ஒரு நாள் அவனுக்கு வயிற்றில் வலி ஏற்படவே தங்கம்மாள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லாமல் அவன் இறந்து விடுகிறான். தன்னுடைய மகனைப் பறிகொடுத்த அந்த அன்னையின் சோகம் அங்கிருக்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.’

நவம்பர் 20ல் சின்னப்பயல்.

‘பேரன் சின்னப்பயல் பாண்டியனைக் காணவில்லை என்று குருசாமியிடம் மீனாட்சி கூறுகிறாள். உடனே, அவனைத் தேடிச் செல்லும் குருசாமி, கையில் மிட்டாயுடன் ஓடிவந்து தன் அண்ணன் செல்வத்துடன் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கிறான். முன்பு ஒருமுறை அவனுடைய அன்பு, தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இருந்த மனக்கசப்பைப் போக்கியதை நினைத்துக் கொள்கிறான். சின்னப்பயல் பாண்டியனின் பெரிய மனத்தை நினைத்துக் குருசாமிக்கு அவன் மீது அளவற்ற கருணை பிறக்கிறது.’

நவம்பர் 27ல் காதல் கதை.

‘கல்யாணமான புதிதில் சரோஜா தன் கணவனிடம் அவன் முன்னாள் காதலைப் பற்றிக் கேட்கிறாள். அப்படி எதுவும் நடக்காததால் அவன் கதையொன்றைக் கூறுகிறான். தன்னுடன் படித்த சக மாணவி அறிவில் சிறந்தவள் என்றும் இருவரும் அவ்வப்போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறும் அவன், ஒரு முறை அவள் மீது அவன் கரம் பட்டதும் பளிங்கு மாளிகையாக அவள் முகம் மாறிவிட்டது என்றும் கூறுகிறான். அதைக் கேட்டதும் அவன் கூறிய கதையை நம்பாத அவன் மனைவிக்கு அவனைப்பற்றிய சந்தேகமும் நீங்குகிறது.’

டிசம்பர் 11ல் புயல்.

‘வேதாரண்யப் புயலால் விளைந்த அழிவைப் பற்றியும் அதில் சிக்கி இறந்த எண்ணற்ற மக்களைப் பற்றியும் அண்ணன், தன் தம்பிக்குக் கடிதம் வாயிலாக விவரிப்பதை இக்கதை சித்திரிக்கிறது.’

(கதைச் சுருக்கம் இடம்பெற்ற நூல் தேசிய நூலகம் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936 – 1960, தொகுதி 1)

கதைச்சுருக்கத்தை மட்டும் வைத்துக் கதைகளின் சிறப்பை உய்த்துணர இயலாது. கதைச்சுருக்கமோ கதைப்பின்னலோ ஏறத்தாழ ஓர் எலும்புக்கூட்டுக்குச் சமம். அந்தக் கூடு எப்படி சதையும் ரத்தமும் ஆகி உயிருள்ள உடம்பாக மாறுகிறது என்பதே வித்தை. கதைச்சுருக்கத்தின் மூலம் புலப்படக்கூடிய முருகு சுப்பிரமணியத்தின் கதைகள் எப்படி அமைந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

முருகு எனும் பெயரில் கதை எழுதிய அ. முருகையன் 1953 மார்ச் 29 முதல் 1955 அக்டோபர் 30 வரை இருபது சிறுகதைகளைப் படைத்துள்ளார். (இக்கட்டுரையில் நான் முருகு என்று குறிப்பிடுவதெல்லாம் முருகு சுப்பிரமணியனையே சுட்டும்.)

முரசில் சிறுகதைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஒரு கட்டத்தில் முருகு சுப்பிரமணியனைச் சார்ந்திருந்தது. கதைகளை எல்லாம் கருத்தூன்றிப் படித்துப் பார்த்த அவர் 1958 மார்ச் 9 முரசு ஞாயிறு மலரில் மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் எனும் தலைப்பில் ஒரு பக்கத்தில் அடங்குமாறு கட்டுரை ஒன்றை வரைந்தார்.

மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் கட்டுரை: முருகு சுப்பிரமணியன் ( 9 மார்ச் 1958 )

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் சிறுகதைகளைப் பற்றி ஒரு விமரிசனக் கட்டுரை எழுத வேண்டுமென நீண்ட நாளாக எண்ணியதுண்டு. அந்த எண்ணம் இப்பொழுதுதான் நிறைவேறுகிறது.

இளம் எழுத்தாளர்களிடம் எனக்குத் தனி அன்பு உண்டு. நான் அவர்களை அநுதாபக் கண்ணோடு நோக்குகிறேன். பெருமைக்காக இவ்வாறு சொல்லிக் கொள்ளவில்லை. பல ‘பெரிய’ எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் ‘குப்பை’ என்பது அந்தப் பெரியவர்களின் கருத்து. இன்னும் சிலருக்கு மறுமலர்ச்சி இலக்கியம் என்றாலே வேப்பங்காய். ‘வள்ளுவனும் கம்பனும் வளர்த்த தமிழை மேலும் வளர்க்க இந்தப் பொடியர்கள் யார்? இவர்களுக்கு என்ன தெரியும்? குறளில் ஒரு வரிக்கு உறைபோடக் காணுமா இவர்களின் எழுத்து?’ என்று பேசும் மெத்தப் படித்தவர்களும் உண்டு. அவர்களுக்குச் சொந்தச் சாகுபடி செய்யத் தெரியாது. யாராவது சங்க இலக்கியமோ தொல்காப்பியமோ இயற்றி வைத்திருந்தால் அதனைப் படித்து உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ‘மனநிறைவு’ கொண்டவர்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சி கம்பனோடும் சேக்கிழாரோடும் நிலைகுத்தி விட்டதென்பது அவர்களின் அசைக்க முடியாத முடிவு.

இவர்களைப் போல வள்ளுவனும் கம்பனும் எண்ணியிருந்தால் நமக்கு உலகம் போற்றும் திருக்குறளோ, தமிழ்க்கடலான இராமகாதையோ கிடைத்திருக்குமா? புதிதாக ஆக்கவேண்டும் என்னும் துடிப்பு, மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அந்தத் துடிப்பை மட்டந்தட்டி வீணாக்குவது இலக்கியம் பேண விரும்புகிறவர்களின் பொறுப்புள்ள செயலாகாது.

திருத்த வேண்டும் இளம் எழுத்தாளர்களிடமும் மறுமலச்சி எழுத்தாளர்களிடமும் எவ்வளவோ குறைகள் உண்டு. அக்குறைகளை எடுத்துக் காட்டித் திருத்த வேண்டுமேயொழிய அவர்களைத் தலைதூக்கவிடாமல் அழுத்திவிடக் கூடாது. அவர்களில் பலர் தமிழ்க்கொலை செய்கிறார்கள் என்பது உண்மையே. அந்தக் கொலைகளை எடுத்துக் காட்டி வன்மையாகக் கண்டிப்பது தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத பணி என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயத்தில் அந்த எழுத்தாளர்களிடம் உள்ள படைப்பாற்றலையும் கலையுணர்வையும் எழுத்துத் திறனையும் போற்றி ஊக்குவதும் அவசியமாகும்.

இளம் எழுத்தாளர்களிடம் நான் ‘அனுதாபம்’ காட்டுவதற்கு முதன்மையான காரணம் இதுதான்.

இளம் எழுத்தாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுதுவது ‘குப்பை’ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நூற்றில் ஒருவர் மணியான எழுத்தாளராக எதிர்காலத்தில் வரக்கூடும். குப்பையில் குன்றிமணியாக விளங்கும் அந்த ஒருவரைக் கண்டுபிடித்துக் கைதூக்கிவிடுவது, இளம் எழுத்தாளர்களை ஊக்கினால்தான் நிறைவேறும். இன்று புகழ் படைத்த எழுத்தாளர்களாகத் திகழும் எல்லா எழுத்தாளர்களுமே ஒரு காலத்தில் பத்திரிகை ஆசிரியர்களின் ‘தயவை’ எதிர்பார்த்து ஏங்கிய இளம் எழுத்தாளர்களே. இந்த உண்மையை நினைவிற்கொண்டால் புதிய எழுத்தாளர்களைப் புறக்கணிப்பதில் உள்ள ‘இழப்பை’ப் புரிந்து கொள்ள முடியும்.

மலாயாவில் புதிய எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரிடமே உண்மையான எழுத்தாற்றல் இருக்கிறது. அவர்களிடமும் சுட்டிக்காட்டக்கூடிய குறைகள் இருப்பினும், நான் முன்பு கூறிய படைப்பாற்றலை அவர்களிடம் காண முடிகிறது. பெயர்களைக் குறிப்பிட்டால் பொறாமையும் எரிச்சலும் ஏற்படலாமாதலால், பொதுப்படையாகவே குறை நிறைகளைக் கூற விரும்புகிறேன்.

பெருக வேண்டும் மலாயாவில் தமிழில் எழுதுகின்றவர்களின் தொகை பெருகவேண்டுமென்னும் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் நான் இங்கே சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்பது திண்ணம்.

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதும் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. காதல் கதைகள் எழுதுவது பாவமான காரியமென்று நான் சொல்லமாட்டேன். எனினும் காதல் இல்லாமல் கதை எழுத முடியாதென்று நினைப்பது தவறு. காதலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது என்பது உண்மையே. ஆனால் இங்கு எழுதுகிற புதியவர்கள் காதலையே கசக்க வைத்து விட்டார்கள். ஆகவே ஒரு சில ஆண்டுகளுக்காவது காதல் கதைகள் எழுதுவதில்லை என்று நம் எழுத்தாளர்கள் விரதம் பூண்டால் நன்மையாக இருக்கும்.

கைம்பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைப்பது சிறந்த சீர்திருத்தப் பணி. ஆனால் கதைகளில் திரும்பத் திரும்ப விதவைகளின் குமுறலையும் வேதனையையும் அளந்து கொண்டிருப்பது அவசியமா? கைம்பெண் மணத்தை வற்புறுத்தி கதை எழுதுவது பழைய பாணி.

அந்தப் பழைய பாணியிலும் மெருகேற்றிப் புதுமை மிளிரச் செய்வதற்குப் பெருந் திறமை வேண்டும். இளம் எழுத்தாளர்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே விதவைகளின் வேதனையைத் தீட்டுவதைச் சிறிது காலம்வரை இளம் எழுத்தாளர்கள் நிறுத்தி வைத்தால் நல்லது.

‘வழுக்கி விழுந்தவள்’ ‘வாழத் தெரியாதவள்’ ‘ஏமாந்தவள்’ – இப்படிச் சில கதைகள். பெண்களிடையே ‘ஒழுக்கக் குறைவு’ எங்கோ எப்பொழுதோ ஏற்படுகிறது. தமிழ்ப் பெண்கள் கற்பைக் காப்பதில் மிக விழிப்பாயுள்ளவர்கள். எளிதில் அவர்கள் வழுக்கி விழுந்து விடுவதில்லை. ஆனால் நம் இளம் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும் யார்க்கும் ‘தமிழ்ப் பெண்கள் எல்லாருமே ஒழுக்கங் கெட்டவர்களோ’ என்று எண்ணவே தோன்றும். பெண்கள் வழுக்கி விழும் சூழ்நிலை அசாதாரணமானது. அதனைக் கையாண்டு சிறுகதை தீட்டுவது கூரிய வாளின் மீது நடப்பது போன்றது. ஆகவே இளம் எழுத்தாளர்கள் ‘விபசாரக்’ கதைகளை எழுதாமல் இருப்பதே மேல்.

விசித்திரக் காதல் மற்றும் சிலர் தமிழ்க் குலத்திற்கே அருவருப்பான சில ‘விசித்திர காதல் முடிச்சு’க்களைத் தங்கள் கதைகளில் நடமாடவிடுகிறார்கள். தாய்க்கும் மகனுக்கும் சரசம் – மாமனாருக்கும் மருமகளுக்கும் நட்பு – அப்பாவுக்கும் மகளுக்கும் உறவு – இப்படிக் கதைகளைக் கற்பனை பண்ணுவது மன்னிக்கமுடியாத குற்றம். இந்தக் கதைகளால் தமிழும் வளராது. எழுத்தாளர்களும் வளர முடியாது. அருவருப்பூட்டும் இத்தகைய ‘அபார’ கற்பனைகளை அள்ளி விடுபவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருந் தீமை விளைவிக்கிறார்கள். இத்தகைய ‘விசித்திரக் காதல்’ கதைகளை இளம் எழுத்தாளர்கள் எழுதவே கூடாது.

சிறுகதை சமுதாயத்தைப் படம் பிடிப்பதாக இருக்க வேண்டும். மனித உணர்ச்சிகளுக்கு அது உருவம் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த லட்சியங்களைப் படிப்பவர் உள்ளத்தில் எழுப்ப வேண்டும். மக்களின் சிந்தனையைத் தெளிவடையச் செய்வதையே எழுத்தாளர்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டும். சிந்தனையைக் குழப்பும் அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகளைப் புதிய எழுத்தாளர்கள் மறந்தும் எழுதக்கூடாது.

பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரே மாதிரி நடையினையே கையாளுகிறார்கள். ‘அவள் கண்கள் குளமாகின’ என்று சொல்வது ஒரு சமயம் புதுமையாக இருந்தது. இப்போது அது படித்துப் படித்துப் புளித்துப் போய்விட்டது. எழுதும் நடையில், கையாளும் சொற்களில் புதுமை மிளிர வேண்டும். கதை சொல்லும் போக்கிலும் புதுமை காண வேண்டும். புதுமை எழுத்துத் துறைக்கு உயிர் நாடி.

ஒரு முக்கிய எச்சரிக்கை நம் எழுத்தாளர்களுக்கு மற்றொரு யோசனையையும் கூற விரும்புகிறேன். ஏதோ சில பத்திரிகைகளை மட்டும் படித்துவிட்டு எழுத்தாளராகி விடமுடியாது. தேர்ந்தெடுத்த நல்ல நூல்களை நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் நூல்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். வேற்று மொழி தெரிந்தவர்கள் அம்மொழிகளில் உள்ள சிறுகதை இலக்கியங்களைப் படிக்க வேண்டும். நூறு நல்ல சிறுகதைகள் படித்தீர்களானால் நீங்கள் ஒரு நல்ல கதையை எழுத முடியும். தமிழ் இலக்கியங்களை முறையாகப் பயில வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தமிழ் நடை வளம் பெறும். சொல்லுக்குப் பஞ்சம் ஏற்படாது.

கடைசியாக ஒரு எச்சரிக்கை. மலாயாவில் பலர் காப்பியடிப்பதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளின் பழம் பிரதிகளிலிருந்து அப்படியே எழுத்துக்கு எழுத்து பெயர்த்து எழுதித் தங்கள் பெயரைச் சூட்டிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். கதைகள் சில சமயம் பத்திரிகைகளிலும் வெளிவந்து விடுகின்றன. ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பது பழமொழி. ஒரு முறை அகப்பட்டுக் கொண்டால் போதும், இந்தக் களவாணிகள் மறுபடி தலைதூக்கவே முடியாது. இளம் எழுத்தாளரிடையே உள்ள ‘நச்சு மரங்கள்’ இவர்கள். இந்தத் திருடர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொடுப்பது வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் தலையாய கடமையாகும்.

1950களில்தான் பலரும் பத்திரிகை படிக்கக்கூடிய பழக்கம் ஓரளவு நிலைபெற்றது. இந்தப் பத்திரிகைகளே இளையர் கூட்டத்தின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. பத்திரிகையின் பக்கங்களைக் காசு கொடுக்காமல் நிரப்ப முடியும் என்பதைப் பத்திரிகாசிரியர்கள் நன்கு கண்டுகொண்டனர். காசு கொடுத்தால்தானே தரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்து கதையை வாங்கிப் போட முடியும். எழுதுவோரும் இதை நம்பி பிழைப்பு நடத்தப் போவதில்லை. சற்றுப் பேரும் புகழும் வந்தால் போதும் என்றுதான் எல்லாருமே எழுதினர். ஏனோ தானோ என்று எழுதப்படும் எழுத்து அது. ஒரு seriousness கிடையாது. எந்தக் கலையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது பதராகத்தான் மிதக்கும். கலை பயிற்சியினால் உருவாவது. கடும் பயிற்சிக்குத் தடையாக இருப்பது எழுத்தாளர்களின் சோம்பேறித்தனம். பல நூல்களை வாங்க இயலாத வறுமைத்தனத்தையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். எனவே 1950களிலிருந்து இன்றைய காலம் வரை எழுத்தாளர்கள் பயிற்சி பெறும் மேடைதான் பத்திரிகைகள். அவ்வப்போது சில பரிசுகள் கொடுத்து எழுத்தாளரின் மனக்குறையைச் சிலர் தீர்த்துக் கொண்டனர். இன்று பத்திரிகைகள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனவே. இப்போதாவது எழுத்துக்குக் காசு கொடுக்கக் கூடாதா? காசு இல்லாமல் எழுத மாட்டோம் என்று அடித்துச் சொல்லும் திராணியும், நன்றாகவே சம்பாதிக்கும் எழுத்தாளருக்கு இன்று கூடக் கிடையாது. ஏனெனில் அந்த எழுத்தாளரின் படைப்பு சுமார் என்பது அவருக்கே தெரியும். மட்டச் சரக்கை எப்படி விற்க முடியும்?

கதைகளின் தரம் தாழ்ந்து கிடப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ‘நீளம்’. மூன்று பத்திக்குமேல் கதை அனுப்பாதே என்று சாரங்கபாணி கட்டளை இட்ட வண்ணம் இருப்பார். மூன்று பத்தியில் சுமார் ஐந்நூறு வார்த்தைகளில் எப்படி உன்னதமான ஒரு சிறுகதையை எழுத முடியும்? பத்திரிகைக் கதைகள் படுமோசமாக இருப்பதற்கு இந்த இரண்டு காரணங்களையும் களைய வேண்டும். ஆனால் விசித்திரமாக அதே இரண்டு காரணங்கள் இன்றைக்கும் மலேசிய சிங்கப்பூர்ப் பத்திரிகைகளை ஆட்டி அலைக்கழிக்கின்றன.

மூன்றாவது காரணமாக, ஓழுங்கான விமர்சனப் போக்கு இல்லாத குறையைக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும். ரசனை இல்லாதபோது எப்படி விமர்சனம் பிறக்கும்? விமர்சனத்தின் விளைவு ரசனையா? ரசனையின் விளைவு விமர்சனமா? இன்றைய சூழலில் சிறுகதைக்கே தேவை இல்லாமல் போய்விட்டது. ஆகவே இணையத்தில்தான் கைவரிசையைக் காட்டவேண்டும்.

முருகு சுப்பிரமணியன் தமிழ் நேசனுக்குப் போனதும் பத்திரிகையில் இடம்பெறும் எல்லாப் படைப்புகளுக்கும் காசு கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். சிறுகதைக்கு ஐந்து வெள்ளி வழங்கியது நேசன். அதை எழுத்தாளருக்கு அனுப்பிவைக்க அதைவிட அதிகமாகக்கூடச் செலவு பிடிக்கும் சில நேரங்களில். ஆகவே அந்தத் திட்டம் தானாகவே கைநழுவிப் போனது. பெரிய தொகை என்றால் பிரச்னை இல்லை. அந்த நாளும் எந்த நாளோ?

1960ல் தமிழ் முரசில் கதை எழுதிப் பரிசு வாங்கியபோது முருகு சுப்பிரமணியன் அழைத்து அவர் தங்கியிருந்த 63 Buffalo Road முகவரிக்குப் போனபோது அவர், பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்ற சொன்னதை இராம கண்ணபிரான் நினைவுகூர்ந்தார். அதன் விவரம் கீழே:

http://balabaskaran24.blogspot.com/search?updated-min=2009-01-01T00:00:00%2B08:00&updated-max=2010-01-01T00:00:00%2B08:00&max-results=5

1961ல் தமிழ் நேசனுக்கு ஒரு சோதனை நேரம். அதற்குக் காரணமாக இருந்தவர் துணையாசிரியர் கனகசுந்தரமும் சுயேச்சை நிருபர் கா. அண்ணாமலையும். கு. அழகிரிசாமிக்குப் பிறகு கே. சி. அருண் என்பவர் நேசனுக்கு 1957ல் ஆசிரியராக வந்தார். அருண் சிங்கப்பூர் ஸ்டாண்டர்டில் உதவியாசிரியராவும் ராய்ட்டர் நிருபராகவும் இருந்த பிறகு அப்பத்திரிகை மூடப்பட்டபின் நேசனுக்கு மாறினார். தமிழ்ப் பத்திரிகையில் மாதம் ஆயிரம் வெள்ளி வாங்கிய முதல் ஆசிரியர் அருண். 1961ல் நேசனைப் பினாங்கு ரெங்கசாமி பிள்ளையிடம் ஒரு லட்சம் வெள்ளிக்கு விற்க உரிமையாளர் மலையாண்டி செட்டியார் ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார். ரெங்கசாமி பிள்ளையோ கோ சாரங்கபாணியின் மிக நெருங்கிய நண்பர். கோ. சா நிர்ப்பந்தம் கொடுக்கவே ரெங்கசாமி நேசனை வாங்காமல் விட்டுவிட்டார். நேசனின் எதிர்காலத்தில் ஐயம் கொண்ட அருண் மலாயாக் கூட்டரசு தகவல் துறையின் உயர் அதிகாரி வேலை கிடைத்தபோது அதற்குத் தாவினார். புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை கனகசுந்தரம் தலையங்கம் எழுதும் பொறுப்பை ஏற்றார். கா. அண்ணாமலை அடிக்கடி நேசனுக்கு வந்து போவார். கனகசுந்தரமும் அவரும் நெருங்கிய தோழர்கள். ஒரு நாள் தன்னிடம் exclusive செய்தி இருப்பதாகக் கனகசுந்தரத்திடம் கூறினார் அண்ணாமலை. இருவரும் மேல்மாடிக்குப் போய் செய்தியை எழுதிக் கொண்டு வந்து பத்திரிகையில் (12 அக்டோபர் 1961) போட்டுவிட்டனர். ‘ சோஷலிச முன்னணி தடை செய்யப்படும் – அரசாங்கம் முடிவு ’ என்னும் தலைப்புடன் செய்தி வந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சோஷலிச முன்னணி. அன்றைய தினமே பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் செய்தியை மறுத்தார். ஆதாரமற்ற செய்தி வந்ததைக் கண்டித்தார். அதோடு அதைக் கடுமையாகவும் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் மலையாண்டி செட்டியாரின் மகன் நாகப்பன் சிங்கப்பூருக்குச் சென்று முருகு சுப்பிரமணியத்க் கண்டு பேசி அவரை நேசனுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

(வே. விவேகானந்தன். நினைவுச் சுவடியில் சில ஏடுகள். தமிழ் நேசன் 70ஆம் ஆண்டு நிறைவு மலர். 1994)

(பிரதமர் துங்கு அன்றைய தினமே செய்தியை மறுத்ததாக விவேகானந்தன் எழுதியிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் மலாயாத் தகவல் சேவை இயக்குநர் மொகமட் சோப்பி-யின் பெயரில்தான் அன்றிரவு அறிக்கை வெளியானது. நேசன் வெளியிட்ட செய்தி ஆதாரமற்ற பொய்த்தகவல் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது. அரசாங்கத்தின் மீது வெறுப்பும், ஏளனமும், அவநம்பிக்கையும் உண்டாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட குறும்புத்தனமான செய்தி அது என்று அரசாங்க அறிக்கை வருணித்தது. நேசன் பிரசுரித்த பொய்யான தகவல் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் விசாரணைக்குப் பின் நேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.)

முருகு சுப்பிரமணியன் நேசனின் ஆசிரியப் பொறுப்பை 1961 கடைசியிலோ 1962 ஆரம்பத்திலோ ஏற்றுக்கொண்டிருக்கலாம். முருகு சேர்ந்ததுடன் கனகசுந்தரம் வானொலிக்குச் செல்லவே அவருடைய இடத்தில் விவேகானந்தன் துணையாசிரியராக அமர்ந்தார். விவேகனின் நியமனத்துக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய பள்ளித் தோழரும் நேசனின் துணையாசிரியருமான எம் துரைராஜ். கொஞ்ச நாளில் கனகசுந்தரம் மலாயா வானொலியிலிருந்து சிங்கப்பூர் வானொலிக்கு வந்து சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டுகள் வானொலி தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகளைக் கண்காணித்து ஓய்வு பெற்றபின் 1983 அல்லது 1984ல் தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காலமானார் கனகு என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த கனகசுந்தரம். திருவாரூரில் படித்த கனகசுந்தரம் மு கருணாநிதியின் பள்ளித் தோழர்.

1963 செப்டம்பரில் மலேசியா உதயம். அப்போது தமிழ் முரசு இல்லை. ஊதிய உயர்வு கேட்டுப் பத்திரிகையை அச்சடித்த ஸ்டார் பிரஸ் ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் முரசு 13 ஜுலை 1963 முதல் 10 ஜுலை 1964 வரை வெளியாகவில்லை. மலேசிய உதயத்தின்போது அரசாங்கத்தின் எண்ணத்தைத் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகை இல்லையே என்ற கவலை மக்கள் செயல் கட்சிக்கு. முரசு சமரசம் காண்பதற்குப் பிடிவாதமாய் மறுத்துவிட்டது. அதோடு, ‘தொழிற்சங்கத்தின் விடாப்பிடித் தனத்தையும் அதன் பொறுப்பற்ற போக்கையும்’ சகிக்க முடியாமல் அச்சகத்தைத் தன்னிச்சையாக மூடிவிடுவதாக நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஊழியர் தரப்பும் முதலாளி தரப்பும் சேர்ந்து பஞ்சாயத்து மன்றத்துக்குப் போகலாம் என்று, ம செ க சட்டமன்ற உறுப்பினர் ஜி கந்தசாமி, தேசியத் தொழிற் சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சி வி தேவன் நாயர் ஆகியோர் தெரிவித்த யோசனைக்கும் முரசு நிர்வாகம் இணங்கவில்லை. கடைசியாகத் தொழிலாளர் அமைச்சர் Jek Yuen Thong பஞ்சாயத்து மன்றத்துக்குப் போக இருதரப்புக்கும் ஆணையிட வேண்டிய கட்டாயம் உண்டானது. வழக்கு நிர்வாகத்துக்கு சாதகமாக முடிந்தது. முரசிலிருந்து வெளியேறிய தி செல்வகணபதி வெளியார் ஆதரவுடன் தமிழ் மலர் நாளிதழை 1 மார்ச் 1964ல் தொடங்கினார்.

தமிழ் முரசு ஓராண்டு கழித்து மீண்டும் தலைதூக்கியபோதிலும் முன்னிருந்த பொலிவை இழந்து பரிதாபமாகத் தென்பட்டது. கோ சாரங்கபாணியும் (1903 – 1974) காலமாகவே, முரசு நாற்பதாண்டுகளாகக் கட்டிக் காத்துப் பேணி வந்த நோக்கத்தையும் கொள்கையையும் பறிகொடுத்துவிட்டு சமுதாயத்துடன் ஒட்டி வாழ முடியாமல் தத்தளிக்கத் தொடங்கியது.

முரசு இல்லாத காரணத்தால் தமிழ் நேசன் கிடுகிடுவென்று வளர்ந்தது. முருகுவும் வாழ்க்கையில், சமூகத்தில் உயர்ந்தார். இருந்தபோதும் கசப்பான சூழ்நிலையில் அவர் நேசனை விட்டு 1976ல் விலகிக் கொள்ள நேர்ந்தது துர்அதிர்ஷ்டமே. உடல் நலம் குன்றி 1982 ஏப்ரல் 10ஆம் நாள் முருகு காலமானார். 1924 அக்டோபர் 7ஆம் தேதி பிறந்தவர் முருகு சுப்பிரமணியன். ஒரு கால் நூற்றாண்டுக் காலம் சிங்கப்பூர் மலேசியாவில் முதல்தரப் பத்திரிகையாளராகப் பெயர் பதித்ததே அவருடைய திறமைக்குச் சான்று. #